செப்ரெம்பர் 26ஆம் நாள் திலீபனை நினைவு கொள்ளத்தொடங்கினேன். என் மைந்தர் விலங்கியல் விஞ்ஞானம் படித்தவர்கள், அவர்களிடம் சொன்னேன்.`திலீபன் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் பன்னிரண்டுநாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார் என்று.அவர்கள் அதனை நம்பவில்லை, நம்பவேயில்லை.`தண்ணீர் குடிக்காமல் எவரும் உண்ணாவிரதம் இருக்கமுடியாதுபீ என்று அடித்துச் சொன்னார்கள். எனக்கோ கடும்கோபம் `அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? என்று கத்தினேன்.
அது தான் விசயம். எவரினாலும் நம்ப முடியாத உன்னததியாகம் புரிந்தவர் திலீபன். இத்தியாகம் என்பது மகாவீரத்தின் உச்ச நிலை என்பேன். ஆயுதம் துÖக்கி அடிப்பதிலும் உச்சம் அகிம்சை வழியிலிருந்து பிடிப்பதிலும்உச்சம். எப்படி இது சாத்தியமாகியது? எந்த மண்ணில்இது விளைந்தது? இவ்வீரத்திற்கும் தியாகத்திற்கும் வழிகாட்டியாக நின்றவர் யார்? யாரை நம்பி இந்த அக்கினியைகையில் ஏந்தினார்கள்? `புலி எதிர்ப்புப் புராணம்` பாடுபவர்களிடம் இக்கேள்விகளுக்கான விடையும் கிடையாது,இக்கேள்விகளை அவர்கள் விளங்கப்போவதுமில்லை. இவற்றை இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.
இப்பொழுது என்னை இன்னொரு துக்கம் தின்னத் தொடங்கியது. அப்பொழுது திலீபனின் உன்னததியாகத்தை நான் உண்மையான தியாகம் என நம்பவில்லை. இது புலிகளின் இன்னொரு விளையாட்டு என்றேநம்பினேன். அதற்கு நான் மாற்று அரசியல் தளத்தில் இருந்ததே காரணம் என்பேன். இப்பொழுது இவற்றை யோசித்துப் பார்க்கின்றபோது நான் படு முட்டாள் மாத்திரமல்ல, படு பாவி என்றும் உணர்கிறேன்.
1984ம் ஆண்டு எங்கள் ஊரில் (அளவெட்டி) திலீபனும் இன்னொருவரும் (அவரும் எனது நண்பர்) அரசியல் பிரச்சார உரை நிகழ்த்த வருகின்றனர். திலீபன் தான் உரையாற்றுகின்றார். நானும் எனது அரசியற் தோழி ஒருவரும் குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கேட்டு திலீபனை மடக்கி வீழ்த்துகிறோம். அன்று எமக்கு எமது அரசியல் மேதாவித்தனத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ஆனால், காலம் எதைச் சொல்லிற்று? அன்று நாம் செய்ததுஎன்ன? இப்பொழுது யோசித்துப் பார்க்கின்றபோது தான்தெரிகிறது ஓர் உண்மை மனிதன் மீது சேற்றை வாரிக் கொட்டினோம் அல்லது கல்லால் எறிந்து காயப் படுத்தினோம். ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்திலீபன் என்னைகாணும்தோறும் ஒரு சொல் பேசாமல் விடுவதில்லை. அவசரமாகப் போகின்றார் என்றால் முகத்தில் ஒரு புன்னகையாவது பூக்கும்.
இன்னொரு சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கின்றேன். விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் இச்சம்பவத்தைக் கூறினார். அவரது தளத்திற்கு (பேஸ்) திலீபன்வருகிறார். விடிந்தால் `ஒரு சொட்டு நீர் அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதம்` இருக்கப் போகின்ற அவர்எல்லாத் தளங்களிற்கும் சென்று இறுதியாக என் நண்பரின்தளத்திற்கு வருகிறார். அப்பொழுது சாமம் 12 மணிஇருக்கலாம். எனது நண்பன் உடனடியாக சுடச்சுடப் பாண்வாங்கி சம்பலுடன் கொடுக்கிறார். அது தான் திலீபனின் இறுதியான சாப்பாடு.
