சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த இராஜபக்ச தோல்வியைச் சந்தித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடகாலத்திற்கு முன்னரே தேர்தலைச் சந்திக்க அவர் முன்வந்த போது அவரது வெற்றி ஒரளவு உறுதி செய்யப்பட்டதாகவே தென்பட்டது. அதிகம் அறியப்படாதவராக இருந்த அவரது கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவினா பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டமை மாத்திரம் இன்றைய முடிவுகளிற்கு காரணமாக அமையவில்லை. இவ்விடயத்தில், சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் வேண்டி நின்ற வெளிச்சக்திகளின் பங்கினையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு முழுமையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் தலைவர்களை மாற்றுவதிலாவது இச்சக்திகள் வெற்றி கண்டுள்ளன.
மகிந்தவின் தோல்வியில் தமிழ், முஸ்லீம் வாக்காளர்களின் பங்கு முக்கியமானதாக அமைந்திருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன. தமிழர் தாயகப்பகுதிகளில் மைத்திரி – மகிந்த ஆகிய முன்னணி வேட்பாளர்களுக்கிடையிலான வாக்கு வித்தியாசம் சராசரியாக 75% – 25% என்ற அடிப்படையில் அமைந்திருந்த போதிலும், சிங்களப்பகுதிகளில் அவ்வாறான தெளிவான வேறுபாட்டினைக் காண முடியவில்லை. இது தமிழ் மக்கள் தமது வாக்குச் சீட்டின் மூலம் ஒரு இனப்படுகொலையாளனைத் தண்டிக்க முற்றபட்டமையை காட்டிநிற்கிறது. தமது அரசியல் பிரச்சனைகள் பற்றி எதுவுமே குறிப்பிடாத, அதே சமயம் இனவாதக் கொள்கைளில் மகிந்தவிடமிருந்து அதிகம் வேறுபடாத ஒருவரை தேர்ந்தெடுப்பதில் தமிழ் மக்கள் காட்டிய ஆர்வத்திற்கு வேறு வியாக்கியானங்கள் வழங்க முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இத்தேர்தல் முடிவுகளையிட்டு கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்றாலும், தமிழினப் படுகொலை ஒன்றை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு தனது ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற ஒரு இனபடுகொலையாளனின் தோல்வி அவர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரி பல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியை ஏற்படுத்துவார் எனவும் சில தரப்புகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஏற்படும் ஜனநாயக வெளியை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தமது அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த முன்வரவேண்டும்.