ஊரில் வளர்ந்த சமய உணர்வு

187

தாயகத்தைப் போல புலம்பெயர் நாடுகளில் சமய பாடம் பள்ளிக்கூடங்களில் கட்டாய பாடம் இல்லை. எங்கள் பிள்ளைகளை ஆலயங்களுக்கு நாங்கள் அழைத்துச் செல்லும்போது அவர்கள் இந்து சமயம் பற்றி கேட்கும் கேள்விகள் சிலவற்றுக்கு எமக்கே பதில் தெரியாது. ஆனால், எங்களிடம் இறை நம்பிக்கை ஊறி வளர்ந்திருக்கிறது. இன்றும் இங்கும் இறை நம்பிக்கையோடே வாழ்கின்றோம். தைப்பொங்கல் முதலாக தமிழ்ப் பள்ளிகளில் நடக்கும் ஆண்டு விழாக்கள் வரை தமிழ் விழாக்களை இன்றும் இங்கும் நாங்கள் இந்து முறைப்படி குத்துவிளக்கு நிறைகுடத்துடன் விபூதி சந்தனம் வைத்துத் தான் கொண்டாடுகிறோம்.

ஈழத்தமிழர்கள் அரசியலில் சமய வெறி ஊட்டப்பட்டவர்கள் அல்லர் என்பது ஒரு ஆறுதலான விடயம். அறப்போர் அரசியலில் தமிழர் ஏற்றுக் கொண்ட தலைவர் தந்தை செல்வா அரசியலில் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகிய இருவரும் கூடகிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தான். ஆனால்,ஈழத்தமிழர்களின் அன்புக்கும் பாசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக இந்த இருவரும் திகழ்ந்தார்கள். இறை பக்தி, சமய பக்தி என்பன ஒழுக்கமான வாழ்க்கைநெறியை வகுத்துச் செல்ல வழிவகுக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. நாத்தீயம் பேசியதிராவிடக் கட்சிகளே இன்றே அல்லது என்றோ அவற்றைகைவிட்டு விட்டன.

இந்நிலையில் புலம்பெயர் சந்ததியினரிடையே இறை நம்பிக்கையை வழிப்படுத்தவும் வழிபாட்டு முறை சமயஅறிவு என்பனவற்றை அறிய, அழிய வழி செய்யும் நோக்குடனும் சட்டனில் கூட்டு வழிபாட்டு பஜனை ஒன்றுபூசையுடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடரும் என்றும் கூறப்பட்டது. சட்டன் தமிழ்ப் பள்ளி,சட்டன் மூத்தோர் நிலையம் என்பனவற்றை உருவாக்கிஇயக்குபவர்களின் ஏற்பாடு இது. இந்த நிகழ்வின் போதுதாயகத்தில் எம்மிடம் சமய அறிவு எம்மிடம் இயல்பாகவேஎவ்வாறு ஏற்பட்டது என்ற எண்ணம், என்னுள் பல நினைவுகளை இரை மீட்டன. வீடு, ஊர், சமூகம் என்று பரம்பரைபரம்பரையாக நாங்கள் பேணி வந்த வாழ்ந்து வந்தகிராமிய வாழ்க்கை முறை பெற்றோர் வழியாக எங்களிடமும் ஊறியது. செவ்வாய், வெள்ளி என்றால் உற்சவநாட்கள் என்றால் சுத்த சைவம் பேணும் வாழ்க்கை முறைவளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். இன்றும் காலையும்,மாலையும் வீட்டில் கடவுள் வழிபாட்டில் தினமும் ஈடுபடும்பழக்கத்தை பெற்றோர் எமக்கு ஏற்படுத்தி விட்டுள்ளார்கள். குறித்த கோவில்களில் உற்சவ காலங்களில் ஊரேவிரதம் அனுஷ்டிக்கும். வீடு கழுவி சைவப் பாத்திரங்கள்மினுக்கி, முற்றத்தில் சாணகம் தெளித்து சாம்பிராணி வாசம் மணக்க வீட்டில் ஒரு பக்தி மனம் கமழும். வழமையாக குடிபோதையில் இருப்பவர்கள் கூட உற்சவ காலங்களில் அதனை விட்டு விடுவார்கள். ஐப்பசி வெள்ளி அதிகாலைப் பூசை, உற்சவகால கொடித்தம்ப பூசை என்றுஅம்மா மாவிட்டபுர கோவிலுக்கு போகும்போது அவவின் கையைப் பிடித்தபடியே கோவிலுக்குப் போவதில் ஒரு அவா வழமையாகப் போக வைத்தது.

