உலகத்தமிழர் பேரவையுடன் உறவுகள் இல்லை – பிரித்தானியத்தமிழர் பேரவை அறிக்கை

1292

உலகத்தமிழர் பேரவை (GTF) உடனான தமது உறவு நிலைபற்றி விளக்கி பிரித்தானியத் தமிழர்பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இவ்விரு அமைப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தமையும், பிரித்தானியத் தமிழர்பேரவையின் உறுப்பினர்களுக்கு உலகத்தமிழர் பேரவை அதன் செயற்பாடுகள் பற்றி விளக்கமளிக்க மறுத்துவருவது பற்றி செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இவ்வறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

`இலங்கைத்தீவில் போர் முடிவுற்ற காலப்பகுதியில், உலகளாவிய தமிழ் மக்களை ஒன்றினைத்து, ஒருமித்த குரல் எழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டபோது, பிரித்தானியத் தமிழர் பேரவை முன்னின்று ஏனைய தமிழ் அமைப்புகளையும் இணைத்து, உலகத் தமிழர் பேரவை என்ற கூட்டமைப்பு உருவாவதற்கு முக்கிய பங்கு வகித்தது.

உலகளாவியளவில் செயற்படும் அனைத்து புலம் பெயர் தமிழ் அமைப்புக்களையும் உள்வாங்கி, அதனூடாக தமிழ் மக்களின் விடுதலைக்காய் ஒருமித்த குரல் கொடுக்கும் குறிக்கோளுடன், பதினான்கு தமிழ் அமைப்புக்களால் உலகத் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டது. காலப்போக்கில், ஏனைய தமிழ் அமைப்புக்களும் உள்வாங்கப்பட்டு அதன் மூலம் உலகத் தமிழர் பேரவையும், புலம் பெயர் தமிழினமும் மென்மேலும் பலம் பெற்று வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், உலகத் தமிழர் பேரவையும் அதன் தலைமையும், கூடி முடிவெடுத்தல், ஜனநாயக ஆட்சி முறைமை, வெளிப்படையான செயற்பாடுகள், உள்வாங்கும் தன்மை, ஆகிய கோட்பாடுகளிலிருந்து விலகிச் செயற்பட்டதினால், இவ்வமைப்பு தனது பாதையிலிருந்து விலகி, வழி தவறி செல்கின்றது என்றே தோன்றுகிறது. இந்த அமைப்பின் நிர்வாகமானது, ஆரம்பத்தில் இணைந்த அமைப்புக்களை தக்கவைத்துக் கொள்ளவும், பிரதிநிதித்துவப்படாத தமிழ் அமைப்புக்களை இணைத்துக்கொள்ளவும் தவறியுள்ளது.

இதைத்தவிர, ஆண்டுகொருமுறை நடாத்தப்பட வேண்டிய பொதுக்கூட்டம் (AGM) 2010ம் ஆண்டிலிருந்து நடைபெறவில்லை. இத்தகைய செயல்களால், தனக்கான மக்கள் ஆதரவினை இழந்ததோடு மட்டுமல்லாமல், முன்னர் அங்கத்துவம் வகித்த புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இவ்வமைப்பிலிருந்து வெளியேறியுள்ளன.

தமிழ் மக்களுக்கான நீதிக்கும் விடுதலைக்குமான சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் போரட்டங்களில், உலகத் தமிழர் பேரவையின் நிலைப்பாட்டை நோக்கின், அது இலங்கை தீவில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட இனவழிப்பை வெளிக்கொண்டுவரத் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. அதேசமயத்தில், நீதி வேண்டியும் சிறிலங்கா அரசை பொறுப்புக் கூறுமாறும் வலியுறுத்தி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போரட்டங்களை மழுங்கடிக்க இலங்கையரசு மேற்கொள்ளும் நகர்வுகளையும், உலகத் தமிழர் பேரவை வரவேற்பதாகத் தோன்றுகிறது.

உலகத்தமிழரை பிரதிநிதித்துவப்படுதுவதாகக் கூறும் உலகத் தமிழர் பேரவை, தெளிவற்ற, பிரதிநிதித்துவமில்லாத கருத்துக்களை, தமிழ் மக்களின்கருத்துக்களாக வெளியுலகுக்கு வெளியிட்டு வருவதனை எம்மால் ஏற்கமுடியவில்லை. பரவலான மக்கள் பங்களிப்புகளை உள்வாங்கி, அதனூடாக எடுக்கப்படும் கூட்டு முயற்சிகள் மற்றும் முடிவுகளாலேயே, தமிழ் மக்களின் நம்பிக்கையை மீளப் பெறலாம் என்று நாம் நம்புகிறோம். இது, உள்ளுர், தேசிய, சர்வதேச தமிழ் அமைப்புக்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

உலகத் தமிழர் பேரவையின் நிர்வாகத்தில் எந்தவித பிரதிநிதித்துவமும் நாம் மேற்கொள்ளவில்லை என்றும் அவ்வமைப்பினடமிருந்தும், அதன் செயற்பாடுகள் அனைத்திலிருந்தும் விலக்கிவைக்கப்பட்டுள்ளோம் என்பதினையும் வெளிப்படையாக அறிவிக்கிறோம். எமது உறுப்பினர்களின் விருப்பதிற்கினங்கவும், நீண்ட கலந்தாலோசனைக்குப் பிறகுமே இந்த முடிவற்கு நாம் வந்துள்ளோம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து உலகத் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும், விடிவிற்குமாய் நாம் வழமை போல தொடர்ந்து போராடுவோம் என உறுதியளிக்கிறோம்.