கட்சி அரசியலைத் தாண்டி விடுதலையை நோக்கி..
கோபி
தென்னாபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ANC) அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக உலகெங்கும் உள்ள பல அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களது பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவுக்கு சென்று இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் புலம்பெயர்நாடுகளில் இயங்கும் மக்களவைகள், உலகத்தமிழர் பேரவை ஆகியவற்றுக்கும் இவ்வழைப்பு வழங்கபட்டன. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அதன் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார், சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். தென்னாபிரி;க்க நிறவெறிக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராடி அந்நாட்டின் பெரும்பான்மையினரான கறுப்பின மக்களின் ஆட்;சியை கொண்டு வருவதில் ஏ.என்.சி அமைப்பின் பணி போற்றத்தக்கது. விடுதலை நோக்கிய அவர்களது நீண்ட பயணத்தில் அவர்கள் பட்ட இன்னல்கள், அவற்றிலிருந்து மீண்டுவந்து ஆட்சிபீடமேறியமை என்பன உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஏ.என்.சியை உயர்த்தியுள்ளது. அத்தகைய ஒரு விடுதலை அமைப்பு தமது விழாவிற்கு தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்தமையையிட்டு உலகத் தமிழர்கள் உவகை கொள்கிறார்கள்.
மேற்படி விழாவில் கலந்து கொள்வதற்காக தென்னாபிரிக்காவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஏ.என்.சி தங்களை அழைத்ததன் மூலம் கூட்டமைப்பினை ஒரு விடுதலை அமைப்பாக ஏற்றுக்கொண்டுள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். கொழும்பு சட்டத்தரணி சுமந்திரன் “விடுதலை அமைப்பு” என்ற அடையாளத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் ஏற்றுக்கொள்கிறாரா என்பதில் ஐயமிருப்பினும், அவரது கருத்தினை வரவேற்போம். அண்மையில் தமிழ்க் குடிசார் சமூகத்தினர் கூட்டமைப்பிற்கு விடுத்த பகிரங்க விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுமந்திரனும் அவரது சகாக்களும் கவனத்திலெடுத்து அதேற்கேற்ப செயற்படுவார்களேயானால், ஏ.என்.சி கொடுத்ததாக குறிப்பிடப்படும் அங்கீகாரம் கூட்ட்மைப்பிற்கு பொருந்துவதாக அமையும்.
குடிசார் சமூகத்தின் விண்ணப்பத்தில், “தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் த. தே. கூ வைக் கருதுகின்றார்கள். இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் த. தே. கூ தொடர்ந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் த. தே. கூ. க்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பினை ஒரு விடுதலை அமைப்பாக இன்றைய இளைய தலைமுறை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால் அத்தகைய ஒரு குறிக்கோளுடனேயே கூட்டமைபின் முன்னோடிகளான தமிழரசுக்கட்சியும், தமிழர் விடுதலைக்கூட்டணியும் உருவாக்கப்பட்டன என்பதனை மறுப்பதற்கில்லை. தமிழரசுக்கட்சியும் தமிழ்க்கொங்கிரஸ் கட்சியும் இணைந்து உருவாக்கிய தமிழர்கூட்டணி, பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டமைக்கு அதனை பாலஸதீன விடுதலை இயக்கம் போன்ற ஒரு விடுதலை அமைப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற இலக்கு காரணமாக அமைந்தது. 1976ம் ஆண்டு, இதனை விளக்கி ஒரு அறிக்கையினை தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டிருந்தது. ஆனால் பின்னர் வந்த நாட்களில் அது விடுதலை அமைப்பாக செயற்படாமல் வெறுமனே கட்சி அரசியலை நடாத்திவந்தது என்பது நாமறிந்த வரலாறு.
விடுதலைபுலிகள் அமைப்பு இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டமையுடன், காலம் குறிப்பி;ட்டுச் சொல்வதானால் மே 2009 இற்கு பின்னர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படவேண்டிய பொறுப்பு கூட்டமைப்பின் மீது விழுந்தது. இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் முற்றிய இனவாதம் கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக அமைந்திருந்தது. இந்நிலையில், சிறிலங்கா அரசின் இனவழிப்புக் கொடுமைகளை எதிர்ப்பு அரசியலின் தோல்வியாகச் சித்தரித்து, இனி இணக்க அரசியல்தான் இருக்கின்ற ஒரு வழிமுறை என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்க பல்வேறு சக்திகள் முனைப்புக் காட்டின. மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும், ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட தோல்வி மனப்பானமையையும் வாய்ப்பாக உபயோகித்து, தமது தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தியவர்கள் கருத்துருவாக்க அடியாட்களாக உருவாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு பின்னணியில் ஆதரவு வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் தவிர்ந்த வேறு சில சக்திகளும் இருந்தார்கள். இன்று இந்த அடியாட்களோ அல்லது இவர்களை இயக்கியவர்களோ எதிர்பாhர்த்திராத வகையில் நிலமை மாற்றமடைந்துள்ளதனை குடிசார் சமூகத்தின் விண்ணப்பம் வெளிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலிலும், உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மௌனமாக வெளிப்படுத்தியமையை விளக்கமாக விபரிப்பதாக இவ்விண்ணப்பம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் விடயத்தில் மிகத் தெளிவாக இருப்பதனையும், அவற்றை அடையும் விடயத்தில் அவர்கள் எத்தகைய தடையினையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதனையும் துணிகரமாக குடிசார் சமூகத்தினர் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்விண்ணப்பத்தினை ஆக்கபூர்வமான பரிந்துரைகளாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதில் கூட்டமைப்பு மட்டுமல்லாமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் அக்கறை காட்டவேண்டும்.
