ஒரு குளோனிங்(Cloning) விடுதலை அமைப்பை உருவாக்குதல் சாத்தியமா…

1107

ச.ச.முத்து

வெகு அண்மையில் வெடிவைத்தகல் பகுதியில் மூன்று தமிழ் இளைஞர்களை சிங்களப்படைகள் சுட்டுக்கொன்ற பின்னர் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஊடகப்பரப்பில் ஒருபெரும் ஆய்வு எழுந்துள்ளது… தெய்வீகன்,அப்பன், கோபி போன்றோர் கொல்லப்பட்ட பின்னர் ஊகங்களும் புரளிகளும் வதந்திகளும் பலவேறு வடிவங்களில் பல்வேறு கோணங்களில் இறக்கைககட்டி பறக்கத் தொடங்கிவிட்டன. தமிழீழத்துக்கான ஒருவிடுதலைஅமைப்பை சிங்களமே, அதிலும் கோத்தபாயாவே அவரின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கியுள்ளார் என்பதே அந்த ஊகங்கள் முழுவற்றின் ஒரே சாரமாகும்.

ஒரு திறந்தவெளி ராணுவமுகாமுக்குள் முழுத்தமிழினத்தையுமே சிறைவைத்திருக்கும் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்கள் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற இவர்களின் நினைப்பும் எத்தனமும் தூய்மையானது என்று புரிகிறது..அது மட்டுமே இப்போதைக்கு.

இனி விடயத்துக்கு வருவோம்..

அது சாத்தியமா… அப்படி ஒரு குளோனிங் விடுதலைஅமைப்பை போலியாக சிங்களத்தின் ஏவலுடன் உருவாக்கினாலும்கூட அது எமதுமக்கள் மத்தியில் எடுபடுமா…நீடித்து நிற்குமா என்பனவற்றை மேலோட்டமாக பார்ப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
குளோனிங் விடுதலைஅமைப்பு என்பது ஒரு உண்மையான விடுதலை இயக்கம்போன்றே எதிரி செயற்கையாக உருவாக்கும் `டம்மி’ அமைப்பாகும்.

2009 மே மாதத்தில் தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டத்தை அழித்தெறிந்துவிட்டதாக சிங்களம் பிரகடனம் செய்தாலும் சிங்கள ஆட்சியாளர்களின் மனதுள் ஒரு பயம் எப்போதும் எழுந்துகொண்டே இருப்பது இயல்பாகும். 1975ல் இருந்து 2009 மே வரையான காலப் பகுதியில் ஒரு அச்சநிலைக்குள் சிங்கள தேசம் வாழ்ந்ததை மீண்டும் அவர்கள் விரும்பமாட்டார்கள். அதற்காக மீண்டும் ஒரு ஆயதப்போராட்டம் உருவாவதை எப்படியாவது தடுப்பதில் அவர்கள் மிகவும் குறியாக இருப்பார்கள்.

இப்படியான போலி அமைப்புகளை உருவாக்கி மக்களை குழப்பி இறுதியில் எதுவுமே தேவையில்லை என்று மக்களைச் சோர்வடைய வைப்பதே அவர்களது நோக்கம்.

தமிழீழ தாயக கோட்பாட்டை அழிப்பதில் சிங்கள தேசம் நடாத்தும் போர் என்பது தனித்துபடைகளால் மட்டும் நடாத்தப்படுவது அல்ல.தமிழ் மக்களின் உளவியலை சிதைக்கும் ஒவ்வொரு முறையையும் அது நாற்பதுவருடங்களாக செயற்படுத்தியே வந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியை பார்க்க வேண்டுமானால், 1970ல் இருந்து 1999 வரை சிங்கள ராணுவத்தில் பல பிரிவுகளில் செயற்பட்டு, முக்கியமான புலனாய்வு பொறுப்புகளில் இருந்த மேஜர் ஜெனரல்சரத்முனசிங்க எழுதிய ‘ஒரு போர் வீரனின் பார்வை’ நூலைப் படித்தால் தெரிய வரும்.

