ஈழத்தமிழர் தேசத்தில் சமூக இயக்கங்கள் வளராதது ஏன் ?

76

ஈழத் தமிழர் தேசத்தின் சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையயாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா? சிவில் சமூகத்தை விட அரசியற் சமூகம் பலமானதாகவும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கிறதா?

சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்வதற்கு ஜனநாயகச் சூழல் அவசியமானது. இங்கு ஜனநாயகச் சூழல்என்பது தேர்தல் ஜனநாயகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. சுதந்திரமாகச் செயற்படுவதற்கான அரசியல், சமூக பண்பாட்டு வெளி என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆயுத மோதல்கள் நிறைந்தகாலகட்டத்தில் இவ் வெளி குறுகியதாக இருக்கும் நிலைமை ஈழத் தயாகத்திலும் உலகின் ஏனைய பல நாடுகளில் இருந்திருக்கிறது?

இவ் விடயம் பற்றிச் சிந்திப்பதற்கு நாம் சிவில் சமூகம், அரசியற் சமூகம் ஆகிய இரு எண்ணக்கருக்களைப் பற்றி சற்றி நோக்குவது பயன் தரும். ஏனெனில் சமூக இயக்கங்களின் வளர்ச்சிசிவில் சமூகத்தின் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட `அரசியற்’ சமூகத்துக்கும் சிவில் சமூகத்துக்கும இடையே இருக்கக் கூடிய உறவுகளும்சமூக இயக்கங்களின் வளர்ச்சியுடன் தொடர்புபடக் கூடியவை. சிவில் சமூகம், அரசியல் சமூகம் போன்ற எண்ணக்கருக்களை இக் கட்டுரை எத்தகைய அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பதனைத் முதலில் தெளிவுபடுத்தல் அவசியம்.

சிவில் சமூகத்தினை ஒரு பரந்த அர்த்தத்தில்அரசு (State), சந்தை (Market) குடும்பம் (Family)என்ற நிறுவனங்களுக்குள் உள்ளடங்காத ஒரு சமூகவெளி எனலாம். இங்கு குடும்பம் என்பது பொதுத்தளத்தில் இயங்காது பிரத்தியேகத் தளத்தில்இயங்கும் நிறுவனம் ஆக உள்ளது. ஏனைய இரண்டும் பொதுத்தளத்தில் இயங்குபவை. இந்த அர்த்தத்தில் பார்த்தால் அரசு மற்றும் சந்தை போன்ற நிறுவனங்களுக்கு வெளியில் பொதுத்தளத்தில் இயங்கும் அனைத்து சமூகச் செயற்பாடுகளையும் நாம்சிவில் சமூக செயற்பாடுகள் என அழைக்க முடியும். இந்த பரந்த அர்த்தத்தில் கல்விச்சமூகம், தொழிற் சங்கங்கள், சமய நிறுவனங்கள், பல்வேறு வகையான மக்கள் அமைப்புக்கள், ஊடகங்கள் என இவை அனைத்துமே சிவில் சமூகம் என்ற வகைக்குள் உள்ளடங்கப்படக்கூடியவை. இத்தகயை சிவில் சமூகத்தில் அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில் முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்குடன் இயங்கும் அமைப்புக்களை நாம் சமூக இயக்கங்கள் எனலாம். தற்போது ஈழத் தாயகத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டு அமைப்புக்களை நன்கு அவதானித்தால் அவை எந்தளவு துÖரம் சமூக இயக்கங்களாக உள்ளன என்பது புலனாகும். சமூக இயக்கங்கள் போதியளவு வளர்ச்சியடையாமல் இருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

