எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்….!!!

  1447

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில்
  கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம்.

  அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன…?
  உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள்.

  துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை.
  என் இனமே என் சனமே நீ துடித்தாய்.
  அதை நாங்கள் மட்டுமே அறிவோம்.

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில்
  கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம்.

  தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது.
  துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்து போகாது.
  நீங்கள் வந்து எங்கள் கல்லறைகளில் விளக்கேற்றா விட்டாலும்
  உங்கள் விழிகளில் வழிந்தோடும் உதிரம் சொல்லும் உங்களின் பாசத்தை…

  அட எதற்கு அழுகிறீர்கள்?
  நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்.
  எங்களின் தாகம் அடங்க தண்ணீரும் தேவையில்லை
  உங்கள் கண்ணீரும் தேவையில்லை.
  நாங்கள் செந்நீரை விட்டது
  உங்களின் கண்ணீரை துடைக்க….

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில்
  கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம்.

  இடித்து தூழாக்கிய துயிலும் இல்லங்கள் வேண்டுமானால் காணாமல் போயிருக்கலாம்.
  நாங்கள் இப்போதும் தாய்மண்ணில் தான் துயிலுகிறோம்.
  நாங்கள் எங்கேயும் போகவில்லை.
  இங்கேதான் எங்களின் வாழ்வும் சாவும்.
  மூசிவரும் வாடைக்கற்றில் எங்களின் மூச்சிருக்கும்.
  ஆடிவரும் கடலலையில் எங்களின் முகம் தெரியும்.
  பூத்திருக்கும் கார்த்திகை பூவில் எங்களின் புன்னகை இருக்கும்.
  வெண்மனல் வெளியிலே எங்களின் கால்தடங்கள் இருக்கும்.
  நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்.
  இங்கேதான் எங்களின் வாழ்வும் சாவும்.

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில்
  கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம்.

  விடுதலையை நேசித்தவர்களின் தியாகங்கள் வீணாய்ப்போனதில்லை.
  விலைகள் கொடுக்காமல் எவருக்கும் சுதந்திரம் சும்மா கிடைத்ததும் இல்லை.
  நங்கள் விடுதலையை நேசித்தோம் சுவாசித்தோம்
  கொஞ்சம் அதிகமாகவெ விலைகளும் கொடுத்தோம்.

  நாங்கள் சிந்திய குருதியில் கறைகள் இல்லை.
  ஆதலால் எங்களின் விடியல் தொலைவினில் இல்லை.
  நாங்கள் செய்த தியாகங்களில் குறையொன்றும் இல்லை.
  ஆதலால் எங்களின் விடுதலையும் தொலைவினில் இல்லை.

  கல்லறைகளில் கண்மூடித் துயிலுகிறோம்.
  நிம்மதியான தூக்கமும் இல்லை.
  இது நிரந்தரமான தூக்கமும் இல்லை.
  காலம் ஒரு நாள் வாராமல் போகாதா?
  கண்ட கனவுகள் பலிக்காமல் போகாதா?

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில்
  கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம்.

  எங்களுக்காக பாடல்கள் பாடுங்கள்…
  எங்களுக்காக கவிதைகள் எழுதுங்கள்..
  எங்களுக்காக பூக்கள் கொண்டுவாருங்கள்
  எங்களுக்காக தீபங்கள் ஏற்றுங்கள்…
  தனித்தனியாக இல்லை…
  ஒன்றாக …
  ஒற்றுமையாக….
  தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று
  அடிமன ஆழத்தில் இருந்து சொல்லுங்கள்..
  அது போதும் எங்களுக்கு…

  கல்லறைகளில் கண்மூடித் துயிலுகிறோம்.
  நிம்மதியான தூக்கமும் இல்லை.
  இது நிரந்தரமான தூக்கமும் இல்லை.

  எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில்
  கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம்..

  தமிழ்ப்பொடியன்
  21.11.2012