எனது நண்பரும், ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் அவர்களுடன் சமீபத்தில் உரையாடியபோது அவர் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். “முதலில்அடிப்படையில் நான் ஒரு இடதுசாரி, பிறகு தான் தேசியவாதி” . அவரது எந்தக் கருத்துக்களிலும் நுழைந்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால், அவை குறித்த என் மனப்பதிவுகளை இதில் பதிய விரும்புகின்றேன். அது அரசியல் ஆரோக்கியம் கருதியே.
முன்னர் ஒருபேப்பரில் எனது இப்பத்தியில் `கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தமிழ்த் தேசிய அடையாளம் தொடர்பான உறுதி எப்படி வந்தது?’ என்ற கருத்துப்பட சில குறிப்புகளைப் பதிந்திருந்தேன். அதில் நமது தேசியத்தலைவர் அதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தேன். வேறு சில காரணங்களும் உள்ளன.
ஒரு மனிதரை உருவாக்குவதில் பரம்பரை அலகிற்கும் (ஜீன்), சூழல் அமைவிற்கும் (Environment) முக்கிய பங்குண்டு. அடிப்படையில் பரம்பரை அலகுகளே மனிதரை தீர்மானித்த போதிலும் சூழல் அமைவு அதை மாற்றிக் கொள்வதுண்டு. இதனை விரிவாக எழுதுவது எனது நோக்கமல்ல, கஜேந்திரகுமாரின் அரசியல் ஈடுபாடு என்பது நிச்சயமாக சூழல் அமைவுதான். அவரது தந்தையாரான குமார் பொன்னம்பலம் காலத்தில் கஜேந்திரகுமார் அரசியலில் ஈடுபட்டதாக சான்றுகள் இல்லை. அப்பொழுது அவர் சிறுவயதாக இருந்திருக்கக் கூடும். ஆனால், குமார் பொன்னம்பலத்தின் படுகொலையின் பிறகே கஜேந்திரகுமார் அரசியல் அரங்கிற்கு வருகிறார்.
தந்தையாரின் படுகொலை ஒன்றே போதுமே அவரை அரசியல் அரங்கிற்கு வராமல் துரத்தியடிப்பதற்கு, நான் நம்புகின்றேன். இந்த இடத்தில் அவரது பரம்பரை அலகு அவரது பணியை செவ்வனே நிரவியிருக்கிறது.
கஜேந்திரகுமாரினது பேரனார் ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தையார் குமார் பொன்னம்பலம் இருவரும் தமிழ்த்தேசியம் குறித்து உணர்வுபூர்வமாக சிந்தித்தவர்கள். இவர்களில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் காலமும் அரசியல் சூழலும் வேறு. தமிழ்த்தேசிய உணர்வை பல இடங்களில் விட்டுக்கொடுத்தவராக ஜி.ஜி. காட்சி தருகிறார். ஆனால், குமார் பொன்னம்பலத்தின் அரசியல் காலம் வேறு. ஆரம்பத்தில் அமிர்தலிங்கத்தால், தன் அதிகாரத்தின் மீதான ஆபத்தை கருதி தறுவறுக்கப்பட்ட அரசியல் குமாரிடம் இருந்தமையால் அவர் தன் திசை வழி மாற்றிச் சென்றார். ஓர் சிறிது காலம் `திக்குத்தெரியாத காட்டில்’ அவர் அலைந்ததைக் காணமுடிந்தது. ஆனால், அதற்கு அதிக காலம் தேவைப்படவில்லை. தமிழ்த் தேசிய விடுதலைப் பேரொளி ஒன்று அவர் கண்ணுக்குத் தெரிந்தது. நம்மில் பலரைப் போலவே அவர், அதனைக் கண்டார். நம்பினார். கரம்பற்றினார். அந்த ஒளியின் பாதையில் அவரது உறுதியான பயணம் தொடர்ந்தது. ஈற்றில் `மாமனிதர்’ ஆனார் குமார் பொன்னம்பலம்.