அரசியற் சமூகம் என்பது ஏதோ ஒரு வகையில் அரசுடன் தொடர்புபடக்கூடியது. ஒரு நாட்டின் சட்டவாக்கத்திலோ அல்லது நிர்வாகத்தைத் தலைமை தாங்கி நடாத்துவதிலோ பங்கு கொள்ளக்கூடியது. அரசியற்கட்சிகள் அரசியல் சமூகத்தின் முக்கிய பங்காளிகளாக அமையும்.இவ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி நாட்டின் சட்டங்களை ஆக்கிக் கொள்கின்றனர். இவர்களின் பெரும்பான்மை பெறுபவர்கள் நாட்டின் நிர்வாக அலகினைப் பொறுப்பெடுத்து அரசாங்கத்துக்கு தலைமை தாங்குகின்றனர். இத்தகைய பின்னணியுடன் அரசியல்கட்சிகளை, இயக்கங்களை நாம் அரசியல் சமூகம் என அழைக்கமுடியும். சிலர் ஊடகங்களை அரசின் ஒரு பகுதியாக, அரசின் ஏனைய மூன்று அங்கங்களான சட்டவாக்க அலகு, நிர்வாக அலகு, நீதிபரிபாலன அலகு என்பவற்றுடன் நான்காவது அங்கமாக வர்ணிப்பதுமுண்டு. ஈழத் தமிழர் சமூகத்தின் அரசியற் சமூகம் எனும் போது அது அரசற்றதேசத்தின் அரசியற் சமூகமாக இருக்கிறது என்ற புரிதலுடனும்தான் அதனை அணுக வேண்டும். இத்தாலிய அறிஞர் கிராம்சி தனதுமேலாண்மை (Hegemony) தொடர்பான கோட்பாட்டை விளக்கும்போது சிவில் சமூகம் (Civil socirty), அரசியல் சமூகம் (Political society) என்பவற்றை அரசில் உள்ளடக்கி அரசு (State) என்பதற்கு ஒரு விரிந்த அர்த்தத்தைக் கொடுத்திருந்தார் ஆனால் இக் கட்டுரை சிவில் சமூகத்தை அரசில் உள்ளடங்காத பகுதியாகவே நோக்குகிறது.

சிவில் சமூகம் செழிப்பாக இருக்க வேண்டுமாயின் அது இயங்குவதற்கு போதிய வெளியும் சுதந்திரமும் இருக்க வேண்டும். இதனால்தான்ஐனநாயக நாடுகளின் சிவில் சமூகம் வீச்சுக்கொண்டதாகவும் அதிகார ஆட்சிமுறை நிலவும்நாடுகளில் சிவில் சமூகம் சேடமிழுப்பவையாகவும் அமையக் காணப்படுகின்றன. அரசியற் சமூகத்தின் ஆளுகைக்குள் சிவில் சமூகம் சிக்கிக் கொள்ளும்போது -இது விருப்பத்தின் பேராலோ அல்லது அழுத்தத்தின் பேராலோ -எந்தவகையிலாவது நிகழும்போது அங்கு அரசியல் சமூகத்தின் மேலாண்மை சிவில் சமூகத்தின்மீது நிறுவப்பட்டு விடுகிறது. இத்தகைய தருணங்களில் சிவில் சமூகத்தின் தனித்துவமான குரல் அடங்கி அரசியல் சமூகத்தின் குரலாகவே சிவில் சமூகத்தின் குரலும் ஒலிக்கத் தொடங்கி விடுகிறது.

இவ்வாறு சிவில் சமூகம் வளர்ச்சியடையாமல் அரசியற் சமூகத்தின் ஆளுமைக்குகள் முடக்கப்படுதல் ஈழத் தமிழர் தேசத்துக்கு நன்மையினைத் தரக்கூடியதா என்பது இன்று நாம் எழுப்ப வேண்டிய ஒரு முக்கியமான ஒரு கேள்வி. இதற்கு பேராசிரியர் ஆமார்த்யா சென்முன்வைத்தவொரு வாதத்தைக் கவனத்திற் கொள்ளல் பயன் தரும்.

ஆமார்த்யா சென் (Amartya Sen) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அறிஞர். இன்று உலகில் பலராலும் மதிக்கப்படும் ஒருவர். இந்தியாவிலும் சீனாவிலும் நிகழ்ந்தபட்டினிச் சாவுகள் குறித்து ஆய்வினைச்செய்த அவர், சுதந்திர இந்தியாவில் பட்டினிச்சாவுகள் நிகழாது தடுத்தமையில் அங்கு நிலவிய ஜனநாயகச் சூழலின் பங்கு பற்றிக் சிலாகித்துப் பேசுகிறார். ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இந்தியாவில் நிலவியமை பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கான வாய்ப்பினைக் கொடுத்தது என்கிறார் சென். பட்டினிச் சாவுகள் தொடர்பான அயாயச் சங்கை முன்னரே வலுவானமுறையில் ஒலிக்க வைத்து இந்திய அரசாங்கத்தை முன்கூட்டியே எச்சரித்துப் போதிய முன்னேற்பாடுகளைச் செய்வதற்கான அழுத்தங்கள் வழங்கக்கூடிய நிலைமை நிலவியமை பட்டினிச் சாவுகளைத் தடுக்க உதவியது எனவும்சென் குறிப்பிடுகிறார்.

