இலையுதிர் காலம்

[dropcap]எ[/dropcap]ன்னைச் சூழ உள்ள இயற்கையில் இது ஒரு இலையுதிர் காலம். சருகுகளாகி காலடியில் நசிந்து, நொருங்கி, நசநசவென்று அழுகிய இலைகள் அழியுண்ட காலம். எனது ஆதர்சங்களும் மேலான ஆளுமைகளும் நான் வியந்து விழி பிதியப் பார்த்தவர்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றனர். அதனாலும் இது ஓர் இலையுதிர் காலம்.

புரிகின்றது, ஐம்பதுக்கும் மேற்பட்ட என் வயது அப்படி,பதினைந்து வயதுப் பருவத்தில் ஆதர்சங்களாகவும்வியந்து நோக்கியவர்களாகவும் இருப்பவர்களின் வயதுஎப்படியும் முப்பதுக்கும் மேற்பட்டது. எப்படிப் பார்த்தாலும்இப்போது அவர்களது வயது எண்பதை எட்டிவிடும். முதிர்தல் தவிர்க்க முடியாதது.

அப்படி உதிர்ந்து விட்ட ஒருவர் நடிகை மனோரமா அவர்கள். அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களிலும் மிக ரசிக்கத் தோன்றும். நாகேசுக்கு சற்றும் சளைத்த நடிகரல்ல மனோரமா. நடிகர்களுக்கு கூடு விட்டுக் கூடு பாயும் மந்திர வித்தை தெரிந்திருக்க வேண்டும். மனோரமாவுக்கு அது தெரிந்திருக்கிறது. ‘தில்லானா மோகானாம்பாள்’ திரைப்படத்தில் ஜில் ஜில் ரமாமணியைத் தான்கண்டேன். கலை கைவரப்பெறாத, அதேசமயம் ஆளுமைகளை மதித்தபடி, அந்த ஆளுமைகள் தம்மிடம் ஆறுதல்தேடியபோது மகிழ்ந்தபடி ஒரு கனிவுப் பார்வையைக்கொண்டு முகம் மின்னுவார். அது தான் நடிப்பு. அந்தக்காட்சிகள் வந்தபோதெல்லாம் நான் இப்போது சிவாஜிகணேசனைக் காண்பதில்லை. மனோரமாவைத் தான் காண்கின்றேன்.

manorammaமிகசிறு பாத்திரம் தான் இந்தியன், 7G ரெயின்போகாலனி போன்ற திரைப்படங்கள் மனோரமாவுக்கு. அவர்வந்த காட்சிகள் உயிர்ப்புடன் அசைந்தன. தன் பாத்திரம் எதுவென்று தெரிகிறது, அந்த இடத்தில் மனோரமா இறந்துவிடுகிறது. அந்தப் பாத்திரம் உயிர் பெற்று விடுகிறது. மகத்தான கலைஞர்.

சில பூக்கள் வாழ்வில் ஒரு முறையே பூத்துவிடும். அம்மாதிரியான மலர் ஆச்சி மனோரமா. மனதார வணக்கம் சொல்கிறேன்.

[dropcap]டே[/dropcap]விட் ஐயாவை நான் கண்டதில்லை. ஆனால்,அவர் பற்றி நிறையக் கேள்விப்பட்டதுண்டு.சென்னைக்கு அடிக்கடி சென்று வந்தேன். அவரை சந்திக்க முயலாதிருந்த என்னையிட்ட கூச்சம் என்னில் படர்கிறது.

david_ayyaதேசிய உணர்வு கொண்ட எங்கள் எல்லோரினதும் ஒட்டுமொத்தக் கனவு தான் டேவிட் ஐயா. உயர்ந்த கல்வித்தகைமை கொண்டவர். ஒரு நகரின் கட்டுமானத்தை திட்டமிட்ட அதிகாரிகளில் அவர் ஒருவர் வெவ்வேறு கட்டங்களுக்கு போகக்கூடிய வல்லமை கொண்டவர். அவரை எது தமிழீழக் கனவுக்குள் இழுத்து வந்தது.

ஒரு சிலருக்கு மாத்திரமே அது சாத்தியமானது. என்போன்ற சாதாரணமானவர்கள் வெறுமனே உண்டு, உடுத்து, உறங்கி சீவிப்பவர்கள். இவர்களோ மகான் போன்றவர்கள். 1977 இனவன்முறையின் போது தனது உயர் பதவியை உதறித் தள்ளுகிறார். வவுனியா வந்து அங்கு, மருத்துவர்ராஜசுந்தரத்துடன் இணைந்து `காந்தீயம்’ எனும் தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தை அமைக்கின்றார். 1977 இனவன்முறையின் போது மலையகத்திலிருந்து நிறையத் தமிழர் வடபகுதி நோக்கி நகர்கின்றார்கள்.

