இலக்குத்தவறிச் செல்லும் தமிழர் அமைப்புக்கள்

3333

தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் செயற்படும் தமிழத்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் அல்லது செயற்பாடின்மை, அதன் உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகள் என்பனவற்றில் விமர்சனம் கொண்டுள்ளவர்களும்,இவை அனைத்தினதும் இறுதி இலக்கு ஒன்று என்றே நம்புகிறார்கள். ஆதலால், அரசியல் பணிகளை இவ்வமைப்புகளிடம் விட்டுவிட்டு, தமது அன்றாட வாழ்வில் கவனம் செலுத்துகிறார்கள்.

அவ்வப்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சிறுதொகையிலான மக்களும் அத்துடன் தமது பணி முடிவுற்று விட்டதாக எண்ணுகிறார்கள். தம்மை பிரதிநிதித்துப்படுத்துவதாகக கூறிக்கொள்ளும் அமைப்புகள், ஒரு குறித்த இலக்கு நோக்கி நகர்கின்றவா, அல்லது வெளிச்சக்திகளின் செல்வாக்குக்கு உட்பட்டு அதற்கேற்ப முடிவுகளை எடுத்து செயற்படுகின்றனவா என்பது பற்றி பரந்தளவில் மக்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அதேசமயம் சில தமிழ்த் தேசிய அமைப்புகள், தமது செயற்பாடுகள் விடயத்தில், தமிழ் மக்கள் முன் ஒரு தோற்றத்தையும், பிற அதிகார பீடங்களின் பிரதிநிதிகளின் முன் இன்னொரு தோற்றத்தையும் காட்டும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இதனையே`இராஜதந்திரம்` என்று வேறு கற்பிதம் செய்யப்படுகிறது.

தமிழ் அமைப்புகளை கொள்கையளவில் இணங்க வைப்பதற்கான தேவை தமிழ்தேசிய அரசியலில் அக்கறை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல வெளித்தரப்பினருக்கும் இருக்கிறது. ஆனால் இவ்விரண்டு தரப்பின் எதிர்பார்ப்புகளிலும் பாரிய வேறுபாடுகள் உண்டு. தமிழ்மக்களைப் பொறுத்தவரையில், தாயக மக்களின் உடனடி வாழ்வாதாரப்பிரச்சனைகள் மற்றும் தொலை நோக்கில், நிலம், பாதுகாப்பு, பொருண்மியம், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பேணும் வகையிலான சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஆகியவிடயங்களில் தமிழ் அமைப்புகள் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்படவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

வெளித்தரப்பினரோ, தமிழ் மக்களின் பிரச்சனையினை பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கத்தை தமது ஒழுங்கிற்குள் கொண்டு வர தாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைத்துத்தமிழ் அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ் எதிர்பார்ப்புகளில் பரஸ்பரம் இருதரப்பு நலனும் சந்தித்துக் கொள்ளும் சாத்தியபாடுகள் உள்ளன. எனினும் இங்கு பாதிப்புக்கு உள்ளாகும் தரப்புதமது கோரிக்கைகளில் உறுதியாக இல்லாதுவிடின், பலம் வாய்ந்த வெளித்தரப்புகளின் இழுப்பிற்குள் சென்றுவிடும் நிலையே உருவாகும். இவ்வாறு இழுபட்டு செல்லும் நிலையில் சில தமிழ் அமைப்புகள் காணப்படுவதை அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

உலகத் தமிழர் பேரவை கடந்த ஆண்டு தமது வேலைதிட்டமாக ஒரு நான்கு அம்சத்திட்டத்தை அறிவித்திருந்தது. அவற்றுள் முக்கியமாக தமிழ் அமைப்புகளை இணைத்து ஒரு பொதுப்பிரகடனம் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலும் மேற்குலக அதிகார மையங்களின் ஆலோசனையின்படி செயற்படும் உலகத்தமிழர் பேரவையின் முயற்சிக்கு அவற்றின்ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்த்ததில் தப்பில்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இம்முயற்சிக்கு அனுசரணையாளாராக ஜெர்மனியை தளமாகக் கொணடு இயங்கும் ஆக்சுகீகுச்கி Berghof Foundation செயற்படுகிறது,அதற்கான நிதியுதவியினை சுவிற்சலாந்து அரசாங்கம் வழங்குகின்றது.

மேற்படி பொதுப்பிரகடனம் தொடர்பான செய்திகள் வெளியானதிலிருந்து, அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பான ஐயம் பொதுப்பரப்பில் வெளிப்படுத்தப்பட்டது. தாயகத்தில் இயங்கும் அமைப்புகள் அங்குள்ள சட்டவரையறைக்குள், குறிப்பாக சிறிலங்கா அரசியல் அமைப்பின் ஆறாம் திருத்தச்சட்டத்திற்கு உட்பட்டதாகவே தமது கோரிக்கைகளை வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன. அதே சமயம், புலம்பெயர்நாடுகளில் இயங்கும் அமைப்புகள் அவ்வாறான கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டிய அவசியம் கிடையாது. அலைந்துழல்வு சமூகத்தில் செயற்படும் தமிழ்த் தேசிய அமைப்புகளில் பெரும்பாலானவை தமிழீழக் கோரிக்கையை தமது இலட்சியமாகக் கொண்டு செயற்படுவதாகக் கருதப்படுவதனால், அனைத்து தமிழ்த் தேசிய அÛமைப்புகளையும் கொள்கை ரீதியாக பொது இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது என்ற கருத்தை இப்பத்தி முன்னர் வெளிப்படுத்தியது.

