தீபாவளி வருகின்றது எல்லோரும் கொண்டாடுவோம் என்று தான் சொல்கிறேன். அதனை செத்தவீடாகவோ, அல்லது திருநாள் விழாவாகவோ கொண்டாடுவோம். செத்தவீட்டையும் விழா நாளாக கொண்டாடும் மரபு நமக்குண்டல்லவா?
அப்போது அகால மரணங்கள் அதிகம் நிகழவில்லை. தற்கொலையோ, விபத்துக்களால் நிகழ்ந்த மரணங்களோ மிகமிகக்குறைவு. இளைய வயதில் சிறகுகளை உதிர்த்து மண்ணில் வீழ்ந்தவர்கள் எவருமில்லை. சாவுகாலம் ஆகித் தான் அநேகமாக நேர்ந்தது. இந்த உடலைவைத்து, உலகிற்கு பாரமாக இருக்கக்கூடாது என்று “ஆண்டவனே என்னை அழைக்க மாட்டாயா ?” என்று கெஞ்சியும், நேர்ந்தும் போனவர்களே அதிகம்.
அதனால் அந்த இழவு வீடு கொண்டாட்டத்திற்கு உரியதாயிற்று. ஒருசிலர் தம் அன்புக்குரியவர்களின் சாவு குறித்து துக்கம் காட்டினார்கள். ஒரு நாள், இருநாள் துக்கம் கொண்டாடப்பட்டது. பிறகு அந்தியேட்டி நாள் வரைக்கும், அந்தியேட்டி முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்கும் கூட நெருங்கிய உறவினர் இழவு வீட்டிலிருந்து துக்கத்தையும் கொண்டாட்டம் ஆக்கினார்கள்.
சேர்ந்து சமைப்பது, சேர்ந்து உண்பது, சாமம் சாமமாகஇருந்து கதை பறைவது, காட்ஸ் அடிப்பது, அத்துக்கவீட்டில் இல்லாத உறவினர்கள் `பட்டினிப் பண்டம்’ என்று காலைக்கும், மதியத்திற்கும், இரவுக்கும் என்று சொல்லி தாம் சமைத்த உணவை அனுப்புவது, எட்டுச் செலவு, துடக்குக் கழிவு என்று சிறு சமையலும், அந்தியேட்டி என்று பெரும் சமையலும் செய்து பந்தி விரித்து வாழை இலை வைத்து… என்று கொண்டாட்டம் நிகழும். இடையிடை ஒருமுதிர் பெண் அல்லது முதியவர் சொல்வார் “அடேய் பெடியள், இது செத்த வீடு நடந்த வீடடா, ஆட்டம் பாட்டத்ததை குறையுங்கோடா, அயலட்டைச் சனங்கள் என்னநினைக்கப் போகுதுகள்.” அவர் சொல்லி ஐந்து நிமிடத்துக்கு ‘ஆட்டம் பாட்டம்’ நின்றாலே அது ஆச்சரியம்.
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது, “தீபாவளி வரப்போகுது, என்ன செய்யப் போகிறாய்?” என்றேன். “இது நரகாசுரன் எனும் திராவிடன் அழிந்த நாள், இதை திராவிடராகிய நாங்கள் எவ்வாறு கொண்டாட முடியும்?” என்று கேட்டான். நான் ஒன்றுமே பறையவில்லை. இப்போது விவாதிப்பதற்கான வலு என்னிடமில்லை. என்னிடம் மாற்றம் ஒன்று நிகழ்கிறது. முதிர்கின்றேனோ அல்லது பக்குவப்படுகின்றேனோ அல்லது பரதேசியாகப் போகும் எண்ணம் உண்டோ எதுவும் எனக்குத் தெரியாது.
இப்பத்தி எழுதுகிற ஓருபேப்பர் இன் முகப்பில் கூட ‘நரகாசுரனுக்கு எம் வீர வணக்கம்’ என்று வழமையாக தீபாவளி இதழுக்கு வருவது போல இம்முறையும் வரலாம். இவையெல்லாம் ‘தமிழர்களாகிய நாம் தீபாவளி கொண்டாடல் தகாது’ எனும் கருத்து நிலையில் எழுந்தவையே. அதனால் தான் முதல் பந்திகளில்’செத்த வீடு கொண்டாடுவது’ பற்றிக் குறிப்பிட்டேன். என்ன செய்தாவது கொண்டாடுவோம்.
மீண்டும் சொல்கின்றேன் கொண்டாடுவோம். அது மிக முக்கியமானது. எல்லோரும் கொண்டாடுவோம். எல்லாவற்றையும் கொண்டாடுவோம். புலம்பெயர் தேசங்களில் நத்தார் தினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றோம் அல்லவா? அதற்குள் இருக்கக்கூடிய `அரசியல்’ பற்றி எங்களுக்கு ஏதும் கேள்வி உண்டா? நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அதற்குள் உள்ள `அரசியலை’ புரிவோம். ஆனால் எதன் பெயரிலாவது அதனைக் கொண்டாடுவோம்.
