களவும் கற்று மற..

113

சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று `வங்கிகளில் திருடுவது எப்படி’ என்றும் ஒரு பாடம் நடத்துகிறதாம். எதிர்காலத்தில் அவர்கள் வங்கிகளில் முகாமையாளர்களாக வரும் பட்சத்தில் இப்படியான திருட்டுக்கள் நடைபெறாவண்ணம் தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனால் மற்றமாதிரி நடந்தால்?

நாங்கள் சின்னவயதில் எவ்வளவுதூரம் `களவும் கற்று மற’ என்பதில் அக்கறையாக இருந்தோம் என்பதை நினைத்துக் கொள்கிறேன். மாங்காய் திருட்டு ஒரு பருவத்தில் என்றால், பப்பாசிப்பழம், இளநீர் என்று உயர்ந்து கொண்டே (மர உயரத்தைச் சொன்னேன்) போகும்.

எங்கள் ஊரின் சிறிய ரவுணின் எல்லைப்பகுதியில், ஒரு பொலிஸ்காரர் இருந்தார். சாதாரண பொலிஸ் அல்ல. பெரிய பதவியில் இருந்தவர். அவரைப் பற்றியதல்ல இந்தக் கதை. அவர் வீட்டு பப்பாசிப் பழங்களைப் பற்றியது.

எங்கள் ரவுண் பகுதிக்கு பேப்பர் வாங்க, வெளியூர்களில் வேலைசெய்யும் சித்தப்பா, மாமா போன்றோரை பஸ் ஏற்ற, திரும்பிவரும்போது அவர்களை கூட்டிக்கொண்டு வர என்று அடிக்கடி சைக்கிளில் போய் வரும் காலத்தில், எங்கள் மெயின் றோட்டுக்கு அருகில் இருக்கும் இந்த பொலிஸ்காரர் வீடும், அவரது பப்பாசி மரங்களும் எங்கள் கண்ணில் படாத நாளே கிடையாது.

அவரது வீடு மதில் சூழ, சிறிய அரண்மனைபோல இருக்கும். வீட்டின் முன்பக்கமாக, மதில் ஒரமாக வரிசையாக பப்பாசி மரங்கள் இருந்தன. அவற்றில் மஞ்சளும், பச்சையும் கலந்த வர்ணங்களில், கிளிகள் கொத்திய துவாரங்களுடன், பழங்கள் கொத்தாக இருக்கும். அவற்றைப் பார்க்கும் போதே, எங்கள் உமிழ்நீர் சுரப்பிகள் அதீதமாக வேலை செய்யும்.
சில நேரங்களில் பழங்கள் கனிந்து, அப்படியே பாதி `பிய்ந்து’ போய் காகங்கள் கொத்திக் கொண்டிருக்க காணும்போது வயிற்றெரிச்சலாக இருக்கும். `இருக்கட்டும்.. இருக்கட்டும்’ எங்களுக்கும் ஒரு காகம்(மன்னிக்கவும்.. காலம்) வரும் என்று சொல்லிக் கொள்வோம்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில், எங்கள் அம்மன் கோயில் பற்றை நிழலுக்குள், மரங்களிலிருந்து கீழே வந்து, மீண்டும் வளைந்து மேலே போகும் வலுவான கொடிகளில் இருந்து கொண்டு `மந்திராலோசனை` நடத்தும் வேளைகளில் ஒருநாள் இந்தக்கதையும் வந்தது.

`எதையும் செய்யலாம்.. பொலிஸ்காரன் வீட்டிலேயே திருட்டா.. அகப்பட்டால் விமோசனமே இல்லை’ என்ற ரீதியில் சிலர் உடனடியாகவே `ஜகா’ (ஜகா என்றால்பின்வாங்குதல்) வாங்கிவிட்டார்கள். நாங்கள் நான்கு பேர்தான் மிகுதியாகவிருந்தோம்.

