எதைச்செய்ய எதைவிடவென தலைமுடி பிய்ய..

1045

ஒரு பேப்பருக்காக
சுகி

“ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய், இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய், ஒரு நாளும் என் நோவு அறியாய் – இரும்பை கூர் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” இது சொல்வழி கேளாமல் பசிக்கும் எங்கள் வயிற்றைப்பற்றி ஒளவையார் பாடியது. ஆனால் வயிற்றைக்கூட ஒரு வழிக்குக் கொண்டு வந்து விடலாம், ஆனால் இந்த மனம் இருக்கிறதே அது ஒரு பொல்லாத பிறவி. அதுவும் இந்த கணனியுகத்தில் எல்லாமே இயந்திர வேகத்தில் நடக்க, அதுவும் அதே வேகத்தில் பயணிக்கிறது. முன்பு போல் புறாவின் காலில் கட்டிவந்த மடலை வாசித்து, இருந்து ஆறுதலாக பிள்ளையார் சுழிபோடலாமா? அல்லது அம்மன் துணை என்று போடலாமா என்று யோசித்து, கடிதத்தை ஆரம்பித்த காலம் போய், ரெயினில் ஒற்றைக்கையில் தொங்கிக்கொண்டு இன்றைக்கு காலமைக்கிடையில வந்த 11 மின்னஞ்சல்களையும் ஒருக்கால் அவசரமாகத்தட்டி, இரண்டொன்று முக்கியமானதற்கு சுருக்கமாக அதிலேயே பதில் போட, பிடின், பிடின் என்று SMS இல் நண்பியின் text எந்த வண்டியில் வாறாய்? ஏத்தனை மணிக்கு எறினாய்? பதில் எழுத முதல், அடுத்த குறும் செய்தி தகவல் பதில் தா? என்ன தாமதம்? தொடர்ந்து பிடின்..பிடின் என்று அதே அழைப்புச் சத்தம், என்ன அவசரம் இப்போ, அவசரமாக அறிந்து என்ன செய்யப்போகிறாள். C u @ office என்று அனுப்பிவிட்டு மொபைலின் மூச்சை அடக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்து கண்ணைமூடினேன்.

எப்பிடி இந்த நவீன உலகில் எல்லாக் குறுக்கீடுகளையும் தவிர்த்து மனதை ஒன்றில் ஒன்றுபட வைப்பது. இப்போ பிள்ளைகள் பாடசாலையின் வீட்டு வேலையை செய்தாலும், நாம் வேலைத்தளத்தில் வேலை செய்தாலும் கணனியை பாவிப்பது என்பது தவிர்க்க முடியாததொன்றாக வந்து விட்டது. என்றாலும் நாம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கொருக்கால் email, facebook, twitter எனப் போய் என்ன நடக்கிறது என்று பார்க்கும் அளவிற்கு அடிமையாகாது அதில் செய்ய என்று நினைத்துவந்த வேலையைச்செய்து முடித்த பின் ஒரு ஜந்து நிமிடம் பார்ப்பது என்ற மனக்கட்டுப்பாடாக வைத்திருந்தால் முதலுக்கு மோசம் இல்லை.

அத்தோடு நாளும் பொழுதும் ஒரு கற்பனையான உலகில் கணனியோடு செலவிடாது, உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகளுடன் ஒரு பொழுதை ஆனந்தமாகக்கழிக்கலாம். அல்லது ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கலாம், வேறு உங்களின் மனத்திற்கு பிடித்தமான creativeவான விடயங்களில் ஈடுபடலாம். சிலபேரை பார்த்தால் ஏதோ அவர்கள் தான் இந்த உலகை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போலவும், அவர்கள் இல்லாவிடில் அந்த நிறுவனமோ, கடையோ, குடும்பமோ அணுவும் அசையாது என்பது போல தலையால் கிடங்கெடுப்பார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களும் அவர் நன்றாகச்செய்கிறார் என அதை உறுதிப்படுத்துவது போல நடந்து கொள்வார்கள் ஆனால் உண்மையின் உலக நியதியில் யார்; இல்லாவிட்டாலும் நடக்கவேண்டியவை நடந்து கொண்டே இருக்கும். அதற்குரிய கேள்வியும் தேவையும் இருக்கும் வரை அது நடக்கும். இதை கொஞ்சம் நிதானமாக சிந்திப்பார்களேயானால் தமது உடல் நிலையையும் பார்த்துக்கொண்டு, தலையையும் பிய்துக்கொள்ளாமல், நிதானமாக நடப்பார்கள்.

முதலில் என்ன வேலையை எடுத்துக்கொண்டாலும், வேலை செய்யும் இடத்தின் சூழலை துப்பரவாக உங்கள் கவனத்தை திசைதிருப்பாத வண்ணம் வைத்திருத்தல், ஒரு நேரத்தில் ஒரு வேலையைச்செய்தல், உதாரணத்திற்கு ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறோம் என்றால் மாத்திரம் அதை எம்; முன் வைத்திருத்தல். ஓவ்வொருநாளும் 10 நிமிடத்தை ஒழுங்கு படுத்துவதற்கு என செலவிடுதல், போன்றனவற்றுடன் கொஞ்ச நேரம் கொம்பியூட்டரை விட்டு தள்ளியிருத்தல், 55 நிமிடம் கொம்பியூட்டரில் வேலை செய்தால் 5 நிமிடம் வேறு ஏதாவது அது சம்பந்தப்படாத வேலையை செய்தல், என்பன எமது சிந்தனையை ஒருமிக்கும்.

கொம்பியூட்டரை அதிகநேரம் பாவிப்பதால் பேப்பர் பென்சிலைப்பாவிக்கும் போது ஒரு சாதாரண சொல்லுக்கும் சரியான ஆங்கில எழுத்து, இதுவா? அதுவா? என்று தடுமாறுபவர்கள் எங்;களில் அதிகம், அதைக்கூட பக்கத்தில் கேட்டால் மொபயிலிலோ அல்லது கொம்பியூட்டரிலோ கூகுள் பண்ணித்தான் சரியானதை அவர்களும் சொல்வார்கள்!

ஒவ்வொருநாளும் எழும்பியதும், ஏவலாள் வந்தாளா? மாடு கன்று போட்டதா? என்று ஒ;ன்று மாறிஒன்று எனப்பிரச்சனைகளுக்குள் மாய்ந்து போகாது, என்ன முக்கியமான மூன்று விடயங்கள் இன்று செய்யப்போகிறேன் என்று பார்க்கலாம், அதுபோல அன்றைய நாளின் முடிவில் நான் இன்று என்ன செய்தேன், அதை எப்படி இன்னம் நேர்த்தியாகச் செய்திருக்கலாம்? நான் நாளைக்கு என்ன செய்யப்போகிறேன். அதை எப்படி நேர்த்தியாகச்செய்யப்போகிறேன் என்ன கொஞ்சம் சிந்தித்து விட்டு படுத்தால், அடுத்தநாள் எழுந்து எதைச்செய்ய எதைவிடவென தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு திரியவேண்டியது இல்லை.