சீனாவில் இத்தகைய ஜனநாயகச் சூழல் இல்லாது இருந்தமை பட்டினிச் சாவுகளைத் தடுப்பதில் எதிர்மறையான விளைவையே தந்தன என்று சென் வாதிடுகிறார் சீனாவில் ஊடகங்கள் உட்பட்ட சிவில் சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாதபோது அரச இயந்திரத்தின் கணிப்பில் தவறுகள் நிகழும்போது முன்னேற்பாட்டு அபாயசங்கு ஒலிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் தவறிப்போகும் ஆபத்தைச் சென் சுட்டிக் காட்டுகிறார். அரச இயந்திரம் காலம் தாழ்த்தி நிலைமையினை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தி தொடங்கும்போது நிலைமை கட்டை மீறிச் சென்று சீனாவில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் சென் தனது ஆய்வில் வெளிப்படுத்துகிறார்.

சென் பட்டினிச் சாவுகள் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் தொடர்பாக ஆழமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். இதேவேளை ஆமார்த்யா சென் குறிப்பிட்டவாறு சுதந்திரமான ஊடகங்கள் தற்போது இந்தியாவில் இருக்கிறதா போன்றகேள்விகளை சில ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர். அரசியற் சமூகம் ஊடகங்களைத் தம்வசப்படுத்தும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருவதாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சிவில் சமூகத்தினதும் சமூக இயக்கங்களதும் வளர்ச்சி அரசியற் சமூகத்துக்கு ஒரு கடிவாளமாக அமையக் கூடியது. இதனால் அரசியற் சமூகம் சிவில் சமூகத்தினது வளர்ச்சியினை விரும்பாது இருக்கக்கூடிய நிலைமை பல நாடுகளில் காணப்படுகிறது. இதனால் சிவில்சமூகத்தை, சமூக அமைப்புக்களைத் தம் வசப்படுத்தும் முயற்சிகளில் அரசியற் சமூகம்ஈடுபடுவதனையும அவதானிக்கலாம். இதற்குஉதாரணமாக பல நாடுகளில் தொழிற் சங்கங்கள் அரசியற் சமூகத்தின் Ùல்வாக்குக்குள் இயங்கும் நிலையைக் குறிப்பிடலாம்.

ஈழத் தாயகத்தின் சூழலைப் பொறுத்தவரை சமூக இயக்கங்கள் வளராது இருந்தமைக்கு தடைகளாக போதிய ஜனநாயகச் சூழல் இன்மையும் சிவில் சமூகத்தின் மீதான அரசியற்சமூகத்தின் செல்வாக்கு மேலோங்கியிருந்தமையினையும் நாம் பிரதான காரணங்களாகக் கூற முடியும். மேலும் மக்களில் தங்கி நின்ற அவர்களின் பங்கு பற்றலுடன் கூடிய சமூக இயக்கங்கள் எனும் எண்ணக்கருவுக்குப் பதிலாக நிதியுதவியில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் வளர்ச்சி ஈழத் தமிழ் தேசத்தின் சிவில் சமூகத்தில் கூடுதல் பங்கு வகிக்கும்நிலையும் உருவாகி வருகிறது. இதுவும் சமூக மாற்றத்தை அடிப்படை நோக்காக் கொண்டு வளரக் கூடிய சமூக இயக்கங்களுக்கு சவாலானதொரு விடயமாக அமையக் கூடும்.

இன்றைய காலகட்டத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடாது மக்களின் நலன் சார்ந்து அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் செயற்படும் சமூக இயக்கங்கள் வளர்ச்சியடைவது ஈழத் தமிழ் மக்களின் நலன் சார்ந்து அவசியமாகப் படுகிறது. இத்தகைய செயற்பாடுகளைக் ஜனநாயகப் பண்புடன் கட்டிஎழுப்புவது குறித்து ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் எனச் சிந்திப்பவர்கள் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். தமிழர் தேசத்துக்கான அரசியல் என்பது தேர்தல் அரசியலாக மட்டும் சுருங்கி விடுவது ஆரோக்கியமாக இருக்க மாட்டாது.