உலக நகரங்களும் அச்சத்திற்குள்ளான இலண்டனின் உச்ச நிலையும்

93

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெள்யேற வேண்டும் என்ற கருத்துக் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் இலண்டன் மாநகர் உலகின் முன்னணி நகரமாக தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறிய பின்னர் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிதிச் சந்தையைக் கொண்டிருக்கும் இலண்டனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருக்கும் வரையில் இலண்டன் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஐரோப்பாவின் அசைக்க முடியாத முதற்தர நகராக இருந்தது. பிரித்தானிய வெளியேற்றக் கருத்தின் வெற்றியின் அதிர்ச்சியில் இருந்து பிரித்தானியப் பொருளாதாரம் மீள இன்னும் சில ஆண்டுகள் கூட எடுக்கலாம். அது முன்னணி உலக நகரான இலண்டனை எப்படிப் பாதிக்கப் போகின்றது?

நாடுகளிலும் பெரிய நகரம்
இலண்டன் பொருளாதாரம் ஈரான், சுவீடன் போன்ற நாடுகளின் பொருளாதாரத்திற்கு இணையாகும் அளவில் பெரியது. அது 2015-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 8,615,246 மக்களைக் கொண்ட ஒரு மாநகரமாகும். அங்கு 841,000 தனியார் நிறுவனங்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் மற்ற ஐரோப்பியப் பெரு நகரங்களை முந்திக் கொண்டு இலண்டன் சேவைத் துறையில் முன்னணி நகரமாகிவிட்டது. பிரித்தானிய அரசு தனது வருமானத்திற்கு இலண்டனில் தங்கியுள்ளமை அதிகரித்துக் கொண்டே போகின்றது. 2005-ம் ஆண்டு பிரித்தானிய அரச வருமானத்தில் 5 விழுக்காடு இலண்டனில் இருந்து பெறப்பட்டது. 2015-ம் ஆண்டு அது 30ஆக அதிகரித்துவிட்டது. இலண்டனில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றப் பெரிய 37 நகரங்களின் மொத்த வருமானத்திற்கு ஈடானதாகும்.

உலக நகரம் என்றால் என்ன?
உலக நகரம் என்பதற்கு வேறு வேறு நிறுவனங்களும் நிபுணர்களும் வேறு வேறு வரைவிலக்கணங்களைக் கொடுத்துள்ளனர்.
1. சிறந்த பங்குச் சந்தையும் நம்பகரமான வங்கித்துறையும்
2. பொருளாதாரத்தை சரியாக அளவிடக் கூடிய பங்குச் சுட்டெண்
3. உலக அரசியலில் செல்வாக்குக் செலுத்தக் கூடிய அரசு
4. சிறந்த ஊடகங்கள்
5. சிறந்த கலாச்சார மையங்கள்
6. சிறந்த போக்கு வரத்து வசதிகள்
7. பன்னாட்டு விமான நிலையங்கள்
8. வனாளாவிய கட்டிடங்கள்
9. திறன் மிக்க ஊழியர்களை இலகுவில் பெறுதல்
10. பன்னாட்டு மாநாடுகள் நடத்தக் கூடிய வசதி
ஆகியவை ஒரு உலக நகரத்தில் இருக்கும். இவற்றை எல்லாம் இலண்டன் மாநகரம் கொண்டிருப்பதுடன் பல நாடுகளில் உலக வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தை எழுதவும் பேசவும் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

உலக நகரங்கள்
A.T. Kearney என்ற பன்னாட்டு முகாமைத்துவ ஆலோசனை நிறுவனம் உலக நகரங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது. அதன் 2015-ம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் முதலாமிடத்தில் நியூயோர்க், இரண்டாம் இடத்தில் இலண்டன், மூன்றாம் இடத்தில் பரிஸ், நான்காம் இடத்தில் டோக்கியோ, ஐந்தாம் இடத்தில் ஹொங்கொங், ஆறாம் இடத்தில் லொஸ் ஏஞ்சலிஸ், ஏழாம் இடத்தில் சிக்காக்கோ, எட்டாம் இடத்தில் சிங்கப்பூர், ஒன்பதாம் இடத்தில் பீஜிங், பத்தாம் இடத்தில் வாஷிங்டன் ஆகியவை இருக்கின்றன. தனிமனித நலங்கள், பொருளாதாரம், கண்டுபிடிப்புக்கள், நல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் எவை உலக நகரங்களாக இருக்கப் போகின்றன என்பதையும் அந்த நிறுவனம் பட்டியலிட்டுள்லது. அதில் சன் பிரான்சிஸ்கோ முதலாமிடத்திலும், இலண்டன் இரண்டாம் இடத்திலும், பொஸ்டன் மூன்றாம் இடத்திலும் நியூயோர்க் நன்காம் இடத்திலும் சூரிச் ஐந்தாம் இடத்திலும், ஹுஸ்டன் ஆறாம் இடத்திலும் மியூனிச், ஏழாம் இடத்திலும் ஸ்ரொக்கோம் எட்டாம் இடத்திலும் அம்ஸ்ரடம் ஒன்பதாம் இடத்திலும் சியோல் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. பரிஸும் பீஜிங்கும் முதற்பத்து இடங்களில் இருந்து காணாமல் போய்விடும். கண்டுபிடிப்பில் சன் பிரான்சிஸ்கோ தன்னிகரில்லாமல் இருக்குமாம். Instititute for Urban Strategies என்ற தன்னார்வுத் தொண்டு நிறுவனம் வெளிவிட்ட Global Power City Index 2015இல் இலண்டன் முதலாம் இடத்தில் இருக்கின்றது. சி.என்.என் ஊடகம் இலண்டன் உலகின் முதற்தர நகரமாக இருப்பதற்கு ஐம்பது காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

