இன்று மே-21
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.
இந்த படுகொலையைச் சொல்லித்தான் வீரம் செரிந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை, தடை செய்தார்கள். முடக்கினார்கள். பின்னர் முற்றாக அழித்தார்கள்.
இந்த படுகொலையைச் சொல்லித்தான், தேசிய இனமான தமிழின எழுச்சியை முற்றாக கலைத்தார்கள், முடக்கினார்கள்.
இந்த படுகொலையைச் சொல்லித்தான் உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வைத்தார்கள்.
ஆனால் அரசியல் களம் எப்படி ’ஆடியது’ என பாருங்கள்.!?
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி என்ற இந்த மனிதரின் படுகொலைக்கு காரணம் தி.மு.க.வும்தான் என்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரை சூறையாடியது காங்கிரஸ். தி.மு.க.வின் கொடிக் கம்பத்தைக்கூட விட்டு வைக்கவில்லை, சொத்துக்களையும் சூறையாடினார்கள்….
பின்னாளில் இதே ‘சொக்கத் தங்க சோனியா’ கூட்டணியில் பதவியும்-திகார் சிறையையும் சேர்ந்தே அனுபவித்தது திமுக…..
இந்தக் கோரப் படுகொலையில் கருணாநிதிக்கு பங்கிருக்கிறது என ஊர்தோறும் மேடைதோறும் பேசி நாறடித்தார், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பிறகு வந்த தேர்தலில் அதே கலைஞரோடு ஒரே மேடையில் பேசி ஓட்டுக் கேட்டு அதிகாரத்திலும் அமர்ந்து கொண்டார் காங்கிரஸ் வாழப்பாடி.
வைகோ-வை புலிகளின் ஏஜென்ட் என்று முத்திரை குத்தியது காங்கிரஸ். ‘புலிகளை வைத்து என்னைக் கொல்ல திட்டம் போடுகிறார் வைகோ’ என்று கருணாநிதியும் குற்றம் சாட்டி கட்சியிலிருந்தே அவரை விரட்டியடித்தார்கள்.
பின்னாளில் அதே காங்கிரஸ்-தி.மு.க.வோடு ‘கை’ கோர்த்துக் கொண்டு முழங்கினார் வைகோ. ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தார். இப்போது, ‘இனி என் வாழ்நாள் எல்லாம் திமுக-வோடுதான் சேர்ந்து பயணம்’ என்றாகி இணைந்து-மாநிலங்களவை உறுப்பினராகவும் நிற்கின்றார்.
ராஜீவ் கொலையில் செல்வி ஜெயலலிதாவுக்கும் பங்கு இருக்கிறது. ‘இவாளை’ கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று ஜெயின் கமிஷனில் மனுபோட்டு இழுத்தடித்து ஜெ-வை பதறவைத்தார் ‘அவாள்’ சுப்ரமணியசாமி !. தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி பேசி ஜெயலலிதாவுக்கு தலைவலியைக் கொடுத்தார்.
பதிலுக்கு, அ.தி.மு.க மகளிர் அணி ‘மரியாதை’ யையும் உயர்நீதிமன்றத்தில் வைத்து சுப்ரமணியசாமிக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. மானம் உள்ள எந்த ஒரு மனிதரும் அதை மறக்க மாட்டார்கள்.
ஆனால், பிறகு வந்த தேர்தலில் அதே செல்வி ஜெயலலிதாவும்-சுப்ரமணியசாமியும் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். அவாளும்- இவாளும் ஓரே மேடையில் கை குலுக்கி நின்றார்கள்.
1996.ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ராஜீவ் கொலையில் மூப்பனாருக்கு பங்கு இருக்கிறது. ‘ராஜிவை தற்கொலையாளியிடம் விட்டுவிட்டு, மூப்பனார் உள்ளிட்டவர்கள் ஓடி மறைந்து கொண்டார்கள்’ என கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்தார் செல்வி ஜெயலலிதா.
அடுத்து வந்த 2001 தேர்தலில் அதே மூப்பனாரோடு கை கோர்த்துக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டு, வெற்றியும் பெற்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தார் ஜெயலலிதா. மூப்பனார் தேரோட்டியானார்.
எந்த சுப்ரமணியசாமி ‘ராஜீவ் கொலைக்கும் சோனியா காந்திக்கும் தொடர்பு உள்ளது. கொலையின் சூத்ரதாரியே சோனியாதான்’ என பகிரங்கமாக பேசி எழுதி வந்தாரோ, அந்த சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான், குற்றம் சாட்டிய அதே சுப்ரமணியசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பைக் கொடுத்து ஆதரவாக வைத்துக் கொண்டிருந்தது.
(இதுவெல்லாம் திருச்சி வேலுசாமியின் “ராஜிவ்காந்தி படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்” என்ற புத்தகத்தில் பரவலாக கூறப்பட்டுள்ளது)
அதுமட்டுமல்ல, “ராஜிவ் கொலைக்கு சுப்ரமணியசாமியும்-சந்திராசாமியும் சூத்ரதாரிகள். நீதிமன்றம் அவர்கள் மீது சந்தேகப்படுகிறது. எனவே அவர்களை விசாரிக்க வேண்டும்” என ஜெயின் கமிஷன் அறிக்கை கொடுத்து-அதன் மீது சிபிஐ-யின் ‘பல்நோக்கு புலன் விசாரணைக் குழுவை பிரதமர் வாஜ்பாய்’ அமைத்த பிறகும்,…
சோனியாவின் தலைமையிலான பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முறைகூட அந்த இரண்டு ‘சாமி’களையும் அழைத்து விசாரிக்கவேயில்லை என்றாகிப் போனது.
இப்படி கொலைக் குற்றம் சாட்டியவனும்- அதற்கு ஆளானவனும் கைகோர்த்துக்கொண்டு அரசியல் லாப பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க…
இந்த படுகொலையைச் சொல்லித்தான் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு அப்பாவிகளை இன்றுவரை 29 ஆண்டுகளாக சிறையிலடைத்து வைத்துள்ளார்கள்.
ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமான புலிகள் இயக்கமே அங்கு அழிக்கப்பட்டது.
பச்சிளம் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான ஈழ உறவுகள் படுகொலையாகிப் போனார்கள், 90 ஆயிரத்துக்கும் மேலான சகோதரிகள் விதவைகளாகி நிற்கிறார்கள்….
இன்றும் “சூத்திரதாரிகளை’ கண்டறிய முடியாமல் அலைந்து கொண்டிருக்கும்
ராஜிவ்காந்தி ஆன்மா
இவர்களை மன்னிக்குமா?
பா.ஏகலைவன்.