ஐ.நா விசாரணைக்குழுவுக்கு சாட்சியமளிப்போருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா ? – விளக்குகிறார் ஜனனி ஜனநாயகம்
இலங்கைத்தீவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தனது பணியினை ஆரம்பித்துள்ள நிலையில், சாட்சியம் அளிக்க முன்வருபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வது பற்றி அறிந்துகொள்வதற்காக இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்பின் (Tamils Against Genocide) பணிப்பாளர் செல்வி ஜனனி ஜனநாயகம் அவர்களை ஒருபேப்பர் தொடர்பு கொண்டது. ஜனனியுடனான எமது உரையாடலின் ஒருபகுதியை இங்கு தருகிறோம்.
முதலில், உங்களது அமைப்பு எத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதனைக் கூறுங்கள்…
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்,மனிதவுரிமை மீறல்கள் போன்றவற்றிலிருந்து தப்பியவர்கள் மற்றும் இக்குற்றங்களின் சாட்சியாக இருப்பவர்களுக்கு உதவுவதுஎன்பதனை எமது அமைப்பின் ஆணையாக ஏற்று நாம் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகிறோம.
ஐக்கிய இராட்சியத்தைப் பொறுத்தவரையில், தஞ்சம்கோருவது தொடர்பான சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு மூன்றாவது தரப்பாகத் தலையீடு செய்துவருகிறோம். இதன்மூலம் முக்கியமானதும், முன்மாதிரியை ஏற்படுத்தக் கூடியதுமான வழக்குகளில் தலையீடு செய்திருக்கிறோம். சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து தப்பியவர்கள், போர்குற்றங்களின் சாட்சியாக உள்ளவர்களுக்கு அவர்கள் தனிநபர்கள் என்ற அடிப்படையில் உதவுவது எமது அமைப்பின் பணிகளில் ஒன்று. இருப்பினும் இத்தகைய நிலையில் உள்ள எல்லோருக்கும் உதவுவதற்கு எமது நிதிவளம் போதுமானதாகவில்லை.
ஐக்கிய அமெரிக்காவில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குப் போன்று மேலும் சிலவழக்குகளை நாம் தாக்கல் செய்திருக்கிறோம்.
சுவிற்சலாந்தில், ஐ.நா. சபையில் ஈழத் தமிழ்மக்களுக்காக வாதிடல் (advocacy) பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இப்பொழுது ஐ.நா. மனிதவுரிமைச்சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் அந்த விசாரணைக்குரிய சாட்சியங்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எமது அமைப்பானது வெவ்வேறு நாடுகளில் இயங்கும் போது அந்தந்த நாடுகளில்உள்ள சட்ட திட்டத்திற்கு அமைய உள்ளுர்அமைப்புகளாக பதிவு செய்யப்படுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் விசாரணை விடயத்தில் எவ்வாறு செயற்படப்போகிறீர்கள்?
விசாரணை இப்போது ஆரம்பிக்கப்ட்டுள்ளது. சாட்சியங்களை இவ்வருடம் ஒக்ரோபர் முப்பதாம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு இவ்விசாரணைக்குழு அறிவித்துள்ளது. நாம் எமக்குக்குக் கிடைக்கும் சாட்சியங்களைச் சேகரித்து அவற்றை தொகுத்து விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.
எமது முன்னைய ஆய்வறிக்கைகள் பிரித்தானிய நீதி மன்றங்களிலும், ஜநா விலும்நம்பகத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதனால், நாம் சமர்ப்பிப்பவை கவனத்தில்எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். காலஅவகாசம் குறைவாக உள்ளதால், புதிதாகசாட்சியம் வழங்க முன்வருபவர்களைச் சந்திப்பதற்கு இப்போதிருந்தே தயாராகவுள்ளோம்.
ஐநா மனிதவுரிமைச் சபையின் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறீர்கள்?
சிறிலங்கா அரசபடைகளின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாகவோ அல்லது அரச தரப்பிற்கு எதிராகவோ சாட்சியமளிப்பது மிகவும்ஆபத்தானது என்பது பன்னாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சாட்சிகளுக்கு நெருக்குவாரம் கொடுக்கவேண்டாம் என சிறிலங்காஅரசாங்கத்திடம் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், இவற்றையும் மீறி நாட்டிலுள்ள சாட்சிகள் துன்புறுத்தப்படுவது தான் நடைமுறை என்பதனை நாம் அறிவோம் வெளிநாட்டிலுள்ள சாட்சிகளைப் பாதுகாப்பதற்கு குறித்தளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலாவதாக, அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலாயத்தின் விதிமுறைகளின்படி, இவ்வாறான சாட்சிகள் சிறிலங்காவில் வாழ்வார்களாயின் பாதிப்புறுவார்கள் என்பதனால் அவர்களுக்கு அகதித் தஞ்சம் வழங்கப்பட வேண்டும்எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரையறைகளை ஐநாவின் அங்கத்துவ நாடுகள் வெவ்வேறு விதத்தில் வியாக்கியானம் கொடுத்து அதற்கேற்ப நடந்துகொள்கின்றன. ஆகவே சர்வதேச்சட்டம் எல்லாநாடுகளிலும் ஒரே விதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது எனக்கூறமுடியாது. கடந்த இரண்டு வருடமாக எமதுஅமைப்பு மேற்படி விதிமுறைகளை பிரித்தானிய சட்டங்களில் இணைத்துக் கொள்ளவதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. இவ்விடயங்களில் ஐக்கிய இராட்சியத்தின் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பினை ஐரோப்பாவில் அகதிகளுக்காக பணிபுரியும் அமைப்புகள் அவதானித்து வருகின்றன. சிலஐரோப்பிய நாடுகள் வழக்குகளின் அடிப்படையில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு தாமாகவே முன்வந்துள்ளன.
