ஐ.நா விசாரணைக்குழுவுக்கு சாட்சியமளிப்போருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா ? – 02

684

ஐ.நா விசாரணைக்குழுவுக்கு சாட்சியமளிப்போருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா ? – விளக்குகிறார் ஜனனி ஜனநாயகம்

இலங்கைத்தீவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு தனது பணியினை ஆரம்பித்துள்ள நிலையில், சாட்சியம் அளிக்கமுன்வருபவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக மேலதிகவிடயங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்பின் (Tamils Against Genocide) பணிப்பாளர் செல்வி ஜனனி ஜனநாயகம் அவர்களை ஓருபேப்பர் தொடர்பு கொண்டு உரையாடியது. கடந்த இதழில் வெளியான இவ்வுரையாடலின் இரண்டாவது பகுதியை இங்கு தருகிறோம்.

கடந்த ஒரு பேப்பரில் (இதழ் 224) வெளியான முதலாவது பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவிற்கு (LLRC) முன் சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் பிரித்தானிய உள்நாட்டு பணியகமும் (home office), நீதி மன்றங்களும் எவ்வாறான அணுகுமுறையை கையாளுகின்றன என்பது பற்றி ஜனனி அவர்கள் வழங்கிய பதிலினை பதிவு செய்தமையில் கருத்துபிழை ஏற்பட்டிருந்தது. அத்தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதுடன் இவ்விடயத்தை இப்பகுதியில் தெளிவுபடுத்துகிறோம். இத்தவறினை சுட்டிக்காட்டி மேலதிக விளக்கமளித்தமைக்காக ஜனனி அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருவர் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆணைக்குழுவிற்கு முன் சாட்சியமளித்தார் என்பதனை சிறிலங்கா அரசாங்கம் அறிந்து வைத்திருக்கிறது என்பது நிரூபணமானால் அவர்கள் நாடுதிரும்புவதில் உள்ள அபாயத்தினை பிரித்தானிய உள்ளக திணைக்களமும், நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும் என கடந்த இதழில் குறிப்பிடப்பட்டிருந்து. தம்மால்நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு முன் சாட்சியமளித்தவர்கள் பற்றிய விபரம் சிறிலங்கா அரசாங்கத்திடம் உள்ளது என்பதனால் சிறிலங்கா அரசாங்கதம் அறிந்துவைத்திருப்பதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் சாட்சியமளித்தவர்களுக்கு இல்லை. தாம் சாட்சியமளித்ததனை உறுதிப்படுத்தினால் அதுவே போதுமானதாக இருக்கும்.

சிறிலங்கா விசாரணைக்கு சாட்சியமளித்தவர்கள் விடயத்தில் என்ன நடைமுறை கையாளப்படுகிறது என்பது பற்றிக் குறிப்பிட்டீர்கள் ஆனால் இப்போது நடைபெறும் ஐ.நா. விசாரணைக்கு சாட்சியமளிப்பவர்கள் விடயத்தில் குறிப்பிடத்தக்க நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுமா?

ஐ.நா. விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பாக இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற்ற மனிதவுரிமைச்சபையின் கூட்டத்திலேயே முடிவானது. மிக அண்மையிலேயே விசாரணைக்குழு செயற்பட ஆரம்பித்துள்ளது. ஆகவே சாட்சியமளிப்பவர்கள், சாட்சியமளிக்க முன்வருபவர்கள் விடயத்தில் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஜக்கிய இராட்சியம்எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கு வழிக்காட்டியாக இருக்கக்கூடிய வகையிலான வழக்குகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. இது விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது கீழ்மட்ட நீதிமன்றங்களினால் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு வழக்கைப் பொறுத்து தீர்மானிக்கப்படலாம். ஆனால் அண்மைய மாதங்களில் ஐநாவிசாரணைக்கு பாரப்படுத்துவதற்காக இனப்படுகொலைக்கு எதிரான தமிழரமைப்புக்கு (TAG) சாட்சியினை வழங்கும் போது அவர்களை பாதுகாப்பது தொடர்பாக உள்நாட்டுப் பணியகத்திற்கு (home office) அறிவித்து வருகிறோம். சாட்சிகளின் தஞ்சக்கோரிக்கை விடயத்தில் முடிவெடுக்கும் விடயத்தில் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதனை உள்நாட்டுப் பணியகம் அறிந்து வைத்துள்ளது.

இவ்விடயங்களில் உங்களது அமைப்பு (TAG) எவ்விதம் உதவ முடியும்?

கடந்த சில வருடங்களாக, சில தெரிவு செய்யப்பட்ட வழக்குகளில், சித்திரவதை மற்றும் போர்க்குற்றங்களுக்குஉள்ளாகி அதிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு, சட்ட மருத்துவ, உளவியல்பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை எம்முடன் தொண்டு அடிப்படையில் செயற்படும் மருத்துவர்கள் மூலம் பெற்றுக் கொடுத்து வருகிறோம். அல்லது இவ்வறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவியினைச் செய்திருக்கிறோம். சில வழக்குகளில் இதற்கென பிரத்தியேமாக நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை பெற்றுக்கொடுத்து இலங்கை விடயத்தில் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உதவி வருகிறோம். எல்லா வழக்குகளுக்கும் அவ்வழக்குகளுக்கு ஏற்ப அறிக்கைகளை தயாரிப்பதற்கு முடியாவிட்டாலும், நீதிமன்றங்களுக்கு வழங்கக்கூடிய வகையில் பொதுப்படையாக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை எங்களிடருந்து பெற்றுக் கொள்ள முடியும். இவ்வறிக்கைகளை வெளியில்பெற்றுக்கொள்ள முடியாது.

எமது அமைப்புக்கு சாட்சியமளித்தவர்கள் விடயத்தில், அவர்களது வழக்கு விடயத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு இவ்விடயங்கள் கருத்தில் எடுக்கப்படுகிறதா என்பதனை தொடர்ந்து அவதானித்து வருகிறோம்.

உங்களது அமைப்புடன் எவ்வாறு தொடர்புகொள்வது?

எவ்வாறு தொடர்புகொள்வது என்பது பற்றிய விபரங்கள் எமது இணைய தளத்தில் உள்ளது. (www.tamilsagainstgenocide.org) மின்னஞ்சல் வழியாக [email protected] தொடர்புகொள்வது இலகுவானதாகவிருக்கும். ருவிற்றரில் @tagadvocacy. வேறு வழிகளில் தொடர்புகொள்வதற்கான வசதிகளை அடுத்த ஓரிரு மாதங்களில் ஏற்படுத்தவுள்ளோம்.

உரையாடல் தொடரும்..

பகுதி ஒன்றுக்கான இணைப்பு =>