எதனையும் கொண்டாடிப் பாருங்கள். எமது இரு விலா எலும்புகளிடையேயும், இரு சிறகுகள் முளைத்ததைஉணர்வோம். சிறகு அடித்து வானத்தில் நீந்தும் சுகத்தை உணராதார் மனிதரல்லர்.
எனது அப்பா `அரசியல்’ பார்த்து தீபாவளியைக் கொண்டாடாமல் விட்டிருப்பாரானால், சித்திரை வருடப் பிறப்பைக்கொண்டாடமல் விட்டிருப்பாரானால், இப்படிப் பலவற்றைகொண்டாடாமல் விட்டிருப்பாரானால் எனது பாதி நினைவுகள், பாதி அனுபவங்கள், பாதி உணர்வுகள் அவை தரும் சுகங்கள் யாவும் என்னை விட்டு பறந்து போயிருக்கும். நல்ல காலம் அப்பாவுக்கு அந்த `அரசியல்’ இல்லாமலே போயிற்று. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிள்ளைகளின் கொண்டாட்டம் ஒன்றே குறியாக இருந்தது.
என் மைந்தர்களையிட்டு அந்தவாறு வேதனையடைகிறேன் நான். பிற்காலங்களில் பிறந்தநாளுக்கு `கேக்’ துண்டு வெட்டவும் மறித்துவிட்டேன் அவர்களை. வரட்டுத்தனமான `அரசியல்’ ஒன்று அதில் எஞ்சியிருந்தது. இப்பொழுது என் மைந்தர்களுடன் `பழங்கதைகள்’ பேசுகின்றேன். அப்போது அவை தந்த இன்பங்களைச் சொல்லி மகிழ்கின்றேன். அந்த இன்ப ஊற்றுக்களை அடையாது விட்ட அப்பா, அம்மாவிற்கு என் மேலான நன்றி.
மாரி பொழிந்து, மனம் குளிர்ந்து, ஈரம் நிலத்தில் சுவறி, ஊர் பச்சையாகி, இருந்த பொழுதொன்றில் தீபாவளி வருகின்றது. தீபாவளிக்கு முன்னர் ஆசிரியர் பணி புரிகின்ற அப்பாவுக்கு எப்பொழுது சம்பளம் வருகின்றதோ அதற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணத்துப் பட்டினம் செல்ல பஸ் ஏறுவோம். அந்த வருடத்திற்கான அதி சிறந்த உடுப்பை எடுப்பார் அம்மா. அந்த நாளில் சிவாஜிகணேசன் ஏதோ ஒரு திரையில் தோன்றாமல் இருந்ததில்லை. அத்திரையரங்கில் நான்கு நுழைவுச் சீட்டுகளுக்கு காசு கொடுப்பார் அப்பா. அந்த மழைக் குளிருக்குள்ளும் தீபாவளிக்கான காலை எப்படியோ வேளைக்கு விடிந்து விடுகிறது. குளிர் என்றால் குளிக்க முடியுமா ? ஆனால் புது உடுப்புப் போட வேண்டுமல்லவா ? போட்ட புது சேட்டில் கொஞ்சம் மஞ்சள் கீறி, குசினிக்குள் போனால்,நல்லெண்ணையில் பொங்கிய குண்டுத் தோசை இருக்கின்றது, தாளித்த சம்பலுடன்.
புது உடுப்பை ஊருக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் காட்ட,ஒழுங்கையால், வீதியால் ஒரு நடை. ஐப்பசிக்கான அடைமழை அப்பொழுது பொழிந்ததாக ஞாபகம் இல்லை. ஆனால், இடையிடையே சிணுங்கிப் பார்க்கும் வானம். மழையின் ஒரு துளி புது சேட்டில் பட்டாலும், ‘கரம்பன்’ பிடித்துவிடும் என்று அஞ்சி நாங்கள் படும் பாடு இருக்கிறதே? மரத்தின் கீழும் ஒதுங்க முடியாது. அது ‘இரண்டு’ மழையல்லவா தரும். மதியம் வீடு வந்தால் கிடாய் இறைச்சிக் கறியுடன் சாப்பாடு, முடிந்தபின் கையை ஊன்றிக் கழுவவும் மனம் வராது. இறைச்சி வாசம் போய்விடுமல்லவா? பிறகு அடுத்த புது உடுப்பைப் போட்டு அடுத்த ஊர் உலாத்து. இரவு வரும் வரைக்கும் தீபாவளி இனித்தபடி இருக்கும். வராமலே போய் இருக்கலாமோ அந்த வசந்தம்? என்ற ஏக்கம் தலை தட்டுகிறது. நண்பர்களே, நமக்குள் `அரசியல்` அரசியலாகவே இருக்கட்டும்.அதனை நம் பிள்ளைகளுக்கு ஓத வேண்டிய தேவையும்நேரமும் வரும் போது ஓதுவோம். அதுவரை எல்லோரும்எல்லாவற்றையும் கொண்டாடுவோம்.
Picture Courtesy – library.smu.edu.sg