ஈழத் தமிழ் மக்களின் தேசிய அரசியல், கட்சிகளில் மையம் கொள்ளாது பிரச்சினைகளில்மையம் கொள்ளும் போக்கிலேயே எதிர் காலத்தில் வளர்ச்சியடையும் என்பதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. இது தமிழ் மக்களின் தேசிய அரசியலை ஆரோக்கியமான வழிமுறையில் வளர்த்துச் செல்வதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து அமோக வெற்றியினை வழங்கியிருந்தனர். “எமது வாக்குகள் மூலம் எமது சார்பில் இயங்கும் உரித்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கி விட்டோம். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் எமக்குச் சம்மதமே’’ என்று மக்கள் தம்பாட்டில் வாழாதிருந்து விடவில்லை. இதனைதமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி கோரும்விடயத்தில் தாயகத் தமிழ் மக்கள் தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள். தமக்கு உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவும் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் வகையிலான ஒரு பொறிமுறையினை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்தியக்கத்தில் மக்கள் தம்மை ஆர்வத்தடன் இணைத்து வருகிறார்கள். இதில் கட்சி பேதங்களை கடந்து தாம் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினைக்கு தாம் விரும்பும் ஒரு தீர்வு முறையை வலியுறுத்தும் வகையில் மக்களின் செயற்பாடு அமைநதிருக்கிறது. தமிழர் தாயகப் பகுதிகள் அனைத்திலும் இக் கையெழுத்தியக்கம் நடைபெற்று வருகிறது.
அண்மையில் அமெரிக்காவின் வெளிவிவாகரத் துணைச்செயலர் பிஸ்வால் கொழும்பில் வைத்துத் தெரிவித்து கருத்துக்கள் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறையொன்றினை ஏற்படுத்தும் அமெரிக்காவினது திட்டத்தினைப் பகிரங்கப் படுத்தியிருந்தது. ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்குப் பின்னர் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் அமெரிக்கா, ஆட்சி மாற்றத்தைத் திடப்படுத்தும் நோக்கில் இத்தகைய உள்நாட்டுப் பொறிமுறை குறித்துச் செயற்படத் தொடங்கி விட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சிறிலங்காதொடர்பாக விசாரணை அறிக்கை மார்ச் மாதத்தில் வெளியிடப்படாது செப்டம்பர் மாதத்துக்குபிற்போடப்பட்டதும் அரசியற் காரணங்களால்தான் என்பதனை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் ஏதும் இருக்கவில்லை. இந்த உள்நாட்டுப் பொறிமுறைக்கு அனைத்துலக நிபுணர்களின் பங்களிப்பும் கண்காணிப்பும் இருக்கும் என்ற காரணத்தைக்கூறி இதற்கு நம்பகத்தன்மையினை ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்கா நம்புவதாகத் தெரிகிறது. இத் திட்டம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆட்சிமாற்றத்தின் பின் அமெரிக்க அதிகாரிகள் செயற்படத் தொடங்கி விட்டனர். கூட்டமைப்புத் தலைமைக்கும் இது தெரிவிக்கப்பட்டு இவர்களின் ஒப்புதலும் இதற்குப் பெறப்பட்டிருக்கிறது. விசாரணைப்பொறிமுறை குறித்துநாடாளுமன்றத் தேர்தலின்முன் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களை உன்னிப்பாக நோக்கின் இது தெளிவாகும். இது குறித்து இக் கட்டுரையாளர் உட்பட பலர் முன்னெச்சரிக்கை தரும்கருத்துக்களை வெளிப்படுத்தியுமிருந்தனர். சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படத் தயாரிப்பாளர் கலம் மக்ரேயும் இத்தகைய உள்நாட்டுப்பொறிமுறை குறித்துக் குறிப்பிட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையும் செய்திருந்தார். இருந்த போதும் பரந்துபட்ட மக்களைப் பொறுத்த வரையில் பிஸ்வால் முன்வைத்த கருத்துகளைத் தொடர்ந்தே இவ் விடயம் மிகுந்த கவனத்துக்குரியதாகியிருக்கிறது.
