ஒரு கதை!!

804

மாறன் ஒரு விடுதலைப் போராளி வரண்ட நிலத்தில் சுவர்கள் இல்லாத ஒரு கொட்டிலில் இருந்து வந்தவன். தாயும் இரண்டு தங்கைமாரும்.மாறன் இப்பொழுது விடுதலைப்புலிகள் அமைப்பில் இன்னொரு கட்டத்தை எய்தி இருந்தான். நெஞ்சுரமும் வீரமும் ஓர்மமும் மிக்கவர்கள் கரும்புலிகள் ஆவது இயல்பு. தாயகத்திற்கும் தலைவனுக்குமாக அவன் தன்னைக் கொடையாகக் கொடுக்கத் தயாரானான்.

மாறன் ஒரு கரும்புலி அவன் களத்துக்குப் போகப் போகிறான் போவதற்கும் முன்னர் கரும்புலிகளின் நடைமுறையின் படி வீடுசென்று பெற்றோர் சகோதரங்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும் ஆனால் மாறன் அதை விரும்பவில்லை. வீட்டின் ஏழ்மை, தாயின் கண்ணீர், தங்கைமாரின் அன்பு அவனைக் குத்திக் குடையும். தான் போகும் காரியத்துக்கு முன் அதுவே படம்போல் விரியும். வேண்டாமே என்றான். ஆனால் அமைப்பு அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை மேலும் அத்தகைய சூழலை மேவி பெறுகின்ற உறுதி தான் உன்னதமானது. எனவே மாறன் வீடு போனான்.

மாறனை அவனது பொறுப்பாளர் தமிழரசன் கூட்டிச் சென்றார். மாறனைக் கண்டவுடன் அந்தக்கொட்டில் அடைந்த உணர்வு நிலையை என் எழுத்து எப்படியும் சொல்லி விடாது. தாயின் கையால் மாறன் உணவு உண்ணவேண்டும் தாயின் கையில் ஒரு சதம் கிடையாது மாறன் `அண்ணை..’ என்று தமிழரசனைக் கூப்பிடக் குரல் வைத்தான் தமிழரசன் அதைப் புரிந்து பொக்கற்றுள் இருந்து சில நுாறு ரூபாத் தாள்களை எடுத்து அதிலிருந்து இரண்டு நுாறு ரூபாத்தாள்களை தாயிடம் கொடுத்தார். இரண்டு மணித்தியாலத்தில் தாயின் கையால் மாறன் அருமையான உணவு உண்டான். அது வரையில் தங்கைமாருடன் விளையாடினான். தாயுடன் அன்பு சொரிந்தான். சின்ன வளவு என்றாலும் சுற்றிப்பார்த்தான். சட்டம் போட்டு சந்தனமிட்ட அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்…

வெளியில் போன தமிழரசன் வந்துவிட்டார். தங்கையைக் கட்டுப்பிடித்து முத்தம் வைத்தான், தாயைக் கொஞ்சினான். `போட்டு வாறன்’ என்றான். `வாறன்’ என்ற சொல்ல மாறனின் நாக்குத் தடுமாறியது.
படலையடியில் விட்ட மோட்டார் சைக்கிளை எடுக்க தமிழரசன் போய்விட்டார். மாறனின் பின்னால் வந்த மாறனின் தாயார் `தம்பீ’ என்று மெல்லமாகக் கூப்ட்டார். `என்னம்மா?’ என்றான் மாறன்.`தம்பி, நாங்கள் சாப்பிட்டுக் கனநாளாச்சுது. நான் பசியைப் பொறுப்பன் உன்ர தங்கச்சிமார்களைப் பார்க்க வயிறு பத்தி எரியுது ராசா. இண்டைக்கு உன்ர தங்கைமார் சாப்பிட்டினம். இனி எப்பவோ தெரியாது உன்ர பொறுப்பாளர் காசு வைத்திருந்ததை நான் கண்டனான். கொஞ்சக் காசு வாங்கித்தாவன் ராசா?’ மாறன் மெதுவாக ஆனால் உறுதியான குரலில் சொன்னான் `இல்லையம்மா நான் காசு கேட்க மாட்டன் இது எங்கன்ர காசு இல்லை தமிழச் சனத் தின்ர காசு அதை நாங்கள் தொட முடியாது’ இந்த வாக்கியத்திற்குப் பிறகு வேறு எதை எழுதினாலும் அது அபத்தம். இந்த கதை எப்படித் தெரிந்தது என்று யாரும் கேட்கலாம். மாறன் தன்னைக் கொடையாகக் கொடுத்த பிறகு அதை அறிவிக்க அவனின் தாயார் வீட்டுக்குத் தமிழரசன் போனார்.அப்பொழுது மாறனின் தாயார் சொன்னதே இந்தக் கதை.

