ஓர் எழுத்தூழியனுக்கான என் வணக்கங்கள்

2003இல் முதன்முதலாக அவரைப் பார்த்தேன்.எஸ்.பொ.வை இருபது வருடங்களுக்கு மேலாக பார்க்கவேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்தேன். 2003ஒக்டோபரில் சென்னை, கோடாம்பக்கம் மேம்பாலத்தின்கீழ் புழுக்கத்தைப் போக்க முடியாத மின்விசிறி சுழல்கின்ற அறையில் அவரைப் பார்த்தேன்.

`சேர் சேர்’ என்று அழைத்தவாறு என் உரையாடல் அமைந்தது அவருக்கு அது பிடிக்கவில்லை. `என்ன சேர்.. சேர்.. என்கிறாய்’ என்று சிறிது கோபம் காட்டினார். `வேறுஎப்படிக் கூப்பிடுறது சேர்..? `அண்ணை’ என்று கூப்பிடும் அளவு இடைவெளி இல்லை. `ஐயா’ என்று கூப்பிடக் கூச்சமாக இருக்கிறது.. அது பழக்கமில்லை’.. என்றேன். “பொன்னுத்துரை என்றே கூப்பிடு” என்றார்.

“நானும் நீயும் எழுத்தூழியம் செய்கிறம், நானும் நீயும் ஒரே சாதி, எழுத்தாளச் சாதி. இதுக்கு வயது வரம்பு கிடையாது” என்றார். “ஓம் சேர்” என்றேன்.

பிறகு 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் அவரிடம் போன சமயத்தில் எல்லாம் பொன்னுத்துரை என்று அவரை நான் அழைக்கவில்லை `சேர்’ என்றே வந்து விடுகிறது. அவரைச் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பம் ஒன்று 2014 ஜனவரியில் கிடைத்தது. நானும் நண்பன் விஜய் எட்வினும் போனபோது அவர் அப்போது தான் பணிமனையை விட்டுபுறப்பட்டிருந்தார். இனி அவரைச் சந்திக்க சந்தர்ப்பம் வராது என்று உறுதியாகத் தெரிந்திருந்தால் காத்திருந்திருப்பேன், எவ்வளவு மணித்தியாலங்கள் ஆகினும்.

‘அப்பேர்க்கொத்த’ மனிதன் அவர். ஒரு கலக்காரராக, நவீன புனைவு இலக்கியவாதியாக, விமர்சகராக, அறிவுஜீவியாக, அனைவருக்கும் தோழனாக, நற்போக்கு இலக்கியத்தின் பிதாமகனாக, நகைச்சுவையாளராக, பதிப்பாளராக எடுத்துக் கொண்ட எந்தப் பாத்திரத்திலும் அவர் குறைவுற்றதில்லை. அது தான் அவரைச் சந்திப்பதற்கான மேலான ஆர்வம் எனக்கு வந்தது.

1981இல் முதன் முதலாகப் பேராசிரியர் சிவத்தம்பியைசந்தித்து உரையாடியபோது, உடல் குலுங்கச் சிரித்தவாறு சொன்னார், “எடேயப்பா உவன் எஸ்.பொ. என்னைப்பற்றி ஓரிடத்தில் எழுதும்போது `பூதத்தம்பி’ என்று குறிப்பிட்டான். நான் அவன் எழுதிய எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதை மாத்திரம் வாசிச்சு சிரிச்சடாப்பா என்றார்” அவர் உடலும், உடல் குலுங்கிய சிரிப்பும், அந்த வார்த்தைகளும் அச்சூழலுக்கு மேலும் அழகைக் கொடுத்தன.

இதனை எஸ்.பொ. அவர்களுக்கும் கூறினேன். “இதை இப்போதும் அவன் ஞாபகம் வைத்திருக்கிறானா?” என்று விட்டு சிரித்தார். எஸ்.பொ.வின் கண்ணாடிக்குள்ளால் தெரிந்த கண்களின் சிரிப்பும் அழகாக இருந்தது.

ஆனால்,உரிமையாகவும் கதைத்தார் என்ற போதிலும் எஸ்.பொ.விற்கு சிவத்தம்பி மீது ஏதோ ஒரு `கறழ்’ தொடர்ந்து கொண்டே இருந்தது. அதனை இங்கு கிளறப் போவதில்லை.

தமிழ் நாட்டில் ஈழத்துப் படைப்பாளிகள் என்றால், உடன் தெரிகின்ற பெயர் எஸ்.பொ. என்பவர். அந்தளவிற்கு அவர் பலரை ஆகர்ஸித்து இருக்கின்றார். `காலச்சுவடு’ பதிப்பகம் தனது கிளாசிக் நூல் வரிசையில் எஸ்.பொ.வின் ‘தீ’ நெடுங்கதையையும் இணைத்துக்கொண்டது. உண்மையில் செவ்வியல் படைப்புத் தான்.`தீ’ நாவல் பற்றிக் கூறுகின்றபோது `சடங்கு’ நாவலை விட்டு அப்பால் செல்ல முடியாது. என் பதின்ம வயதுகளில் அதனை முதன் முதலில் வாசித்தேன். மூன்று முறைக்கு மேல் அதனை வாசித்தாயிற்று. பதின்ம வயதில்அதனை வாசிக்கின்றபொழுது புரிந்தும் புரியாமல் இருந்தது அந்த எழுத்து.

