யார் பெயரைச் சொல்லியாயினும், எதன் பொருட்டாக இருந்தாலும் எல்லோரும் கொண்டாடுவோம். அது தான் மிகமுக்கியமானது. கொண்டாட்டங்கள் சும்மா உருவானவையல்ல. இயல்பு வாழ்விலிருந்து ஒரு போது விலகி,மனதை மகிழ்வித்து, உடலை புத்துணர்வாக்கி, மீண்டும் இயங்குவதற்கான ஒரு எரிபொருள் தான் கொண்டாட்டங்கள். கொண்டாட்ட மனநிலை தான், கொன்றுபோடும் கொடுமைகளிலிருந்து நம்மை மீட்கின்றது.
மனிதரின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று கொண்டாட்டம். ஒரு நேர்கோட்டில் பயணிக்க முடியாது என்று நினைத்த மனிதர் ஒரு திருப்பத்தை, வளைவை உண்டாக்க அமைக்கப்பட்டது கொண்டாட்டம். அந்தக் கொண்டாட்டங்களுக்கு மதச்சாயம் பூசப்பட்டது. அதுவே நம் மீது திணிக்கப்பட்ட இக்கட்டு. அதனால் தான், சிலவற்றைக் கொண்டாட மனம் சுழிக்கின்றது. சிலவற்றை உச்சகட்டமாக கொண்டாடி துலைக்கின்றோம்.
இப்போது காணுங்கள் தீபாவளி வருகின்றது, அதற்கு ஓருபேப்பர் – நாங்கள் என்ன செய்தோம் ? யாருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை, அது கூட பரவாயில்லை, நரகாசுரனுக்கு வீர வணக்கம் செலுத்தினோம்.நரகாசுரன் யார்? தெரியாது. அப்படி ஒருவன் இருப்பின் அவன் திராவிடனா? அதுவும் தெரியாது.
யாரோ ஒருவர் சொன்னார், அல்லது ஒரு கூட்டம் சொல்லிற்று. `நரகாசுரன் திராவிடன்’ என்று. பொய்யும் புனைவும் மலிந்ததே புராணம் என்பதை ஏற்க மறுக்கின்றோம். ஆனால், இந்தப் புராணக் கதையை ஏற்கின்றோம் என்றால் எங்கு தவறு? இதுவும் ஒரு புராணம் தான் என்று நிராகரித்து விட்டு நாம் கொண்டாடியிருக்கவேண்டுமல்லவா?
இவ்வாறான முட்டாள்தனமான கருத்துக்களை நானும் முன்னர் கொண்டிருந்தேன். என் தலையில் இப்போதே மூன்று குட்டுப் போட்டுக் கொள்கிறேன். நாங்கள் மாறுகின்ற போது உங்களையும் மாறச் சொல்லிக் கேட்பது நியாயமல்ல. இப்போது ஒரு கருத்தை விதைக்கின்றோம், அது உங்களில் வீழ்ந்து ஒரு கருத்தை உருவாக்குமானால் அதுவே நியாயம்.
சின்னவயதில் நாம் கொண்டாடித்தானே வாழ்ந்தோம். எப்படா திருவம்பாவை வரும், திருவம்பாவை வரும்,பொங்கல் வரும், சிவராத்திரி வரும், சித்திராபறுவம் வரும், புதுவருடம் வரும், அம்மன் கோவில் திருவிழா வரும், ஆடிப் பூரம் வரும், ஆடி அமாவாசை வரும், புரட்டாசி சனி வரும், நவராத்திரி வரும் என்று கொண்டாடுவதற்கான நாள்கள் தானே எங்களது நன்நாள். எந்தக் கொண்டாட்டத்தை நாம் இழந்தோம்?
செத்த வீட்டைக் கூட கொண்டாடி மகிந்தவர் தாம் நாம்.துக்கம் கலைக்க கூட்டம் கூடி கதை பேசி கவலைகளை மறந்தே இருந்தோம். எட்டுச் செலவில் அன்றிலிருந்து சோகம் குறைகிறது. அந்தியேட்டி நாளை ஒரு கலியாணவீடோ என நினைத்தோம். சாட்டுக்கு ஒரு கண்ணீர் வடிப்போம். துக்கம் எவர் முகத்திலும் ஒட்டிக் கிடந்ததில்லை. சோகத்தை அப்படியே துரத்தியடிக்க கொண்டாட்டத்தால் அல்லல் வேறு எவற்றினால் முடிந்தது?
ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன், ஆகப்பெரிய கொண்டாட்டமாக தீபாவளியே அப்போது எங்களுக்கு இருந்தது. அப்பாவுக்கு சம்பளம் வருகின்ற நாளையொட்டி, யாழ்ப்பாணப் பட்டணத்திற்கு நாங்கள் நால்வரின் பயணம் அமைகிறது. எனக்கும் அக்காவுக்கும் திறம் உடுப்பு எடுக்கிறார் அம்மா. துணி மணிகள் எடுக்கிறார். திரைப்படம் பார்க்கிறோம்.
