என் இனமே, எம் சனமே

நினைவுக் குறிப்புக்களான நூல் ஒன்று சமீபத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஐ.தி.சம்பந்தன் எழுதிய`நீங்காத நினைவுகள்’ என்கின்ற புத்தகமே அது. அந்நூலினை வாசித்துச் செல்கையில் சில விடயங்கள் என் கவனத்தை கோரியது.

அதனை புரிவதற்கு வரலாறை ஒரு கதையாக நாம் பார்க்க வேண்டும்.

1953 ஓகஸ்ட் 17ஆம் நாள், இலங்கை முழுவதும் கடையடைப்பு (ஹர்த்தால்) நடைபெறுகிறது. கொம்யூனிட்ஸ் கட்சி, சமசமாச கட்சி ஆகியன முனைந்து நடாத்தியகடையடைப்பு இது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், அரிசி விலையினை உயர்த்தியதையடுத்து நடந்த கடையடைப்பு. தமிழரசுக் கட்சி முழுமையாக பங்கேற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இக்கடையடைப்பு பெரு வெற்றி பெற்றது.

கடையடைப்பின் போது பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் சிலர் உயிரிழந்தனர். அதனையடுத்து அப்போதைய பிரதமர் டட்லி செனநாயக்க தமது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். டட்லியின் இடத்துக்கு, சேர்.ஜோன்.கொத்தலாவல நியமிக்கப்பட்டு பிரதமர் ஆனார்.இவர் யாழ்ப்பாணம் வந்து கொக்குவில் இந்துக் கல்லுÖரியில் ஆற்றிய உரையிலிருந்து சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று பிரகடனப்படுத்தினார்.

சேர்.ஜோன்.கொத்தலாவலவின் உரை சிங்கள மக்களை பதற்றமடைய வைத்தது. அதனை அறுவடை செய்ய நினைத்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவராக இருந்த S.W.R.D.பண்டாரநாயக்க அவர்கள்.

இவ்விடத்தில் என்னிடம் ஒரு கருத்து உண்டு. அரசியல்வாதிகள் தான் மக்களை பிழையாக வழிநடத்துகிறார்கள் என்ற கருத்து என்னளவில் ஏற்றுக் கொள்ள முடியாதஒன்று. மக்களிடமிருந்து விளைந்து வந்து மேற்தள்ளுகின்ற கருத்துக்களை காலம் அறிந்து அரசியல் வாதி அறுவடை செய்கிறார். இந்த விதமாக எழுந்தது 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க கொண்டு வந்த `சிங்களம் மட்டும்’ சட்டம்.

இந்தச் சட்டம் தமிழ் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியது. இந்தச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்த தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி அகிம்சை வழியில் போராட்டங்களை நடாத்தி வந்தது. சிங்கள அரசுக்கு ஒருவருட போராட்ட அறிவித்தலைக் கொடுத்து 1956 ஆவணியில் திருமலை யாத்திரையை நடாத்தியது. தமிழர் தாயகப்பிரதேசங்களின் பல முனைகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான மக்கள் கால்நடையாகச் சென்று திருமலை முற்றவெளியில் நடாத்திய கூட்டத்தில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டு நின்றனர்.

திருமலை யாத்திரையில் லட்சக்கணக்கான மக்களின் அங்கீகாரத்துடன் பிரகடனப்படுத்திய ஒரு வருட அவகாசஅறிவித்தல் பண்டாரநாயக்க அரசை இக்கட்டில் தள்ளியது. பண்டாரநாயக்கவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 1957 இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் எழுதினார் பண்டாரநாயக்க, அதுவே `பண்டா-செல்வா ஒப்பந்தம்’ அந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சமும் ஒரு நாள் கூட நின்றுபிடிக்கவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிய வைத்தது.

1961_sathiyagiraha1960ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இயங்கத் தொடங்கிய சிங்கள அரசாங்கம் சில சட்டங்களை பிறப்பித்தது. அது பண்டாரநாயக்கவின்தனிச்சிங்களச் சட்டத்திற்கு ஒப்பானது. இச்சட்டத்தில்முக்கியமான ஒன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழிகளிலேவழக்கு நடாத்தப்படவேண்டும் என்பது. மீண்டும் எழுந்ததுதமிழினம். மூண்டு எழுந்தது பெரு நிலப்பரப்பு. 1961 பெப்ரவரி 20 ஆம் நாள் யாழ்ப்பாணம் கச்சேரிக்குமுன்பாக சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) ஆரம்பமானது.தந்தை செல்வாவின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணம் கச்சேரி பிரதான வாசலில்அமைதியாக அமர்ந்து கொண்டனர். பெரும்தொகையானோர் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஐந்து கச்சேரிகளுக்கும் முன்பாக தமிழர் அமர்ந்து சட்டமறுப்பு இயக்கத்தை தொடர்ந்தனர். தமிழ் மக்களின் எழுச்சி கண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து மு.சிவசிதம்பரமும், யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அல்பிரட் துரையப்பா அவர்களும் இப்போராட்டத்தில் தம்மை இணைத்தனர்.

52 நாட்களாக இந்த சட்டமறுப்பு இயக்கம் நீடித்தது. தமிழ் மக்கள் எழுச்சி உச்ச நிலைக்கு வந்தது. கச்சேரி நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டபடியால் அரச ஊழியர்களின் சம்பளம் கொடுபடவில்லை. மக்களுக்கு வழங்கியஉலர் உணவுப் பொருட்களையும் சிங்கள அரசாங்கம் தடை செய்தது.

மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய சேவைகள் நடாத்துவதற்கும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள அரசு சுயாட்சியை வழங்காவிட்டால் மாற்று அரசாங்கம் ஒன்றைநடாத்துவதற்கான சவாலாக சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்த தந்தை செல்வா அறைகூவல் விடுத்தார். தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் முஸ்லிம், தமிழர் என்ற இனபேதமின்றி பெருநெருப்பு மூண்டது.

தொண்டமான் தலைமையில் மலையக மக்கள் பலரும் இச்சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தேயிலைத் தோட்டங்கள் ஒரு வார கால வேலை நிறுத்தம்செய்வதற்கும் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.

யாவும் சிங்கள அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அவசரமாக மந்திரிசபையைக் கூட்டி 1961 ஏப்ரல் 17ஆம் நாள் நள்ளிரவு இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழர் தாயகப் பிரதேசமானஐந்து மாவட்டங்களும் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

இது அப்போது சுமார் 50 வருடங்களுக்கு முன் எழுந்த எழுச்சி அது. இந்த எழுச்சிக்கு தலைமை தாங்கிய தந்தை செல்வா, தான் இயலாக் கட்டத்தில் 1970ஆம் ஆண்டு சொன்னார், [highlight color=”black”] ” இனி தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”[/highlight].  அகிம்சை தோற்றத்திலிருந்து வந்த கசந்து போன வார்த்தைகள் இவை.

பின்வந்த 30 ஆண்டுகளில் தமிழர் தலைவிதியை தமிழர் தீர்மானிக்கும் காலம் ஒன்று குதிர்ந்தது. அதன் காரணம் என்னவென்று நாம் அறிவோம். இப்போது வன்முறையை ஏன் கைக் கொண்டனர் என்று கேட்கின்றார் எம் இனம் தெரிவு செய்த எமது தலைவர் ஒருவர்.

எம்மினமே,எம் சனமே!!