முதலில் தமிழ்மக்கள் மத்தியில் தகவல்கொடுப்பவர்களை வைத்து போராட்டத்தை அழித்துவிடலாம் என்று செயற்படும் படைகள் அது முடியாமல் போகும்போது புதிது புதிதான முறைகளை பிரயோகிப்பர். இந்த முகைளில் சிங்களத்தின் ஆசானாக இந்தியாவே இருக்கமுடியும். வேறு யாருக்கு அந்த தகுதி உண்டு..?

உலகில் விடுதலைஅமைப்புகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்குவதில் அழித்தெறிவதில் அதிக அனுபவம் வாய்ந்த தேசம் எதுஎன்றால் எல்லோரும் அமெரிக்கா என்றேகண்ணைமுடிக்கொண்டு சொல்வார்கள். ஆனால் அமெரிக்காவைவிட அதிக அனுபவமும் பட்டறிவும் இந்த விடயத்தில் இந்தியாவுக்குஉண்டு.எத்தனை விடுதலை போராட்டங்களை, புரட்சிகளை ஒடுக்கி அதன் மீது ஒற்றைதேசம் ஒன்றை கட்டி இருக்கிறார்கள். பிரித்தானியர் வருகைக்கு முன்னர் பல நூறு பிரிவுகளாக சமஸ்தானங்களாக இருந்த நிலமே இந்தியா.

அது சுதந்திரம் அடைந்தது கூட ஒரு பெரியபிரிவினையுடன்தான்… சுதந்திரத்தின் மறுநாளே இந்தியாவின் நெஞ்சுப்பகுதியில் இருந்தசிறுநிலப்பரப்பான ஹைதராபாத் தான் ஒருபோதும் இந்தியாவின் ஒரு அங்கம் அல்ல என்றும் ஹைதராபாத் தனிநாடே என்றும் பிரகடனம் செய்ததும் அதனை 1948 செப்டம்பரில் இந்தியராணுவத்தை அனுப்பி மீட்டதும் அதன் பின்னர் திராவிடநாடு தொடங்கி மீசோரம் வரை தனியாக பிரிந்துசென்று தேசம்அமைக்கும் போராட்டங்களை நடாத்தியதுமான ஒரு வரலாறும் அதனை பல பல வடிவங்களில் இந்திய மத்திய அரசு அடக்கியதும் எந்தவொரு தேசத்திலும் இப்படியான படிப்ப்பினைகள் அதன் படைகளுக்கும் அதன் புலனாய்வுஅமைப்புக்கும் கிட்டி இருக்காது. அந்த அனுபவங்களில் மிக முக்கியமானது போலியான அமைப்புகளை உருவாக்கிக் குழப்புதல் இறுதியில் இலட்சியத்தை அழித்து மக்களை மறக்க செய்தல் என்பதே ஆகும்.

அசாமின் விடுதலைக்கான போராட்ட அமைப்பின் வீரியத்தை குறைப்பதற்காக அசாம் கன பரிசத் அமைப்பை உருவாக்கியதும் அந்த முரணுக்குள் அசாம் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் நடாத்திய உல்பாவை இன்னும்செயலற்றதாக்கியதும் இறுதியில் உல்பா நான்கு வருடங்கு முன்னர் தமது தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டதும் ஒரு சிறு உதாரணமே.
இதனைப் போன்று காலிஸ்தான் போராட்டத்திலும் போலியாக ஒரு அகாலிதள் அமைப்பை உருவாக்கியதும் இன்று காலிஸ்தான் கோரிக்கையை நீர்த்துப்போக செய்துள்ளதும் உதாரணமே.

இந்த பாடங்களை கற்றுக்கொண்ட சிங்களம் அதனை இப்போது எம்மீது நடைமுறைப்படுத்த முயல்கிறது.
ஒரு போலி விடுதலைஅமைப்புக்கு ஆயுதங்களை, தாக்குதல் இலக்குகள் பற்றிய தரவுகளை, நிதியை கொடுப்தால் மட்டும் அது வெற்றி பெற்றுவிடமுடியாது.

