‘அ’ எழுதுதல்

1938

தமிழ்த் தேசியம் என்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதே இம்மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் வழங்கும் முதலாவது வணக்கம் என நம்புகின்றேன். மாவீரர்கள் யாபேரும் தமிழ்த்தேசியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் போராளிகளாகி தம்மை ஆகுதியாக வழங்கி மாவீரர்கள் ஆனார்கள் என் பது எனது கருத்து அல்ல. தமிழ்த் தேசியத்தின் புரிதலுடன் போர்க்களத்தில் அவர்கள் புகுந்திருப்பார் எனில் அதன் பரிநாணம் வேறு. ஏனென்றால் தமிழ் தேசியத்தை இலட்சிய நெறியிலிருந்து வழுவாது, கொள்கை பிடிப்பிலிருந்து விலகாது, உறுதியுடனும், ஓர்மத்துடனும் முன்னெடுத்துச் செல்லும் தலைமையின் கீழ் போராளிகள் அணி திரண்டனர். இறுதி மூச்சுவிடும் தருணமும் ‘அண்ணன் பெயர்’ சொல்லி அவர்கள் மாவீரர் ஆயினர்.அதுவே ஒரு விதத்தில் தமிழ்த் தேசியம் குறித்து அவர்களது உறுதியான புரிதலோ என்னவோ?

சென்ற புதன்கிழமை (22.10.2012) விஜயதசமி அன்று எனது பேரனின் (அவனது பெயர் ஈழவன்) ஏடு தொடக்கும் காரியம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். இலங்கையில் நான் ஆசிரியப் பணிபுரிந்தேன், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பாடம் கற்பித்தேன், என்பதனால்தான் ஏடு தொடக்கும் காரியத்திற்கு என்னை அழைக்கிறார்கள் என்று நம்பினேன்.

அக்கடும் குளிரிலும் தோய்ந்து, தோய்த்துலர்ந்த வேட்டி அணிந்து, ஆர்வமாக அக்கோவிலுக்குச் சென்றேன். என் மடியில் ஈழவன் இருக்கப்போகின்றான், இருந்தவாறு நெல்மணிகளின் இடையே ‘அ’ எழுதப்போகின்றான் என்ற மகிழ்வு என் வாகனத்தின் வேகத்தைக் கூட்டியது. ஆனால் அப்படி எதுவும் நடக்க அங்கு இருந்த பிள்ளையார் விட வில்லை. ஈழவன், குருக்களின் மடியிலிருந்து அரிசிமணிகளிடையே `அ’ எழுதிக் கொண்டிருந்தான். அங்கு எனக்கு விதிக்கப்பட்ட பணி, ஈழவன் `அ’ எழுதுவதை படம் எடுப்பதே. நான் பத்து, பதினைந்து படங்களாக பல்வேறு கோணங்களில் சுட்டுத் தள்ளினேன். என்னிடம் ஒரு கவலை தொற்றிக் கொண்டது. ‘அ’ எழுதப் பழக்கிய அந்தக் குருக்களிடம் கேட்டிருக்க வேண்டும்  ‘தமிழில்’ எத்தனை எழுத்துக்கள் உள்ளன? என்று. 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளன என்பது நிச்சயமாகக் குருக்களுக்குத் தெரியாது. ‘அ’ உட்பட்ட முதலெழுத்துக்கள் முப்பது என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை. ஆனால், அவர் ஏடு தொடக்குகிறார். ஏடு தொடக்க அது தெரிந்திருக்க வேண்டுமா? என்று யாரும் கேட்டால் தெரிந்திருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்வேன்.”அதனை அதற்குரியவர் தான் செய்ய வேண்டும்” என்கின்றார் வள்ளுவர். நானும் அதனை வழி மொழிகின்றேன்.