உள்நாட்டுப்பொறிமுறை குறித்து அமெரிக்கத் திட்டம் பகிரங்கப்படத்தப்பட்ட பின்னர் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முன்னெடுப்பில் அனைத்துலக நீதி கோரும் பொறிமுறையினைக் கோரி வடமாகாணசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து அனைத்துலக நீதி கோரும் நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம் எடுத்திருந்தன. தங்கள் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறியத் தந்திருந்தன. இவ் விடயம் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்ககைள் குறித்தஆராய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டிய கூட்டத்தில் பலரும் ஆர்வத்துடன் பங்கு பற்றியிருக்கின்றனர். இக் கூட்டத்தின்பெறுபேறாக சர்வதேசப் பொறுப்பக்கூறல் பொறி முறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்சிவநாதன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக் குழுவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் இணைப்பாளராக பணியாற்றுகிறார். இக் குழு கட்சிகளைக் கடந்து அனைத்துலக நீதி கோரும் பிரச்சினைகளில் ஒத்த கருத்துடன் இருக்கும் அனைவரையும் ஒரு குடையில் இணைக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது.இக் குழுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் தமது இக் குழு ஏற்பாடு செய்திருக்கும் கையெழுத்தியக்கத்துடன் தம்மை இணைத்திருக்கின்றனர். மேலும் இவ் விடயம் குறித்து வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பிர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி போன்றோர் முன்னெடுக்கும் கிளிநொச்சி -நல்லுÖர் நடைபயணத்திற்கு சர்வ தேசப் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு ஆதரவு வழங்கியிருக்கிறது.
தற்போது தாயகத்தில் நடைபெற்று வரும் விடயங்களை உன்னிப்பாகப் பார்த்தால் ஒருவிடயம் துலக்கமாகத் தெரிகிறது. அனைத்துலக விசாரணை கோரி மக்கள் கட்சிகளைக் கடந்து திரளடைந்து வருகிறார்கள். இவ்வாறு திரளடைவதற்கான அமைப்புரீதியான ஏற்பாடுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னின்று வழங்கி வருகிறது. தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காத மக்கள் இவ் விடயத்தில் முன்னணியினை நிராகரிக்கவில்லை. மாறாக சர்வதேசப் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் உருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பங்கை நன்கு அறிந்திருந்தும் மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். மக்களின் இப் பங்குபற்றல் பல்வேறுவகையில் ஆவணப்படுத்தப்பட்டும் வருகிறது.
இப்போது எழும் கேள்வி மக்களின் அனைத்துலக நீதிகோரும் பொறிமுறைக்கான கோரிக்கைக்கு அமெரிக்கா உட்பட்ட அனைத்துலக சமூகம் எவ்வாறு பதிலளிக்கப் பேகிறது என்பதுதான். இதற்கு தமிழ் மக்களின் அரசியற் பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் இக் கோரிக்கைக்கு எவ்வளவு துÖரம் தலைவணங்கப் போகிறது என்பதுவும் முக்கியமானது. இராஜதந்திர உறவுகள் என்றகாரணத்தைக்கூறி அனைத்துலுக நீதி கோரும்நிலைப்பாட்டைத் தமிழர் தலைமை கைவிடப் போகிறதா? அல்லது அனைத்துலக நீதியினைக் கோரி அதன் அடிப்படையில் தனது இராஜதந்திர உறவுகளைக் கையாளப் போகிறதா? கூட்டமைப்புத் தலைமையுடன் நெருக்கமாகமான தொடர்பில் இருக்கும் சில `இராஜதந்திர விற்பன்னர்கள்’ அமெரிக்காலைப்பகைக்கக்கூடாது என இப்போதே வகுப்பெடுக்கத் தொடங்கி விட்டனர். தமிழ் மக்களின் சம்மதம் இல்லாதவொரு தீர்மானத்தை இவ் விடயத்தில் அமெரிக்கா எடுப்பின் அதன் தார்மீகத்தன்மை கேள்விக்குள்ளாகும். இதனால்அமெரிக்கா முன்வைக்க முனையும் உள்நாட்டுப்பொறிமுறைக்கு தமிழர் தரப்பின் சம்மதமும் தேவைப்படும். இந்தச் சம்மதத்தை கூட்டமைப்புத் தலைமை வழங்குமா? அல்லது தமிழ்மக்களின் எழுச்சி அதனைத் தடுத்து நிறுத்துமா?நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!