எமது நிலம் எமக்கு வேண்டும்

901


எமது நிலம் எமக்கு வேண்டும்
“இது ஒரு முன்னாள் பெண் போராளி இப்போது பாலியல் தொழில் செய்கின்றார். இந்தப் பெண் போராளிக்கு ஒரு கால் இல்லை. இன்னொரு காலும் அழுகிவிட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ஒரு போராளி தான். அவர் போரில் இறந்துவிட்டார்.இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்டார்” என்று தொடங்கும்; கட்டுரையை இவ்வார ஆனந்தவிடனில் படித்தேன்.

இந்தக் கட்டுரை சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ காவிக்கொண்டு செல்கிறது. அதிகமாக வேண்டாம். ஒரு கேள்வி.. பாலியல் கவர்ச்சி அல்லது பாலியல் தூண்டுதல் என்பது பாலியல் தொழிலின் அடிப்படை மையம். ஒரு காலை இழந்து இன்னொரு கால் சிறிது சிறிதாக அழுகிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஒருத்தன் தனது பாலியல் தேவைக்கு எப்படி தோர்ந்தெடுப்பான்? என்ற தர்க்கம் இங்கு விளக்கப்படவில்லை. இன சுத்திகரிப்பு நோக்குடன் சிங்கள பாலியல் தொழிலாளர்கள் பரவலாக களமிறக்கி விடப்பட்ட புறச்சூழலில் இந்த தேர்வு எத்தகையது.? மனமிரங்கி அந்த பெண்ணை தேர்வு செய்பவன் அந்த பணத்தை சும்மாவே கொடுப்பான். பாலியல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு கொடுக்க மாட்டான்.

இதற்காக அங்கு பாலியல் தொழிலாளிகளாக நமது பெண்கள் மாற்றப்படவில்லை என்று சொல்ல வரவில்லை. இன அழிப்பு நோக்குடன் பல பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்டுள்ளதும் உண்மைதான். ஆனால் அதற்கு யார் காரணம் என்ற தெளிவான பார்வை அவசியம். எழுந்தமானமாக செய்திகளை காவக்கூடாது.. இந்த அவலத்தின் சூழச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் போராளி அண்மையில் குறிப்பிட்டார்..” நான் போராளி. எனக்கும் எனது குழந்தைகளுக்கும் ஏன் யாரும் உதவி செய்ய வேண்டும்? எனக்கு மன உறுதி மட்டுமல்ல உடல் உறுதியும் இருக்கிறது. ஆனால் என்னை எனது ஊரில் குடியேற்ற வேண்டும். நான் எனது மண்ணில் எனக்கு தெரிந்த கடற்தொழிலை செய்து நானும் குழந்தைகளும் பிழைத்துக்கொள்வோம். ஆனால் திட்டமிட்டே என்னை இந்த காட்டுக்குள் விட்டிருக்கிறார்கள். இங்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார். இது தான் இன அழிப்பு உத்தி.. கடலில் இருந்த மீனை பிடித்து எல்லாம் தண்ணீர்தானே என்று குளத்தில் விட்டால் என்ன நடக்கும்? எமது மக்களுக்கும் நடப்பது அதுதான்..

அவர்கள் தமது பரம்பரை தொழிலை இழந்து ஊர் என்ற அடிப்படையில் ஒன்றுபடும் தோழமையை இழந்து குடும்ப நட்புக்களில் இருந்து துண்டாகி வேறாக்கப்பட்டு வாழ்வை மட்டுமல்ல அதற்கான உறுதியையும் உளவியலையும் இழந்து நிற்கிறார்கள். இது திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இனப்படுகொலை அரசின் நுண்மையான இன அழிப்பு உத்தி. எனவே எமது நிலம் எமக்கு வேண்டும். அதற்கு பிறகு அந்த மக்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டாம். அவர்களே உழைத்து உண்பார்கள்..

கிருஸ்ணா


புலனாய்வு பிரிவு என்ன செய்தது?
ஏரிக் சொல்ஹெய்ம் பற்றி அப்போது ஏனாம் கண்டு கொள்ளாமல் புலிகளின் புலனாய்வு பிரிவு என்ன செய்தது. இவ்வளவு காவு கொண்ட பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இல் பிழை போடுவதில் என்ன பிரயோசனம்?
த. செல்வரத்தினம்


என்ன பிழை கண்டீர்கள்?
பிரித்தானிய தமிழர் பேரவை சர்வதேச விசாரணையைக் கோரி ஒரு மாநாட்டை நடாத்த முன்வந்தால் அதனை விமர்சிக்கவும், அவதூறு செய்யவும் சிலர் முற்படுகிறார்கள். சரி அவர்கள் பிழை என்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றாவது சொல்லுங்களேன்? தமிழன் ஒரு நாளும் திருந்த மாட்டானா?
கணேஸ்


போராளிகளை கொச்சைப்படுத்தும் விகடன்
அந்த போராளி பாலியல் தொழில் செய்தாரோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த பிழைப்புக்கு விகடன் நிர்வாகம் பேசாமல் பத்திரிகை அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு பாலியல் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.
இராமகிருஸ்ணன்


தினேசுக்கு பாராட்டு
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அழித்தொழிக்கப்பட்ட இன்னொரு போராட்டமான பயபரா மக்களின் போராட்டம் பற்றிய விபரமான நிகழ்ச்சியை ஜீரிவியில் தந்த தினேஸ் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்.
குகமலர்


மாவீரர் தினம்
கடந்த முறையைபோல் இல்லாமல் இம்முறை எல்லோரும் ஒற்றுமையாக எக்சல் மண்டபத்தில் உள்ள முருகதாசன் அரங்கில் நடாத்துவதையிட்டு மகிழ்வடைகிறேன்.
கவிதா