`என்ன இப்படி எழுதுகிறாரே’ என்றும் கூச்சப்பட்டேன். ஊரில் குடும்பத்தை விட்டு கொழும்பில், வேறு வெளி இடங்களில் பணிபுரிந்து விடுமுறையில் ஊருக்கு வரும் ஒவ்வொருவரினது முகத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்து `அரியண்டப்பட்டேன்’. என்பதனை இங்கு சொல்ல வேண்டும். அந்தளவிற்கு என்னை பாதித்த நாவல் `சடங்கு’

`சடங்கு’ நாவலை இரண்டாம், மூன்றாம் முறை வாசிக்கின்றபோது பக்குவப்பட்டிருந்தேன். அதன் பிறகு தான்அந்நெடுங்கதையின் இன்னொரு பரிணாமம் தெரியவந்தது. செந்தில் நாதனின் `அந்தரிப்பால்’ நானும் அலைக்கழிக்கப்பட்டேன். எஸ்.பொ.வின் எழுத்தின் வல்லமை அதுவேயன்றி வேறொன்றுமல்ல.

1940களில் யாழ்ப்பாணச் சமூகத்தை குறுக்கறுத்துச் சென்றது எஸ்.பொ. எழுதிய `நனவிடை தோய்தல்’ இதனை ஒரு புதிய இலக்கியம் என்கிறார் எஸ்.பொ. ஓர் அனுபவச் சித்திரிப்பாக அது எனக்கு படுகிறது. `புதிய நாடு படைக்க எழுச்சி பெறும் வெறியனுக்கு அந்த மண்ணுக்குரிய தனித்துவ இலக்கியம் படைக்கும் ஓர்மமும் உண்டு’ என்று தான் `நனவிடை தோய்தல்’ படைப்பை எழுதியதாகச் சொல்கிறார். “நாளைய ஈழவர், நேற்றைய ஈழத்தவரின் வாழ்க்கையின் கோலங்களையும் செப்பங்களையும் அறிவதற்கு இலக்கியம் வேண்டாமா?” என்று கேட்டவாறு `நனவிடை தோய்கிறார்’ எஸ்.பொ.

`வசன நடை கைவந்த வல்லாளர்’ என்று ஆறுமுக நாவலரைச் சொல்கின்றவர் பலர். ஆறுமுகநாவலரின் வாரிசு நானே என்று, தன்னை வழிமொழிகின்றார் எஸ்.பொ. அவர்கள். உண்மையும் அதுவே. எஸ்.பொ.வின் மொழிநடை எவருக்கும் கைவந்ததல்ல. அதில் கவிதை உண்டு, சிக்கெடுத்து புரிய வேண்டிய மொழி நடை உண்டு, வாசித்து புரிந்த பின் மழையில் நனைந்த சுகமும்உண்டு.

இவைகள் இருக்கட்டுமன் ஒரு புறம். இவர் தந்தைக்குத் தோழனாக விளங்கியதை `நனைவிடை தோய்தல்’ இல் பல இடங்களை கவனிக்கலாம். மைந்தனுக்கு தோழனாக இருந்ததை வாசித்திருக்கின்றேன். மைந்தனின் காதலியை மைந்தனுடன் சென்று ஒளித்து நின்று பார்த்தவர் எஸ்.பொ. இதனை மேலும் விபரிக்கத் தேவையில்லை. தந்தைக்கும் மைந்தனுக்கும் தோழனாக விளங்குவது யாருக்குத் தான் சாத்தியமாயிற்று.

மித்ர என்கின்ற இவரது மைந்தன் அர்ச்சுனா என்றபெயரில் விடுதலைப் புலி போராளியாகி மாவீரர் ஆகிறார்.அர்ச்சுனாவின் வீரம் கண்டு, யாழ்ப்பாண வீதிகளில் முக்கிய வீதியான ஸ்டான்லி வீதியை `அர்ச்சுனா வீதி’ என பெயர் மாற்றம் செய்கிறார்கள் விடுதலைப் புலிகள்.அப்போது நிகழ்ந்த வேறொரு எழுத்தாளரின் `சின்னத்தனங்களையும்’ எனக்குச் சொல்லியிருந்தார்.

அது நிற்க,ஒரு மகனை மாவீரர் ஆக்கி அதனை பெருமையாகச்சொல்லிச் செல்லும் தந்தையை நான் கண்டதில்லை.எவ்வாறாயினும் அவர் ஒரு பெருமகனார்.

எழுந்து நின்று, நெஞ்சால் அவரை என் கையெடுத்துக் கும்பிடுகின்றேன்.