ஈழத்தமிழர்கள் சர்வதேசத்துக்கு சொல்லவேண்டிய செய்தி என்ன ?

487

கடந்த சில வருடங்களாக தமிழர் தாயகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், அது உள்ளுராட்சிச் சபைத்தேர்தல்களாக இருந்தாலும் அத்தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும்என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கூறி வருகிறார்கள். இவை கூட்டமைப்பின் பரப்புரைத்தந்திரம் என ஒதுக்கி விடலாம். இருப்பினும், எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் சொல்லவேண்டிய சில செய்திகள் உள்ளன. அவற்றை அவர்கள் தமது வாக்களிப்பு மூலம் அல்லது வாக்களிக்காது விடுவதன் மூலம் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இலங்கைத் தீவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மேற்குலகம் முனைகிறது என்பதுபற்றி இப்பத்தியில் பலதடவைகள் அலசப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியை நிறுவுவது என்ற போர்வையில் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்குலகம் பல்வேறுவழிகளில் முயற்சித்து வந்தது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படாத நிலையில்,இந்நகர்வினை எவ்வாறு செயற்படுத்தப்போகிறது என அறிய பலரும் ஆர்வமாக இருந்தார்கள். கடந்த மாத முற்பகுதி வரை இராஜபக்சவின் குடும்ப சாம்பிராஜ்யம் மிகவும் உறுதியாக இருந்து வந்ததுடன் அங்கு ஒரு ‘அரபு வசந்தம்’ வீசுவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தல்நடைபெறவிருப்பதாக ஊகங்கள் வெளியிட்ட வேளையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நியமிப்பதற்காக பலரது பெயர்கள் அடிபட்ட போதிலும், மகிந்த இராஜபக்சவை தோற்கடிக்கக் கூடிய ஒருவரை அவர்களால் அடையாளம்காண முடியாதிருந்தது. இந்நிலையில், அதிரடியாகநொவெம்பர் 20ம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டினைக் கூட்டி தான் போட்டியிடவுள்ள முடிவினை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

கடந்த மாதம் வரை இராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து பதினெட்டாம் திருத்தச்சட்ட மூலம் உட்பட மகிந்த அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரித்த ஒருவர் ஏன் இவ்வாறுமாறிவிட்டார்? இதற்கு இலகுவாக ஆசை யாரைத்தான் விட்டது என்று கூறி விடலாம். ஆனால் இதன் பின்னணியிலிருந்த சக்திகளை இனங்கண்டு கொள்ளவது முடியாத காரியமாகவே அமையும். 2004ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப்புலிகளின் கிழக்குமாகாண கட்டமைப்புகள் தலைமையிலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அப்போது மட்டு – அம்பாறை மாவடங்களுக்கான சிறப்புத்தளபதியாக இருந்த கருணா வெளியிட்ட அறிவிப்பினையும் அதனை தொடர்ந்து அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த எடுத்த நடவடிக்கைகளையும் இதனுடன் ஒப்பிடலாம். ஜனாதிபதிப் பதவியை கைப்பற்றுவதற்கான ஆசையைக்காட்டி மைத்திரிபாலவை மகிந்த முகாமிலிருந்து பிரித்தெடுப்பதில் வெளிச்சக்திகளின் அரூபக்கரங்கள் இருந்திருக்கும் எனக் கருத இடமுண்டு.

இலங்கைத்தீவில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்தும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் மகிந்த அரசாங்கத்திலிருந்து ஒருவரை பிரித்தெடுத்து அவரையே மகிந்தவிற்கு எதிராகப் போட்டியிட வைப்பதன் மூலம் இதனைச்சாதித்துவிடலாம் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மைத்திரிபாலவை பொது வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் இலங்கைத் தீவில் உண்மையான ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என்பதனையும், தற்போதைக்கு வெறுமனே தலைவர்களின் மாற்றமே சாத்தியமாகும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் நாட்டின் தலைவர்பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தே ஒருவரை தெரிவு செய்ய முற்படுவதன் மூலம்எதிர்க்கட்சிகள் தமது பலவீனமா நிலையை மட்டுமல்ல, எதிர்க்கட்சிக் கூட்டணி என்பது வெறும் சந்தர்ப்பவாதக் கூட்டு என்பதும் வெளிப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தென்னிலங்கைக் கட்சிகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு ஒருபுறமிருக்க, தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றியே நாம் அதிகம் அக்கறைப்பட வேண்டியுள்ளது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எனக்கூறப்படுகிற தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் யாரைஆதரிப்பது என்பதில் தாம் எதுவித முடிவினையும் எடுக்கவில்லை என்றும் இது விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்க விரும்பும் கூட்டமைப்பினர்தமது ஆதரவு வெளிப்படையாகத் தெரிவிப்பின்அதுவே மற்றைய தரப்பிற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதனால் தமது விருப்பத்தை வெளியில்சொல்ல முடியாது அவதிப்படுவது தெரிகிறது.கூட்டமைப்பும் அதன் முன்னைய அவதாரங்களும் இவ்வாறு நடந்து கொள்வது இதுதான்முதற்தடவையன்று. 1982 இல் நடைபெற்றமுதலாவது ஜனாதிபதித் தேர்தலின்போதும், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறவில்லை. தேர்தலைப்புறக்கணிக்குமாறு சில தமிழ் அமைப்புகள் விடுத்தகோரிக்கையையும் ஆதரிக்கவில்லை.

