இலை துளிர் காலத்து உதிர்வுகள் I

490

முற்குறிப்பு – நான் ஜனனித்த ஈழ மணித்திருநாட்டில், யுத்த வடுக்களால் மட்டுமே எழுதப்பட்டிருந்த என் பால்குடிப்பருவங்களில் குறிப்பாக எனது நினைவு தெரிந்த அதேநேரம் நெஞ்சுக்குள் இன்றும் அடிக்கடி என்னை சித்திரவதை செய்துகொண்டிருக்கின்ற சம்பவங்களும், நிகழ்வுகளும் அன்றைய காலக்கண்ணாடியாகவே, ஒரு ஒன்பது வயது சிறுவனின் மனதில், பதிந்துள்ளவை, மரணப்படுக்கை வரை தொடர்ந்து பயணிக்கப்போகும் நினைவுகளை அந்த சிறுவனின் கண்களின் ஊடாகவே சொல்லவேண்டும் என நான் நினைத்து நினைத்து ஏங்கியவைகளை சொல்லத்தான் நினைத்து அடக்கி என் இதயக்கூட்டுக்குள் புதைந்து வைத்திருந்தவைகளை உங்களுடன் தொடராக பகிர்ந்து கொள்கின்றேன்.

சிந்தனைக்கும் அப்பால்ப்பட்ட இந்த சிறுவனின் ஏக்கங்களை, கண்ணால் கண்டவைகளை, சோகங்களை சிந்தனைக்கு உட்பட்ட எழுத்துக்களில் செதுக்கிவிடுபவை கஸ்டமான காரியம்தான். என்றாலும் கூட முடிந்தவரை என்கண்களினூடே உங்களையும் பயணிக்கவைக்க முயல்கின்றேன். இதில் வரும் சம்பவங்கள் நீங்கள் அறிந்தவைகள்தான், புரிந்தவைகளும் கூட, ஆனால் ஒரு சிறுவனின் மனம் அந்த சம்பவங்களை எப்படி உள்வாங்கிக்கொண்டது, அதன் தாக்கங்கள் உங்களை மட்டுமின்றி சிறுவர்களையும் எவ்வாறு தாக்கியது என்பதையும், அதேநேரம் இந்த சம்பவங்களுக்கு பிறகு பிறந்து இன்று வாலிபப்பருவங்களையும் தொட்டுவிட்ட என் இளையோருக்கு ஒரு சுவையான சோகத் தகவலாகவும் இது இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒன்று மட்டும் நிச்சயம் இன்று தொடர்ந்தும் ஈழத்தில் அணையாத காட்டுத்தீயாக கொழுந்துவிட்டெரியும் யுத்தத்தீ இன்றும் பல சிறுவர்களை இன்னும் இருபது வருடங்களில் இதுபோன்று சொல்லவைக்கும் என்பது மட்டும் உண்மை..

இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????

மேற்குறிப்பு -இதை பதிவுலகிற்கு வந்த புதிதில் தொடராக எழுதி வந்தேன். எனினும் இதில் நான் கண்ணால் கண்ட வேதனையான உண்மை சம்பவங்களையே எழுத வேண்டி வரும், குறிப்பாக இந்திய இராணுவம் அந்தக்காலங்களில் ஈழத்தில் நடத்திய அநியாயங்கள் அத்தனையும் விரிவாக வரும் என்பதால் அதை எழுதுவதை இடை நிறுத்தி இருந்தேன். என்றாலும், அன்றைய நிகழ்வுகள் தெரியாத, மறைக்கப்பட்ட சிலர் எம் வேதனை புரியாமல் விதண்டாவாதம் புரிந்து மேலும் மேலும் வேல்பாச்சும் கதைகளை தொடர்ந்து பேசிவருவதால், இந்த உண்மைகள் அவர்கள் புத்தியில் இப்போதாவது உறைக்காதா? என்ற எண்ணத்துடனனேயே மீண்டும் எழுத விழைக்கின்றேன். அன்று நான் கண்ணால்கண்ட, அனுபவித்த துயரங்கள், சம்பவங்களே இவை இதில் இம்மி அளவுகூட நான் கற்பனை செய்யப்போவதில்லை என என் எழுத்தின் மேல் சத்தியம் செய்கின்றேன்.

இந்த தொடர் இந்திய நண்பர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாதிக்கும். ஆனால் உங்கள் மனங்களை வேதனைப்படுத்தவோ, அல்லது இந்தியாவை பழிக்கவோ நான் இதை மீண்டும் எழுத முனையவில்லை. மறைக்கப்பட்டவைகள், காலம் கடந்தும் இன்றும் கவனியாது விடப்பட்ட பெரும் தவறுகள் என்றாவது வெளிச்சத்திற்கு வரவேண்டும், காந்தீயம் பேசும் இந்தியா என்றோ ஒருநாள் ஈழத்தமிழரிட்ம் இந்த சம்பவங்களுக்கு வெளிப்படையான மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே என் அவா…

1987 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஓருநாள். ஆன்று காலைப்பொழுதே.. கதிரவன் ஒளி கசிந்து, வசந்தகால குறியீடுகளான குயிலின் கூவல்களிலும், அணிலின் கீச்சிடல்களிலும், பூக்களின் வாசங்களுடனும் விடிந்திருக்கவில்லை. வழமைபோல வானத்தில் இரண்டு உலங்குவானுர்திகளினதும், அவற்றினால் கக்கப்பட்டும் எரிகுண்டுகளுடனுமே விடிந்தது. அப்போதெல்லாம் சிறுவயது பேதமை மனமோ அல்லது விரக்தியோ தெரியவில்லை வானிலே பலியெடுக்கும், இரும்பு இராட்சதர்கள் வராது போனால் ஏதோ ஒரு வழமைவிரோத பண்பு தலைதூக்கும்.

அன்று அப்படி இல்லை. காலையிலேயே கச்சேரி ஆரம்பித்திருந்தது. “நல்லூர்க்கோவிலடிப்பக்கம்தான் கொட்;டுறாங்கள் ” உடனடி முந்திய செய்தியை தெரிவித்துவிட்டு வீதியால் சைக்கிளில் செல்கின்றார் பாண் விற்பவர். மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரரின் சுற்றுப்பாதை அகலத்தொடங்கியது, கிணற்றுக்கட்டில் குளித்துக்கொண்டிருந்த என்தலைக்குமேலால் பறந்து செல்வது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. மறுகணம் பட பட என்ற பாரிய சத்தத்துடன் முற்றுப்பெறாத வாக்கியத்தொடர்போல் 50 கலிபர் துப்பாக்கி ரவைகள் வீதியோரங்களை நோக்கி பாய்ந்துகொண்டிருந்தன. குளித்துக்கொண்டிருந்த என் மனதுக்குள்ளும் பயம் வந்து புகுந்துகொள்ள, மனதுக்குள் அப்போது பெரும் காப்பகமாகப்பட்டது சுமார் 10 வாழைகள் உள்ள எங்கள் வீட்டின் வாழைத்தோட்டம் தான்.

அப்போது தான் கவனித்தேன் இரண்டு ஹெலி கொப்ரர்கள் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் இருந்த எங்கள் ஊர் வான்பரப்பின்மீது மேலும் “சியாமா செட்டி” என அழைக்கப்பட்ட இரண்டு குண்டு வீச்சு விமானங்களும், அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (பெரும்பாலும் அது பரல் குண்டுகள் என்ற வகை குண்டுகளையே வீசும்.) கூட்டுச்சேர்ந்திருந்தன.

வாழைகளின் மத்தியிலிருந்து அன்று என் சின்ன ஆராய்வு மூளை சொல்லியது “இன்று நடக்கப்போவது அதிகமாகவே இருக்கும் என்று “.அப்போதெல்லாம் எங்கள் அயலவர்களுக்கு தெரிந்திருந்த அறிவியல் உண்மை! பிளாட் போட்ட வீடுகளில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதுதான். அது எவ்வளவு முட்டாள் தனம் என்பது பிறகு நடந்த சம்பவங்கள் வேறு இருக்கின்றது.

இந்த நிலையில் பல அயலவர்களும் எங்கள் வீடு பிளாட் போடப்பட்டது என்பதால் எங்கள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். அங்கு மேலால் நிலவிய பதட்டங்களைவிட தங்கள் கதைகளால் பதட்ட நிலைகளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகரித்துக்கொண்டிருந்தனர். “இங்கபாருங்கோ … இவங்கள் பொம்பர்ல இருந்து ஓதோ எரிகுண்டு ஒன்று போடுறான்களாம், போட்டால் கீழே ஒரு சுற்று வட்டாரத்துக்கு ஒருத்தரும் தப்ப ஏலாதாம் ” தன் ஆரம்ப உரையை மிகப்பயங்கரமாக அரங்கேற்றினார், ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலாயுதம். அவரது மாணவர் என்பதானாலோ என்னமோ உடனடியாக அதை வழிமொழிந்தார் மனோகரன் மாஸ்ரர். கேட்டுக்கொண்டிகொண்டிருந்த மற்றவர்களின் முகங்களில் ஈகூட ஆடவில்லை.

“மம்மி பின் கேட்டை லொக் பண்ணாமல் வந்திட்டேன், கேக் அடித்து வைத்திருக்கிறம் தானே.. இந்த ஏயார் பொம்பிங்கால பேக் பண்ணவும் குடுக்கேல்ல எங்கட “லான்ஸி” போய் அதுகளை சாப்பிட்டுபோடுமோ தெரியாது என்று தனது தாயிடம் செதல்லிக்கொண்டிருந்தா லக்ஸி அக்கா.அப்போது அவ உயர் தரம்படித்துக்கொண்டிருந்தா..அவவின்ட அப்பா வெளிநாட்டில இருந்தவர். கொஞ்சம் தமிழுடன் ஆங்கிலத்தை கலவி கொள்ள வைப்பதில் அவவுக்கு கொஞ்சம் விருப்பம் அதிகம் தான். அவ லான்ஸி என்று குறிப்பட்டது அவர்கள் வீட்டு நன்றியுள்ள நாலுகால் உடையவர்.

சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன? கொஞ்சம் அதட்டினார் வேலாயுதம் மாஸ்டர்.

இந்த சம்பவங்களுக்குள் எதுவுமே தெரியாமல் தனது தாயின் மடியில் இருந்துகொண்டே என் புது பேனாவை நான்காக உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் “காகத்தை” காவம் என்று சொல்லப்பழகும் 2 வயதுடைய சஞ்சீவன்

திடீர் என மிக பதிவாக விமானத்தின் ஓசை ஒன்று எங்கள் காதுகளின் செவிப்புலன்களை கெடுத்துவிடுவதுபோல் பேரிரைச்சலுடன் பதிந்து வந்தது. ஐயோ… முருகா, பிள்ளையாரப்பா… என்றெல்லாம் யார் யார் சொன்னார்கள் என்பதற்கு இடையில் பெரும் சத்தத்துடன் குண்டு ஒன்று போடப்பட்டு வெடித்தது. என் நெஞ்சுக்கூட்டின் இடைகளில் அடைப்பது போன்ற உச்ச பய உணர்வு அப்போது தெரிந்தது. எனக்கு ஆறுதலாகவோ அல்லது அவரது பயத்தாலோ மனோகரன் மாஸ்ரர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

முதலில் நானும் அவரும்தான் வெளியில் எட்டிப்பார்ததோம் …நிலத்தில் கண்ணாடித்துண்டுகளும், சில குண்டு பிசிர்களும் முதலில் தென்பட்டன. வானத்தில் குண்டுச்சத்தம் கேட்ட திசையில் “நோட்டீஸ்கள்” பறப்பதுபோல மின்னி மின்னி ஏதோ பறந்தகொண்டிருந்தது. கீழே வந்து விழும்போது தான் அவைகள் நொட்டிஸ்கள் அல்ல விமானக்குண்டு விழுந்த கட்டடத்தின் ஸீட்கள்தான் மேலே பறந்து பின்னர் வந்து கீழே விழுவதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் பயப்பீதி உந்தவே வீட்டின் உள்ளே ஓடிச்சென்று விட்டோம். வீதியிலும் எவரையும் காணமுடியவில்லை. வானில் சத்தமும் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல வீதியில் ஆளலரம் அவலத்துடன் நடமாடுவதை உணரமுடிந்தது.

சொல்லி வைத்ததுபோல் அவ்விடத்தில் இருந்து அனைவருமே ஒன்றாக எழுந்து வீதிக்கு வந்தோம். முதலில் பல பொது இளைஞர்கள், தயவு செய்து இரத்தம் தேவைப்படுகின்றது கொடுக்கக்கூடியவர்கள் ஆஸ்பத்திரிக்கு உடனவாங்கோ எனத் தெரிவித்துக்கொண்டே சைக்கிள்களில் அவசரமாக ஓடினார்கள், அவர்களின் பின்னால், நான் கண்ட காட்சி அப்படியே சப்த நாடிகளையும் ஆட்டம் காணவைத்தது!! வயிற்றுப்பகுதியில் இரத்தம் வழிந்தோட கண்கள் மேலே சொருகியபடி மேல் மூச்சுவாங்க ஒரு நபரை இருவர் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல சன நடமாட்டம் காணத்தொடங்கியது வீதி.

அன்றைய குண்டு வீச்சு விபரங்களும் வெளிவரத் தொடங்கியது. இரண்டு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், நல்லூர் பகுதியில் இரண்டாம் குறுக்கு வீதி, முத்திரச்சந்தையில் உள்ள ஒரு உருக்கு நிறுவனம், நல்லூர் பின்வீதியில் முடமாவடியில் இருந்த ஒரு பிரபலமான கட்டம் என்பன இந்த குண்டுவீச்சு தாக்குதல்களால் தரை மட்டமாகியதாக செய்திகள் உடன் வந்தன.. பலரது வாய்மூல அறிக்கைகளாக.. சிறிய ஒரு ஓய்வுக்கு பின்னர் நல்லூரில் இருந்த எனது வீட்டிலிருந்து தென்கிழக்காக தொடர்ச்சியாக ஆழுத்தம் கொடுக்கும் ஒரு அதிர் வெடி போன்று தொடர்ச்சியாக குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நமக்கு அண்மையாக இருந்த இராணுவ முகாம்கள், ஒன்று கோட்டை இராணுவ முகாம், அடுத்தது நாவற்குளி இராணுவ முகாம்.

குடிமனைகளை நோக்கிய ஷெல்த்தாக்குதல்கள் கோட்டை இராணுவ முகாமிலிருந்தே இடம்பெறும். இரவு பகல் என்று காலவறைகள் எதுவும் அதற்கு கிடையாது. தென்கிழக்காக சத்தம் கடுமையாக கேட்டுக்கொண்டே இருந்தது. “நாவக்குளி காம்பில இருந்தும் அடிக்கத் தொடங்கிட்டான்போல! என வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் மதியப்பொழுதை தாண்டி செல்லும் வேளைவரை இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சந்று நேரத்தால் வீதியில் பெரும் சனமாட்டத்துடன் கூடிய குரல்கள் எழுந்தபோது என்னையறிமாலே வீதிக்கு ஓடிச்சென்று பார்த்தேன். குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு கிடைத்த தமது பொருட்களையும் ஏந்திக்கொண்டு பெருவாரியாக மக்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனர். வீதியில் நின்ற பெரியவர் ஒருவர் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் “எங்கியிருந்து தம்பி வாறிங்கள்? எங்க பிரச்சினை என்று கேட்டார். பாசையூர், குருநகர் இடங்களில இருந்து வாறம் அண்ணை. கண்போட்டால கொண்டுவந்து வெழுக்கிறான். கனபேருக்கு காயம் அண்ணை வீட்டு பக்கத்தில எல்லாம் வந்து விழுகுது. அதுதான் அங்கிருந்து பாதுகாப்புக்காக ஓடி வாறோம் என்றார்.

அவர்களில் பெரும்பாலான மக்கள் கல்விப்பணிமனைக்கு அருகில் உள்ள சாதனா படசாலையில் தங்கியிருந்தனர். நாங்கள் உட்பட பல எங்கள் இட மக்கள் தேனீர், படுக்கைகள் போன்றவற்றை அங்கு கொண்டுவந்து அந்த மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சில இன்னும் அந்த சத்தத்தினால் ஏற்பட்ட பதட்டம் மாறாமல் காணப்பட்டனர். பெரியவர்கள் பெரும் வேதனை கலந்த தோற்றத்துடன் இருந்தனர். ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்ற மும்முனைத்தாக்குதல்களாலும் மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருந்னர்.

நான் உட்பட அனைவரும் தொடரப்போகும் அபாயங்கள் பற்றி தெரியாமல் இன்றைய நாளில் எமது பயங்கரம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இது ஆரம்பம்தான் இதைவிட பயங்கர அனுபவங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கப்போகின்றது என்று …

( இலைகள் உதிரும்…

– ஜனா