ஆடிச் செவ்வாய்ப் பூசைக்கு அம்பனை வயல் வரம்பில் நடந்து மாத்தனை வழியாக துர்க்கையம்மன் கோவிலுக்கும், புரட்டாதிச் சனி என்றால் சிவன் கோவிலுக்கும், திருவம்பாவை அதிகாலை பூசைக்கு அம்பனை வைரவர் கோவில் என்றும் அம்மாவோடு போய் வந்த பழக்கம் வளர்ந்த போதும் இன்றும் வழக்கமாக எங்களில் ஊறிக் கொண்டது. நான் படித்த மகஜனக் கல்லுÖரிக்குள்ளேயே ஒரு நடராஜர் ஆலயம் இருக்கின்றது. தினமும் காலைப் பூசை குறித்த நேரத்துக்கு ராசாக் குருக்கள் வந்து செய்து வந்த பிறகு தான் பள்ளிக்கூடம் நடக்கும். விசேட சமய நாட்களில் அந்தக் கோவிலிலும் அபிஷேகங்கள் பாடசாலை தொடங்க முன்னர் நடத்தப்பட்டது. அயல் திருக்கோவில்கள் கொடியேறி விரதம் அனுஷ்டிக்கும் ஆர்வம் ஒன்பது வயது முதல் எனக்குள் ஏற்பட்டது. மாவிட்டபுர உற்சவ 25 தினங்களும் குடும்பத்தோடு சேர்ந்து விரதம் இருக்க ஆரம்பித்தேன். ஆவணி ஞாயிறுகளிலும் விரதம்அனுஷ்டிக்கும் பழக்கம் இருந்தது. மதியம் பொங்கல் சாப்பாடு, மாலை இருளும் முன்னர் ஏதாவது பலகாரமோ இடியப்பமோ, புட்டோ சாப்பிடும் முறையாக இருந்தது. கடைசி ஞாயிறு கோலம் போட்டு முற்றத்தில் பொங்கும் வழக்கம் எங்கள் ஊரில் அந்த நாட்களில் ஆவணி விரதமாக கொண்டிருந்தது. பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிப்பது, பரீட்சை எழுது முன்னர் ஆலயத்திற்கு சென்று சிதறு தேங்காய் அடித்து வழிபடுவது, விஷம் கடித்தால் விஷ கடி வைத்தியரை போய் அவரிடம் திருநீறு போட்டு பார்வை பார்ப்பது, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நல்ல சகுணம் பார்ப்பது. மிளகாய் உப்பு தடவி நாவூறு பார்ப்பது, வீட்டுக்கு முன்பாக நீத்துப்பூசணி வெருளி கட்சி நாவூறு தவிர்ப்பது. செய்வினை, சூனியம் என்று சின்னச் சின்ன நம்பிக்கை எமக்குள் ஏற்படுத்தப்பட்டடு விட்டது.
பஞ்சமி திதியில் இறப்போர் ஆத்மசாந்திக்கு ஏழு கோழிக்குஞ்சுகளை சவத்துடன் சேர்த்து சுடலையில் கொண்டு சென்று விடும் பழக்கமும் இருந்தது. இவை, பஞ்சாங்கம், திதி, நாள், நட்சத்திரம் என்ற நம்பிக்கை அன்று முதல் இன்றும் எங்களுக்குள் ஒட்டிக் கொண்டு வளர காரணமாகியது. இந்த மத நம்பிக்கைகள், மாந்தீரிகம் உண்மை என நம்பும் நடப்புகளும் இடம்பெற்றன. சாதாரணமாக பாம்பு கடித்து விஷம் ஏறி அடக்கத்தில் இருப்போரை பார்வை பார்த்து விஷம் இறக்கும் பலர் இருக்கின்றார்கள். மானிப்பாயில் ராசதுரை என்பவர் திறந்த நிலையில் விஷம் கடித்தவரை வளர்த்தி மந்திர உச்சாடங்களால் வானத்தில் கருடணை வரவழைத்து அதன் மூலம் விஷக் கடியை குணப்படுத்துவதில் வல்லமை பெற்றிருந்தார். இறக்கும் தறுவாயில் இருப்போர் கூட இவர் மூலம் உயிர் பெற்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இவர்கள் இலவசமாகவே பரம்பரை பரம்பரையாக தாங்கள் பெற்ற சிகிச்சை முறையை செய்து வந்தார்கள். பணம் வாங்கினால் சிகிச்சை பலிக்காது என்று அவர்கள் நம்பினார்கள்.

லண்டனில் வந்திருந்த சாத்திரிகள் இருவரிடம் நானும் போயிருந்தேன். பிறப்பு வளர்ப்பு, பெற்றோர், திருமணம் என்பனவற்றை பெயர் விபரம், ஆண்டு விபரத்தை சரியாகசொன்ன அவர்கள் நான் பிறந்து 6 மாதத்தில் இறந்து போனதந்தையார், அயல் நாட்டில் பிறந்ததாக சொன்னார்கள். நான் மறுத்தேன். பாரதத்தில் ஒரு சிவ தலத்தின் அருகேபிறந்தவர் என்று உறுதிபடக் கூறினார்கள். அது உண்மைஎன்றும் தஞ்சாவூரில் பிறந்ததால் தான் அங்குள்ள திருத்தல மூர்த்தியின் வைத்தீஸ்வரன் என்ற பெயர் வைக்கப்பட்டதாகவும் மூத்த அண்ணர் உறுதிப்படுத்தியபோது ஆச்சரியமாக இருந்தது. நம் முன்னோர் இறை பக்தியை எமக்குள் உர்த்தி வளர்த்தார்கள். எளிமையான, ஆரோக்கியமாக வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வைத்தார்கள். இன்று மாற்றுக் கலாசார சூழலில் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றோம். இங்கேயே எங்கள் வாழ்க்கை நிலைத்து விட்டது. எம் சந்ததியினரிடையே சமய உணர்வும், ஒழுக்க நெறியும் மேம்பட ஆத்மீக உணர்வின் மூலம் அமைதியான வாழ்வை அமைத்துக் கொள்ள நாங்கள் ஆவண செய்து தானே ஆக வேண்டும்.