சாட்சியமளிப்பவர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஐக்கிய இராட்சியத்தில் பின்பற்றப்படும் நடைமுறை பற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
ஒரு சர்வதேச விசாரணையில் அல்லதுஎமது அமைப்புப் போன்ற அரசுசாரா நிறுவனத்திடம் சித்திரவதை, போர்க்குற்றம், மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக சாட்சியமளிப்பவர்களை பாதுகாப்பதற்கு பல வழிகளில் அணுக முடியும்.
பிரித்தானிய உள்நாட்டு பணியகம் (home office) இத்தகையவர்களின் தஞ்சக்கோரிக்கையை பரிசீலிக்கும்போது அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் ஆத்திரம் கொண்டிருக்கும் என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும். பல வழக்குகளில் இவ்வாறு நடைபெற்றதை எங்களால் அவதானிக்க முடிந்தது. நிச்சயமாக எமது அமைப்புக்கு சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் அவர்களுக்குரிய பாதுகாப்பு விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு முக்கியமானது என்னவெனில், சாட்சியமளிப்பவர்கள் நம்பகத்தன்மை உடையவர்களாகவும் தங்களுக்கும், பாதிக்ப்பட்டவர்களுக்கும் குரல் கொடுப்பதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடையதிருப்திக்காகவோ அல்லது தங்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது அட்டுளியங்கள் பற்றி பேசுவதற்கோ உரித்துடையவர்கள் என்பதனை பிரித்தானியஅரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே சாட்சியமளிப்பவர்கள் விடயத்தில் பிரித்தானிய அரசு புதிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும் எனபதனை வலியுறுத்தும் முயற்சிகளில் நாங்கள் இறங்கியிருந்தோம்.
2013ம் ஆண்டில் தஞ்சக் கோரிக்கை விடயத்தில் வழிகாட்டியாக அமைந்திருந்த வழக்கு ஒன்றில் எமது அமைப்பு தொடர்புபட்டிருந்தது. அந்த வழக்கில் சாட்சிகளுக்கு மேலதிகமான பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் எனநாம் வாதிட்டோம். இவ் வழக்கில் கையாளப்பட்ட வழிமுறைகள் அதனைத் தொடர்ந்துவரும் வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டும் என நீதி மன்றம் தீர்மானித்தது.
2013 ம் ஆண்டு சிறிலங்காவிலிருந்து வந்தவர்களின் தஞ்சம் கோரும் வழக்குகளுக்கு வழிகாட்டியாக அமைந்த ஒரு வழக்கில், சிறிலங்காஅரசாங்கத்தின் LLRCக்கு சாட்சியமளித்தவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தண்டிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தீர்மானிக்கப்பட்டது. ஆகவே இவ்வாணைக்குழுவிற்கு சாட்சியமளித்தவர்கள் தாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தண்டிக்கப்படலாம் எனக் கருதுமிடத்து அவர்களுக்கு பிரித்தானியாவில் தஞ்சம்பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்தளவில் காணப்படுகிறது.
இவ்விடயத்தில் உள்ள தர்க்கநியாயம் என்னவெனில், ஒருவர் போர்க்குற்றம், மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக LLRCக்கு சாட்சியமளித்தார் என்பதனை சிறிலங்கா அரசாங்கம்அறிந்து வைத்திருக்கிறது என நிருபணமானால்அவர்கள் அபாயத்தில் உள்ளனர் என்பதனை பிரித்தானிய உள்நாட்டு பணியகமும், நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும். ஆனால், பன்னாட்டு அரசுசாரா நிறுவனங்கள், சானல் 4 போன்ற ஊடகங்களுக்கு சாட்சியமளித்தவர்கள், மற்றும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐ.நா. விசாரணைக்கு சாட்சியமளிப்பவர்கள் விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை கையாளப்படும் என்பதில் முன்னையதைகாட்டிலும் தெளிவற்ற தன்மையே தென்படுகிறது. இவ்வாறான சாட்சிகள் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டே தீர்ப்பு வழங்கப்படுகிறது. எமதுஅனுபவத்தின் அடிப்படையில் கூறுவதானால்,பொதுவில் எல்லாவிதமான சாட்சிகளும் சிறிலங்காவில் அபாயத்தினை எதிர்கொள்வதாகவே கீழ்நிலை நீதி மன்றங்களின் நீதிபதிகள் கருதுகிறார்கள் எனக் கூறமுடியும்.
ஒரு உதாரணத்தினைக் கூறுவதானால், எமது அமைப்புக்கு போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிப்படங்களையும், சாட்சியத்தையும் வழங்கிய ஒருவருக்கும் அகதிதஞ்சம் வழங்குவதற்கு உள்நாட்டு பணியகம் மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் இவ்வழக்கு எடுக்கப்பட்டபோது, எமது அமைப்பிற்கு சாட்சி வழங்குவதும் LLRCக்கு சாட்சி வழங்குவது போன்றது என்பதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இவ்விதமாக எமக்கு சாட்சி வழங்கியவரை எமது அமைப்பினால் பாதுகாக்க முடிந்த்தது.
உரையாடல் தொடரும்..
[infobox style=’regular’ static=’1′]இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்புடன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்.[/infobox]