ஐநா அறிக்கை ஏட்டுச் சுரைக்காய்

1557

அலசுவாரம் – 92

ஐ நா நிபுணர்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.  அந்த அறிக்கையின் நிறைவேற்றுச் சாராம்சம் என்னுமொன்றை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாகக்கூறி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஒரு அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளார்.  அந்த அறிக்கையில் காணப்படும் சில தமிழ்ச் சொற்கள் இதுவரை அறிந்திராதவையாகவுள்ளன.  இது எனக்கு மட்டும்தானா பலருக்குமா என்று தெரியாது. எங்களைப் போன்ற சாமானியர்களுக்கும் சற்று விளங்கும்படியாக, கடினமான சில சொற்களை நீக்கிவிட்டு அவ்வறிக்கையைப் பிரசுரித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.  இங்கே முக்கியமான விடயமென்னவென்றால் ஐ நா வின் அறிக்கையின் உள்ளடக்கம் என்ன என்பதில் யாருக்கும் தெளிவில்லை.  எல்லோரும் அறிக்கையின் சாராம்சம் எதுவென்பதைக் கூறாமல் சும்மா வெறுமனே தத்தம்பாட்டில் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. ஆக தெளிவில்லாதவோர் அறிக்கைக்குப் பலரும் அறிக்கை மேல் அறிக்கையாக பதில் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  யோசித்தால் கொஞ்சம் தலைசுற்றுவதுபோல இருக்கிறது.  ஐநா வின் அறிக்கையிலிருந்து கசிந்த சில விடயங்களுக்குத்தான் இத்தனை அறிக்கைகளும் ஆர்ப்பரிப்புகளும். சிலர் அந்த அறிக்கை கடைசிவரை வெளிவிடப்படாமலேயே போகக்கூடும் என்று வேறு கூறுகிறார்கள்.
தற்செயலாக  வெளிடப்படாமலேயே போய்விட்டால் முந்திக்கொண்டு அறிக்கைகளைவிட்டதில் ஒரு பிரயோசனமுமில்லை. வீணாக அரசாங்கத்தை இன்னொருபடி பகைத்துக்கொண்டதுதான் மிச்சமாகலாம்.

தற்போது ஐநாவின் அறிக்கை சிறீலங்காவின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிரிவின் இயக்குனர்  அறிக்கையொன்றை விட்டிருக்கிறார்.  சிறீலங்கா அரசாங்கம் தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவுச் சக்திகளின் முழு ஆதரவுடன் ஐநாவின் அறிக்கைக்கு முகம் கொடுத்து, பாதுகாப்புச் சபையின் விவாதத்திற்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க விடாமல் செய்துவிட்டால், ஐநா அறிக்கையை ஆதரித்து தங்கள்பாட்டில் அறிகைவிட்டவர்களெல்லோரும் மூக்குடைபடவேண்டி யேற்படலாம்.  ஆதலால் இத்தகைய விடயங்களில் கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதுதூன் சரியான அணுகு முறை போலத் தெரிகிறது.

“ஆணாய் பெண்ணாய்க் காணவில்லையாம் ராமநாதனாம் பெயர்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிடு வார்கள். அதுபோலத்தான் இந்த விவகாரமும் தெளிவற்றதாக இருக்கிறது.

சிங்கள பேரினவாத சக்திகளின் ஒட்டு மொத்த ஆதரவும், தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கி அவகளுக்கு இலங்கைத் தீவில் எத்தகைய பாத்தியதையுமில்லாமல் செய்துவிட வேண்டு மென்பதிலேயே இருந்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இனி அவர்களுக்கிருக்கும் ஒரே குறிக்கோள், தற்போது இலங்கையரசாங்கத்திற்கெதிராகத் திரண்டிருக்கும் உலக அபிப்பிராயத்திற்கெதிராகப் போராடுவதுதான்.  இவ்வளவு பெரிய சாதனையை; சாதித்துவிட்ட அவர்களுக்கு தங்களுக்கெதிரான உலக அபிப்பிராயத்தை மாற்றியமைப்பது பெரியவிடயமில்லை.  பேரினவாதச் சிங்களம் ஒன்று திரண்டு ஐநா அறிக்கைக்கெதிராகப் போராடி ஒருவழி பண்ணாமல் விடப்போவதில்லை.  இலங்கையின் எண்பது சதவீதமான சிங்களவர்களின் நூற்றுக்கு நூறுவீதமான ஆதரவோடு உருவாகக்கூடிய பேரெழுச்சிக்கு முன்னால் அடிபணிந்து ஐநா தன் அறிக்கையை வாபஸ் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இந்த விடயத்தில் எதிர்க்கட்சி, இடதுசாரி வலதுசாரி என்ற பேதத்திற்கே சிங்களவர் மத்தியில் இடமில்லை.

