ஈரானின் வல்லரசுக் கனவு

144

இதுவரை பொருளாதாரத் தடையால் மேற்காசியப் பிரதேசத்தில் சற்று அடக்கி வாசித்துக்கொண்டிருந்த ஈரான் இனி மேல் உச்சதொனியில் வாசிக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடன் யுரேனியப் பதப்படுத்தல் உடன் படிக்கையின் பின்னர் அமெரிக்கா தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்ற மில்லை என்றார். ஈராக்கில் சதாம் ஹுசேயினின் ஆட்சியை ஒழித்ததன் மூலம் அமெரிக்கா ஈரானை வலுவடையச் செய்து விட்டது என்பது சுனி முஸ்லிம்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. எகிப்து, அல்ஜீரியா, லிபியா, ஈராக், சவுதி அரேபியாவின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்டஒரு வல்லரசாக தாம் உருவாக வேண்டும் என தற்போதைய ஈரானின் மதவாத ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பிரதேசங்களைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து அங்கு சியா முறைமையிலான இஸ்லாமைப் பரப்ப வேண்டும் என்பது அவர்களது கனவு.

ஈரானின் பிராந்திய ஆதிக்கக் கனவு
2015 மார்ச் மாதம் ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹானியின் ஆலோசகர் அலி யூனிசி ஈரான் ஒரு பேரரசு, ஈராக் அந்தப் பேரரசின் ஒரு பகுதிஎன்றார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஈரானிய புரட்சிப் படையான கட்ஸ் படையின் வெளிநாட்டுப் பிரிவின் தளபதி காசிம் சுலைமான் இன்று ஈரான் தனது மதப் புரட்சியைபாஹ்ரேன் முதல் ஈராக் வரைக்கும், சிரியா முதல் யேமன் உள்ளிட்ட வட ஆபிரிக்காவரைக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார். இவை மட்டுமல்ல 2014-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய உச்சத் தலைவர் அலி கொமெய்னிக்கு நெருக்கமான பாராளமன்ற உறுப்பினர் அல் ரெஜா ஜக்கானி தற்போது பாக்தாத், பெய்ரூட், டமஸ்கஸ், சனா ஆகிய நான்கு அரபுத் தலை நகரங்கள் ஈரானின்கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். இன்னும்சற்றுப் பின் சென்றால் 2013-ம் ஆண்டு அஜர்பைஜானை ஈரானுடன் மீளிணைக்க வேண்டும்என்ற தீர்மானம் ஈரானியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அஜர் பைஜானை சோவியத் ஒன்றியம் ஓர் உடன்படிக்கை மூலம் ஈரானிடமிருந்து 1828-ம் ஆண்டு பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

ஈராக் சியா ஆனால் அரபு
ஈராக்கில் சுனி இஸ்லாமிய அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ.எல் என்றும் ஐ.எஸ் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஈரானே முன்னணியில்நின்று செயற்படுகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சுனி முஸ்லிம் ஆன சதாம் ஹுசேய்ன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தார். அவர் ஈரானுக்கு எதிராக நீண்ட போரையும் 1980இல் இருந்து 1988 வரை நடாத்தினார். அவரது பிராந்திய ஆதிக்கக் கனவால் அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அமெரிக்க ஆதரவுடன் தேர்தல் மூலம் ஈராக்கில் சியா முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்ளின் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா ஐ எஸ் என்னும் போராளி அமைப்பாக மாறியது. சுனிப் போராளிகளும், சதாமின் படையில் இருந்த பாத் கட்சி வீரர்களும் ஐ எஸ்ஸுடன் இணைந்து கொண்டனர். ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினரின் ஆட்சிக்குஎதிராகப் போராடுவதாகச் சொல்லி சவுதி அரேபியா, காடார் ஆகிய நாட்டுச் செல்வந்தர்களிடமிருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. அமெரிக்காவின் முதலாம் எதிரியாக ஐ எஸ் அமைப்பு வளர்ந்து வருகின்றது. இந்த ஐ எஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட அமெரிக்காவும் விரும்புகின்றது ஈரானும்விரும்புகின்றது. இதனால் அமெரிக்காவும் ஈரானும் ஈராக்கில் இணைந்துசெயற்படுகின்றன.