இலண்டனின் சிறப்பு
பல முன்னணி உலக நிறுவனங்கள் இலண்டனில் இருந்து செயற்படுகின்றன. Fortune 500 எனப்படும் ஐநூறு நிறுவனங்களில் 75 விழுக்காடு நிறுவனங்கள் இலண்டனில் இருந்து செயற்படுகின்றன. உலகின் சிறந்த விமான நிலையமாக ஹீத்ரூ விமான நிலையம் திகழ்கின்றது. இலண்டன் நகரின் 40 விழுக்காடு நிலம் பசுமையானது. சிறந்த பூங்காக்களைக் கொண்டது. எந்த நாட்டுச் சாப்பாடுகளையும் வாங்கக் கூடிய நகராக இலண்டன் இருக்கின்றது. இலவச நுழைவு அனுமதியுடன் 240 அருங்காட்சியகங்கள் இலண்டனில் இருக்கின்றன. உலகில் பிரெஞ்சு மக்கள் வசிக்கும் நகரங்களில் இலண்டன் ஆறாவது இடத்தில் இருக்கின்றது. பிரான்ஸில் உள்ள பல நகரங்களிலும் பார்க்க இலண்டனின் அதிக அளவு பிரெஞ்சு மக்கள் வசிக்கின்றார்கள். இலண்டனில் வசிப்பவர்களில் 37 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்பதால் உலகக் கலாச்சார நகரமாக இலண்டன் இருக்கின்றது. முன்னூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. 43 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. ஐநூறு திரை அரங்குகள் இலண்டனில் உண்டு. உலகக் கலைகள் கலாச்சாரங்கள், வர்த்தகம், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் முக்கிய நகரமாக முன்னணி நகரமாக இலண்டன் இருக்கின்றது.

londoan_global-city

இலண்டனும் உலக நேரங்களும்
வேலை நேரம் எனப் பார்க்கும் போது இலண்டன் உலக வர்த்தகத்திற்கு உகந்ததாக இருக்கின்றது. இலண்டன் நகர நிதிச் சந்தை காலை திறக்கும் போது தூர கிழக்கு நாடுகளில் உள்ள நிதிச்சந்தையும் திறந்திருக்கும். நியூயோர்க்கில் சந்தை திறக்கும் போது தூர கிழக்கு நாடுகளில் மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார்கள். நியூயோர்க் நிதிச்சந்தை காலை திறக்கும் போது இலண்டன் நிதிச் சந்தை உச்சக் கட்டப் பணியில் இருக்கும். Deloitte, Ernst & Young, KPMG, Pricewater house Coopers, ஆகிய உலகின் முன்னணி கணக்காய்வு நிறுவனங்கள் சிறந்த நிதிச் சந்தையாக இலண்டனையே கருதுகின்றனர்.

இலண்டன் இடங்களும் பொருள்களும்
இலண்டனிலும் அமெரிக்காவிலும் இடங்களின் பெயர்கள் வேறுவிதமான பொருளைக் கொடுக்கும். Whitehall என்றால் பிரித்தானிய அரசு எனப் பொருள்படும். முக்கிய பிரித்தானிய அரச பணிமனைகள் Whitehall என்ற தெருவில் அமைந்திருப்பதால் பிரித்தானிய அரசி Whitehall என்னும் பெயரால் அழைக்கின்றனர். Downing Street என்றால் பிரித்தானிய தலைமை அமைச்சகம் என்று பொருள்படும். இந்தத் தெருவின் பத்தாம் இலக்கத்தில் தலைமை அமைச்சரின் பணிமனையும் உறைவிடமும் அமைந்துள்ளது.