“அப்பே ஆண்டுவ” என்ற ஒரே தாரக மந்திரத்தோடு இலங்கையைத் தனிச்சிங்கள நாடாக்கப் பாடுபட்டு அதில் முழுவெற்றி பெற்றிருக்கும் பேரினவாதச் சிங்களம், அதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்ட ராஜபக்ச அரசாங்கத்தையும், அந்தப் போராட்டத்தில் தியாகவுணர்வோடு ஈடுபட்ட இராணுவத்தினரையும், அதிகாரிகளையும்; குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிராது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ளாமலிருப்பதுதான் பெரிய வேடிக்கையாக இருக்கிறது.

தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமானவோர் தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கக்கூடிய மிகவும் வாய்ப்பான புறச்சூழல் போராட்டக் காலத்திலேயே இருந்தது. அதை உலகம் கோட்டை விட்டுவிட்டது.  இனி வரப்போகும் காலங்கள் சிங்கள அரசாங்கத்திற்கு இராஜதந்திர நெருக்குவாரங்களை மட்டுமே கொடுக்கக்கூடியவை.  சீனா ரஸ்யா போன்ற நாடுகளின் உதவியோடும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதரவோடும்,  போர்க்காலத்தில் வன்னியில் நடந்த மனிதவுரிமை மீறல்கள் சம்பந்தமாக மேற்குலகு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைச் சமாளித்துவிடுவது இலங்கைக்கு ஒன்றும் பெரிய விடயம் போலத் தெரியவில்லை.

“ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள்” அதுபோலத்தான் இந்த விடயத்தின் சூடும் இந்த அறிக்கையோடு ஆறிப் போவதற்கான வாய்ப்பிருக்கிறது.  ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, லிபியா போன்ற நாடுகளைப் போலல்லாது இலங்கையின் நிலைமை வேறானது.  மேற்குலகைப் பயப்படுத்தும் அல்கைடா போன்ற இயக்கங்களின் சவால் களை முறியடிப்பதும், எண்ணெய் வளமுள்ள நாடுகளைத் தமது செல்வாக்கிற்குள் கொண்டுவருவதும் மேற்சொன்ன நாடுகளில் மேற்குலகின் நோக்கங்களாயுள்ளன.  ஆனால் இலங்கை போன்ற ஒரு சிறிய தேசத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக எந்த முக்கியத்துவமும் இல்லாததால், எப்போதோ முடிந்துபோன மனிதவுரிமை மீறல் சம்பவங்களைச் சாக்காக வைத்து மேற்குலகோ அல்லது அதன் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவோ உள்நுழைந்து எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை.  அப்படியானவோர் நிகழ்ச்சித்திட்டத்தை சீனாவோ, ரஸ்யாவோ, இந்தியாவோ ஆதரிக்கப் போவதுமில்லை.

இத்தகைய யதார்த்தப் புறச்சூழல்களைச் சரிவர எடைபோட்டுக்கொண்டு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற பொறுப்புமிக்க மக்கள் இயக்கங்கள் காய்களை நகர்த்துவார்களாயின் இன்று நிர்க்கதியாகிப் போய் விட்ட ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் ஏதாவது நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கமுடியும்.  அதை விடுத்து எதிர்காலத்தில் என்னபயன் கிடைக்குமென்பதில் போதிய தெளிவில்லாமல், ஐநா போன்ற நிறுவனங் களின் வெற்று அறிக்கைகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து, நூற்றுக்கு நூறு மக்கள் ஆதர வோடும் அரச ஆதரவோடும் போராடத் தயாராயிருக்கும் தீவின் எண்பதுவீத சிங்களத்தின் எரிச்சலைக் கிளிறி விடுவதில் அரசியல் ரீதியாக எவ்வித பிரயோசனமும் வரப்போவதில்லை.

