கடந்த ஞாயிறன்று ( 04/09/2011) வடமேற்கு லண்டனின் புறநகர்ப்பகுதியான ஹரோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாயக மக்களின் தற்போதைய நிலவரம் குறித்தும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான தேவைகள் பற்றியும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சோமசுந்தரம் சேனாதிராசா (மாவை), திரு.சிவஞானம் சிறிதரன் ஆகியோர் உரையாற்றுவார்கள் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மண்டபம் நிறைந்திருந்தது என்பதனால் கூட்டமைப்பினரின் உரையை கேட்பதில், புலம்பெயர் சமூகத்தில், குறிப்பிட்டளவு ஆர்வமிருப்பது தெரிந்தது. அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களில் கூட்டமைப்பு பெற்றிருந்த வெற்றி அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கக் கூடும்.
அதே சமயம், இந்திய அரசாங்கத்தின் உறவை நாடும் புலம்பெயர் அமைப்புகளுக்கு, அவற்றை கூட்டமைப்புடன் இணைந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும், இவ்வமைப்புகள் ஒரு கோட்டில் சந்திக்க முனைவதற்கான காரணமாக அமைந்திருக்கலாம்.
இக்கூடத்தில் நீண்ட உரையாற்றிய மேற்படி இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிதாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என்பது அங்கு வந்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தையளித்தது. மக்கள் நன்கு அறி;ந்து வைத்துள்ள விடயங்களை உணர்ச்சி வசப்படடுக் கூறிக்கொண்டிருந்தார்கள். மக்கள்படும் இன்னல்களை விளக்கியவர்கள், அதனை தணிப்பதற்கான எந்தவொரு வழிமுறையையும் குறிப்பிடத் தவறிவிட்டார்கள். நீட்டி முழக்கியதாக அமைந்த உரைகளினால் கேள்வி நேரம் நேரம் பத்து நிமிடமாக குறைக்கப்பட்டிருந்தது. இது கேள்விகளைத் தவிர்ப்பதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.
கேள்விகளை கேட்பதற்கு ஊடகவியலாளருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டதால் முதலாவது கேள்வியை கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. மாவை சேனாதிராசாவை நோக்கிய எனது கேள்வி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களினது உரைகளிலும் அவர்கள் அடிக்கடி பாவித்த “இனவழிப்பு, தமிழர்கள் ஒரு தனித்துமான தேசிய இனம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு” போன்ற சொற்கள் விடயத்தில் கூட்டமைப்பினர் எவ்வளவு தூரம் உண்மையாக உள்ளார்கள் என்பதனை வெளிபடுத்த வேண்டும் என்பதாக அமைந்திருந்தது. தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை போன்ற விடயங்களை அடிப்படைக் கொள்கைகளாக வரித்துக் கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினர், அதனை தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் அரங்கங்களிலும், தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் வெளிப்படுத்தி வந்தாலும், வெளியரங்கில், குறிப்பாக இராஜதந்திரிகள் மட்டத்தில் இவ்விடயங்களில் உறுதித்தன்மையை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைத்தேன்.
அண்மையில் டெல்லியில் சோனியா காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனம் நாச்சியப்பனால் கூட்டப்பட்ட எட்டு ஈழத்தமிழ் அரசியற் கட்சிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுதியற்ற நிலைப்பாடு வெளிப்பட்டது. இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்படுவதற்கென தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான அடிப்படைகள் பற்றிய அறிக்கையில் சுயநிர்ணய உரிமை பற்றிக்குறிப்பிடப்பட்டிருந்ததால், அதனை அங்கு கலந்துகெண்ட சில அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்த்தமை பற்றி முன்னைய எனது கட்டுரையில் (ஒரு பேப்பர் 152) குறிப்பிட்டிருந்தேன். திரு. கஜேந்திரகுமாரும், திரு.சுமந்திரனும் இணைந்து தயாரித்த இவ்வறிக்கையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிக்; குறிப்பிடப்பட்டதால் அதனைச் சிலர் எதிர்த்தபோது, அங்கு நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களில் மாவை சேனாதிராசா எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதனையும் எனது கேள்வியில் குறிப்பிட்டிருந்தேன்.
