ஐ.நா. விசாரணை அறிக்கையின் தாமதம் வெளிப்படுத்தும் செய்தி

662

கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் 25வது கூட்டத் தொடரில், இலங்கைத்தீவில் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்பற்றி விசாரிக்க மனிதவுரிமைச்சபை ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் எனவும் அக்குழு தனது அறிக்கையை 2015 மார்ச் மாதத்தில் நடைபெறும் 28வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவந்தமை  தெரிந்ததே.  ஆனால், குறித்த காலக்கெடுவிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை  தாமதப்படுத்தி வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் 30வது கூட்டத்தொடரில் வெளியிடுமாறு  ஆலோசனை வழங்கியுள்ளதாக மனிதவுரிமைச்சபையின் தற்போதைய ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசைன் அவர்களால் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஒரே ஒருதடவைதான் இவ்வாறான ஒத்திவைப்பு நடைபெறும் எனவும், சிறிலங்காவில் மாறிவரும் நிலமையினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவிற்கு வந்துள்ளதாக ஷெயிட்  தனது செய்தியில் தெரிவித்திருக்கிறார்.  தாம் மேற்கொண்டுவந்த விசாரணைகளுக்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் மேலும் புதிய தகவல்களை அறிக்கைக்கென பெற்றுக் கொள்ளமுடியும் என  ஷெயிட் தமது முடிவினை நியாயப்படுத்தியிருக்கிறார்.

ஷெயிட் தனது அறிக்கையில் ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் உண்மையான, அதேசமயம் சுயாதீனமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி யிருக்கிறார் என எடுத்துகொண்டு விடயத்தினை அணுகினால் அவரது கருத்தில்  தர்க்கரீதியான நியாயமிருப்பதாகத் தோன்றும்.  ஏனெனில் மகிந்த இராஜபக்ச அரசாங்கம் ஜ.நா. மனிதவுரிமைச்சபையின் விசாரணைகளை முழுமையாக எதிர்த்தது வந்ததுடன், சம்பவம் நடைபெற்ற இடங்களில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசாரணையாளர்கள் எவரையும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தது.  அவர் பதவியிலிருக்கும்வரை இவ்விடயத்தில் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்துவந்தார். இந்நிலையில் புதிய அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாயின் மேலதிகமான தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும். ஒரு அரைகுறையான அறிக்கையை விட முழுமையான அறிக்கை வெளிவருவது சாலச்சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.

ஆணையாளரின் செய்தி வெளிவரும்வரை, அறிக்கையை தாமதித்து வெளியிடவேண்டாம் என்று கூறிவந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர், இப்போது சுருதியை மாற்றி செப்ரெம்பரில் அறிக்கை வெளிவரும்போது அது முழுமையானதாக இருக்கும் என ஆணையாளரின் முடிவுக்கு வக்காலத்து வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேறுசில அமைப்புகள் ஆணையாளரின் முடிவு தமக்கு ஏமாற்றத்தையளிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளன.  கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அறிக்கை பின்போடப்படுவதில் மகிழ்ச்சியும் இல்லை கவலையுமில்லை என பிபிசி தமிழ்ச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏதோ பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னமும் ஆறுமாதத்திற்கு பொறுத்தால் என்ன குடிமுழுகிப் போய்விடப்போகிறது என  நாம் இருந்து விடலாம்.  ஆனால், இராஜதந்திர நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற யதார்த்தத்தையும்  சேர்த்தே இந்த விடயத்தை அணுக வேண்டியிருக்கிறது.  ஆகவே அறிக்கை வெளியிடுவதனை தாமதிப்பதற்கு மனிதவுரிமைச் சபையின் ஆணையாளரால் கூறப்பட்ட காரணங்களை நாம் வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  உண்மையான நோக்கத்தினை அறிவதற்கு இதன் பின்புலத்தை சற்று ஆராய வேண்டியிருக்கும். அவற்றைக் கண்டறிவதற்கான தகவல்கள் ஒரளவு வெளிப்படையாக கிடைக்கிறது என்பது ஒரு ஆறுதலான விடயம்.சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மேற்குலகத்தின் ஒழுங்கிற்குள் நின்று செயற்படக்கூடிய ஆட்சி அமையப்பெறும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்படும் என இப்பத்தியில் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கிறது.  முன்னர் ஆட்சி மாற்றம் நடைபெற்ற நாடுகளில் மேற்குலம் கடைக்கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் அவ்வாறு கூறப்பட்டது. இப்போது கிடைக்கும் தகவல்கள்  அக்கருத்தினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