தமிழனுக்குச் செய்யப்பட்ட அநீதிக்குக் காலாயிருந்த பேரினவாதச் சிங்களத்திற்கு உலக அரங்கில் அவப் பெயரைத் தேடிக்கொடுக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்குமுண்டு.  அதனை இத்தகைய அறிக்கை களால் சாதிக்க முடியுமா?  தெரியவில்லை.

“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல மக்கள் அங்கே தொகைதொகைக் கொல்லப்பட்டபோது பிரித்தானிய ஊடகங்கள்  மக்களின் அவலநிலையைப் பெரிதாக எடுத்துச் சொல்லவில்லை. தற்போது சனல்4 போன்ற பிரித்தானிய ரிவிக்களில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்களைக் காட்டுகிறார்கள். முகாம்களில் வாடும் மக்களின் அவலநிலை  காட்டப்படுகின்றது. லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான போராட்டத்திற்கு அக்காலத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.  வாகனப் போக்குவரத்தையே பாதிக்குமளவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு நடத்திய ஊர்வலங்களையெல்லாம் ஏதோ காரணத்திற்காக ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தன.  போதாததற்கு தமிழ் இளைஞன் செய்த உண்ணாவிரதப் போராட்டம்கூடக் கொச்சைப்படுத்தப்பட்டது.

இப்போது எல்லாம் முடிந்த பிறகு என்றுமில்லாத அக்கறையுடன் சில ஊடகங்கள் இவ்விடயத்தில் கரிசனை காட்டுகின்றன.  “தற்போதுதான் அவர்களுக்கு உண்மைகள் விளங்கியிருக்கின்றன.” என்று இதற்கு நாம் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாது.  அது சரியான கணிப்பீடாகாது.

தெற்காசியப் பிராந்தியத்தில் நடைபெறும் இத்தகைய மனித உரிமை மீறல்களை கண்டும் காணாததுபோல நடக்கவிட்டு, சட்டிலைட் மூலமோ, விலைக்கு வாங்கப்பட்ட ஏஜண்டுகள் மூலமோ அவற்றைப் படம்பிடித்து வைத்துக்கொண்டு, தங்கள் ராஜதந்திர தேவைகளுக்காக அச்சான்றுகளைப் பாவித்து சம்பந்தப்பட்ட நாடுகளை மிரட்டுவதற்காகவே இச்செயல் முறைகள் நடைபெறுகின்றன.  மற்றும்படி எந்தவொரு அக்கறையும் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்மீது யாருக்குமில்லை.  இருந்திருந்தால் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.  மொத்தத்தில் வெள்ளை மாளிகையுட்பட்ட எல்லா மேற்குலக அதிகார வர்க்கத்தினதும் உள்நோக்கம் யுத்தத்தினால் பாதிக்கப்படும் மக்களைப் பலிக்கடாக்களாக்கி அந்த கொடுமைகளைச் சான்றாதாரங்களாக வைத்துக்கொண்டு அவ்வாதாரங்களைத் தங்களுக்கு வேண்டிய நேரத்தில் மனிதவுரிமை மீறல் என்ற பெயரில் உரியவிதத்தில் பயன்படுத்துவதுதான்.

அரசியலில் , ராஜதந்திரத்தில் இத்தகைய கயமைத்தனங்கள் நிறையவுள்ளன.  அதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வன்னியில் நடந்த கொடுமைகளைப் படங்களாக சட்டிலைட்டில் எடுத்து வைத்துள்ளன என்று நாம் திருப்தியடைவதில் எந்த அர்த்தமுமில்லை.  தங்களது உள்நோக்கங்களுக்காகவே நாம் இனப்படுகொலை செய்யப்படுவதை அவர்கள் படம்பிடித்தார்கள்.  அதைப் போதிய சாட்சியங்களாக வைத்துப் பின்னர் மிரட்டுவதற்காகவே அவர்கள் அப்போது அந்த அனியாயங்களுக்கெதிராக எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தர்ர்கள். அதனை முடிவு வரை தொடரவிட்டார்கள். இப்போது ஐநாவின் ஊடாக சான்றாதாரங்களுடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளெல்லாம் இலங்கையில் எமக்கு ஓர் அரசியில் தீர்வைப் பெற்றுத்தருவதற்கா? அதனைப் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். அதுவரை ஆர்ப்பரிக்காமல் இருப்பதே நல்லது.

தொடருவம்…