அது ஒரு கதை அல்ல இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உள்ளன. பின்னேரத்துக்குக் கரும்புலியாகும் ஒருவனுக்குஅவன் தாயார் `உடம்புக்கு நல்லது அப்பன் வடிவாச் சப்பிச் சாப்பிடு’ என்று இறைச்சியையும் மீனையும் தீத்திய கதை கூட எனக்குத் தெரியும். கண்ணீர் துளிர்த்தாலும் இதை யாரும் கதையாக் கேட்டிருக்க மாட்டீர்கள். இது தான்வாழ்வு இது தான் உணர்வு.இந்தக் கதையை இப்பொழுது ஏன் பறைகிறேன் என்றால் அது யாவருக்கும் தெரிந்த ஒன்று தான். நினைவெழுச்சி நாள் நெருங்கி விட்டது. எங்கள் மாவீரத் தெய்வங்களுக்கு மண் அள்ளிப் போட முடியாவிட்டாலும் மனதில் வணக்கம் செலுத்தும் நாள் இதோ வந்து விட்டது. நாங்கள் என்ன செய்யப் பேகின்றோம். `இரண்டு பேரும் பிரச்சினைப் படுகிறார்கள் எனவே வீட்டில் இருந்து அமைதியாகப் பிரார்த்தனை செய்யப் போகிறோம் என்றிருக்கிறோம் அப்படியா?’ இந்தக் கதையை ஒருக்கால் கவனியுங்கள் மாவீரர் அனைவரையும் ஒரு கணம் நினையுங்கள் அவர்கள் எதற்காக தம் உயிரைத் தியாகம் செய்தனர்?. கரும்புலிகள் அத்தனை பேரினதும் உன்னத தியாகங்களுக்கு எப்படி நாங்கள் வணக்கம் செலுத்தப் போகிறோம்?. சிங்கள அரசு விரும்பிய விதமாகவா? ஈழத்திலும் இலங்கையின் எப்பாகத்திலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த விரும்பியவர்கள் மௌனமாகத் தங்கள் வீட்டிலிருந்து செய்கிறார்களே அப்படியா சுதந்திரமான இந்தத் தேசங்களில் இருந்தும் நாம் செய்யப்போகிறோம்?.

நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இலண்டனில் பல இடங்களில் நடைபெறப் போகின்றன சிங்கள இராணுவத்தின் நினைவெழுச்சி நாளா அது? இல்லையே! மாவீரர் தெய்வங்களுக்கான நினைவெழுச்சி நாள் தானே அது. யார் நடத்தினால் என்ன? எங்களுக்கு எங்கு போக வசதியோ அங்கு போவோம். ஆனால் `போவோம்’ என்பதில் உறுதியாக இருப்போம். நாங்கள் குருக்கள்மாருக்காகவா கோயிலுக்குப் போகிறோம்? இல்லையே! தெய்வங்களுக்காகத் தானே! மாவீரர் தாம் எங்கள் தெய்வங்கள். யார் பிழை யார் சரி என்பதைக் காலம் சொல்லட்டும். அதைக் காலத்திடமே விட்டு விடுவோம்.மாவீரர் நாள் நிகழும் எல்லா இடங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்து இதோ ஐம்பதினாயிரம் பேர் மாவீரர் நாளுக்குத் திரண்டனர் என்று ஏடுகள் அறிவிக்கட்டும். சிங்கள அரசுக்கு அதுவே நம் எச்சரிக்கை! மாவீரர்களுக்கு அதுவே நம் வணக்கம்!.