கஜேந்திரகுமார் அரசியல் அரங்கிற்கு வருகின்றபோது விடுதலைப் பேரொளி தன் பிரகாசத்தை படர விட்டபடி இருந்தது. எனவே, பாதை தெளிவு, அதனால்
பயணம் சுலபம். இனி வேண்டுவனவெல்லாம் பயணத்தில் இடம், இலக்கில் உறுதி. அதற்கும் நம் தேசியத் தலைவர் அடியெடுத்து வைத்துவிட்டார். இவ்வாறு இவர்களை உருவாக்கியது அல்லது ஒன்று கூட்டியது என்பது எதனால் கட்டமைக்கப்பட்டது? இடதுசாரி தத்துவத்தினா லேயோ அல்லது தமிழ்த் தேசிய உணர்வாலேயோ? `உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்று கொட்டு முழக்கம் இடுவதா அல்லது `உலகத் தமிழரே ஒன்று படுங்கள்’ என்று கொட்டு முழக்கம் இடுவதா என்று எது யதார்த்தமானது? எது நிகழக் கூடியது? எது ஒன்றுபடுத்தக் போகிறது? இப்பொழுது பல கேள்விகளை உங்கள் முன் விசுக்கி விடுகிறேன்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைக்குப் போராடிய அமைப்புக்களை எடுத்துக் கொள்வோம். 1981 இலிருந்து மாவோயிச விடுதலை அமைப்பொன்றில் பணி புரிந்தேன். ஆரம்பத்தில் தேசிய விடுதலை தொடர்பான வளமாக பார்வை கொண்டிருந்த அந்த அமைப்பு பின்னர் வரட்டுத் தனத்தை நோக்கி சடுதியாக நகர்ந்தது.
அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் இடதுசாரியின் கண்ணோத்துடன் தமிழ்த் தேசியத்தை நோக்கியமையேயாகும். ஒடுக்கப்படுகின்ற இனம் என்பதனால், ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்ற தேசிய விடுதலைப்போராட்டத்தைப் பார்த்து பின்னர், அது முழு இலங்கைக்குமான புரட்சி என்பதாக விரித்து அது உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று கோஷத்தை வந்தடைய வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இப்பொழுது அதனைத் திரும்பிப் பார்க்கின்ற போது ஒன்று புரிகின்றது. இடதுசாரித் தத்துவம் பேசிய அமைப்புகளின் தோல்விக்கு அது தான் காரணம். நாங்கள் இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற இனம் என்பது சரி. ஏன் ஒடுக்கப்படுகின்றோம் என்பதும், எமது இனப் பண்பாட்டின் கூறுகளை விளங்கிக் கொள்வதையும் நாம் தவிர்த்துவிடுகிறோம். மார்க்சீயச் சூத்திரங்களுக்குள் யாவற்றையும் போட்டுக் குழப்பினோம். எமது சூழலுக்கு ஒவ்வாத நமது மண்ணில் விளையாத நமது பண்பாட்டுடன் ஒத்துவராத பலவற்றை விழுங்கிப் பார்த்தோம். தின்றது செமிக்கவில்லை. வாந்தி எடுத்தோம். அதுவும் பிறர் மேலே. இறுதியில் `தோற்றுச் சரிவதைத் தவிர இம் மார்க்சீயர்களுக்கு வேறு வழி புலப்படவில்லை’.
ஏலவே எழுதியது தான் ஆனால், இப்போது ஒருக்கால் சொல்கிறேன். 90களின் ஆரம்பத்தில் தேசிய இனங்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் அரசியல் துண்டு துண்டாகச் சிதறுகிறது. பிரமாண்டமான வல்லரசு மிக்க ஒன்றியம் அது. அதன் சிறுவைக்கு ஒரே ஒரு காரணம் தான் இருந்தது. `நாம் தனித்த தேசிய இனம்’ என்ற ஒரே ஒரு வாக்கியம். செக்கோ சுலாவாக்கிய என்ற சமஷ்டிக் குடியரசு செக் என்றும் சுலாவாக்கியா என்றும் இரு தேசங்களாக இதுவே காரணம். அதே காரணம் தான் இருநாடுகளை ஒன்றாக்கியது. ஒரே தேசிய இனம், கிழக்கு யேர்மனி, மேற்கு யேர்மனி என இரண்டு நாடுகளாக பிளவுண்டு கிடந்தமையை 90களின் ஆரம்பம் ஒரு தேசிய இனம் எனும் சுலோகத்தின் அடிப்படையில் ஒரு நாடாக்கியது. இவற்றிலிருந்து ஒரு தேசிய இனம் எனும் பதத்தின் வலிமையை நாம் உணர்ந்து விட முடியும்.
அதேபோல, இந்தியா, தமது தேசிய இனங்களுக்கு சுயநிர்ண உரிமையை வழங்காமைக்கும் இந்தியா பிளவுபட்டு விடும் எனும் ஒரே ஒரு காரணமன்றி வேறு ஒன்றுமல்ல. எனவே, `நான் மனிதன் மற்றும் தமிழன்’ என்று சொல்வதில் எனக்கு உவப்பைத் தருகின்றது.
மார்க்சீயம் காலாவதியாகிப் போனதொன்று அல்ல, ஆனால், காலத்திற்கு ஏற்றவகையில் அதனைப் பயன்படுத்துவதன் மூலம் தான் அது உயிர் வாழும் என்பதனையும், ஒப்புக் கொள்வதற்கு நாம் ஏன் தயக்கம் கொள்ள வேண்டும்?