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தை நான் சொல்லவேண்டும். 1983 பெப்ரவரி மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ஒன்றினை மாணவர்களாகிய நாங்கள் நிகழ்த்தினோம். விடிந்தால் உண்ணாவிரதம், தொடர்ந்து நான்கு நாட்கள். நான்என்ன செய்தேன்? யாழ்ப்பாணம் ஐந்து சந்தியிலுள்ள மொக்கன் கடைக்கு (ஆசாத் ஹொட்டல்) இரவு நானும்நண்பனுமாகச் சென்றோம். அப்பொழுது நான் கடைகளில் தான் சாப்பிட்டு வந்தேன். தொடர்ந்து நான்கு நாட்களுக்குச் சாப்பிடத் தேவையில்லை. ஆகவே, காசு மிஞ்சும். அந்தக் காசுக்கு மொக்கன் கடையில் ஸ்பெசல் கொத்து ரொட்டி, ரோஸ்ட், ரொட்டிகள் என்று வெளுத்துக் கட்டினேன். பிறகு ஒரு கிண்ணத்தில் எலும்பில் வைத்தரசத்தையும் வாங்கிக் குடித்தேன். ஏனென்றால் நான்கு நாட்கள் உண்ணாவிரதத்திற்கு என் உடம்பு தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா? நானும் என் போன்ற சாதாரண மானுடப் பதர்களும் எங்கே? திலீபன் எங்கே? மனசாரச் சொல்கின்றேன் இவற்றை நினைக்கையில் எனக்குத் துக்கம் பொங்கிப் பெருகிக் கொண்டு வருகிறது.
திலீபன் உண்ணாவிரதம் இருக்கின்றார். அந்த நாட்களில் நான் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிகின்றேன். கொக்குவிலில் எனது வசிப்பிடம்.படிப்பிக்கப் போகும் பாதையிலொன்று திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடம் அப்பாதையிலே ஒவ்வொரு நாளும்பயணம் செய்தேன். காலை வேளைகளில் பாடசாலை போகிறபோது திலீபனைச் சுற்றி சனம் அவ்வளவு இருக்காது. எனவே திலீபனைப் பார்க்க எனக்கு நேரம் கிடைக்கும். பார்த்து விட்டுப் போவேன். அநேகநாட்களில் நித்திரையாக இருந்தார். பிறகு வந்த நாட்கள் மயக்கச் சரிவில்இருந்தார். பாடசாலை முடிய வரும் மதிய நேரங்களில் திலீபனை சனம் மொய்த்துவிடும் பார்க்க முடியாது.
காலை வேளைகளில் திலீபனைப் பார்க்கின்றபோதுஒரு நாள் மாத்திரம் புன்னகை தந்தார். அதில் உயிர்ப்பு இல்லை. அவர் கொஞ்சம் கொஞ்சமாக வாடி வதங்கிக் கொண்டு போனார். கண்கள் உட்குழியத் தொடங்கின. நித்திரையாக இருந்த சமயங்களில் அவர் கண்ணாடி அணிந்திருக்கவில்லை. அது இன்னமும் முகத்தை ஒடுக்கிக் காட்டியது. கறுத்துக் கொண்டு போனார் திலீபன். அப்பொழுதும் அவர் தியாகத்தை நான் மெச்சவில்லை. மரணத்தை நோக்கிய அவரது பயணத்தைக் கண்டு நான் அநுதாப்பட்டேன். உண்மையில் ஒரு மனிதனின் மரணம் என்பது தான் என் அநுதாபத்திற்குக் காரணம்.
திலீபனின் தியாகத்தை கொச்சையாகப் பேச ஒரு சிலர் தயங்கவில்லை. `அவரது குடலுடன் ஆட்டுக்குடல் பொருத்தியிருக்கின்றது, ஒரு சில வருடங்களில் அவருக்குமரணம் நிகழப் போகின்றது. அந்த மரணத்தை இப்பொழுதே எதிர் கொண்டு பெயர் சம்பாதிக்க விரும்புகிறார்பீ என்கிற மாதிரி சிலர் பேசினார்கள். மரணத்தை மலினப்படுத்தும் சமூகத்தில் நாம் இருக்கின்றோம்.
திலீபன் தனக்காகவோ, தன் இயக்கத்திற்காகவோ, உண்ணாவிரதம் இருக்கவில்லை. தமிழ் மக்களின் நலன் ஒன்று தான் அவரது உண்ணாவிரதத்தின் உள் நோக்கம். அதனை நான் அப்பொழுது உணரவில்லை.
திலீபன் இறந்து கொண்டு போகின்ற அந்தத் தருணங்களில் நான் என்ன செய்தேன். புரட்டாசிச் சனி விரதத்திற்கு ஏழெட்டு மரக்கறிகளுடன் வயிறு புடைக்கச் சாப்பிட்டேன். சாப்பிட்டு ஏப்பம் விடுகின்ற நேரத்தில் திலீபனின்மரணச் செய்தி லவுட்ஸ்பீக்கர் வழியே என் காதை வந்தடைகிறது.
திலீபா உன் ஆணையாகச் சொல்கிறேன். இப்பொழுது என் நெஞ்சிலிருந்து இரத்தக் கண்ணீர் வழிய வழிய உன் காலடியில் என் வணக்கத்தை வைக்கிறேன்.
ஒரு பேப்பருக்காக
இரவி அருணாசலம்