வீட்டுக்கு வந்து பெட்டகத்திற்குள் வாங்கிய உடுப்பைவைக்கிறார் அம்மா. வாங்கிய துணி மணிகளை டெயிலரிடம் கொண்டு போய் கொடுபடுகின்றது. அவர் இழுத்தடித்து தீபாவளிக்கு முதல் நாள் இரவிலேயேதைத்த உடுப்பைத் தருகின்றார். தீபாவளி வரும் நாள்வரை எனக்கு எடுத்த உடுப்பில் புது வாசனையைநுகர்ந்தபடி இருக்கிறேன் நான்.
தீபாவளியன்று விடிய எழுந்து அந்த மழைக் குளிருக்குள் ஒரு தோயல். புது உடுப்பு. கொலரில் மஞ்சள். காலையில் எண்ணெயில் பொரித்த குண்டுத் தோசை. தாளித்த சம்பல். மதியம் இறைச்சிக் கறி. மத்தியானத்திற்குப் பிறகு அடுத்த புது உடுப்பு. அன்றைய நாள் போல என்றும் இனித்த ஒரு நாளை நான் உணர்ந்ததில்லை.
கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்று எம்முள் பல சாத்தான்கள் இறங்கிவிட்டனவா? இப்பொழுது ஏன் அப்படி இனித்த நாள் எமக்கு வருவதில்லை? தத்துவங்கள் எமக்குள் இறங்குகின்றனவா? தத்துவங்கள் எமக்குள் இறங்குகின்றன, ஆனால் அவை செமித்துக் கொடுப்பதில்லை. வாந்தியாக வெளித்தள்ளுகிறது, அதை வாந்தியாக உணர்கின்றோம் இல்லை நாம். வெளித்தள்ளிய வாந்தியை பிறர் மேல் விசிறுகிறோம். அவற்றுக்கும் ஒரு பெயர் உண்டு `கொள்கை குன்றார் இலட்சியவாதி’.
கார்ல் மார்க்ஸ் வகுத்த மார்க்சீய தத்துவத்தை லெனின் தனது நாட்டுக்கு உகந்ததாக மாற்றினார் என்றும், மாசேதுங் தனது நாட்டுக்கு உகந்ததாக மாற்றினார் என்றும் நாங்கள் மெய் சிலிர்க்கின்றோம். ஆனால், எமதுநாட்டுக்கு உகந்த விதமாக நாம் அதனை பயன்படுத்தவில்லை. எமது பண்பாடு, நாகரீகம் என்று எதனையும் புரிகின்றோம் இல்லை.
`பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் முதலில் பார்ப்பனனை அடி’ என்று பெரியார் சொன்னதை எவ்வித கேள்விகளுமில்லாமல் சொல்கிறோம். இது ஓர் இனத்தின் மீது தீ எறிந்த வார்த்தைகள் அல்லவா? ஏன் எவரும் இதனையோசிக்கவில்லை. அந்த வாக்கியம் நமது ஈழத்து தமிழ்ப்பிராமணர்களுக்கு பொருந்துமா? மற்றும் பார்ப்பனியத்தையும், பார்ப்பனரையும் பிரித்து அறிய தவறிவிடுகின்றோம்.
`எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றவர் பெயர் வள்ளுவர். `யார் என்ன சொன்னாலும், ஏன், எதற்கு, எப்படி என்று கேள்’ அது சோர்க்கிரடிஸ். `மதம் ஒரு அவின்’ என்றார் மார்க்ஸ். அதற்கு தத்துவங்களும் எழுதி வைத்தார். மக்களை ஒடுக்குவதற்கு மதத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர் ஆதிக்க சக்திகள். அது தான் மதம் மீதான மார்க்சீயத்தின் கசப்பான விமர்சனம். மதம்தரத்தக்க செளுமையான பண்பாட்டை மார்க்சீயம் ஒரு போதும் மறுக்கவில்லை.
மீண்டும் சொல்கிறேன், எல்லோரும் கொண்டாடுவோம். மத நீக்கம் செய்யப்பட்டு, நமது பண்பாடுகளை கொண்டாடுவோம். இல்லாதார் இக்கொண்டாட்டங்களின் ஊடு தான் உயிர்த்து வாழ்கின்றனர். அவர்களது மகிழ்வைநமது வரட்டுத் தனமான கோட்பாடுகளைக் கொண்டுஏன் மறுப்பான்? எமது பகுத்தறிவின் துணை கொண்டுநீக்க வேண்டியவற்றை நீக்கி, எல்லோரும் கொண்டாடுவோம்.
எல்லாவற்றையும் கொண்டாடுவோம்.