ஊரடங்கின் மனங்கள்

60

இக் கொள்ளை நோய்க்காலத்தில் தொடர்ச்சியாகப் பேணப்படும் ஊரடங்கு குடும்ப வன்முறைகளையும், சிறுவர் துஷ்பிரயோகங்களையும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக அரசாங்கத் தகவல் மூலங்கள் குறிப்பிடுகின்றன. நம்முடைய கலாசார சூழலில் கடும் பிரச்சினையாகவோ , பெரிய வன்முறையாகவோ வெளிப்படும் போதுதான் பெரும்பாலும் இக்குடும்ப வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அரச பொறிமுறைகளின் கணக்குகளுக்குள் வந்து சேரும். மற்றபடி அவை குடும்ப அளவிலேயே குணப்படுத்தாமல் மூடப்பட்டு விடும். ஆக அரசு தரும் தகவல்களுக்கு மேலே குடும்ப வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

இச்சமூகம் ஏற்கனவே சமூக நோய்களுடனேயே காணப்பட்டது. ஒரு கொள்ளை நோய் அவற்றையும் சேர்த்து கதவடைத்து வைத்துள்ளது. ஆண் பெண் சமத்துவமற்ற , பால் நிலை சம பங்கீடு அற்ற உடல்களே குடும்பங்களில் இயங்குகின்றன. சாதாரண நாட்களில் தொழில், பொழுது போக்குகள், பயணங்கள் போன்றவற்றால் உறவுகளுக்கு இடையில் கூராக இருக்கும் கத்திகள் எட்ட எட்ட பேணப்பட்டு வந்திருக்கும் போது வன்முறையளவு குறைவாகவே இருக்கும். ஆனால் ஒரே இல்லத்தின் முழு அன்றாடத்தையும் பகிர்ந்துகொள்ளும் போது எதிர்மறையான ஆண் – பெண் சமனிலையின்மை வன்முறையாக மாறும். குறிப்பாக ஆணாதிக்கச் சூழல் பாதுகாக்கப்படும் அடிப்படை அலகான குடும்பத்தில் பெண்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. ஊரில் எதோ ஒரு வீட்டில் தினமும் யாரோ ஒரு பெண் ‘ஐய்யோ’ என்று கத்துகின்றாள். சிறுவர்கள் சிறு குழப்படிக்கும் வீறிட்டு அழுமளவிற்குத் தண்டிக்கப்படுகிறார்கள்.

இக்குடும்ப வன்முறைகள் உருவாகி வருகின்ற பின்னணிகள் ஏராளமிருக்கின்றன. அதில் தலையானது பொருளாதாரம். குறிப்பாக மத்திய தர வர்க்கங்களும் பொருளாதார நலிவுள்ள குடும்பங்களிலும் ஏற்படுகின்ற தொழிலின்மை பொருளாதார நலவு, அதிகாரமுள்ள, தொழிலை ஒரு புருஷ லட்சணமாக கற்பிதப்படுத்தப்பட்ட ஆணை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்துவகிறது. அவன் வன்முறை நிகழ்த்தக்க உரித்துள்ளதாக சமூக பிறழ்வுகளால் பழக்கப்பட்ட – வழங்கப்பட்ட பெண்ணுடல் மீதும், உளத்தின் மீதும் தன்முனைப்பையும், ஆற்றாமையையும் திருப்பி விடுகின்றான்.