Fleet Street என்றால் பிரித்தானிய ஊடகத் துறை எனப் பெருள்படும். முன்னணி அச்சு ஊடகங்களின் பணிமனைகள் இந்தத் தெருவில் அமைந்துள்ளன. City என்றால் இலண்டனின் நிதிச் சந்தை என்று பொருள்படும். இலண்டன் மையவங்கியான Bank of Englandஐச் சுற்றவுள்ள ஒரு மைல் சுற்றாடல் Cityஆகும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை City என்பது ஒரு பெரும் தேவாலயத்தைக் (cathedral) கொண்டிருக்க வேண்டும். பிரித்தானிய மைய வங்கியான Bank of Englandஐ The Old Lady எனவும் அழைப்பர். The Old Lady of Threadneedle Street என்பதும் அதன் இன்னொரு பெயராகும்.

சீனாவின் தெரிவு இலண்டன்
சீனா தனது ரென்மின்பி நாணயத்தை உலக நாணமாக்குவற்கான முயற்ச்சிக்கான தளமாக இலண்டன் நிதிச் சந்தையையே தெரிந்தெடுத்தது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிப பின்னர் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. பிரிவெளியேற்றம் முடிவு செய்யப்பட்டபின்னர் சில உலக நிதி நிறுவனங்கள் முழுமையாக தமது வர்த்தகத்தை இலண்டனில் இருந்து வெளியேற்றாமல் தமது ஊழியர்கள் சிலரை மட்டும் பிராங்பேர்ட், டப்ளின், பரிஸ், அம்ஸ்ரடம், லக்சம்பேர்க் போன்ற நகரங்களுக்கு மாற்றின. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இனிவரும் காலங்களில்செய்ய விருக்கும் பேச்சு வார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே மற்ற சில உலக நிறுவனங்கள் இலண்டனில் தாம் தொடர்வதா அல்லது தமது நடவடிக்கைகளைக் குறைப்பதா என்பது பற்றி முடிவு செய்யும். இலண்டனில் தமது நடவடிக்கைகளை முற்றாக மூடிவிடும் நிலையில் எந்த உலக நிறுவனங்களும் இல்லை. இலண்டனில் 15,000 பேரை வைத்திருப்பதா அல்லது 5,000 பேரை வைத்திருப்பதா என்பது பற்றித்தான் சில நிறுவனங்கள் முடிவெடுக்கும்.

பிரிவெளியேற்றப் பாதிப்பு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு என்ன நடக்கும் என்ற அச்ச நிலை எல்லாத் துறையினரையும் கலங்க வைத்துள்ளது. தற்போது பிரித்தானியாவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல உலக நிறுவனங்களின் யூரோ நாணம் தொடர்பான பல வர்த்தகங்களை இலண்டன் இழக்க நேரிடும். ஐரோப்பிய ஒன்றிம் என்பது இறுக்கமான கட்டுப்பாடுகளை எல்லாத் துறைகளுக்கு விதித்துக் கொண்டுள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவு வழங்கிய பல உலக நிதி நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை பெரிதும் வெறுத்தன. அவை இனி இலண்டனில் தமது வர்த்தகத்தை அதிகரிக்கும். உலக அரங்கில், நியூயோர்க், டோக்கியோ, ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் செயற்படும் நிறுவனங்களுடன் அவை இனி திறமையாகப் போட்டி போட முடியும். இலண்டன் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் ஐரோப்பிய நிதிச் சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைக்கலாம். அந்தக் கட்டுப்பாடு குறைந்த நிலையில் உலகெங்கும் இலண்டனின் நிதித் துறை மேலும் விரிபு படுத்தலாம்.

இலண்டன் வருமானவரிப் புகலிடமாகலாம்
பிரிவெளியேற்றத்தின் பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் இலண்டனில் இருந்து வெளியேறாமல் இருக்க கூட்டாண்மை (Corporates) நிறுவனங்களுக்கான வரி கடுமையாகக் குறைக்கப்படலாம். 20விழுக்காடான கூட்டாண்மை வரி இருக்கும் போதே G-7 நாடுகளில் பிரித்தானியாவில் தான் கூட்டாண்மைகளுக்கான குறைந்த வரி இருந்தது. பிரிவெளியேற்றத்துடன் அது 15ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் பல வரிச்சலுகைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு பிரித்தானியாவில் ஒரு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டன. இதன் மூலம் 85,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன.

ஹொங்கொங் தீவு பிரித்தானியாவிற்கான குத்தகை முடிந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது அது முன்னணி நிதிச் சந்தை என்ற நிலையை இழக்கும் என்ற பூச்சாண்டி 1997இல் முன்வைக்கப்பட்டது பொய்யாகிப் போனது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாக முன்னரும் இலண்டன் உலகின் முன்னணி நகரமாக இருந்தது. இலண்டன் இரு உலகப் போர்களையும் 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையையும் தாக்குப் பிடித்த இலண்டனால் ஐரோப்பிய ஒன்றிய வெளியேற்றத்தில் இருந்தும் தாக்குப் பிடிக்க முடியும் எனப் பல பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறுகின்றனர்.