கடவுளே என்று கதறவா? ஆண்டவனே என்று அலறவா?

962

எது செய்தால் தகும். இதை எழுத முனைகையில் என் கை பதறுகிறது. மனம் விம்மி வெடிக்கிறது? நீதி இன் னொரு முறை தூக்கிலிடப்படப் போகிறது. நியாயம் இன்னொரு முறை சுவரில் அறைபட்டு கொல்லப்படப் போகிறது. அறம் வெல்லும் என்பதெல்லாம் பொய் என்று அறைகூவப்படப்போகிறது.

யாரை இறைஞ்சுவோம்? யாரைக் கெஞ்சிக் கேட்போம்? கடவுளேயென்று கதறினால் ஏதுமாகுமா? ஆண்டவனேயென்று அலறினால் அது நிகழாமல் போகுமா?  இம் மூவரினதும் உயிரை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றித்தா என்று எவரைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்ச?

எங்கள் உடன் பிறப்புக்கள் அவர்கள் எங்கள் உதிரங்கள், எங்கள் உயிரோடு உயிராய் ஒன்றிக் கலந்தவர்கள். அவர்களுக்கு ஏதும் நிகழக்கூடாது மனம் துடியாய் துடித்து அதை விரும்புகிறது. ஏதும் நற்செய்தி வராதா என்று காது கூர்ந்து கவனிக்கிறது. இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக் கையிலே அந்தச் செய்தி வந்தடைந்து விடும் என்று மனது நம்புகிறது.

இத்தருணங்களிலேயே கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட என்னை நான் நொந்து கொள்கிறேன். அந்த ஒருநம்பிக்கையிருந்தால் என் மனப்பாரம் எத்தனையோ மடங்கு குறைந்து விடும். ஆறுதல் செய்தி அடிக்கடி வந்து விழும் என் நித்திரையில் ஒரு பாதி நிம்மதியாவது நெஞ்சில் எழும். அப்படியொருவர் இருந்திருந்தால் இத்தகைய அனர்த்தம் எதுவுமே நிகழாமல் போயிருந்திருக்கும்.

28.01.98ம் நாள் அன்று இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை என்ற தீர்ப்பினை சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதம் அவர்கள் வழங்கியிருந்தார். வழக்கொன்றில் குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் துÖக்குத் தண்டனை என தீர்ப்பளிப்பது உலகக்குற்றவியல் நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை இதுவே உலகை ஒரு முறை அதிரச்செய்தது. இத்தீர்ப்பின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அதிகாரம், மமதை தென்னாசியாவின் மன்னாதி மன்னன் நான் என்ற இந்தியாவின் அகங்காரம்.

வேறொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும் குற்றஞ் சாட்டப்பட் 26 பேரும் இராஜீவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்று தெரியாதவர்கள். சித்திரவதை மூலம் திணிக்கப்பட்ட ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டதே இவர்களது தலையெழுத்தை மாற்றியது. வெறும்ஊகங்களும் சந்தேகங்களும் எழுமானங்களுமே. நவநீதம் என்ற நீதிபதியின் கண்களை மறைத்தது. குரூரமான இத்தீர்ப்பினை பொய்மை’ கலந்து எழுதி பேனாவைக் குத்தி உடைத்து அவலமான ஒரு நாடகத்தை நடாத்தினார் நவநீதம்.

அப்பொழுது ‘ஏது செய்தோம் நாம்’என்று ஒரு சிறு கைநூலை ‘தமிழ் மரணதண்டனைக் கைதிகளின் விடுதலைக்கான குழு’ என்ற அமைப்பினூடாக வெளியிட்டோம். அதில் இவ்வாறான வாக்கியத் தொடர் ஒன்றினை எழதியிருந்தேன்.

தமிழைப் பேசினோம் அந்தத் தவறொன்றைத் தவிர வேறொன்றும் செய்ததில்லை. ஆரென்றும் கேட்காமல் அள்ளி அன்பு சொரிந்தோம் ஆடு அம்மா என்று அலறி அழுகிறதே என்று அள்ளிக் குழை போட்டேம். நாய்க்குக் கல்லெறிந்து கதறியழப் பார்த்ததில்லை. வாழை வாடுகிறதே என்று வாய்க்கால் வெட்டி நீர் வார்த்தோம். எமக்கேன் இந்த விதமாய் நிகழ்கிறது. உங்களுக்கு அது நிகழ்தால் உணர்ந்து தான் இருப்பீர்கள் ஐயா கலங்காதே என்று ஆறுதல் சொல்லி அணைப்பார் எவருமே இல்லையா?