சவுதி அரேபியா
ஈரானின் பிராந்திய ஆதிக்கத்திற்கு பெரும் சவால் விடும் நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதியில் சியா முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை தன்னுடைன் இணைக்க வேண்டும் எனவும் ஈரான் கருதுகின்றது. ஈரானின் நிகராளிகளில் (டசுச்ஞூகூக்சூ) ஒன்றான ஹமாஸ் அமைப்பை சவுதி அரேபியா தனது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றது. ஹாமாஸ்அரசியற் துறைப் பொறுப்பாளர் கலீட் மேஷாலும் மற்றும் பல உயர் மட்டத்தினரும் 2015 ஜ×லை மாதம் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டது ஈரானை உலுப்பியதுடன் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது வரைகாலமும் ஹமாஸ் அமைப்பிற்குத் தேவையான படைக்கலன்களும் நிதியும் ஈரானிடமிருந்தே கிடைத்தன. சவுதி அரேபியாவுடன் உறவை வளர்த்தால் அதன் மூலம் எகிப்திய அரசு மூடிவைத்திருக்கும் ரஃபாக் கடவையைத் திறக்க வைக்கலாம் எனக் கமாஸ் அமைப்பு நம்புகின்றது. ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் பாக்கிஸ்தனிடமிருந்து அணுக்குண்டை வாங்கும் திட்டத்துடன் சவுதி அரேபியா இருக்கின்றது.

லெபனான் – சிரியா – அமீரகம்
பலஸ்த்தீனத்தில் இருந்து இடம்பெயர்ந்தோராலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலாலும் லெபனான் குழப்பம் மிக்க நாடாக இருக்கின்றது. லெபனானில் இருந்து யஸீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை சிரியா படையெடுத்து விரட்டியதன் பின்னர் அங்குள்ள எஞ்சிய பலஸ்த்தீனியர்களால் இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட ஹிஸ்புல்லா அமைப்புமத்திய தரைக் கடலில் உள்ள ஈரானின் விமானம்தாங்கிக் கப்பல் என விமர்சிக்கப்படுகின்றது. ஹ்ஸ்புல்லா அமைப்பிற்கு படைக்கலன்களும் நிதியும் வழங்கும் ஈரான் தனது பிராந்திய ஆதிக்கத்தை லெபனானில் உள்ள ஹ்ஸ்புல்லா மூலம் முன்னெடுத்து வருகின்றது. சிரியாவில் சுனி ஐ எஸ் அமைப்பும் சிரிய அதிபர் அல் பஷார் அசாத்திற்கு எதிரான சுனிக் கிளர்ச்சிக்காரர்களும் ஒரு தரப்பினருடன் மற்றத் தரப்பினர்போராடி அழிந்து கொள்வது ஈரானிற்கு மகிழ்ச்சியூட்டும் ஒன்று. லெபனானின் செயற்படும் சியா முஸ்லிம் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கான விநியோகம் ஈரானில் இருந்து சிரிய விமான நிலையங்களுÖடாக நடை பெறுகின்றது. இதனால் சிரியா ஈரானைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு நாடாகும். அதிபர் பஷாத்தைப் பாதுகாக்க ஈரான் பணம், படைக்கலன் ஆகியவற்றை வழங்குவதுடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாப் போராளிகளை அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட வைக்கின்றது. ஈராக்கும் சிரியாவும் ஈரானின் ஆதிக்கத்திற்குள் வந்தால் அடுத்ததாக லெபனான் இலகுவாக ஈரானின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
ஈரானும் சிரியாவும் லெபனானுடனான எல்லையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஈரானுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையில் ஹோமஸ் நீரிணையில் உள்ள மூன்று தீவுகளும் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகமுறுகல் நிலை உண்டு. அரபு லீக் நாடுகள்ஐக்கிய அமீரகம் தமக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு எனக் கருதுகின்றனர்.