பெப்பிரவரி பத்தாம் திகதி வடமாகாணசபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த தென்னாசிய பிராந்தியத்திற்கான  அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலாளர் நிசா பிஸ்வாலுடனான தனது சந்திப்புப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.  சிறிலங்காவில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கும்வகையில் மனிதவுரிமைச்சபையின் அறிக்கையை வெளியிடுவதனை தாமதப்படுத்தவிருப்பதாக பிஸ்வால் குறிப்பிட்டதாகவும், அதற்கு தான் அறிக்கை உரியகாலத்தில் வரவேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.  நிஷா பிஸ்வாலுடனான தனது உரையாடலின் விபரங்களை அவர் முழுவதுமாக வெளியிடவில்லை எனினும், இராஜதந்திர நடைமுறைகளை மீறும்வகையில் இவ்விடயத்தை அவர் பகிரங்கப்படுத்தியமை உண்மைநிலையை தமிழ்மக்கள் அறிந்துகொள்ள உதவுவதாக அமைந்திருக்கிறது. அதற்காக தமிழ்மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.  அறிக்கை வெளியிடுவதனை தாமதப்படுத்துவது தனித்து மனிதவுரிமைச்சபையின் ஆணையாளரின் முடிவு அல்ல என்பதனை திரு. விக்னேஸ்வரன் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

ஏற்கனவே ரிச்சர்ட் ஆர்மிரேஜ், எரிக் சொல்ஹெய்ம் போன்ற முன்னாள் இராஜதந்திரிகள் சிலரும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே மேற்குலகம் ஒருமித்தளவில் இவ்விடயத்தில் உடன்படுகிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். ஜனவரி பன்னிரண்டாம் திகதி, அதாவது சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்து மூன்று தினங்களில், முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும், இந்தியஉபகண்டம் தொடர்பான வெளிவிவகாரக்கொள்கைகளில் நிபுணத்துவம் பெற்றவருமான Teresita C. Schaffer என்பவர் Brookings Institute என்ற அமெரிக்க வெளிவிவகார மூலோபாயம் தொடர்பான சிந்தனை அமையத்தின் இணையதளத்தில் எழுதியிருந்த ‘Sri Lanka: After the Election Upset – What Next?’ என்ற தலைப்பிலான  கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“கடந்த ஆண்டுகளில் ஐநா மனிதவுரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மென்போக்கானதாக இருந்தபோதிலும் அவை மேற்குலகத்திற்கு எதிரான கசப்பினை சிறிலங்காவில் ஏற்படுத்தியுள்ளது.  இவ்வாறான தீர்மானத்தை தவிர்க்கும்போது அது  சிறிலங்கா  அரசாங்கம், ஐக்கிய அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பினைச் செய்வதாக அமையும். இதனை இலகுவாக அடைவதற்கு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளில் சிலவற்றை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவும் சிறிலங்காவும் ஒரு திட்டத்தை அமைதியாக தீட்டவேண்டும். இது உண்மையான நல்லிணக்கத்தை ஆரம்பிப்பதனை இலகுவாக்கும்.”

சிறிலங்காவில் பாராளுமன்றத் தேர்தல்கள் ஜுன் மாதத்தில் நடைபெறும் என எதிர்பாரக்கப்படும் நிலையில், மேற்குலகம் தமது விருப்புக்குரிய தரப்பான  ரணில் விக்கிரமசிங்க மீள அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ரணிலின் தேர்தல் வெற்றிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எத்தகைய நடவடிக்கையிலும் மேற்குலகம் ஈடுபடப்போவதில்லை. ஆகவே ஐ.நா. மனிதவுரிமைச்சபையின் 28வது கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் எந்தத்தீர்மானமும் கொண்டுவரப்படாது என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினை தட்டிக்கொடுக்கும் வகையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதனை இந்தியா, மேற்குலம் ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை.

இங்கு இன்னொருவிடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த மூன்று தடவையும் அமெரிக்காவே  தீர்மானங்களைக் கொண்டுவந்திருந்த்து,  இத்தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கிய நாடுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தவிர  மற்றையவை அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று அவ்வாற நடந்து கொண்டன.  ஆகவே அமெரிக்காவின் ஆதரவின்றி சிறிலங்கா தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது என்பது மட்டுமல்ல வேறெந்த நாடும் அத்தகையதொரு முயற்சியில் இறங்கப்போவதில்லை என்பதனையும் மறுப்பதற்கில்லை.  ரணில் விக்கரமசிங்க மறுபடியும் ஆட்சியை கைப்பற்றுவாரேயானால்,   சர்வதேச மட்டத்தில் இலங்கைத் தீவு விடயமாக விவாதிக்கப்படும் இறுதி அமர்வாக மனிதவுரிமைச்சபையின் 30வது கூட்டத்தொடர் அமைந்துவிடும்.
அதற்கிடையில், உண்மையான பொறுப்புகூறலையும், உண்மையைக் கண்டறிதலையும் அமெரிக்கா வேண்டிநிற்பது உண்மையானால் அது  இரண்டுவிடயங்களை  செய்யவேண்டும்

  • ஒன்று: மனிதவுரிமைச்சபையின் விசாரணையளார்கள் இலங்கைத்தீவிற்குள்  உள்நுழைந்து விசாரணைகளை மேற்கொள்ளுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • இரண்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளும் ரோம் சாசனத்தில் (Rome staute) சிறிலங்காவை கையெழுத்திட வைக்கவேண்டும்.

இவை நடைபெறவிட்டால். சர்வதேச விசாரணை எதுவித பலனையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காது என்பதனை இப்போதே உறுதியாகக் கூறமுடியும்.