எனது குற்றச்சாட்டினை மறுதலித்த சேனாதிராசா, தாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் விடயத்தில் உறுதியாக இருப்பதாகவும், டெல்லிக்கூட்டத்தில் கலந்து கொண்ட சில பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக தாம் பக்ச்சார்பின்றி செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆதலால் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி அறிக்கையை தனித்து தமிழ் கொங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு அரசியல்வாதிக்குரிய பாணியில் விடயங்களைத் திரித்து, கேள்விக்கு பொருத்தமில்லாத விடயங்களைக் குறிப்பிட்டு அவர் தன்னை நியாயப்படுத்திக் கொண்டபோதிலும், சேனாதிராசாவுடன் இதுபற்றி விவாதித்துக் கொள்ள எனக்கு சந்தர்ப்பமிருக்கவில்லை.
டெல்லிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எட்டு தமிழ்க் கட்சிகளில் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) சுரேஸ் அணி, தமீழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஈபிஆர்எல்எப் இலிருந்து பிரிந்து சென்ற நாபா அணி, புளொட் இலிருந்து பிரிந்து சென்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எப்) என்பவை தற்போது தீவிர இந்திய சார்பு அமைப்புகளாக உள்ள போதிலும், அடிப்படையில் தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்தாகக் கூறிவருபவை. இந்நிலையில், இந்த எட்டுக்கட்சிகளில் தமிழ்க் கொங்கிரஸ் கட்சி மாத்திரமே, இக்கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளமை இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக அமைகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் என்பவை ஈழத்தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளாவிடில் இவர்கள் எந்த அடிப்படையில் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதது. இந்த இடத்தில்தான் சேனாதிராசா குறிப்பிட்ட ஒற்றுமை என்பது வெறும் ஏமாற்று உத்தியாகத் தெரிகிறது.
இங்கு கூட்டமைப்பு குறிப்பிடும் ஒற்றுமை, தேர்தல் கூட்டுகளின் மூலம் தமது ஆசனங்களைத் தக்கவைப்பதில்தான் தங்கியிருகிறதே தவிர, அரசியல் அபிலாசைகள் விடயத்தில் இல்லை என்பதனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பாரிய இனவழிப்பை எதிர்நோக்கி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளுக்கு குறைவில்லை எனபது மிகுந்த சோகமான நிலவரம். பிளவுகளை ஊக்குவிப்பதில் பாரிய சக்திகள் சிரத்தையாய் இருக்கின்றன என்பதும் அறியாத வி;டயமல்ல. இந்தப் பின்னணியில் ஒற்றுமை என்ற மாயத் தோற்றமானது வெளியாகத் தெரியும் பிளவுகளைவிட ஆபத்தானதாக அமைந்து விடுகிறது.
தமிழ் அரசியல் வாதிகளின ஒற்றுமை முயற்சி பற்றி தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்;, பினனர் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவராக இருந்தவருமான காலஞ்சென்ற திரு. வ. நவரத்தினம் அவர்கள் அவரது “The Fall and Rise of Tamil Nation” என்ற நூலில் கூறியவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். “ஒற்றுமை என்பது தமிழ் மக்களிடையே இலகுவாக சந்தைப்படுத்தக்கூடிய ஒரு சொல். ஒரு உயரிய இலட்சியத்தினை அடைவதற்கு ஒற்றுமை என்பது விரும்பத்தக்கதாகவும் அத்தியாவசியமானதாகவும் அமையும். ஆனால் இங்குள்ள சிக்கல் என்னவென்றால், அரசியல்வாதிகள் தமது நேர்மையற்ற எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், மக்களை இலகுவாக ஏமாற்றுவதற்கும், ஒற்றுமை என்ற சுலோகத்தைக் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். எதற்காக ஒற்றுமை தேவைப்படுகிறது என மக்கள் அரிதாகவே கேள்வி எழுப்புகிறார்கள். தலைவர்கள் தமக்கிடையே பொதுவானதாக் காணப்படும் தனிப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்காகவும் ஒற்றுமைப்படுகிறார்கள்.”
திரு. நவரத்தினம் குறிப்பிட்டுள்ளது போன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதையிட்டு அரசியல் கட்சிகளும், குழுக்களும், தனிநபர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுபவர்களாக இருப்பின், அரசியற் கூட்டுகளும் அதனடிப்படையில் இருந்திருக்க வேண்டும். இணைவு முதலில் தமிழ் கொங்கிரஸ் கட்சிக்கும், தமிழரசுக்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் இல்லாமல், அடிப்படைக் கோட்பாடுகளையே கேள்விக்கு உள்ளாக்குகிற ஆனந்தசங்கரியின் கட்சியுடனும், புளொட் அமைப்புடனும் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகிறது. இவ்வாறான இணைப்புகள் கூட்டமைப்பின் ஒற்றுமைக் கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குகிறது.