ஈரானின் நிகராளிப் போர்கள்
ஈரான் தற்போது சிரிய அரசினூடாகவும் ஹ்ஸ்புல்லாவின் உதவியுடனும் சிரிய அரசுக்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், ஈராக்கில் அதன் அரசினூடாக ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரையும், யேமனில்சவுதி அரேபியாவிற்கு ஆதரவான அரசுக்குஎதிராக ஹதி இனக்குழுமப் போராளிகளுÖடாக ஒரு நிகராளிப் பேரையும் நடாத்தி வருகின்றது. நிகராளிப் போர் நேரடிப் போரிலும் பாக்கச் செலவு மிக்கது. அரபு சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவை ஈரானின் ஆதிக்க நாடாக மாற்றுவது இயலாத ஒன்று. அப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் துருக்கியையும் சவுதி அரேபியாவையும் மிஞ்சி இதைச் சாதிக்க வேண்டும்.

அமெரிக்கா சிரியாவில் சுனி முஸ்லிம்களின் ஆட்சியை விரும்புகின்றது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பு ஈரான், ஈராக்கிய அரசு, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் தக்குதலை எதிர்கொள்கின்றது. ஐ எஸ் அமைப்பை அங்கு ஒழித்துக் கட்டினாலும் மொழியாலும் இனத்தாலும் வேறுபட்ட ஈராக்கை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதும் கடினம். யேமனைப் பொறுத்தவரை அது சவுதி அரேபியாவின் கொல்லைப் புறம். ஈரானுக்கு ஆதரவான ஹூதி இனக்குழுமம் எண்ணிக்கை அளவின் குறைவானது.

ஈரானிற்கு `சூழ்’நிலை சரியில்லை
ஈரானைச் சுற்றவர சுனி முஸ்லிம்களின் நாடுகளே இருக்கின்றன. தென் கிழக்கில் ஒரு நீண்ட எல்லையுடன் சவுதி அரேபியாவும் வடகிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியும் கிழக்கில் உறுதியற்ற ஆட்சியையும் பெரும்பானமை சுனி முஸ்லிம்களையும் கொண்ட சவுதியின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானும் மேற்கில் ஈரானுடன் எட்டு ஆண்டுகள்போர் புரிந்த ஈராக்கும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பது குறைவு சீனாவும் இரசியாவும்அவ்வப்போது அரசுறவியலில் (இராசதந்திரத்தில்) ஈரானுக்குச் சார்ப்பாக நடந்து கொண்டாலும் அவை ஈரானின் கேந்திரோபாய நட்பு நாடுகள் அல்ல. இந்த இரு வல்லரசுகளும் ஈரானுக்குத் தேவையான நேரங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமது இரத்து(வீட்டோ) அதிகாரங்களைப் பாவித்தது இல்லை. உலகஅரங்கில் ஈரான் ஒரு தனித்து நிற்கும் நாடாகும்.

ஈரானின் பாது காப்புச் செலவீனத்திலும் பார்க்க சவுதியின் பாதுகாப்புச் செலவீனம் நான்கு மடங்கானது. ஈரான் தனது படைக்கலன்களில் பெரும் பகுதியைத் தானே உற்பத்தி செய்கின்றது. அவற்றை அவ்வப்போது லெபனானிலும் காசா நிலப்பரப்பிலும் பரீட்சித்து வருகின்றது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், காட்டார் போன்ற செல்வம் மிகுந்த அரபு நாடுகள் அரபு நாடல்லாத ஈரான் அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காது.

ஈரானின் பிராந்திய ஆதிகக் கனவை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா அதைச் சுற்றி தனது பல படைத்தளங்களை வைத்துள்ளது.