1985ம் ஆண்டு தமிழ் அமைப்புகள் இணைந்து வெளியிட்ட தாயகம் – தேசியம் – தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட திம்புப் பிரகடனத்தை உள்ளடக்கியதாக குறைந்த பட்ச அடிப்படையிலாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது சிரமமானது அல்ல என யாராவது எதிர்பார்த்திருந்தால் அதில் தவறிருக்க முடியாது.

ஏனெனில் 2010ம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம், திம்புப்பிரகடனத்தைத் தழுவியதாகவே அமைந்திருந்தது. இருப்பவற்றுள் மிதவாத அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமானால், மற்றயவை இவற்றை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பது தர்க்கரீதியாக சரியாகவே காணப்படுகிறது. ஆனால் Berghof Foundation இன் அனுசரணையில் நடை பெறும் பொதுப்பிரகடன முயற்சி இக்கருத்தினை மறுதலிப்பதாகவே அமைந்துள்ளது. இதுவிடயத்தில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக ஆக்சுகீகுச்கி ஏற்பாடு செய்த பட்டறைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திம்புப்பிரகடனத்தை மீறும் கருத்துளையே வெளியிட்டுள்ளது. மேற்படி பட்டறைகளில் உலகத்தமிழர் பேரவையின் சார்பில் கலந்து கொண்ட கனேடிய தமிழ் கொங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் கொங்கிரஸ் என்பனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரித்து நின்றதாகத் தெரியவருகிறது.

மேற்படி பொதுப்பிரகடன முயற்சிக்கான பட்டறைகளில் அÛத்துலக மக்களவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத்தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கு பற்றி வருகின்றனர். தமிழ்த் தேசிய அமைப்புகளான இவற்றிடையே இதுவரை குறைந்தபட்ச விடயங்களில் கூட இணக்கப்பாடு ஏற்படவில்லை. இனி, இவற்றிடையேயான முரண்பாடுகளைப் பார்ப்போம்.

தேசியம் இனம்

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய அரசியல் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுக்கும் வெளிசக்திகள் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாகவே (ethnic minority) பார்க்கின்றன. இவர்களுக்கு ஏற்ற முறையில் தமிழ் மக்களை தேசிய இனமாக குறிப்பிடுவதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தவிர்த்து வருகிறது.

கடந்த வருடம் நாச்சியப்பன் கூட்டிய கூட்டத்தின்பின்னர் அங்கு பங்குபற்றிய தமிழ்க்கட்சிகள் கூட்டாக வெளியிடப்படவிருந்த அறிக்கையிலும் இம்முரண்பாடு வெளிப்பட்டது. கூட்டமைப்பு தமிழ் மக்களை ‘peoples’ என்று குறிப்பிட முனைந்தது,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ‘nation’ என்று குறிப்பிட வேண்டும் என வாதிட்டது.

இதே முரண்பாடு அண்மைய Berghof பட்டறையிலும் வெளிப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களை ஒரு தேசிய இனம் என அழைக்க முடியாது என வாதிட்டுள்ளது. கூட்டமைப்பின் இந்நிலைப்பாட்டை உலகத்தமிழர் பேரவையில் சார்பில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய தமிழ் கொங்கிரஸ், கனேடிய தமிழ் கொங்கிரஸ் ஆகியற்றின் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர்.
நாடுகடந்த அரசாங்கம், அனைத்துலக மக்களவை என்பன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன.

சுயநிர்ண்ய உரிமை

தமிழ் மக்கள்ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கொண்டிருக்கின்றனர். தமிழரசு கட்சியின் ஆரம்பத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டை ஒற்றையாட்சி முறையில் `உள்ளக சுயநிர்ணய’ உரிமையாக தரக்குறைப்பு செய்து இப்போது கூட்டமைப்பு முன்வைக்கிறது. இதற்கு துÛணாக,இறுதியாக நடந்த பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளும் உள்ளக சுயநிரண்ணய உரிமையை ஏற்றுக்கொண்டார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னமபல் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதனை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. அவர் பிரிந்து செல்லக் கூடிய சுயநிர்ணய உரிமையே வலியுறுத்திவருகிறார்.

இனப்படுகொலை (Genocide)

தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதனை அனைத்துத்தரப்பினரும் ஏற்றுக்கொண்டாலும், சர்வதேச சக்கதிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதனால் அதனை பொதுப்பிரகடனத்தில் சேர்த்துக் கொள்ள கூட்மைப்பும் உலகத்தமிழர் பேரவையும் உடன்படவில்லை.

இடைக்காலத் தீர்வு

வடக்கு கிழக்குப் பகுதிகளை இணைத்து அங்கு சர்வதேசத்தின் மேற்பார்வையில் நிலைமாற்று அதிகாரம் கொண்ட இடைக்கால நிர்வாகத்தினை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.

அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கூட்டமைப்பினர் பதின் மூன்றாம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளை இடைக்காலத் தீர்வாக ஏற்றுக் கொள்ளுகின்றனர். தமிழ்த் தேசிய அமைப்புகள் தமக்கான கொள்கைகளை அமைத்துக்கொள்வதற்கான முழு உரிமைகளையும் கொண்டிருக்கின்றன. ஆனால் இவை அவை பிரதித்துவப்படுத்துவதாகக் கூறும் மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கின்றவா என்பதனை மக்கள் தான் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.