அவ்வாறு திரண்டவர்களுக்கு இருந்த ஒரேஒரு உதவிக்கரம் காந்தீயம். அது செய்த பணி வரலாற்றில் அச்சாக பதிக்கப்படவேண்டியது. உணவு, உடை, உறையுள் கொடுத்தது மட்டுமல்ல, வவுனியாவின் எல்லைப் புற கிராமங்களான பாவற்குளம், ரம்பைக்குளம் முதலான இடங்களில் இவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். தமிழ்த் தேச எல்லை காக்கும் பெரும்பணி அது.

இவை யாவும் தமிழ் மக்கள், அவர்களுக்கான தேசம்எனும் கனவுகளிலிருந்து தான் முகிழ்க்க முடியும். அவ்வாறான கனவுகளின் நாயகன் டேவிட் ஐயா. அப்போதுஇருந்த ஒரே ஒரு தன்னார்வு நிறுவனம் காந்தீயம். அதுதமிழ்த் தேச உருவாக்கத்திற்கான அத்திவாரக்கல். அவ்வாறு நான் நம்புவதற்கு முக்கிய காரணம் அப்போதைய ஜே.ஆர். அரசு காந்தீயம் நிறுவனத்தை ஒழிப்பதையேதனது தலையாய பணியாகக் கருதியது. `காந்தீயம்’ தமிழர் தேசத்தின் அடிக்கல், என்பதை `சுழியல்’ மூளை கொண்டஜே.ஆர்.ஆல் புரிவது கடினமல்ல.

இவ்விடத்தில் ஒரு கவலையைப் பதிகிறேன். தமிழீழ தேசத்திற்காக போராடிய புளொட் போராளிகள் தமது இராணுவ தேவைகளுக்கு காந்தீயத்தைப் பயன்படுத்தினார்கள் என்ற ஐயத்தை சிங்கள அரசு அழிக்கச் சொன்ன காரணங்கள் அதுவும் ஒன்றோ என்பது என் கவலை.

2005ஆம் ஆண்டளவில் டேவிட் ஐயா, மெல்பேர்னில் அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு ஒரு வரிவந்ததாக ஓரிடத்தில் வாசிக்கக் கிடைத்தது. (நடேசன் கட்டுரை – மனிதன் இணையத்தளம்) “தமிழர்கள் எல்லோரும் இப்பொழுது தம்பி பிரபாகரனது இளம் தோள்களில் எல்லாப் பாரத்தையும் திணித்துள்ளோம். அவனால்இதைத் தனியே சுமக்க முடியாது. வெளிநாட்டுத் தமிழர்கள் இந்தப் பாரத்தை குறைத்து உதவ வேண்டும்.” டேவிட் ஐயாவை அவரது உணர்வுகளுடன் முற்று முழுதாகஉணர்ந்து கொள்வதற்கு இந்த ஒரு வாக்கியம் போதும்.
எப்போதும் தன்னை அகதியாக நினைத்து கொண்டடேவிட் ஐயா, தனது தமிழீழ தேசக் கட்டுமானக் கனவுகளை புதைத்துவிட்டுச் சென்றார், அது முளை விடும் என்றுநம்பியவாறு. அஞ்சழிக்கின்றேன் ஐயா.

[dropcap]உ[/dropcap]திர ஒண்னா வயதில் உதிர்ந்தவர் தமிழினி. காளி எனவும் அவரைப் பார்த்தேன். கருணை மிகுஅம்மாவாகவும் அவரைக் கண்டேன். ஒரு போராளி என்னவிதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமாக திகழ்ந்தார். நேரில் அவரைக் கண்டபோது ஓர் உரையாடல்தொடர்ந்த போது அதனை உணர்ந்தேன். எனது `காலம் ஆகி வந்த கதை’ நூல் அவருக்குப் பிடித்த ஒன்று. எனது மொழி நடை மிகவும் வசீகரித்தது. எனது முகநூல்நண்பராகவும் இருந்தார் தமிழினி.

நமது தேசியத் தலைவரது தேசக் கனவின் பெண்ணியக் குறியீடு தமிழினி என்பது எனது துணிபு. எந்தப் பெரிய ஆளுமையுடன் களமாடினார் தமிழினி. அந்த ஆளுமை குறுகி சிங்களத்தில் சிறைப்பட்டபோது சிதைவுற்ற ஓர் ஆன்மாவைத் தான் காண்போம் என்று தான் நினைத்தோம். அவ்வாறு தான் வேறு சிலர் வெளியில் வந்தபோதும், ஏதும் எழுதிய போதும் கண்டோம்.

tamiliniஆனால் தமிழினி அப்படியல்ல. தான் உயிருடன் இருந்தால் ஒரு நெடுங்கதை எழுதுவேன் என்றும், அது சிதைபட்டுவிடாத ஆன்மாவை தரும் என்றும் சொல்லக் கேள்விப்பட்டேன். (குணாகவியழகன் அவர்களின் `விடமேறிய கனவு’ அத்தகைய ஒரு நெடுங்கதை) தமிழினிக்கு இறுதி வணக்கம் சொல்லும் வலிமை கூட என்னிடம் இல்லை ஆயினும் வணங்குகின்றேன், தாயே!