ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்

1941

ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம் – பரா பிரபா

ஒருபேப்பர் – இதழ் 207 இல் `சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்பீ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது. சில தமிழர்அமைப்புக்களும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் தென்னாபிரிக்காவின் `உண்மையைக் கண்டறிதலும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுபீ (TRC – Truth and Reconciliation Commission) தொடர்பாக தமிழ் மக்களை தவறாகவழிநடத்த முனைவதாகத் தெரிவதால், இது பற்றிய மேலதிக தகவல்களை எழுதுதல் இங்குஅவசியமாகின்றது.

ஆர்ஜன்ரீனா, சிலி, பெரு, சியராலியோன் மற்றும் பஹ்ரெயின் போன்ற நாடுகளில் ஏற்கனவேநடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறான ஆணைக்குழுக்களின் மாதிரி தமிழ் மக்களின்பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பதற்குசிலி தவிர ஏனைய நாடுகளில் இந்த ஆணைக்குழு உண்மைத்தன்மையை இழந்தமையேகாரணமாகும். தென்னாபிரிக்காவின் ஆணைக்குழு பற்றி சர்வதேசமட்டத்தில் பெரிதாகப் பேசிக்கொண்டாலும், அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன. இவர்களில் தமிழர் பிரச்சனைக்காக அவ்வப்பொழுது குரல் கொடுக்கும் தென்னாபிரிக்கப் பேராயர் டெஸ்மனட் ருற்ருவும் (Desmond tutu) அடங்குகின்றார்.

சிறுபான்மை வெள்ளையின இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் கறுப்பினத்தவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதில் விடுதலைப் போராளிகளான ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ்(ANC) புரிந்த மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி தண்டனை பெற்றுத் தருவோம் என தேசியக் கட்சி அச்சுறுத்தியதால் தேசிய கட்சி புரிந்த போர்க்குற்றங்களும்மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, `மறப்போம், மன்னிப்போம்பீ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த ஆணைக்குழு. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஆட்சி கையளிக்கப்படவுமில்லை, தீர்வு எட்டப்படவுமில்லை, தவிரஇன அழிப்பை மேற்கொண்டவர்கள், மேற்கொண்டு வருபவர்களை தமிழ் மக்கள் மன்னிக்கவும் தயாராகவும் இல்லை. இது ஒரு காரணமேபோதும் இந்த ஆணைக்குழுவைப் புறக்கணிப்பதற்கு. சரி அப்படியென்றால் சிறீலங்கா அரசாங்கம் ஏன் இதில் அக்கறை காட்டுகின்றது. தமிழ் தலைவர்கள் சிலர் ஏன் இது பற்றிப் பேசுகிறார்கள்.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெற்றதும், அங்கு தென்னாபிரிக்க அரச அதிபர் ஜேக்கப் சூமா சென்றதன் பின்னணியில் தென்னாரிக்க ஆணைக்குழு பற்றிய பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்தன. இதன் முன்னேற்றமாக சிறீலங்கா அரச தரப்பில் ஒரு குழு இந்த மாதம் தென்னாபிரிக்கா சென்று குறித்த ஆணைக்குழுவை இலங்கையில் உருவாக்குவது பற்றி ஆராய இருக்கின்றது.

இந்தப் பின்புலத்தில் சிறீலங்கா அரசாங்கம் மற்றொரு நாடகத்திற்குத் தயாராகிவிட்டது. கடந்த கூட்டத்தொடரின்போது வேண்டுமென்றே தமது ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடாது இழுத்தடித்த மகிந்த அரசாங்கம் மேடையேற்றும் மற்றொரு நாடகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ, புலம்பெயர் தமிழர்அமைப்புக்களோ துணைபோக முடியாது. தவிர தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட `கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தென்னாபிரிக்க முறைமையைதாம் நோக்குவதாகவும், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியாளர் சி.ஜி.வீரமந்திரி, அல்லது உடலகம தலைமையில் தமது ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும், `கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகித்த கலாநிதி றொஹான் பெரேரா, எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹகார போன்றவர்களும் இதில் உள்ளடங்குவதாக ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கூறியிருக்கின்றார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள 25வது மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ளதாக கருதப்படும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் முன்னின்று வரவேற்கும், அல்லது முன்மொழியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு மார்ச்மாதத்திற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் தோற்றுப்போனதற்கு, இந்திய ஆதரவு நாடுகளும், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும் காரணமாகின. பொதுநலவாய மாநாட்டை இந்தியப் பிரதமர் புறக்கணித்திருந்தாலும், ஈழத்தமிழருக்கான தீர்வு,மற்றும் சிறீலங்கா அரசாங்கம் பற்றிய இந்தியாவின் கொள்கை என்பன புரியாத புதிராக இருந்து வருகின்றது. இவ்வாறான பிராந்திய பலப்போட்டியின் பின்புலத்தில் தென்னாபிரிக்க அரசாங்கம் களமிறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்,மனித உரிமைகள் பேரவையில் தமக்கான எதிர்ப்பைக் குறைக்கும் என்றும் ஒரு கல்லில் குறி வைக்கின்றது சிறீலங்கா அரசாங்கம்.