குடிசார் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பான எதிர்வினைகள் இரு வேறு தரப்பினடமிருந்து வெளிவந்துள்ளன. ஒரு தரப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர விசுவாசிகள், தமிழ் மக்களின் விடுதலையை காட்டிலும் கூட்டமைப்பினரின் நலனை முதன்மைப்படுத்துபவர்கள். இவர்கள் இவ்வறிக்கையினை தமது கட்சிக்கு எதிரான செயற்பாடாக கருதி தமது ஆத்திரத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள். மற்றயதரப்பு புலி எதிர்ப்பாளர்களாக இனங்காணப்பட்ட தமிழ்த்தேசிய எதிர்பாளர்களான கூல், கதிர்காமர், இராஜசிங்கம் குடும்பங்களைச் சேர்ந்த யாழ் புரட்ஸ்தாந்து மையவாதக் குழுவினர். தமது ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழச் சமூகத்திற்கும் தமிழ்க்குடிசார் மற்றும் அரசியல் சமூகங்களுக்கும் முஸ்லீம் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒரு விண்ணப்பத்தை முன்வைத்திருக்கிறார்கள். (பொதுவாக ஒட்டுமொத்த தமிழரும் மேற்குறித்த வகைப்படுத்தலில் அடங்கிவிடுவதனால், வெளியே நிற்கும் இவர்கள் யார் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது) இந்த அறிக்கையில் நேரடியாக தமிழ்க்குடிசார் சமூகத்தின் விண்ணப்பம் பற்றி குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் தமிழ் மக்கள் மீளவும் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை விரைவுபடுத்தினால், அதற்கான எதிர்ப்பு எங்கிருந்தெல்லாம் வரும் என்பதனை அறிந்து கொள்வதற்கு இத்தகைய எதிர்வினைகள் உதவுகின்றன. முன்னர் குறிப்பிட்ட கருத்துலக அடியாட்கள் சலித்துவிடாமல் பார்ப்பதிலும் இச்சக்திகள் அக்கறை செலுத்துகின்றன என்பது இவ்வறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.
குடிசார் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பில், அலைந்துழல்வு தமிழ் அமைப்புகள் காட்டுகின்ற மௌனம் அவர்கள் தாயகத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. விடுதலை அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்துகொண்டு வௌ;வேறு தளங்களில் செயற்பட வேண்டிய இவ்வமைப்புகள் வெறுமனே லொபி (Lobbying) அமைப்புகளாக குறுகிக்கொள்ள முடியாது. மாறாக தாயகத்தில் விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்ய இவர்கள் முன்வரவேண்டும்.
நாடு கடந்த அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள், குறிப்பாக அதன் உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகள், அதனை மக்கள் மத்தியில் அந்நியப்படுத்தி அதன் இருப்பின் தேவையை இல்லாதொழித்துவிடும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக, “மக்கள் போராட்டங்களில் தாம் ஈடுபடப்போவதில்லை, ஒரு அரசாங்கம் என்ற வகையில் இராசதந்திர வழிமுறைகளை பின்பற்றிவருகிறோம்” போன்ற கருத்துகள் அவர்களை விடுதலை அரசியலிலிருந்து வெளித்தள்ளவிடும். புலம்பெயர் தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு என்ற முறையான அங்கீகாரமும் இல்லாமல், விடுதலை அமைப்பாகவும் செயற்படாமல் இருக்கும் ஒரு அமைப்பின் தேவையையிட்டு மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது. “நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர்” என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் அதன் பிரதமர் உருத்திரகுமாரனும் அவரது மதியுரைஞர் குழுவும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இறுதியாக, தமிழ் மக்களுக்கான விடுதலையமைப்பு எனக்குறிப்பிடும்போது அது தனித்து ஒரு அமைப்பாக அமைய வேண்டிய அவசியமில்லை பொதுவான இலட்சியத்தில் ஒருங்கிணைவாக செயற்படுவதே போதுமானதாக அமையும். விடுதலைப்புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் தாமே என அணிபிரித்து மோதுகின்ற குழுக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேணடும் என்பதே தமிழ்மக்களின் விடுதலையில் அக்கறைகொண்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.