எப்பவாவது ஒருநாள் எங்கள் ரவுண்தியேட்டரில் `இங்கிலீஸ்’ படம் ஓடுகிற நாளில் இரண்டாவது ஷோ பார்த்து விட்டு (அப்போதுதான் சனம் கொஞ்சம் குறைவாக இருக்கும்) வரும்போது எங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தீர்மானித்தோம்.

சிலபேர் இருக்கிறார்கள் – வெளித்தோற்றத்திற்கும், மூளையில் இருப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார்கள். (நான் கொஞ்சம் உரத்துச் சொல்லி விட்டேனா… ஏதோ குசினிக்குள் விழுந்து உடைந்தது மாதிரிக் கேட்டது?)

நான் சொல்லவந்தது இதுதான். நாங்கள் திட்டமிட்டபடி பார்த்த படத்திற்கும், வெளியில் ஒட்டியிருந்த படங்களுக்கும் சம்பந்தமேயிருக்கவில்லை. போதாதற்கு தியேட்டருக்குள் இருக்கும்போது எங்களுக்கு பயமாக வேறு இருந்தது. பயங்கரப் படம் என்று ஒன்றுமில்லை. நாங்கள் நாலு பேர்தான் தியேட்டருக்குள் இருந்தோம். இடைவேளைக்குப் பிறகு தியேட்டர்காரர் கிட்டத்தட்ட எங்கள் பொறுப்பில் விட்டு, விட்டுப் போனதுமாதிரி போய்விட்டார்கள்.

எல்லாம் முடிந்து, றோட்டில் கால் வைக்க கும்மிருட்டாக இருந்தது. நாலுபேரும் இரண்டு சைக்கிள்களில் வந்திருந்தோம். புறப்பட்டு இரண்டு வளைவு தாண்டி, பொலிஸ்காரர் வீட்டுக்கு முன்னால் வந்தபின் இருட்டுக்கு பழக்கப்பட சிறிதுநேரம் அசையாமல் நின்றோம். `சில் வண்டு’ச் சத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லாத மயான அமைதி. கொஞ்சநேரத்தில் பப்பாசிமரங்களும், பழங்களும் கண்ணுக்கு புலனாக, எங்கள் திட்டப்படி ஒருவர் மதிலில் ஏறி, மெதுவாக பழங்களை ஒவ்வொன்றாக பிடுங்கத் தொடங்கினார். மற்றவர் கீழே நின்று பக்குவமாக வாங்கி, சைக்கிள் ஹாண்டிலில் தொங்கிய சாக்குப்பையில் வைத்தார். அதே நேரத்தில் சைக்கிள்களில் இருந்த நானும், இன்னுமொருவரும், உதைத்தால் முன்னுக்கு வேகமாக உந்தித்தள்ளும் வகையில், `பெடல்’களை மேலே விட்டு, ஒரு காலை அதில் வைத்து, தயார் நிலையில் நின்றோம்.

வீட்டு விறாந்தையில் யாரோ வந்து நிற்பது போல இருக்கவும், மதில்மேல் நின்றவர் அசையாமல் மரம்போல நின்றார். மூச்சுவிட மறந்தவர்கள் போல் நாங்கள் நின்றோம். விறாந்தையில் நின்றவருக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

கும்மிருட்டு என்று சொன்னேன் அல்லவா… அன்று பின்னிலவு. திடீரென்று முகில்கள் விலகிப்போக, நிலவு `பளிச்’சென்று தோன்றி, அந்தச் சுற்றாடல் முழுவதற்கும் வெளிச்சம் போட்டது. அடுத்த நிமிசமே, `கள்ளன்..கள்ளன்..’ என்ற அவல ஓசையும், `அல்ஷேசியன்` நாயின் உறுமலும் தொடர்ந்து கேட்டன.
ஓரே மிதியில் எங்கள் சைக்கிள்கள் `விர்’ரென்று முன்னோக்கிப் பறந்தன. சிலவிநாடிகளின் பின்னர்தான், மற்ற இரண்டு பேரையும் விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. நான் `கிறீச்’ என்று `பிறேக்’ போட்டு நின்றேன்.

