எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்

119

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், ஏப்பிரல் பதினோராம் திகதி மாலை தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். வழமையாக, வெளியார் யாராவது இது போன்ற கருத்துகளை வெளியிடும்போது பரபரப்பாகச் செய்தி வெளியிடும் தமிழ் ஊடகங்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. தமிழ்த் தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் தவறவிடப்பட்டதற்கு அரசியற் காரணம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் ஜெரமி கோர்பின் அவர்கள் வெளியிட்ட கருத்தின் முக்கியத்துவம் பற்றிய புரிதலின்மையே அதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். இதுவெறுமனே விசிலடித்து மகிழ்கிற பேச்சல்ல, மாறாக இதையொட்டி முன்னெடுக்க வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

கடந்த முப்பது வருடங்களாக இஸ்லிங்ரன் வடக்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகஇருக்கும் ஜெரமி கோர்பின் தமிழ் மக்களுக்கு புதியவர் அல்ல. லண்டனில் தமிழ் மக்கள் நடாத்தியகூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள், 2009 இல் வெஸ்ற் மின்ஸரர் புற்தரையில் நடாத்திய முற்றுகைப் போராட்டங்கள், பாதை மறிப்புப் போராட்டங்கள் என எல்லா நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்ட ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஜெரமி கோர்பின் அவர்களாகத்தான் இருக்கும். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக ஜெரமி கோர்பின்முன்னரும் பலதடவைகள் கூறியிருக்கிறார். அதுஅவரது கொள்கை சார்ந்த முடிவே தவிர தமிழ்வாக்காளார்களைத் திருப்திப்படுத்தும் பேச்சல்லஎன்பதனை விடயடறிந்த தமிழர்கள் அறிவார்கள்.ஏனெனில் குறிப்பிட்டு சொல்லக் கூடியளவு தமிழ்வாக்காளர்களைக் கொண்டிராத ஒரு லண்டன்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் இத்தகைய பேச்சுகளால் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்த முடியாது.

ஜெரமி கோர்பின் தவிர வேறும் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்தமிழர்கள் மீதுதமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலை, அவர்களது சுயநிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்கள். இப்போதும் பேசிவருகிறார்கள். அவ்வாறிருக்கும்போது, இப்போது ஜெரமி கோர்பின் கூறியிருக்கும் கருத்தில் உள்ள முக்கியத்துவம்தான் என்ன? கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 12ம் திகதிக்கு முன்னர் கோர்பின்இக்கருத்தினை கூறிவந்தாலும், அப்போதெல்லாம் அவர் எதிர்க்கட்சியின் பின்வரிசையைச் சேர்ந்தவராக இருந்தார். அதுபோல் இனப்படுகொலை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப்பேசிய, பேசிவருகிற மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றில் ஆளும் கட்சியின் அல்லதுஎதிர்கட்சிகளின் பின்வரிசை உறுப்பினர்களே. இவர்களால் வெளியிடப்படும் கருத்துகள்அமைச்சரவையின் அல்லது நிழல் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினைப் பாதிப்பதில்லை. ஆதலால் இக்கருத்துகளையிட்டு அரசியற்கட்சிகள்அதிகம் அக்கறைகாட்டுவதில்லை. இப்போதுதான் முதற் தடவையாக பிரித்தானியாவின் நிழல்அரசாங்கத்தின் தலைவர் ஒருவர் தமிழ்மக்களின்சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக கருத்துவெளியிட்டிருக்கிறார். இதுவே அவர் கூறிய கருத்தின் முக்கியத்துவம். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி பிரித்தானியா வாழ் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான் இது வெறும் பேச்சாக இல்லாமல் செயலருப் பெறுவதற்கான முன்னோக்கிய நடவடிக்கை தங்கியுள்ளது.

