ஈழத்தமிழர்களின் அதிகாரமையம் மீண்டும் கொழும்புக்கு

882

இலங்கைத்தீவு காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலத்திலும்,ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மையமாக கொழும்பு இருந்து வந்தது. தலைநகர் என்ற வகையிலும், பாராளுமன்றம், அமைச்சரவை அலுவலகங்கள், அரச பணியங்கங்களின் தலைமையங்கள் என்பவை கொழும்பில் இருப்பதாலும், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத ஒற்றையாடசி முறையில் இது இயற்கையான நடைமுறையாகவே தென்படுகிறது. இருப்பினும் சமஸ்டி பின்னர் தனிநாடு என அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்ட தமிழர் தலைமை கொழும்பில் மையங் கொண்டிருந்தமை, அதன் நடைமுறைக்கும் கொள்கைகளுக்கும் இடையில் வேறுபாடுகளை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது.

விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற ஆரம்பித்ததிலிருந்துதான் இந்நிலையில் மாற்றம் ஏற்படஆரம்பித்தது. 1987ம் ஆண்டின் ஆரம்பத்தில், தமிழ் நாட்டிலிருந்து திரும்பிய தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் அதுவரை தமிழ்நாட்டிலிருந்ததமது தலைமை பணியகத்தை தமிழீழ பிரதேசத்திற்கு மாற்றினார். அன்றிலிருந்து முள்ளிவாய்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது வரையிலான இருபத்தியிரண்டு வருடகாலத்தில் ஈழத்தமிழர்களின் அதிகார மையம் அவர்களது பாரம்பரிய பிரதேசத்திலேயே இருந்து வந்தது. இன்று அது மீளவும் கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் சமூகத்தில் மேட்டுக்குடியினரின் கைகளுக்கு அதிகாரம் சென்றுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்வதால், இம்மாற்றத்திற்கு துணைபுரிபவர்களாக சிங்கள ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல், வெளிச்சக்திகளும் இருக்கின்றன. இம்மாற்றத்தை வெறுமனே பிரேதசம் சார்ந்த விடயமாக அணுகாமல்,அரசியல் ரீதியாக பார்ப்போமாயின், இது தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.

மேலும், தமிழ்த் தேசிய இனத்தை சிறுபான்மை இனமாகவும், இறைமை மற்றும் தாயக கோரிக்கையை மறுதலிப்பதாகவும் இம்மாற்றம் அமைகிறது. ஒற்றையாட்சி முறைக்குள், இணக்க அரசியலை நடாத்தும் நிலைக்கு தமிழ் அரசியல் படிப்படியாகச் சென்றுகொண்டிருப்பது தெளிவாகிறது. மேற்குலக சக்திகளை பொறுத்தவரை, தீவிரமான தேசியவாதக் கோரிக்கைகளை நீர்த்துப் போகவைத்து, இலங்கைத் தீவினை பல்லின சமூகங்களைக் கொண்ட, தாராண்மைவாத சனநாயக முறைக்கு கொண்டு செல்வதற்கான நேர்மறையான படிமுறை மாற்றமாகவே அவர்கள் இதனை எடுத்துக் கொள்வார்கள்.

காலனித்துவத்துக்கு பிந்திய காலத்தில் சிங்கள மேட்டுக்குடிகளின் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளிலிருந்த அதிகாரத்தை கைப்பற்ற, அக்கட்சியின் குடும்ப ஆதிக்கம் காரணமாக விலகிச்சென்ற S.W.R.D பண்டாரநாயக்க முற்பட்டார். மேட்டுக்குடியைச் சேர்ந்த வளவுக்காரரான அவருக்கு சிங்கள குட்டி முதலாளிகளின் (petty bourgeois) உதவி தேவைப்பட்டதால் அவர்களுடன் சமரசம் செய்ய வேண்டியிருந்து. 1956 இல்இவர்களின் உதவியுடனேயே பண்டாரநாயக்க அதிகாரத்தை கைப்பற்றினார். இவற்றை வைத்து, பண்டாரநாயக்க வர்க்கபேதங்களுக்கு அப்பாற்றபட்ட அரசியலை முன்னெடுத்தார் என்று குறிப்பிட முடியாது. சில மேட்டுக்குடி குடும்பங்களின் கைகளிலிருந்து அதிகாரத்தை பெற்றுக்கொள்ள அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. பின்னாளில் பண்டாரநாயக்க குடும்பத்தை சுற்றியே அவரது கட்சியின் தலைமையிருந்தமை இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால், சிங்கள குட்டி முதலாளிகள் அரசியலுக்குள் வருவதற்கும், அமைச்சுப்பதவிகளைப் பெற்று அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கும் இது வழிசமைத்தது என்பதனையும், முதலாளித்துவக் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் இன்று இவ்வர்க்கத்தினரை அரவணைத்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதனையும் மறுதலிக்க முடியாது.

சிங்கள அரசியல் இவ்வாறு இருக்கையில், தமிழ் கட்சி அரசியல் தொடர்ந்தும் மேட்டுக்குடியினரின் கைகளிலேயே இருந்து வந்தது. இலங்கைப் பாராளுமன்றத்தில், தமிழ் அரசியற் கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்தியவர்கள், பகுதி நேரமாக அரசியலில் ஈடுபட்ட ஆங்கிலம் தெரிந்த சட்டவாளர்களாக இருந்தார்கள். வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திய அவர்கள் கொழும்பைநிரந்தர வதிவிடமாகக் கொண்டிருந்தனர். சமஸ்டி முறையான தீர்வினை தமது அரசியல் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆரம்பக் கூட்டம் 1949 டிசம்பர் 19ம் திகதி கொழும்பு மருதானையிலுள்ள எழுதுவினைஞர் சங்க மண்டபத்திலே நடைபெற்றது.