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக groundviews இணையத்தளத்தில் சட்ட ஆய்வாளரும், பத்தி எழுத்தாளருமான கலன சேனாரத்ன எழுதிய கட்டுரையில், இரண்டு சிங்களத் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான போட்டி தமிழ்மக்கள் மறக்கப்பட்ட தரப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் மகிந்த தரப்பும் சரி, மைத்திரிபாலதரப்பும் சரி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள்பற்றி எதுவும் பேசப் போவதில்லை, மாறாக தமிழர்கள் விடயத்தில் தாம் கறாரான போக்கையேதொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாகக் கூறிவருகின்றன. அதிகாரப் பரவலாக்கம் எதனையும்தாம் செய்யப்போவதில்லை என மைத்திரிபாலகூறிவருவதுடன், மகிந்த குடும்பம் உட்பட எவரையும் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும்கூறி வருகின்றமை கவனத்திற்குரியவை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் இரண்டு தரப்பும் ஒத்த கருத்தினை வெளியிட்டுவரும் நிலையிலும். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்து ஆங்காங்கே கூட்டமைப்பின் புலம்பெயர் ஆதரவாளர்களால் வெளியிடப்படுகிறது. புதிய அரச தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் தமது வர்த்தக முயற்சிகளுக்கு புதிய பாதை திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் உள்ள சிலரும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்களும் மைத்திரிபாலவை தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும் எனக் கூறிவருகிறார்கள். இலங்கைத்தீவில் ‘ஐனநாயகத்தையும், நல்லாட்சியையும்’ ஏற்படுத்துவதற்கு ‘ஆட்சி மாற்றம்’ அவசியம் என்பதே இவர்கள் வெளிப்படையாக வைக்கும் கோரிக்கையாகும். சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தி தேர்தலில் நிற்கும் இரண்டு தரப்புகளில் ஒருதரப்பினர் இலங்கைத்தீவில் ஐனநாயகத்தையும், நல்லாட்சியையும்’ ஏற்படுத்தப்போகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையான கருத்தாக இருக்கிறது.

2005ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விடுதலைப்புலிகளின் வேண்டுகோளின் பேரில் தமிழ் மக்கள் புறக்கணித்தமையையிட்டும் சிலர் கருத்துக் கூறப்புறப்பட்டுள்ளார்கள். மேற்படிதேர்தலில் இரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தால் முள்ளிவாயக்கால் பேரவலம் நடந்திராது எனவும், தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும், தேர்தல் புறக்கணிப்புஆபத்தானது எனவும் இவர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். மகிந்த இராஜபக்சவிற்குபதிலாக இரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தால் அப்போதும் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க உதவிய நாடுகள்அவருக்கு ஆதரவு வழங்கியிருக்கும் என்பதுஒருபுறமிருக்க, 2005ம் ஆண்டுத் தேர்தலில் இனவாத அடிப்படையில் மகிந்த இராஜபக்சவுடன்கூட்டுச் சேர்ந்திருந்த இனவாதக் கட்சிகளான ஜேவிபி, ஜாதிக ஹெல உருமய (ஜே.எச்.யூ)ஆகிய இரண்டும் இப்போது மைத்திரிபால அணியுடன் நிற்பதனையும், ஜே.எச்.யூ மைத்திரிபாலவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச் சாத்திட்டமையையும் இவர்கள் எவ்வாறு நியாயப்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலத்தில், இவ்வொப்பந்தத்தையும், யுத்த நிறுத்தத்தையும் காரணம் காட்டி பிரதமராகவிருந்த இரணில் விக்கிரமசிங்கவிற்கு எல்லாவித நெருக்கடிகளையும் கொடுத்த சந்திரிகா இன்று இரணிலுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது வடிகட்டிய சந்தர்ப்பவாதம் என்பதனைத் தவிர வேறெதுவாக இருக்கும்? இந்த இணைப்பை புரிந்துணர்வு ஒப்பந்தகாலத்தில் காட்டியிருந்தால், தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும். முழுத் தீவும் உண்மையான சமாதானத்தை அடைந்திருக்கும். சந்திரிகாவே மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்கு வழிவகுத்தார் என்பதனைக் கவனத்தில் கொள்ளாமல் தேர்தலை புறக்கணிக்குமாறு கேட்டமைக்காக விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டுவதில் எந்த நியாயமும் இல்லை.

அவ்வாறாயின் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்? சிறிலங்காவில் பெரும்பான்மை மக்களின் நலனை முதனிலைப்படுத்தும் ஜனநாயக முறையில் தாம் நம்பிக்கை இழந்து விட்டதனை தமது வாக்களிப்பின் மூலம் சர்வதேசத்திற்க வெளிப்படுத்துவதே தமிழ் மக்கள வெளிப்படுத்த வேண்டிய செய்தியாக இருக்கும். இச்செய்தியை எவ்வாறு தெரிவிப்பது என்பதும் ஒரு சிக்கலான விடயமே. முழத்திற்கு ஒரு இராணுவம் இருக்கிற பிரதேசத்தில் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது இயலாத காரியமாக இருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டு முதன்மை வேட்பாளர்கள் தவிர்ந்த வேறு ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.