இலக்கியச் சந்திப்பா? வீணர்களின் சந்திப்பா ?

903

இலக்கியச் சந்திப்பா?  வீணர்களின் சந்திப்பா ?

நிவேதா உதயராயன்

லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் எப்ரல் 6,7 ம் திகதிகளில் ‘40வது இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது ‘இலக்கியச் சந்திப்பு’ யேர்மனியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் அது இலக்கியம் பற்றியதாக இல்லாமல் வெறும் புலிஎதிர்ப்பாளர் சந்திப்பாகவும், மாற்று இயக்கங்களின் சண்டைக் களமாகவும் இருந்தபடியால் தொடர்ந்து அங்கு செல்வதில் பயனில்லை என எண்ணி போகாமலே விட்டுவிட்டேன். இந்த இலக்கியச் சந்திப்புக்கு எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்திருந்தார். முதலில் மறுத்த நான், சரி, இலக்கியம்சார்ந்த எழுத்தாளர்கள் எல்லாம் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள், எனது தமிழர்களின் வழித் தோன்றல்கள் சுமேரியர்கள் பற்றிய ஆய்வையும் அவர்கள் முன் வைத்தால், எனது செய்தி மற்றைய நாடுகளுக்கும் பரவும் என்னும் நப்பாசையில் போவதாக முடிவெடுத்தேன்.

அங்கு போனதுமே மொழி தெரியாத அந்நிய தேசத்தில் போய் இறங்கிய உணர்வு என்னை ஆட்கொண்டது. கொஞ்சப் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டு நின்றனர். வந்தவரை வரவேற்கவுமில்லை. வணக்கம் கூறவுமில்லை. ஒரு புன்முறவல்கூட இல்லை. எனது நண்பர் அங்கு இருந்தபடியால் என் இறுக்கம் ஒருவாறு தளர்ந்து வருபவர்களை எடைபோட முயன்றுகொண்டிருந்தேன். தமிழ்நாட்டு பெண்எழுத்தாளர் சல்மா மட்டும் என்னிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து என்னைப்பற்றியும் விசாரித்தது ஓரளவுக்கு எனக்கு நிம்மதியைத் தந்தது.

அதன்பின் ஒருவர் கொண்டுவந்து புத்தகம் ஒன்றை தந்தார். வாங்கிப் பார்த்தால் ‘சாத்திரி ரயாகர மயான காண்டம்’ என்னும் தலைப்பிட்டு ஒரு பேப்பரில் எழுதும் சாத்திரியும், தமிழ் சேர்க்கிள் என்ற இணையத்தை நடாத்தும் இரயாகரன் என்பவரும் பெண்கள் சந்திப்பைப் பற்றியும் மற்றவர்கள் பற்றியும் எழுதியவைகளைத் தொகுத்து இவர்கள் ஒரு ஆவணம் தயாரித்திருந்தனர். அதற்கு ஆதரவு தெரிவித்து பின்பக்கத்தில் ஒரு பதினைந்து பேர் கையொப்பமும் இட்டு பெயர்களையும் பட்டியலிட்டிருந்தனர். எனக்கு வாசித்தவுடன் சிரிப்பு ஒருபுறம் சாத்திரிக்குப் பக்கத்தில் அமர்ந்துவிட்டோமே, அந்தாளுக்கு விழுகிற அடி எனக்கும் விழுமோ? என்னும் பயமும் வந்துவிட்டது.

நிகழ்வுகள் ஆரம்பமானது. வழமையாக மற்றய நிகழ்ச்சிகளில் நடைபெறுவதுபோல் தாயகத்தில் மரணித்தவர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்படவில்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டததை என்மனம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என அமர்ந்திருந்தேன். முதல் அமர்வில் பிரான்ஸ் இலிருந்து வந்திருந்த இரயாகரனைப் பேச அழைத்ததும் நான்கு பக்கமும் இருந்து ஒரே கூச்சல். அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என வன்மையான கண்டனங்கள் வந்து விழுந்தன. அவரும் ஏதேதோ சமாளிப்புக்கள் கூறினாலும் இறுதியில் மன்னிப்புக் கேட்டவுடன் எனக்கோ அதிர்ச்சி. எழுத்தாளன் என்பவனுக்கு தடைகள் இருக்கக் கூடாது. அதற்காக மற்றவர் முன் மன்னிப்புக் கேட்கும்படி கூறுவது எந்தவிதத்திலும் நியாயமானது அல்ல என்பது அவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது. அவர் மன்னிப்புக் கேட்டதும் தாங்கள் எதோ சாதித்துவிட்டதாகக் கைதட்டி ஆரவாரமும் செய்தனர்.

