சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழரமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைநடாத்த விருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல ஊடகங்கங்களுக்கு அறிவித்துள்ளார். இதுவிடயமாக ஒரு பேப்பர் உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனிடம் கேட்டபோது, இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது, தாம் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தார். நாடுகடந்த அரசாங்கமும் இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக அறிகிறோம். இருப்பினும் தமது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய செயற்படும் கே.பி.இன் கையாட்கள் சிலரை பாவித்து புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாகத் தெரியவருகிறது.
இந் நிலையில் போலியான இப்பேச்சுவார்த்தை நடவடிக்கையில் தொடர்புடையவர்களின் பெயர்களை Sri Lanka Guardian என்கிற இணையதளம் வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராகவுள்ள பொன் பாலராஜன், நிதி அமைச்சர் செல்வநாதன், நா.க.அ அவுஸ்திரேலியா பாரளுமன்றஉறுப்பினரும் ஜீ.ரி.வி தொலைக்காட்சியின் உரிமையாளருமான சீவநாயகம் செல்வேந்திரன், நா.க.அ உத்தியோகபற்றற்ற ஆலோசகர் தர்மலிங்கம் சர்வேந்திரா அகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.இது பற்றிய உண்மைநிலையை அறிந்து கொள்ளவதற்காக திரு. பொன் பாலராஜனை ஒரு பேப்பர் தொடர்பு கொண்டது. அவரது பதில்களை இங்கு தருகிறோம்.
சிறிலங்கா அரசாங்கத்துடனானபேச்சுவார்த்தை முயற்சிகளில் நீங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது நா.க.த.அ. சார்பிலோ ஈடுபட்டுள்ளீர்களா?
பொன்.பாலராஜன்: முதலில் உங்கள் கேள்விக்குக் காரணமாயுள்ள பின் புலத்தை புரிந்துகொள்ளல் இங்கு அவசியமாகின்றது. எதிர் வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் Universal Periodic Review தொடர்பான பல விடயங்கள், குறிப்பாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், போர்க் குற்றம், இன அழிப்பு போன்ற விடயங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. புலம் பெயர் அமைப்புக் கள் இந்த மடத தொடர்பான பல விடயங்களை மனித உரிமை அவைக்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர்.
அவை மனித உரிமை அவையில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதை (UNHRC) UPR Stakeholders Report மூலம் அறியக் கூடியதாகவும் உள்ளது நடைபெறவிருக்கும் UPR தொடர்பான ஐ. நா. அமர்வில் இலங்கைக்கு எதிராகப்பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களாக TGTE, BTF, CTC, USTPAC, GTF போன்ற தமிழ் அமைப்புக்கள் ஜெனிவா நோக்கி இந்த வாரம் பயணமாகின்றார்கள்.
அப்படியான சூழ்நிலையில் புலம் பெயர் அமைப்புக்களுக்கும் அதை ஆதரிக்கும் மக்களுக்கும் ஒரு சிக்கலை உருவாக்கி விடுவது இலங்கை அரசினது வேலைத் திட்டமாகும். சில மாதங்களுக்கு முன்னர் புலம் பெயர் அமைப்புக்களை வலுவிழக்கச் செய்வது அல்லது தம் வசப்படுத்துவது என்ற இரண்டு வேலைத் திட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசின் ஆட்கள் பலர் வெளிநாடுகளுக்கு வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதை அறிவோம். நாடு கடந்த அரசாங்கத்தினையும் எபஊ போன்ற கட்டமைப்புகளையும் வலுவிழக்கச் செய்கின்ற முயற்சிதான் இந்தப் போலிப் பேச்சுவார்த்தை