ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்

717

கடந்த இதழில், தமிழ் அமைப்புகளுக்கும் குழுக்களுக்குமிடையில் கொள்கையளவிலான ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்பற்றி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இந்நடவடிக்கைகளுக்கு தடைக்கற்களாக சில தனிநபர்களினதும், குழுக்களினதும் சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளே அமைந்துள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வாறனவர்களை கொள்கைப்பிடிப்பவற்றவர்கள் அல்லது அரசியல் தெளிவு இல்லாதவர்கள் இலலாதவர்கள் என ஒதுக்கி விடமுடியாது, மாறாக இவர்கள் அமைப்புகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் தெரிகிறது. அவசியமேற்பட்டால் இவர்களைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுவதாக உள்ளேன்.

தமிழ் அரசியல்தரப்பினரிடையே கொள்கை ரீதியான ஒருமைப்பாடு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் பற்றியும், அது எவ்வாறு குழப்பப்படுகிறது என்பதனை விளங்கிக்கொள்வதற்கு  அண்மைய சம்பவம் ஒன்று நல்ல உதாரணமாக அமைந்திருந்தது.  வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று தள நிலமைகளை கண்டறிவதற்காக கடந்த வாரம் இலங்கைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டது. இக்குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களையும், இதர அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்கள். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இக்குழுவினருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், குடிசார் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பில், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாமே என இந்தியத்தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அதனை தமிழ்தரப்பினர் முற்றாக நிராகரித்ததாகத் தெரியவருகிறது. இச்சட்டமூலத்தில் உள்ளவற்றை தீர்வுக்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளமுடியாது என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்ததாக சென்னையிலிருந்து வெளிவரும் ‘இந்து’ (The Hindu) பத்திரிகையில் மீனா சிறினிவாசன் என்பவர் எழுதிய செய்திக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“13ம் திருத்தச்சட்டம் மீதான ‘பிடிவாதமான ஈர்ப்பு’ தமக்கு உதவப்போவதில்லை என தமிழ் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்”  (‘Obsession’ with 13th Amendment won’t help, say Tamil politicians) என்ற தலைப்பிட்டு வெளிவந்த இக்கட்டுரையில் மேற்படி சந்திப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் குடிசார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர்  பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்ததாகவும், ‘தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைப் பாதுக்காப்பதற்காக ஐ.நா. கண்காணிப்புடனான ஒரு இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படவேண்டும்’ என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் (இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி) சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துவெளியிட்டாதாகவும் எழுதப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் இணைந்து செயற்படும் ஈபிடிபியின் தலைவருடனான பிறிதொரு சந்திப்புப் பற்றியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் இவ்விதமான கருத்துகளை தெரிவித்திருக்கவில்லை எனத் தெரிகிறது.

மேற்படி சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது  ‘இந்து’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அவர்கள் உறுதிப்படுத்தினர். இங்கு கவனிக்கத்தக்கது என்னவெனில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், வௌ;வேறு கட்சிகளைச்  சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், கொள்கையளவில் உடன்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்ட இடைக்கால நிர்வாகத்தின் அவசியம் பற்றிய கருத்தினை கஜேந்திரகுமார் ஏற்கனவே ஐ.நா. மனிதவுரிமைச்பை கூட்டமொன்றிலும், ஒரு பேப்பர் உட்பட பல தமிழ் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளிலும் விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘இந்து’ பத்திரிகையில் மேற்குறித்த செய்தி வெளியானதன் பின்னர், இவ்விடயம் பற்றி சிங்களத்தரப்பினரிடமிருந்து காட்டமான எதிர்க் கருத்துகள்  வெளியாகியிருந்தன. சிங்களத் தேசியவாதியான தயான் ஜயதிலக எழுதியுள்ள கட்டுரையொன்றில், தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை முற்றாகப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளது என கண்டித்துள்ளார். சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில், கொசோவாவில் ஏற்படுத்தப்பட்டது போன்ற இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் எழுதியிருக்கிறார். முன்னாள் யூகோஸ்லாவிய நாடுபோன்று போரில் நாங்கள் தோற்கவில்லை, வென்றிருக்கிறோம் என்ற திமிர்த்தனமும் அவரது எழுத்துகளில் வெளிப்பட்டது.

சிங்கள இனவாதிகளின் கருத்தினையிட்டு நாம் ஆச்சரியப்படுவதற்கு அல்லது அலட்டிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் இதேபோன்ற கருத்தினை கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் சுமந்திரன் கொழும்பிலிருந்து வெளியாகும் Daily Mirror பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். இடைக்கால நிர்வாக அலகு ஒன்றினை அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர் அவ்விதமான கோரிக்கை எதனையும் தமது கட்சி முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்படி கருத்துகளை மறுதலித்த அவர் (பிரிக்கப்பட்ட) வடமாகாண சபைத் தேர்தலை விரைவாக வைக்கவேண்டும் என்பதே தமது கோரிக்கையாக அமைவதாகவும் கூறியிருக்கிறார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகயோரின்முரண்பட்ட கருத்துகள் தொடர்பாக, மற்றுமொரு கூட்டமைப்பு உறுப்பினரான சிவஞானம் சிறிதரனிடம்  கனேடிய தமிழ் வானொலி (CTR) வினா எழுப்பியது.  அதற்குப் பதிலளித்த சிறிதரன், திரு. கஜேந்திரகுமார் அவர்களது கோரிக்கையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இடைக்கால நிர்வாகம் அவசியமானது எனவும் தெரிவித்தார். அத்துடன் நின்றுவிடாது, வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவதானால் தாம் தவறிழைத்தவர்களாக ஆகிவிடுவோமோ எனத் தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார். இங்கு கொள்கையளவில் கஜேந்திரகுமார், சிறிதரன், பிரேமச்சந்திரன் போன்றோர் ஒத்த கருத்துடையவர்களாகவும் சுமந்திரன் எதிர்க்கருத்துடையவராக இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.

பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்டத்தினை  முற்றாக நிராகரித்தல், சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு புறம்பாக சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை.  ஏற்கனவே விடுதலைப்புலிகள் தமிழ் மதியுரைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாக ஒழுங்கு பற்றிய வரைபு ஒன்றினை தயாரித்து அனைத்துலகத்தின் பார்வைக்கு விட்டிருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க சர்வதேசப் பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கருத்தை நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தி வருகிறார். இறுதி இலக்கு வியடத்திலும் இவ்வமைப்புகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இல்லையெனில், அடிப்படைக் கொள்கை விடயங்களில் காணப்படும் உடன்பாட்டினை வைத்து பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இவ்வமைப்புகள் ஏன் மறுத்து வருகின்றன என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதது.

இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், கூட்டமைப்பில் வெளியுறவு தொடர்பான விடயங்களை, குறிப்பாக அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகள், மேற்குலக இராஜதந்திரிகளை சந்தித்து உரையாடுவது போன்ற விடயங்களை சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே கவனிக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்காத இவ்விருவரும் காலனித்துவ எஜமான விசுவாசத்துடன் வெளித்தரப்புடனான பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதும் அது தமிழ் மக்களின் விடுதலை அரசியலை பின்தள்ளும் அபாயத்தைக் கொண்டிருப்பதையும் அனுமானித்துக் கொள்வதில் யாருக்கும் சிரமமிருக்காது. தமிழ் அமைப்புகளுக்கிடையில் கொள்கை ரீதியான உடன்பாடு ஏற்பட்டு ஒருங்கிணைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் இவ் அபாயங்களை இலகுவில் கடந்து செல்ல முடியும்.