குருக்களாக இருந்தமையால் தான் அவர் ஏடு தொடக்குகிறார். குருக்களுக்கான அவரது தகுதி என்ன? பிராமண சமூகத்தில் அவர் பிறந்தமையே அவரது தகுதி. ஒன்றுமே புரியாத முட்டாள் சனங்களுக்காக கோயிலில் அவர் பூசை செய்வதற்கான தகுதி பற்றி, ஒன்றும் பேச விரும்ப வில்லை. ஆனால் ஏடு தொடக்குதல் பற்றியும் பிற தேசிய செயற்பாடுகள் பற்றியும் எமது தமிழ் மக்களுடன் நான் பேச சிலவாவது உண்டு. மலையாள நாட்டில் ஏடு தொடக்கும் நாளன்று எளுத்தாளர்களின் வீட்டின் முன்னாள் நீண்ட வரிசை காத்து நிற்கும். எழுத்தை ஆழ்பவர் தனது பிள்ளைகளுக்கு முதலெழுத்தை எழுதப் பழக்க வேண்டும் என்பது மலையாளிகளது பேராசை அப்பொழுது தான் தனது பிள்ளைகளும், எழுத்தை ஆழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. நாங்கள் கூட இலங்கையில் சிறுவர்களாக இருந்த சமயம், ஏடு தொடக்குவதற்காகப் பள்ளிக்கூடம்தான் போவதுண்டு. அங்கும் முதலாம் வகுப்பு ஆசிரியர்தான் ஏடு தொடக்கினார். அது சாலப்பொருத்தமான செயல். ஆனால் இங்குள்ள கோவில்நிறுவனங்கள் யாவற்றையும் வியாபாரமாக்கியது போல, ஏடு தொடக்குதல் உட்பட்ட கல்வியையும் வியாபாரமாக்கி விட்டன. அது மாத்திரமல்ல, அந்நிய கலாசாரத்தையும் எம்மீது திணிக்கின்றனர். யாவற்றையும் கேட்டுக் கேள்வியில்லாமல் ஏற்கின்றோம். அஞ்சுகின்றேன் அப்பனே, அல்லலுலோயா, யெகோபா மாதிரியான நாசகாரசக்தி தான் இந்து மத கலாசாரமும். இவை தமிழ்சமூகத்திடையே புற்று நோய் போல பரவுகின்றன. அல்லலுலோயா, யெகோபா போன்ற அமைப்புக்கள் செய்யும் நாச வேலைகளை நம் சமூகம் நேரிடையாக அறியும். ஆனால், இத்தகைய சக்திகள் செய்யும் நாசகாரியங்கள், நம் கலாசாரத்தின் உயிரினுள் ஊடுருவி மெல்ல மெல்ல அழிக்கும். இவற்றை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். முற்றிய பின் எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது.

அவைநிற்க, இவற்றுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் இடையில் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம், நமது தமிழ்த் தேசியம் என்ற உணர்வு, ஆயுதப் போரின் தோல்வியுடனேயோ, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடனேயோ, அற்றுப் போய்விட்டது என்று யாரும் எண்ணினால், அது மகா தவறு. உண்மையில் அவை உள்ளே கனன்று கொண்டிருக்கின்றது. வெளியே பூத்திருக்கின்றது சாம்பல், கிளறக்கிளற தணல் பிறக்கும், பிறக்க வேண்டும்.தமிழ்த் தேசிய உணர்வை அப்படியே அணைத்துவிட, அழித்து விட, அழித்து சாம்பலாக்க முடியாது, உள்ளே தணர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உணர்வும், பயமற்ற வாழ்வு வாழவும், சிந்தனையில் சுதந்திரம் பெறவும், ‘நாமிருக்கும் நாடு, நமது’ என்று அறியவும், அந்த தமிழ்த் தேசியத் தணல் நமக்கு அவசியம் வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வு என்பது ஆயுதப் போருக்கு ஆதரவு தெரிவிப்பதுடனோ மகிந்தா வருகின்றபோது திரும்பிப் போ என்று கத்துவதுடனோ மாவீரர் நாளுக்கு செல்வதனுடனோ முடிந்து விடுவதில்லை. நம் பாரம்பரியத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். நமது பண்பாட்டை தொடர வேண்டும். `நாடும் மொழியும், நமது இரு கண்கள்’ என்ற உணர்வை நமது பிள்ளைகளுக்குப் பகிர வேண்டும். மேலாக நமது அடையாளங்களை, பண் பாட்டுக் கூறுகளை பிள்ளைகள் பெற்று அதனை அவர்களே முன்னெடுத்துச் செல்லும் வழிவகை செய்ய வேண்டும். கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவிலுக்குப் போவதும் எங்கள் பண்பாடுகளில் ஒன்று தான். ஆனால், இங்கு, இப்பொழுது கோவில்கள், வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டன. மக்களிடம் கடவுள் மீதான அச்சத்தை உண்டாக்கி, அதனுÖடாக பணம் பறிக்கின்றன கோவில் நிறுவனங்கள். அவற்றில் ஒன்று தான் ஏடு தொடக்கும் வியாபாரம். எங்கள் ஊரில் ஏடு தொடக்க கோவிலுக்கா சென்றோம். பாடசாலைக்குச் சென்றோம்? அல்லது படித்த தர்மம் மிகுந்த மனிதரை வீட்டுக்கு அழைத்து நம் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினோம். அதனை இங்கும்செய்யலாமே.

விஜயதசமி நாளில் ஒரு சின்னக் கவலை, என்னில் தொற்றிக் கொண்டதை உங்களுடன் பகிர்ந்தேன்.