இரண்டாவது அமர்வில் டொமினிக் ஜீவாவுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அதற்கும் எதிர்ப்பும் மாற்றுக் கருத்துகளும் வைக்கப்பட்டன. சாத்திரியை சந்திப்புக்கு அழைத்தமையும் ஜீவாவைக் கௌரவிப்பதும் திட்டமிட்டே செய்யப்பட்டதாகவும்கூட ஒருவர் குற்றம் சாட்டினார். இரண்டிற்கும் என்ன தொடர்பு என்பதை அவர் தெளிவாகக் கூறவில்லை.

மூன்றாவது அமர்வில் சாத்திரியையும் ஒல்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த கலையரசன் என்பவரையும் பேச அழைத்தார்கள். சாத்திரி பேச எழுந்ததும் இராகவன், அசுரா, இரஞ்சி, உமா என்பவர்களும் மற்றும் பெயர்தெரியாத சிலரும் எழுந்து சாத்திரி ‘ஒரு பேப்பர்’ இலும் வேறு தளங்களிலும் எழுதியவை அனைத்திற்கும். மன்னிப்புக் கேட்டால் தான் பேச அனுமதிப்போம் என கூச்சலிட்டனர். அவரை முதல் பேச விடுங்கள். பேசி முடிந்ததும் நீங்கள் கேள்வி கேட்கலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மன்றாடியதையும் கேட்காது மீண்டும் மீண்டும் கூச்சல் எழுந்தது. நிகழ்ச்சியை ஒழுங்குசெய்த பவுசர் என்பவர் நாங்கள் தான் சாத்திரியை அழைத்தோம். அவர் பேசட்டும். அதன்பின் நீங்கள் உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள் என்பதோடு நின்றுவிடாது அவர்களின் செயலுக்காகச் சாத்திரியிடம் மன்னிப்பும் கேட்டார். இன்னும் ஒருவர் எழுந்து சாத்திரியின் எழுத்தில் பாதிக்கப் பட்டவன் நானே பேசாமல் இருக்கிறேன் நீங்கள் ஏன் அவரைத் தடுக்கிறீர்கள். அவர் பேசட்டும் என்றதும் எல்லோரும் அடங்கிபபோயினர்.

சாத்திரி, தனக்கு எதிராக அடித்த பிரசுரத்தில் ‘சாத்திரி மயான காண்டம்’ என தலைப்பிட்டு தன்னை அரிச்சந்திரன் என ஒத்துக் கொண்ட அனைவரிற்கும் நன்றி என அவரது வழைமையான நக்கலுடன் தொடங்கி ‘போருக்குப் பின் புலம்பெயர் சமூகத்தின் அரசியல்’ என்னும் தலைப்பில் ஏதேதோ எல்லாம் சொன்னார். முக்கியமாக முஸ்லிம் மக்களும் தமிழ்மக்களும் சேர்ந்து தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார். எத்தனை ஆண்டுகளாக முஸ்லிம் மக்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோம். எக்காலத்திலும் முஸ்லிம் மக்கள் தமிழருடன் சேர்வது அல்லது தமிழர் அவர்களை நம்பி அவர்களுடன் சேர்வது முடியாது என்பதுதான் உண்மை. ஒருவர்மேல் ஒருவர் காழ்ப்புணர்வுடனும் பலகாலமாக காட்டிக்கொடுப்புக்களுடனும் வாழ்ந்த ஒரு சமூகத்துடன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சேரமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. சாத்திரிக்கு இது விளங்குகிறதோ என்பது தெரியவில்லை.