‘அவங்கள் முன் ஓழுங்கைக்குள்ளால் ஓடியிருப்பாங்கள்.. அந்த ஆள் (பொலிஸ்காரர்தான்) மோட்டார்ச் சைக்கிளிலை வந்தாலும் வரும்.. வாடா போவம்’ என்று அவசரப்படுத்தினான், நண்பன்.

மீண்டும் `தம்’ பிடித்து சைக்கிள் `பெடல்களை` உழக்கினோம். எங்களுக்கு முன்னால் இரண்டுபேர், தார்றோட்டில் சாறத்தைப் பிடித்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்கள். சைக்கிள் `டைனமோ` வெளிச்சத்தில் தெரிந்தது. எங்கள் கூட்டாளிகள்தான். அந்தஓட்டத்திலும், பப்பாசிப்பழம் அவர்களது `சண்டிக்கட்டு’க்குள் இருப்பதும் தெரிந்தது.

அருகில் போய்ச் சைக்கிள்களை நிறுத்தியதும், நிறுத்தாததுமாக, `பாரில்’ பாய்ந்தேறி உட்கார்ந்து கொண்டார்கள். பிரதான வீதியிலிருந்து எங்கள் வீட்டுப்பக்கம் போகும் `கல்`றோட்டில் திரும்பும் வரைக்கும் `மூச்சு பேச்சு’ இல்லை. வழியில் பெரிய தோட்டவெளி. மாரிகாலத்தில் மாத்திரம் தண்ணீர் நிற்கும் துரவுக் கிணற்றிற்கு (ஆழமில்லாதது.. சிமெந்தால் கட்டப்படாதது) அருகில் சைக்கிள்களை சரித்து வைத்துவிட்டு, `சரசர’வென்று, பப்பாசிப்பழங்களுடன் உள்ளே இறங்கினோம்.

பிறகென்ன.. துரவுக்குள் இருந்த கல்லொன்றில் குத்தி, பழங்களை துண்டங்களாக்கி, அணில் பற்களால் `நன்னுவது’போல சாப்பிட்டு முடித்தோம். அடியில் குட்டைமாதிரி தேங்கியிருந்த தண்ணீரில் கைகளை அலம்பிக்கொண்டோம்.

இனி வெளியே வந்து சைக்கிள்களை எடுத்துக் கொண்டு போகவேண்டியதுதான் பாக்கி. எங்கள் வீடுகளின் பக்கமாகப்போகும் `கல்’ றோட்டில் மோட்டார் சைக்கிள் போகும் சத்தம் கேட்டது. மெதுவாக எட்டிப் பார்த்தால், எங்கள் பக்கம்தான் போகிறது.

இடிந்துபோய் இருந்து விட்டோம். வெகுநேரமாயும் வீட்டுப்பக்கம் போன மோட்டார் சைக்கிள் திரும்பிவரவில்லை. ஒவ்வொருத்தராய் வீடுகளில் தேடப்படுகிறோம் என்று மெல்லிய குரல்களில் கதைத்துக்கொண்டோம். அப்படியே கண்ணுறங்கியிருக்க வேண்டும்.

அதிகாலைப் பொழுதில் தோட்டம் கொத்தவந்த எங்களுர்க்காரர் ஏதோ காரணத்தினால் `துரவு’க்குள் எட்டிப் பார்த்துவிட்டு, கத்திக் கொண்டு ஒடத்தான் நாங்கள் எழும்பி சைக்கிள்களைத் தூக்கிக் கொண்டு மற்றப் பக்கமாக ஓடினோம்.

ஒரு சந்தோசம். சாமத்தில் எங்கள் வீட்டுப்பக்கமாக மோட்டார் சைக்கிளில் போனவர், எங்கள் ஊரின் புதுமாப்பிள்ளை. எங்கோ தொலைவில் வேலை பார்க்கும் அவர் இப்படி வருவார் என்று அவரது வீட்டுக்காரருக்கே தெரியாதென்றால் எங்களுக்கு தெரிவது எப்படி..?

எழுதியது –
கே.எஸ். பாலச்சந்திரன்