அண்மையில் ஊர் சென்று வந்த நண்பர் தன் தாயக பயண அனுபவங்களைச் சொன்னார். கொடியேற்றம், தேர், தீர்த்தம், திருவிழா, வேள்வி, பங்கு இறைச்சி, கூவில்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த அவரின் முகத்தில் திடீர் சுழிப்பு. என்ன என்றேன்.
என்ன இருந்தாலும் அந்த நாளைப்போல ஒரு வீட்டிலும்கூழைக் காண முடியவில்லை. பனையும் குறைந்து விட்டது. இவைகளும் எங்கோ போய்த் தொலைந்து விட்டன என்று அலுத்துக் கொண்டார். ஏன் இங்கு தானே பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல், விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றிலும் கூழைக் குடிக்கக் கூடியதாக இருக்கிறதே என்றேன்.
என்ன இருந்தாலும் எங்கள் ஊர் ஒடியல் கூழைப்போல,அந்த பனந்தோப்பின் மகிமையைப் போல பார்க்க முடியுமா? என்றார். உண்மை தான். அந்த நாள் நிகழ்வுகள் என்னையும் ஊர் ஒடியல் கூழ் பக்கம் இழுத்துச் சென்றது.
போர்க்காலத்தில் பல்லாயிரக் கணக்கில் அழியுண்டு போனதாகச் சொல்லப்படும் பனை நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டுப் பின்வளவிலும் இருந்தது. பனை வளவு என்று தான் அதற்குப் பெயர். தென் மேற்கு மூலைப் புறமாக நளவளா என்று இன்னொரு வளவு. எங்கள் சிறுபிள்ளைக் காலத்தில் வடலிகளை மட்டும் தான் இந்த வளவுகொண்டிருந்தது.
இதேபோல பனை வளவைப் பராமரித்தாலே வருமானம்போதுமென்ற திருப்தி அந்த நாளில் எங்கள் பேரன், பூட்டனுக்கு இருந்தது. எங்கள் வளவின் முன்புறமும், ரோட்டுப்புறமும், எங்கள் வளவின் தென்னை ஓலைகளால் கிடுகால் அடைக்கப்பட்டிருக்க, மற்ற இருபுற வளவுகளையும் வேலியாக அலங்கரிப்பது பனை ஓலைகள் தான்.
ஆரம்பத்தில் வீட்டின் முன் இருந்த தலைவாசல் கூரைகளும் வேயப் பயன்பட்டது இந்தப் பனை வளவு ஓலைகள்தான். மீதி விற்றுக் காசாக்கப்பட்ட காலமும் உண்டு. இதைவிட குறிப்பிட்ட சில பனைகள் கள்ளு சேகரிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும். அதிலும் வருமானம். பனம்பழம் பழுத்தால் சனி, ஞாயிறு காலைகளில் கடகத்தைக் கொண்டு பனை வளவுக்கு அம்மம்மாவுடன் போவோம். எங்கள் நான்கு சகோதரர்களும் ஆளுக்கு இருபுறம் என்று ஒரு கடகத்தைப் பிடிக்க, ஆங்காங்கே விழுந்து கிடக்கும் பனம்பழங்களை பொறுக்கிக் குவிப்பது எங்கள் சின்ன வயது வேலை. இதனை விட தினமும் காவோலைகளை, பன்னாடைகளை பொறுக்கிக் குவிப்பது, பனைக்கு மூடியாகவரும் பனுவிலை காய்ந்தவுடன் சேகரித்துக் குவிப்பது, கங்கு மட்டைகளை வெட்டி ஓலைகளைத் தனியாக்கி அவற்றைத் தனியாக அடுக்குவது, கங்கு மட்டை விறகை ஒருபுறம் சேகரிப்பது என்று வேலைகள் தொடர்ச்சியாக இருக்கும்.
அவித்த பனங்கிழங்கை கிழித்து காய விட்டால் அது புழுக்கொடியல். அந்தப் பனங்கிழங்கை சீவிக்காயவிட்டால் அவை கூட பாதுகாப்பாக நீண்ட காலத்திற்கு உண்ணப்பயன்படும். அவித்த பனங்கிழங்கை தும்பு நீக்கிஉரலில் இட்டு சீரகம், புளி, உப்பு என்பன எல்லாம் போட்டுபனங்கிழங்குத் துவையலாக உரலில் உலக்கையால் இடித்து அம்மம்மா உருட்டித் தருவார். அவற்றை உண்டு சுவைப்பதே கொள்ளையில்லா மகிழ்ச்சியைத் தரும்.
பனங்கிழங்கை வெறுமனே பச்சையாகக் கிழித்துக் காயவிட்டால் அது ஒடியல். இந்த ஒடியல் தான், மாவுக்கும் கூழுக்கும் பயன்படுகிறது. ஒடியல் மாவில் ஒரு கயர்ப்பு இருக்கும். அம்மம்மா ஒடியல் மாவை நனைய வைத்து வெள்ளைத் துணியால் பிழிந்து கயர்ப்பை எப்படியோ போக்கி விடுவார். அந்த ஒடியல் மாவில் பிட்டுஅவித்துத் தருவார். பனங்கட்டியோடு உண்ண அந்தப்பிட்டு தேவாமிர்தமாகத்தான் இருக்கும்.
ஒடியல் கூழ் பானையின் நினைவு இன்றும் பசுமையாக இருக்கிறது. ஒரு பெரிய பானை, ஒரு அகலப் பெரிய மண் சட்டி என்பன கோடியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். கோடையில் அடிக்கடி கூழ் காய்ச்சும் போது அதை அடுப்பில் அலங்கரிக்கும். கூழ் தயாராகும் போது பலாவிலை கோலி, தென்னோலைக் குச்சியால் குத்தி கூழ் குடிக்கும் பாத்திரத்தை நாங்களே தயாராக்கிக் கொண்டு குசினிக்குள் பலகையில் போய் குந்திக் காத்திருப்போம்.
இந்த மீன் ஏற்கனவே அவிந்தவுடன் எடுத்து அவையுடம் கூட முள் நீக்கி குத்தி மசித்து கலவையாக்கப்பட்டு விடும். அளவாக கொதித்து தடித்து ஒடியல் மா மணத்தோடு அந்தக் கூழ் கொதித்து வர சட்டியால் இறக்கி அவை குசினிக்கு நடுவிலே அம்மம்மா வைப்பார்.