தொடர்ச்சியான உள்ளிருக்கை, ஏற்படுத்த தக்க தனிமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இயங்குகின்றது. நகரத்தில் அடுக்கு மாடியிலோ, ஒடுங்கிய குடியிருப்பிலோ வாழ்கின்ற வர்களுக்கு மன இறுக்கம் அதிகமாகவிருக்கலாம், அதேவேளை கிராமங்களில் தனிமையுணர்வோ, இறுக்கமோ அவ்வளவாகத் தென்படவில்லை. எனினும் கொரோனா மீதான கூட்டுப்பயத்தை இளம் தலைமுறையிடமே அதிகம் காண முடிகிறது. ஏனெனில் சமூக, இணைய வெளிகளில் அதிகம் புழங்கும் அவர்கள் சைபர் வெளியினால் தொடர்ச்சியாக பயமுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நோய் நிலமையை முகாமைப்படுத்திக்கொள்வதற்கு தயாராவதற்குரிய தகவல்களோ விழிப்புணர்வோ அவர்களால் குடும்பங்களுக்கு எடுத்துவரப்படுவதற்குப்பதிலாக, கட்டுக்கதைகளும் விபரணைகளும் பயமும் பதட்டமுமாக எடுத்துவரப்படுகின்றன. அவர்களே ‘அடைந்து’ கிடப்பதன் விசனத்தையும் அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்ட அரசாங்க அங்கீகாரம் பெற்ற மதுபான சாலைகள் பெருமளவில் அதனை நுகர்பவர்களை உளப்பிரச்சினைக்குள் தள்ளியிருக்கிறது. அதோடு பொருளாதார நெருக்கடியும் அவர்களை மனச் சிக்கலுள்ளவர்களாக மாற்றியுள்ளது. எனவே கசிப்பு, கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு திரும்புவதும் அதிகரித்துள்ளது. கஞ்சா முதலான போதைப்பொருட்கள் தாரளாமாக புழங்கும் போது புதிய பழக்கமில்லாத நுகர்வோர்களும் சரி, மன அழுத்தங்களுக்கு உட்படும் தொடர்ச்சியான நுகர்வோரும் சரி , அவற்றுக்கு அடிமையானோரும் சரிஆரோக்கியமான விடயங்களை வெளிப்படுத்துவதில்லை. போதைப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் மனங்கள் ஆரோக்கியமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் போது செயலாற்றும் விதத்திற்கு சிக்கலாக இருக்கும்போது செயலாற்றும் விதத்துக்குமான வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும். போதைப்பொருட்கள் ‘புனிதமான’ மனிதருக்குள் தீயதை எடுத்து வருபவை என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட வர்ணனை. அவை ஏற்கனவே உள்ளிருக்கும் சைத்தானைத்தான் உசுப்பிவிடுகின்றன. இங்கே ஆரோக்கியமான சமூகம் போதைப்பொருட்களை நுகரும் போது வெளிப்படும் நடத்தைக்கும் ஆணாதிக்கம், அதிகார வேட்கை, தாழ்வுச்சிக்கல் போன்ற உளப்பிரச்சினைகள் உள்ள சமூக குடும்பத்திலும் சரி வெளியிலும் சரி நடந்துகொள்ளும் விதம் வெவ்வேறானது.

இவற்றோடு ஊரடங்கு நடைமுறைக்கு வந்த இரண்டாம் வாரத்தின் தொடக்கத்திலேயே சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் சுமார் 35% அளவில் நாடுமுழுவதும் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டது. சிறுவர் துன்புறுத்தப்படுதல், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல் என்பன குடும்ப உறுப்பினர்களாலேயே அதிகம் நிகழ்ந்ததாகக் கால தரவுச்சுட்டிகள் மேற்கோள்காட்டுகின்றன. ஊரடங்கின் போது இவை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புக்கள் அதிகம்.

அரசு இப்பிரச்சினைகளுக்கான ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் அலகுகளை இயங்கச்செய்வது நல்லது, ஏற்கனவே சாதாரண நாட்களில் இயங்கும் உள வள ஆலோசனை நிலையங்கள் ஆரோக்கியமாகவோ வினைத்திறனாகவோ இயங்கின என்று சொல்லமுடியாது, ஆனால் இருப்பதை வைத்தாவது இவ் அவசர நிலைமையில் சமூகக் குணப்படுத்தல்களின் பொருட்டு ஏதேனும் செய்யலாம். சமீபத்தில் அறிவித்திருக்கும் ‘ ஊரடங்கு நாட்களில் வீட்டுத்தோட்ட’ திட்டம் அரசின் நல்ல திட்டங்களின் ஒன்று அதை பொருத்தமாகச் செயற்படுத்துவது தற்சார்பை மட்டுமல்லாமல் உளவளத்திற்கும் உதவக் கூடிய ஒன்று.

இவ் ஊரடங்கு நாட்களில் இணக்கத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்திக்கொள்ள பொதுவாக புத்தகம், இசை, வரைதல், சினிமா என்று கலைவடிவங்களுடனான பிணைப்பை அனைவரும் சொல்லிவருகின்றனர். தனிப்பட்டு நம்மை நாம் ஆரோக்கியமாக வைப்பதற்கு புத்தாக்கம் (creative) ஆக ஏதேனும் செய்யும் போதும், பகிரும் போதும் மனங்கள் தளர்த்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தமிழில் ‘கதைப்பது’ என்பது உரையாடுவதையும் ‘காதலிப்பதையும்’ குறிக்கும், எனக்குத்தெரிந்து மிகச்சிறந்த குணப்படுத்தல் ’கதைப்பது’. இது என்னுடைய தனிப்பட்ட பரிந்துரைதான், அவரவர் அவரவர் வாழ்க்கைக்கு பொருத்தமானதை உருவாக்கிக் கொள்ளலாம். இதுகாறும் புழங்கி வந்த இலக்கியமும் , அமைப்பார்ந்து இயங்குகின்ற கூட்டு வேலைகளும், உரையாடல்களும் அதுசார் வாழ்க்கையும் எனக்கு தனிப்பட்டு இன்னும் ஒரு சொட்டு மன அழுத்தத்தையோ தனிமையையோ தந்துவிடவில்லை. ஒரு நோயும் தனித்திருத்தலும் நம்முடைய மகிழ்ச்சியைப் பறித்துவிடும் என்றால், இலக்கியமும் கூட்டு வேலைகளும் பயனற்றவை என்று ஆகிவிடுமல்லவா?