உலக தமிழர் எடுக்கும் சபதம் – மே 18

134

தமிழர் வாழ்வின் காலப்பெருவெளியில் ஒரு காவியயுகம் கடந்து, 11 ஆண்டுகள் இழுபட்டுச் சென்றுவிட்டது. யாரோ என எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தவன் புலியான காலங்கள் அவை.

மனிதத்தன்மைகளை கொன்ற எதிரி ஒரு புறம், உலக மனசாட்சியை பத்திரமாக மூடிவைத்துக்கொண்ட வல்லரசுகள் இன்னொரு புறம், நடுவில் நிர்க்கதியான தமிழினமாய் தனித்தே நின்றபோதும் எமக்கான வாழ்வு என்ற திடம் கொண்ட நாட்கள் அவை.

ஆயுதப்போர் முடக்கப்பட்ட பின்னரும் கூட, சாம்பல் மேட்டிலிருந்தாவது நீதிகோரி நிமிர்ந்திருக்க முடியும். கொத்துகொத்தாக கொல்லப்பட்ட மக்களின் சாவிலிருந்தாவது நீதிகோரி எழுந்திருக்கலாம். ஆயிரக்கணக்கில் இன்னுயிரை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தின் கனதியிலிருந்தாவது, எமது குரலை உரக்க சொல்லியிருக்கமுடியும்.

ஆனாலும் எமக்கு வில்லாக இருக்கவேண்டியவர்கள் எதிரிக்கு வாளாக மாறியது விந்தைதான்.

எனினும் அனைத்தையும் கடந்து மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையே அனைவர்க்கும் அச்சாணியாய் இருக்கவேண்டும். அந்த நம்பிக்கையின் எழுச்சியே உண்மையானவர்களை முன்னே கொண்டுவரும்.

உலகப்பந்தெங்கும் பரவிவாழும் தமிழ் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு குறியீடு.

1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை சிங்கள பேரினவாதத்தால் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு, இன்றுவரை தொடரும் இனப்படுகொலையின் குறியீட்டு வடிவம் அது.

இலங்கைத்தீவில் சமஉரிமையுடன் வாழ துடித்த ஒரு இனத்தின், விடுதலைப் பயணத்தில் குறிகாட்டி அது.

விடுதலைக்காக அந்த மண்ணிலே வாழ்ந்து அந்த மண்ணிலே போராடி அந்த மண்ணிலே மடிந்துபோனவர்கள் துயிலும் இடம் அது.

எமது எதிர்கால சந்ததியாவது சுதந்திரமாக வாழ “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என வாழ்வோம்”

“எத்தனை தடைகள் வந்தாலும் எமது மக்களின் விடுதலைக்காக உரத்துக் குரல்கொடுப்போம்”

அதுவே மே – 18 இல் நாம் எடுக்கும் சபதமாய் இருக்கவேண்டும்.

– கீதன்