கோர்பின் தொழிற்கட்சியின் தலைராக, அதுவும் பெரும் எண்ணிக்கையான வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டது முன்னர் எதிர்வுகூற முடியாதிருந்த ஒரு சம்பவமே. அவர் தெரிவு செய்யப்பட்டபோது மகிழ்வுற்ற தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள் அவரை வரவேற்று ஒரு ஒரு கூட்டத்தினை நடாத்த வேண்டும் என்ற எதிர்பார்த்தனர். தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils for Labour) அமைப்பு அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றியிருக்கிறது. அன்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மண்டபத்தின் இருக்கைகளுக்கு அதிகமானளவில் தமிழ் மக்கள், குறிப்பாகஇளையவர்கள் வந்திருந்து அங்கு நிகழ்த்தப்பட்டஉரைகளை செவிமடுத்துக் கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. மிக அண்மைக்காலத்தில் லண்டனில் நடைபெற்ற அரசியற் கூட்டங்களில் இவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதில்லை என்றே கூறவேண்டும்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கிற லண்டன் மேயர் தேர்தலைக் கருத்திற்கொண்ட தொழிற்கட்சியின் ஆதரவாளர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள் எனற கருத்தும் சிலரால்முன்வைக்கப்படுகிறது. சற்றேக் குறைய ஒருலட்சம் தமிழ் வாக்காளர்கள் லண்டன் பெரும்பாகத்தில் இருப்பதனால் மேயர் தேர்தலே இக்கூட்டத்தை நடாத்தத் தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும். அதனாலேயே தொழிற்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கக்கூடும். அங்கு உரையாற்றிய சில பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளிலிருந்து இக்கருத்திலும் உண்மை இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். இருப்பினும் கட்சி அரசியலுடன் தொடர்புபடாத ஊடகவியலாளர்கள், அரசறிவியலாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு கருத்துத் தெரிவிக்கஅனுமதிக்கப்பட்டமை இக்கூட்டம் ஈழத்தமிழரின்அரசியலை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டதனை உறுதி செய்வதாக அமைந்திருந்தது. எதுஎவ்வாறாக இருப்பினும் இவ்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த `தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள்’ அமைப்பிற்கு தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் தமது நன்றியைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஜெரமி கோர்பின் அவர்கள் வெளியிட்ட கருத்துகளை வைத்து அவரது கருத்துத்தான் தொழிற்கட்சியின் கருத்து என எடுத்துக்கொள்ள முடியாது.மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட நிழல் வெளிவிவகார அமைச்சர் ஹிலறி பென் கூட இக்கருத்தினை ஆதரிப்பார் எனக்கூற முடியாதுள்ளது. அதுபோல் தமிழர்கள் ஒழுங்கு செய்கிற மேடைகளில் எல்லாம் வந்து உரையாற்றுகிற பாராளுமன்ற உறுப்பினர்களான சிபோன் மக்டொனா, கீத் வாஸ்,ஜோன் ரயன், வீரேந்திர சர்மா போன்றவர்கள் கூடஇக்கருத்தினை ஆதரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அன்றைய தினம் உரையாற்றிய கீத் வாஸ், சுக்கா உம்முனா போன்ற தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை தொழிற்கட்சிக்கு பெற்றுக்கொடுப்பதில் காட்டிய ஆர்வத்தை ஈழத் தமிழ் மக்களின் அரசியல்தொடர்பில் காட்டவில்லை. தொழிற் கட்சிக்கானதமிழர் அமைப்பு இவர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து செயற்படப் போகிறதாயின் இதுபோன்ற கூட்டங்களிலிருந்து கிடைக்கும் பெறுபேறுகள் தமிழ் மக்களின் அரசியற் போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை.

நியு லேபர் எனப்படும் ரோனி பிளேயர், கோர்டன்பிரவுண் ஆகியோரின் தலைமையிலான தொழிற்கட்சியின் ஆட்சிகாலத்தில் தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடே இருந்து வந்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சந்தித்த மிகப்பெரிய அழிவுகளுக்குஅப்போதைய தொழிற்கட்சி அரசாங்கமும் பங்குதாரராக இருந்தது எனக் குறிப்பிடுவது மிகையல்ல. (மேற்படி கூட்டத்தில் இதுபற்றி ஒரு தமிழ்ச்செயற்பாட்டாளரினால் எழுப்பப்பட்டபோதிலும் அதற்கான பதில் வழங்கப்படவில்லை) நியு லேபரின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டு சமூகஜனநாயக கருத்துக் கொண்ட ஜெரமி கோர்பின், நிழல் நிதியமைச்சரும் ஹேய்ஸ் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன் மக்டொனால்ட்போன்றவர்களின் கைகளில் நிழல் அரசாங்கம் வந்திருப்பது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டமக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுதொடர்பில், அண்மையில் அமெரிக்க ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட ரோனி பிளேயர், பிரித்தானியாவில் ஜெரமி கோர்பின்,ஐக்கிய அமெரிக்காவில் பேர்ணி சான்டேர்ஸ் போன்றவர்களுக்கு ஏற்பட்டுவரும் ஆதரவுத்தளம் தான் எதிர்பார்த்திராத ஒன்று எனவும், சமூக வலைத்தளங்களே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

பிரித்தானிய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றத்தைக் கருத்திற்கொண்டு, ஜெரமி கோர்பின் வெளியிட்ட தமிழ் மக்களின் சுயநிரண்ய உரிமைக்கானஆதரவினை தொழிற்கட்சியின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் திரட்டி அதனை தொழிற்கட்சியின் கொள்கையாக மாற்றுவதில்தான் இதன் அடுத்த கட்ட வெற்றி தங்கியிருக்கிறது. செப்ரெம்பரில் நடைபெறும் தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில்இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அங்கு இதுகட்சியின் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இலக்கினை அடைவதற்கு தொழிற்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது இவ்விடயத்தில் அக்கறை கொண்ட அனைவரும் தீவிரமாகச் செயற்படவேண்டும்.