2009 காலம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் பல நாடுகளில் இருந்துஅங்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் தென்னாபிரிக்கஅரசாங்கத்துடன் பல கட்ட சந்திப்புக்கள் இடம்பெற்றன. இவ்வாறு தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில்நானும் கலந்து கொண்டிருந்தேன். இதன்போதுவன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதால், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து அவசரமான கோரிக்கைகள் மக்கள் இழப்பைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் கோபமடைந்தவெளிவிவகார அமைச்சர் கையை நீட்டி “நீங்கள்பேசிக் கொண்டிருப்பது தென்னாபிரிக்க அரசாங்கத்துடன், ஏ.என்.சியுடன் அல்லபீபீ எனக் கூறினார். தம்மைப்போன்று விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் ஏ.என்.சி என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஆடிப்போனார்கள். இந்தத் தகவல் உடனடியாக வன்னிக்குப் பரிமாறப்பட்டது. தமக்காக ஐ.நாவில் தென்னாபிரிக்கா குரல்கொடுக்கும் என எண்ணியிருந்த விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்பு அன்றுடன் நொருங்கிப்போனது.

தேர்தலில் வெற்றிபெற்ற ஏ.என்.சி மீண்டும் ஜேக்கப் சூமா தலைமையில் ஆட்சியமைக்க இருக்கின்றது என்ற உறுதியான செய்தியுடன் தேர்தல் வெற்றிவிழா இடம்பெற்றது. ஜேக்கப் சூமாவும் கலந்துகொண்ட இந்த விழாவிற்கு நாமும் அழைக்கப்பட்டிருந்தோம். இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைவெளியே தனியாக அழைத்துச் சென்ற ஏ.என்.சியின் பிரதான பதவியில் இருக்கம் ஒருவர்,நீங்கள் எமது அரசாங்கத்தை அணுக முன்னர்இந்தியாவின் மனதை வெல்ல முயற்சி செய்யுங்கள் எனக்கூறினார். இந்தியாவை மீறிதம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம் என அந்த முன்னாள் போராளி வெம்பினார்.

இதே காலப்பகுதியில் மற்றொரு சம்பவமும் இடம்பெற்றது. நானும் அவுஸ்திரேலிய ஊடகர்ஒருவரும் மறைந்த முன்னாள் துணை அமைச்சர் ராதாகிருஸ்ணா படையாச்சி (Radha krishna Padayachie), மற்றும் நெல்சன் மண்டேலிவிற்கு நெருக்கமாக இருந்த முன்னாள் போராளி சீசா இன்ஜிகிலானா (Sisa Njikelana)போன்றவர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருந்தோம். தமிழ் மக்களின் விடுதலைக்கும், தனியாட்சிக்கும் ஆதரவாக `தமிழ்நெட்’ இணையத்தில் வெளியிடப்பட்ட இச்செவ்வியால் கலவரம்அடைந்த தென்னாபிரிக்க அரசாங்கம், வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது, அதன் பிரதிகளை மேசையில் போட்டு, இவ்வாறான செவ்வியில் தமது நட்பு நாடுகள்மத்தியில் பிரச்சினையை உருவாக்குவதாகவும், செவ்வியை வெளியிடுவது விடுதலைக்கான ஆதரவைத் தடுக்கும் என்ற கோணத்தில் பேசப்பட்டது. இதன்போது தற்பொழுது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தென்னாபிரிக்காவில் இருந்த எம்மைத் தொடர்புகொண்டு ஏன் இந்தச் செவ்வியை வெளியிட்டீர்கள், தென்னாபிரிக்க அரசாங்கத்தின் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என அறிவுரை சொல்ல முயன்றார். நாங்கள் எதையோ சொல்லாததை எழுதி வெளியிட்ட பாணியில் பேச்சு நீண்டது. எங்களிடம் ஒலிப்பதிவுகள் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு உச்சக் கட்டத்தில் இருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த, தமிழ் மக்களின் அழிவைத் தடுக்கத் தவறிய தென்னாபிரிக்க அரசாங்கம் இப்பொழுது `மறக்கவும், மன்னிக்கவும்பீ உதவ முன்வந்துள்ளதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லை. இந்த இடத்தில் சிறீலங்கா அரசாங்கம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஏ.என்.சி வெளியிட்ட அறிக்கையை, தென்னாபிரிக்க அரசாங்கம் வெளியிட்டதாக மகிழ்ந்ததமிழ் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் விடுதலைப் போரை நடத்திய ஏ.என்.சி வேறு, தற்பொழுது பொருண்மிய, பிராந்திய நலனுடன் ஊழல் நிறைந்த ஆட்சி நடத்தும் தென்னாபிரிக்கஅரசாங்கம் வேறு என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். போர் இடம்பெற்ற வேளையிலும், போரின் பின்னரும், போர்க்குற்றம் இழைக்கப்படவில்லை எனவும், மக்கள் உயிரிழப்பு எதுவும் இடம்பெறவில்லை என சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது.

இவ்வாறான சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தென்னாபிரிக்க அரசாங்கம் மேடையேற்றும் கால இழுத்தடிப்பு நாடகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ, உலகத் தமிழர்பேரவை போன்ற அமைப்புக்களோ துணைபோக முடியாது. தமிழினம் மீதான இனவழிப்பை நிறுவ, நிறுத்த – சிறீலங்கா அரசாங்கம், மற்றும் அதன் படைகள் மீதான அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை அவசியம்.