தமிழ் இனவெறியை உணர்ச்சிப் பிளம்பாக வெளிப்படுத்திய தமிழரசுக்கட்சியின் வார இதழ் `சுதந்திரன்’ கொழும்பிலிருந்தே வெளிவந்தது. 1977ம் ஆண்டு இனவழிப்பு வன்செயல்களில் சுதந்திரன் அச்சகம் தாக்கப்பட்டதன் பின்னரே `சுதந்திரன்’ யாழ்நகரில் மகாத்மா காந்தி வீதிக்கு இடம் மாற்றப்பட்டது. 1977ம் ஆண்டு மே மாதம்நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணிபோட்டியிட்டு பெரு வெற்றியீட்டியிருந்தாலும், அதன் எல்லாவித செயற்பாடுகளும் கொழும்பை மையப்படுத்தியே இருந்தது. இதிலிருந்து கூட்டணியினர் தமது கொள்கைவிடயத்தில் எவ்வளவு `உறுதியாக’ இருந்தார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.

1983ம் ஆண்டு இனப்படுகொலை சம்பங்களைத் தொடர்ந்து, பிரிவினையைத் தடைசெய்யும் அரசியல் அமைப்பின் ஆறாம் திருத்தச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டமூலத்திற்கமைய சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்த கூட்டணியின் தலைமை தமிழ்நாட்டுக்கு சென்று தங்கியது. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைசாத்திடப்படும் வரை கூட்டணியினர் மட்டுமன்றுவிடுதலை இயக்கங்களும் அங்கு பயிற்சி முகாம்களையும், பணியகங்களையும் நிறுவியதால். அந்த நான்கு ஆண்டு காலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் மையம் தமிழ் நாட்டில்தான் நிலைகொண்டிருந்தது. இதனை ஒரு புகலிட ஆட்சி மையத்திற்கு ஒத்ததாகக் கருதமுடியும்.

1990 இல் இந்திய இராணுவத்தினரின் வெளியேற்றத்துடன் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் தமது தலைமையகத்தை நிறுவிச் செயற்பட்டனர். 1995ம் ஆண்டு இடப்பெயர்வுடன் விடுதலைப்புலிகள் வன்னியில் தமது செயலகங்களை நிறுவியதுடன் நடைமுறை அரசையும் சிறிது சிறிதாக பலப்படுத்திவந்தனர். இக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் மையம் தமிழர் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்தது. ஈழத்தமிழர்களின் அண்மைய அரசியல் வரலாற்றில் வன்னி அரசியல் மையம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்திருந்து. சர்வதேச இராசதந்திரிகள், முக்கியஸ்தர்கள் என கிளிநொச்சிக்கு படையெடுத்ததுபோல் முன்பொருபோதும் நிகழவில்லை. இந்த காலகட்டத்தில்தான் தமிழர்கள் தமது நடைமுறை அரசின் மூலம் பெற்றுக்கொண்ட இறைமைக்கு (earned sovereignty) உரித்தானவர்கள் ஆனார்கள்.

இந்த இடைக்காலத்தில், ஒரு சமாந்தரமான அரசியல் மையத்தை கொழும்பில் நிறுவும் முயற்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை இறங்கியது. குறிப்பாக சந்திரிக்கா ஆட்சியின் முதல் தவணையின்போது, கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினாரக இருந்த நீலன் திருச்செல்வம்மூலமாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திரிக்காவின் உத்தியோகபூர்வமற்ற ஆலோசகராக செயற்பட்ட நீலன் தீர்வுத்திட்டம் ஒன்றினை வரைந்து, ஒற்றையாட்சி முறைக்குள்அதிகரித்த அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் தீர்வினை ஏற்படுத்த முனைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வழமைபோல் சிங்கள மேலாதிக்கம் இதற்கு உடன்படவில்லை.

கொழும்பிலிருந்து சமாந்தரமாகச் செயற்படமுனைந்த இந்த தமிழர் தலைமை எல்லாவிதத்திலும், தாயக விடுதலைப் போராட்ட நியாயங்களைமறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. இக்கால கட்டத்திலேயே விடுதலைப்புலிகள் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்டன.
சிறிலங்காவின் எதிர்மறையான பரப்புரைகள் வெற்றி பெற்றன என்பதனையும் கவனத்தில் கொள்க. நீலன் திருச்செல்வத்தை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலமே கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்க முனைந்த சமாந்தரமான ஆனால் மென்போக்கான தலைமை சிதைக்கப்பட்டது. சில அரசியல் ஆய்வாயளர்கள் குறிப்பிடுவது போல் இது வெறுமனே கருத்து வேறுபாடுகளின் காராணமாக ஏற்படவில்லை.

இவ்வாறு சமாந்தரமான தலைமைகளை ஓரணியில் இணைப்பதற்காகவே 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இவ்வுருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்த்தது போன்று, இது ஒரு கொள்கை ரீதியான இணைப்பாக இல்லாமல், நிர்ப்பந்தம் காரணமாக ஏற்பட்ட சந்தர்ப்பவாத கூட்டமைப்பாக இயங்கியது என்பது பின்னாளில் தெரியவந்தது. கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன் போன்றவர்கள், முன்பிருந்தது போன்று சமாந்தரமான நிலைப்பாட்டையை இரகசியமாகப் பேணிவந்தனர். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சர்வதேசசக்திகள் உதவியமைக்கு மேற்படி கொழும்புத் தலைமையும் காரணமாக இருந்தது. 2009க்குபின்னர் இத்தலைமையே முதன்மைப்படுத்தப்படுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் அவர்களுக்கு இருந்தாலும், சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப இணைந்து செயற்படக் கூடிய தலைமையாகவே இது இருந்துவருகிறது.