நாடகம். அதில் என் போன்றவர்களின் பெயர்களும் இழுத்து விடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர் மீது ஒரு உளவியல் போரை (psychological warfare) சிங்களம் முடிக்கிவிட்ட நிலையில் ஒருசில ஊடகங்களும் சிலமனிதர்களும் தங்களுக்குள்ள கருத்து மோதல் கட்கு ஆதரவு தேடுமுகமாக சிங்களத்திற்கு துணை போதல், களம் அமைத்துக் கொடுத்தல்,தூபமிடல் போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக நவம்பர் இரண்டாவது வாரம் பிரித்தானியா பாராளுமன்ற சர்வகட்சி கூட்டணி மற்றும் BTF இணைந்து மிக முக்கியமான மாநாடு ஒன்றினைப் போர்க்குற்றம் தொடர்பாக நடாத்தவுள்ளது. இதன் விளவு 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமை அவை ஒரு மிகப் பெரிய நெருக்கடியை சிங்கள அரசிற்குக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இவற்றிலெல்லாம் இருந்து சிங்களம் தப்பிக் கொள்ளவும் புலம் பெயர் அமைப்புக்களை சின்னா பின்னமாக்கவும் சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் செய்கின்ற சூழ்ச்சி வலையில் நம்மவர்களும் தெரிந்ததோ தெரியாமலோ பலியாகி விடுவதுடன் சிங்களம் இலகுவாக தனது இலக்கினை அடைய வழி செய்து விடுகின்றனர்சிறிலங்கா அரசுடன் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் எந்தவிதமான பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. நான் தனிப்பட்ட முறையில் நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்களினூடாகவோ சிறிலங்கா அரசுடன் எந்தவிதமான பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பணிப்பில் இயங்கும் கே.பி. என்பவருடன் அல்லது அவரது கையாட்களாக செயற்படுபவர்கள் எனநம்பப்படும் கனடாவைச் சேர்ந்தஇன்பம் அல்லது பேரின்பம் போன்றவர்களுடன் அரசியல் ரீதியிலான தொடர்புகளைப் பேணி வருகிறீர்களா?
பொன்.பாலராஜன்: K.P என்ற மனிதர் அமைப்புடன் பணியாற்றிய காலத்திலோ அல்லது இலங்கை அரசுடன் பணியாற்றுகின்ற இந்தக்காலத்திலோ நான் ஒருபோதும் அவருடன் பேசியதுமில்லை.தொடர்புகளை ஏற்படுத்தியதும் இல்லை. இலங்கை அரசின் வேலைத் திட்டத்திற்கு வேலை செய்பவர்கள் தமிழ்த் தேசியத்தினைச் சிதைக்க முனைபவர்கள். இவர்களை நாம் இனங்கண்டுதான் செயற்படுகின்றேம்.
தெளிவாக உங்களுக்குச் சொல்லி வைப்பது என்னவெனில் எனக்கு ஓட உடனோ இலங்கைஅரசுடன் சேர்ந்து பணியாற்றும் வேறு யாருடனோ எந்த விதமான தொடர்பும் இல்லை. நீங்கள் குறிப்பிடும் இன்பம் என்பருக்கும் எனக்கும் அறிமுகமோ தொடர்புகளோ இல்லை, நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது அவரது செயற்பாட்டிற்கு ஆதரவாகவோ நான் ஒருபோதும் இருந்ததில்லை.
எனக்கு எதிரான ஒருசிலர் என்னைத் தாக்கவேண்டும் என்பதற்காக இப்படியான பொய்க்குற்றம் சுமத்தலாம் (Character Assassination). இந்தப் பொய்களைக் காவிச் செல்வதற்கும் சில ஊடகங்கள் துணைபோகும். நான் எழுதுவது போல் [email protected] என போலிமின்னஞ்சல் முகவரி தயாரித்து பல தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. எனது மின்னஞ்சல்முகவரி [email protected] அல்லது [email protected].
எம் மத்தியில் இருக்கும் சிலரினதும், சிங்களத்தினதும் சதிவலைகளினால் எமது விடுதலைக்கான நாள் பிற்போடப்படலாம். ஆனால் தமிழ் மக்களின் இலட்சியத்தினை அடையும் நாள் கிட்டும் வரை அயராது பணியாற்ற வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு.