இல்லாத புலியை வலிய அழைக்கும் சிறிலங்கா

1092

ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒரளவுக்கு நிலைதடுமாற ஆரம்பித்துள்ளதனை அவதானிக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் ஒரு ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டுள்ளது என்பதனால் சிறிலங்கா அரசாங்கம் கலக்கம் அடைவதனையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு ஆட்சி மாற்றம் என்று குறிப்பிடும்போது வெறுமனே அரசாங்கக் கட்சியை மாற்றுவதல்ல, அதற்கு மேலும் சென்று ஆட்சியமைப்பை மாற்றி, சிறிலங்காவை தாராண்மைவாத ஒழுங்குக்குள் கொண்டு வருவது என மேற்குலகத்தின் ஆட்சிமாற்ற முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவோர் வாதிடுகிறார்கள். இக்கருத்தினை இக்கட்டுரை மறுதலிக்கவில்லை. இருப்பினும், மேற்கத்தைய நாடுகளின் அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம்எவ்வாறு எதிர்கொள்ள முனைகிறது என்பது பற்றியே இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது.

போரின் இறுதிக்காலம்வரை சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரித்துவந்த மேற்குலகம், அதன் பின்னரே சிறிலங்காவுடன் முரண்பட ஆரம்பித்தது. இந்தமாற்றத்தையிட்டான புரிதல்கள் தமிழ் மக்களிடையே வேறுப்பட்டிருப்பதை அரசியல்வாதிகளும், பாமர விமர்ச்கர்களும் பொதுவெளியில் வெளியிட்டுவரும் கருத்துகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் சிறிலங்காவின் பொய்பிரச்சாரங்களை நம்பியிருந்த சர்வதேசம் இப்போதுதான் உண்மையை உணர்ந்து கொண்டுள்ளது என ஒரு சிக்கலான விடயத்தை இலகுவாக விளக்க முனைபவர்களும் உண்டு. இன்னும் சிலர், அண்மைய நகர்வுகளின் அடிப்படையில், அமெரிக்கா தலைமையிலான சில நல்ல நாடுகளும் (good guys), சீனா, ரஷ்சியா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற கெட்ட நாடுகளும் (bad guys) கொண்ட இருமமாக உலகை விளங்கிக்கொள்கிறார்கள்.

சிறிலங்கா விடயத்தில் மேற்குலகம் மட்டுமல்லாது அதன் எதிரணி நாடுகளும் இணங்கிப்போன விடயம் ஒன்று உள்ளது அதுதான் COIN என சுருக்கமாக அழைக்கப்படும் ‘கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை’ (COunter INsurgency). போர்க்காலத்தில், ஜோர்ஜ் டப்ள்யூ புஷ் இன் `பயங்கரவாதிற்கு எதிரான போர்’ என்ற அடிப்படையிலேயே இலங்கைத்தீவின் விவகாரம் விளங்கிக்கொள்ளப்பட்டதனால், கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை என்ற வகையில் விடுதலைப்புலிகளுடனானயுத்தத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டது. இறைமை கொண்ட நாடுகளால் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், குறித்த நாட்டில் மட்டுமல்லாது அது அமைந்துள்ள பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுவதனால்,இவ்விடயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வழமையான சட்டத்திற்கு புறம்பான வகையில், மனிதவுரிமை விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் தீவிரவாதிகளுக்கு (பயங்கரவாதிகள்) மனிதவுரிமைகள் வழங்கப்படுவது அவசியமில்லைஎன்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் உள்ளது. இறுதிக்கட்டப்போரில் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படாமல், போராளிகள் மீது மாத்திரம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தால், அதையிட்டு சர்வதேச நாடுகள் அதிகம் அக்கறைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. சிறிலங்கா விடயத்தில் போர்க்குற்ற விசாரணை என்ற சொற்களே பாவிக்கப்பட்டிருக்காது எனலாம். இதனடிப்படையிலேயே ‘விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டத்தையிட்டு தாங்கள் கவலைகொள்ளவில்லை’ என மேற்கத்தைய அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள்.

அண்மைய வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளை அவதானிக்கையில், அவை பழைய நிலைக்கு மீளச் சென்று கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகான தேவை தமக்கு இன்னமும் இருப்பதாக நிறுவுவதற்கு எடுக்கும் முயற்சிகளாகவே தெரிகிறது. மனிதவுரிமைச்சபை கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னராக இம்முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மனிதவுரிமைச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தினத்தில் உரையாற்றிய ஐநாவிற்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவர் இரவிநாத் ஆரியசிங்க தனதுரையில் விடுதலைப்புலிகள் மீளிணைவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தமை இங்கு கவனத்திற்குரியது.

விடுதலைப்புலிகளின் மீள் அணிசேர்ப்பு

தமிழர்தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ ஆட்சி நடைபெற்றுவருகின்ற போதிலும், மகிந்த இராஜபக்சவின் குடும்ப ஆட்சி தொடர்வதற்கு இராணுவ பலம் அவசியமாகிறது.அதனை தொடர்ந்து தக்கவைத்து அதற்கெனபெருந்தொகையான பாதீட்டை நியாயப்படுத்துதற்கு ஒரு அச்சுறுத்தும் சக்தி அவசியமாகிறது. அதுவே ‘விடுதலைப்புலிகளின் மீள்வருகை’ என்றபெயரில் அரங்கேறுகிறது. ‘கிளர்ச்சி எதிர்ப்பு’ நடவடிக்கைகளில் மனிதவுரிமைகள் பற்றிய கவனம் இல்லாது போவதால் மகிந்த அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறல்களை நியாயப்படுத்துவதற்கும் நாட்டில் தீவிரவாதம் மீளத் தலை தூக்கியுள்ளதாக காண்பிப்பது அவசியமாகிறது. வெலிவெரியா சம்பத்தைக் கண்டித்த தமிழ்த்தரப்பினர் கோபி, அப்பன், தெய்வீகன் எனப்படுவோரின் கொலைகள்பற்றி வாய்திறப்பதில்லை என்பதிலிருந்து இதனை விளங்கிக்கொள்ளலாம்.

விடுதலைப்புலிகளோ அல்லது வேறெந்த தீவிரவாத சக்திகளோ மீள உருவாகாமல் தடுப்பதில் முன்னரைப்போலவே மேற்கு நாடுகள், இந்தியா, மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவை சிறிலங்காவிற்கு தொடர்ந்து உதவி வருகின்றன. குறிப்பாக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளல், சந்தேகத்திற்கு இடமான குழுக்களை அவதானித்தல், அவற்றுக்குள் ஆழ ஊடுருவல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டு வருகின்றன. ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரும் ஐக்கிய அமெரிக்கா இராணுவ விடயங்களில் சிறிலங்காவிற்கு தொடர்ந்து உதவி வருவது இங்கு ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயமல்ல.

தமிழ் அமைப்புகள் மீதும், செயற்பாட்டாளர்கள் மீதான தடை

புலம்பெயர் தமிழ் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் கொண்ட பயங்கரவாதிகள் தடைப்பட்டியலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிடப்பட்டமை சிறிலங்கா அரசாங்கத்திற்கும் மேற்குலகத்திற்கு இடையிலான உரசலில் முக்கிய நகர்வாக அமைந்துள்ளது. ஐ நா பாதுகாப்புச்சபையினால் 2001ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 1373 இலக்க தீர்மானத்தின் அடிப்படையில் இத்தடைப்பட்டியல் கொண்டுவரப்பட்டமையினால், அதற்கு மதிப்பளித்து காரியமாற்ற வேண்டிய கடப்பாடு ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கிருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனப் பட்டியலிடப்பட்டவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், அவர்களது சொத்துக்களை முடக்குதல் என்பவனவற்றில் குறித்த நாட்டுக்கு உதவ வேண்டியம் அவசியம் மற்றைய நாடுகளுக்கு உண்டு.

தமிழ் அமைப்புகளுக்கும் மேற்குலகதரப்பினருக்கும் இடையிலான தொடர்பாடலை கட்டுப்படுத்தவும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதிகளாக காட்டவும்எடுக்கப்பட்டுள்ள இந்நகர்வினை மேற்குலகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதிலிருந்தே சிறிலங்கா மீதான அதன் அணுகுமுறையினை புரிந்து கொள்ள முடியும்.

ஊடகங்களின் பங்கு

சிறிலங்கா அரங்கேற்றிவரும் ‘விடுதலைப்புலிகளின் மீள்வருகை’ நாடகம் தொடர்பான பரப்புரைகளுக்கு சில ஊடகவியலாளர்களே உதவி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடக ஒடுக்குமுறைக்கு முகம்கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு சில ஊடகவியலாளர்கள் வெளியேறியது போலவே, பொருளாதார காரணங்களுக்காக வெளியிலிருந்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவிவரும் ஊடகவியலாளர்களும் உள்ளனர். அத்தகைய ஒருவராக ரொறொன்ரோவில் வசிக்கும்டி.பி.எஸ். ஜெயராஜை இனங்காண முடிகிறது.பேரழிவினை ஏற்படுத்தக் கூடிய விடுதலைபுலிகளின் தாக்குதல் திட்டம் ஒன்று தடுக்கப்பட்டதாகவும், இத்தாக்குதல் திட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆதரவாளர்களை உதவியதாகவும் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவிடமிருந்து பெறப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் அவர் தொடர்கதை எழுதி வருகிறார். ரொறோன்ரோவில் வசிக்கும் இவரது தகவல்களை மூலமாகக் கொண்டே கொழும்பு ஆங்கில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன என்றால் நிலமையின் தாற்பரியத்தை புரிந்து கொள்ள முடியும்.

செய்தி மூலம் எதுவென்று கூறாது பரபரப்புச் செய்திகளை வெளியிடும் தமிழ் இணையதளங்களும் தெரிந்தோ தெரியாமலோ சிறிலங்காவின் பரப்புரைக்கு துணைபோகின்றன, ‘குண்டுகளுடன் வாகனம் பிடிபட்டது’, ‘துப்பாக்கி மோதல் நடைபெற்றது’ என சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு வெளியிடும் தகவல்களை மையப்படுத்தி, தங்களது செய்தி முகவர்கள் களத்திலிருந்து வெளியிடும் செய்திகள் போன்று பிரசுரித்து வருகிறார்கள். இதையிட்டு இவ்விணையதளங்களின் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.