அதன்பின் கேள்வி நேரத்தில்கூட இடையூறுகள் செய்தனர். விடுதலைப் புலிகள் ஒருவருக்கும் கருத்துச் சுதந்திரம் வழங்கவில்லை என்று குறை கூறும் நீங்களே சாத்திரியை பேசவிடாமற் செய்ய முயன்றதன் மூலம் அவர்கள் விட்ட அதே தவறையே செய்கிறீர்கள் என ஜெர்மனியில் இல் இருந்து வந்திருந்த சுசீந்திரன் என்பவரும் இன்னும் ஒருவரும் கூறியதன்பின் கொஞ்சம் சலசலப்பு அடங்கியது.

அடுத்தநாள் இரண்டாவது அமர்விற்குத்தான் என்னால் செல்லக்கூடியதாக இருந்தது. லக்ஸ்மி என்பவர் தலைமை தாங்க சுவிசிலிருந்து வந்திருந்த ரஞ்சி என்பவரும் எழுத்தாளர் சல்மாவும் உரையாற்றினர். சல்மா தன் 15 ஆவது வயதிலிருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக எழுதுவதாகக் கூறினார். பெண் சுதந்திரம் பற்றியும் தனக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும் அவற்றைத் தாண்டி தான் வந்த அனுபவங்களையும் அழகாகக் கூறினார்.

இரஞ்சி என்பவர் பேசும்போது உலகில் அதிகமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன என ஜ.நா சபையின் புள்ளி விபரங்களோடு பல நாடுகளைப் பட்டியலிட்டார். அரை மணி நேரம் அத்தனை நாடுகளைப் பற்றி விலாவாரியாகக் கூறிவிட்டு எதோ போனாப் போகிறது என்பதுபோல் சிறீலங்காவிலும் நிறைய நடக்குது. அது உங்களுக்கெல்லாம் தெரியும் தானே என்று கூறி முடித்துவிட்டார். இந்த புள்ளி விபரங்களை படிப்பதற்கு இலக்கிய சந்திப்பிற்கு போக வேண்டிய தேவை இல்லை, வீட்டில் இருந்து இணையத்திலேயே படிக்கலாம். தாய் நாட்டில் இத்தனை பாலியல் துன்புறுத்தல்கள் நித்தம் நடக்கும்போது அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாவிட்டாலும்கூட ஒரு அக்கறையான வார்த்தையோ அதுபற்றிய ஒரு வேதனையை வெளிக்கொணரும் வார்த்தையோகூட அவரிடமிருந்து வரவில்லை. (இதுகளும் ஒரு ஜென்மங்கள்)

கேள்வி நேரத்தில், புலம்பெயர் நாடுகளில் பலர் குடும்ப உறுப்பினர்களாலும், உறவினர்களாலும பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவும் அதைப் பற்றி வெளியே கூறாது இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அல்லது அவர்களுக்கு உதவ ஏதும்செய்கிறீர்களா என்று கேட்டதற்கு, உங்களிடம் ஏதும் திட்டம் இருந்தால் தாருங்கள் என்றார். பெண்களுக்கு உதவ மற்றவர்களிடம் திட்டம் கேட்பவர்கள் எதற்காக பெண்கள் பற்றிப் பேசுகின்றனர் என்று புரியவில்லை.

மொத்தத்தில் வேலை வெட்டி அற்ற வீணர்கள் ஒன்றுகூடி இலக்கியத்தைப பற்றி எதுவும் பேசாது வந்தவர் போனவரை மட்டம்தட்டியதும், கொச்சைப் படுத்தியதும் இடதுசாரி அரசியல், மாக்சிசம், பாசிசம் என பாமர மக்களுக்கு விளங்காத சிலவற்றைப் பேசியதும் தான் ‘இலக்கியச் சந்திப்பு’ ஆக நடந்தேறியது.

இன்னொன்று, இரு நாட்களும், விழா முடிய ஆட்டம் பாட்டு கூத்து என இவர்கள் ‘சிறிய நிகழ்வுகளை’ நடாத்தியதும் இலக்கியத்துக்குள்ளேதான் வருகிறதா?