’91ம் ஆண்டு அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 98ம் அண்டு க்குத் தண்டனைத்தீர்ப்பு வருகிறது. ஆயுள் தண்டனை என பலருக்கு அது குறைக்கப்பட்டு சிலருக்கு விடுதலை கிடைக்க எஞ்சி உள்ளவர் மூன்று சீவன்கள். பேரறிவாளன் சாந்தன் முருகன். இவர்களுக்குத் தான் அவர்கள் கைது செய்யப்பட்டு இருபது வருடங்களின் பின்னர் தூக்கு.

வேலூர் சிறையின் துÖக்கு மேடையைச் சுத்தப்படுத்த எவரும் தயார் இல்லை. தமிழ் நாட்டு மக்களிடம் தான் அவ்வளவு உணர்வு மண்டிக் கிடக்கிறது. சிறை அதிகாரிகளே அதைச் சுத்தப்படுத்தினர். தமிழகமே பொங்கிய படியும், குமுறியபடியும் பூகம்ப வெடிப்புக்கு ஆயத்தமாகவும் காத்து நிற்கிறது. உணர்வுத் தீ கொழுந்து விட்டெரிந்த செங்கொடியின் உடலை தீ நாக்குகள் அணைத்துக் கொண்டன அவள் அண்ணன்மாரின் சாவை அவளது சாவு தடுக்கும் என்று உளமார நம்பினாள். ‘என்பிள்ளை செங்கொடியே உன் தீரத்துக்கும் ஓர்மத்துக்கும் தியாகத்திற்கும் முன்னே நாங்கள் எங்கேயடியம்மா நிற்கிறோம்?.

 நாங்கள் எங்கு நிற்கிறோம் நல்லூர்த் திருவிழாவில் இலட்சக்கணக்கில் புடை சூழ்கிறோம். பொப் பாடி பைலா ஆடுகிறோம். எங்கள் பெயரைச் சொல்லி மூன்று உயிர்கள் சாவின் கயிற்றில் தலையைக் கொடுத்து நிற்கின்றன. எந்த ரோஷமும் மானமும் உணர்வுமில்லாத ஈனப்பிறவிகள் நாங்கள். புலம் பெயர் தேசங்களிலும் நாம் இது குறித்த எந்த அக்கறையுமற்று வாளாவிருக்கிறோம். தேரும், கொடியும், தீர்த்தமும் காவடி தூக்கியும் கரகமாடியும் காலம் கழிக்கிறோம்.

நண்பர்களே! அன்றாடக் கடமைகளை நாங்கள் செய்யத் தேன்றும் மகிழ்வான நாட்களை நாங்கள் கழிக்கவும் வேண்டும். உண்டு உடுத்து உறங்கி சீவிப்பதில் எந்தத்தவறும் இல்லை. எங்கள் வீட்டை எங்கள் குடும்பத்தை நாங்கள் தான் கவனிக்க வேண்டும். ஆனால் எங்களுக்காக, எங்கள் உரிமைக்காக, எங்கள் இனத்தைச் சேர்ந்தஉணர்வாளர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கின்ற பொழுது, தங்கள் உதிரத்தைச் சிந்துகிற பொழுது, நாங்கள் அது பற்றி எந்த அக்கறையும் அல்லாது வாழ்தல் என்பது எந்த வகையில் நியாயம்.

செங்கொடி உயிர் கொடுக்கிறாள். சீமான் உணர்வைக் கொடுக்கிறார். புலம்பெயர்ந்த தேசத்தில் நாங்கள் என்னசெய்கிறோம். ஈழ தேசத்தில் எதைச் செய்கிறோம். நினைக்கையில் வேதனையாக இல்லையா? சக மனிதரின் துக்கத்தில் எங்களிடம் ஒரு துளி அக்கறையாவது இல்லையா? சிந்தியுங்கள் ண்பர்களே!
நம்புகிறேன் தூக்குக் கயிறு அவர்கள் கழுத்தை இறுக்காது என்று நம்புகிறேன். ஒரு கவிதை வரி எங்கள் எல்லாக் காயங்களையும் ஆற்றட்டும்.

‘ஒரு கோதுமைக் கதிரின் விதைகள் கோடிக் கணக்கில் பசியகதிர்களாய் சமவெளியை நிரப்பவே செய்யும்.’