ஆயினும் மக்களின் ஆதரவு என்ற ஒரே பலம்தான் ஒரு விடுதலைஅமைப்பின் உயிர்நாடி என்பதால் ஒரு போலி விடுதலைஅமைப்பு மக்களின் மனங்களை வெல்வது ஒருபோதும் முடியாது என்பதால் இந்த முறை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணப்படும் என்பது உறுதி. நீடித்த காலத்துக்கு ஒரு போலிஅமைப்பு சாத்தியமே இல்லை.

அதிலும் கடந்த முப்பதுவருடங்களாக ஒரு உன்னதமான அர்ப்பணிப்பு நிறைந்த விடுதலைப்போராட்டத்தை தமது கண்களால் கண்டிருந்த மக்களுக்கு இருக்கும் மோப்ப சக்தி எது உண்மையானது எது போலியானது என்பதை தெரியப்படுத்திவிடும்…

சாத்தியம் இல்லை என்பதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. சிங்களம் உருவாக்கும் குளோனிங் விடுதலைஅமைப்பின் முக்கிய செயற்பாடே உண்மையான போர்க்குணம் மிக்கவர்களை அடையாளம் கண்டு சிங்களபடைகளுக்கு அறிவித்து அழிப்பது ஆகும்.

வான்வரை எழுந்து பறந்த இந்த விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டதற்கு பெரும்துரோகமே காரணம் என்றே சாதாரணமக்கள்நம்புகிறார்கள். இதனால் ஒருவிதமான சந்தேகபார்வை ஒருவர்மீது ஒருவருக்கு தமிழீழதேசியம் முழுதற்கும் எழுந்துமுள்ளது…சிங்களபேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்க்குணத்தை எவருடனும் பகிர்ந்துகொள்ள அஞ்சும் ஒரு நிலையே தாயகத்திலும் புலத்திலும் நிலவுகிறது.

இந்நிலையில் இந்த போலி விடுதலை அமைப்புகள் தமது கருத்துகளை மக்கள் மத்தியில் வீசி அதில் அகப்படும் உண்மையானபோர்க்குணம் மிக்கவர்களை அடையாளம் காண எடுக்கும் முயற்சி நிச்சயம் எடுபடாது…
இறுதியாக ஒன்று…

தமிழினத்தை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் நேர்மையான,வீரமிக்க, வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு தலைவனை கண்டவர்கள்… அவரை சூரியதேவனாக, கடவுளாக கூட அவர்கள் உருவகிக்கும் அளவுக்கு அவரின் ஆளுமை எல்லோர் மனங்களுள்ளும் நிறைந்திருக்கு.

சிங்களபேரினவாதமோ, அல்லது இந்திய வல்லாதிக்கமோ தமது நலன்களை நீண்ட காலத்துக்கு பேணுவதற்காக நவீனஆயுதங்களுடன், மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தில், விளம்பரங்களுடன் ஒரு போலி விடுதலை அமைப்பை உருவாக்கலாம்.. ஒரு போதும் ஒரு போதும். ஒரு தலைவனை உருவாக்க முடியவே முடியாது.

ஏனென்றால் தமிழர்கள் உண்மையான ஒரு தலைமையை, தலைவன் ஒருவனின் விஸ்வரூபத்தை கண்டவர்கள்..குளோனிங் அமைப்பு அந்த தலைமையின் கால் பெருவிரல் நகம் அளவுக்குகூட இருக்காது.

தலைமை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கண்டவர்கள்.. அது இன்னொருவரால் உருவாக்கப்படும் பொறுப்பு அல்ல.. அதனை உருவாக்கும் வல்லமை வரலாறு ஒன்றுக்கே உண்டு..

ஆக, குளோனிங் அமைப்பு உருவாகி வெளிவந்தவுடனேயே சாயம் களன்றுவிடும்…

அது சாத்தியமே இல்லை.