சீமானின் நாம் தமிழர்கட்சிக்கு பெரும் தடையாக இருப்பவை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் கட்டமைப்பும் அவருக்கு எதிராக பல தரப்பில் இருந்தும் செய்யப்படும் சதிகளும் ஆகும். இந்தப் பெரும்தடைகளை தாண்டி தேர்தலில் காத்திரமான வெற்றி பெறுவது மட்டுமல்ல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு என ஒரு வாக்கு வங்கி உண்டுஎன்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் சீமானுக்கு உண்டு. வலிமை மிக்க ஊடகங்கள் பக்கத் துணையாக இல்லாமல் தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதனால்தான் ஒவ்வொரு கட்சியும் தமக்கு எனப்பத்திரிகைகள், வானொலிகள், தொலைக் காட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இந்தப் பாதையில் சீமானும் அவரது கட்சியும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்க்கின்றது.
திமுகாவின் கட்டமைப்பு
1966-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலுக்கு தீவிர பரப்புரை நடந்து கொண்டிருக்கும் போது அறிஞர் அண்ணாத்துரை அமெரிக்க நியூஸ்வீக் சஞ்சிகைக்கு அளித்தபேட்டியில் காமராஜருக்கு கிராமங்களில் உள்ளசெல்வாக்கைத் தகர்த்தல் மிகவும் கடினமான காரியம் என்றார். ஆனால் தேர்தலில் காமராஜர்தோற்கடிக்கப் பட்டு அண்ணா முதலமைச்சர்ஆனார். அகில இந்தியக் கட்சியான காங்கிரசைஅண்ணாவின் திமுக தோற்கடித்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் கட்டமைப்பு. அந்த கட்டமைப்பின் பின்னணியில் இருந்தவர் திமுகாவின் மூளை எனப் புகழப்பட்ட என் வி நடராஜன் ஆகும். 1960 முதல் 1975 வரை தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக பதவிவகித்தார் அவர். தி.மு.கவின் நிர்வாகத்தை மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என அமைப்பு ரீதியாக கட்டமைத்தவர்அவர். இந்த மாவட்டச் செயலாளர்களும் வட்டச்செயலாளர்களும் கிராமங்களில் திமுகாவின் செல்வாக்கை வளர்த்தெடுத்தவர்கள். திமுகஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் காலப்போக்கில் இந்த மாவட்டங்களும் வட்டங்களும் சிற்றரசர்கள் போல மாற்றப்பட்டனர்.
உள்ளுராட்சிஅமைப்புகளின் ஆட்சியும் திமுகாவின் கைவசமான போது இவர்கள் காட்டில் மழைதான். திமுக ஆட்சியில் ஊழல் பெருகிய போதுஇவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்த மாவட்ட மட்டத்திலும் வட்ட மட்டத்திலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் எது வந்தாலும் கட்சியின் விசுவாசிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். திமுகாவின் வாக்குவங்கியைத் தங்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மாவட்ட மற்றும் வட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களாகும்.
அண்ணா திமுகாவின் கட்டமைப்பு
எம்.ஜி.ராமச்சந்திரன் தனது அரசியல் செல்வாக்கின் அடித்தளமாக அமைந்தது அவரது இரசிகர் மன்றங்களாகும். இந்த இரசிகர் மன்றங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும்செல்வாக்கைப் பார்த்துப் பயந்த கருணாநிதி முதலில் தனது மகன் மு.க.முத்து என்பவரை இரசிகர் மன்றத்தினுள் புகுத்தி தன்வசமாக்க முதலில் முயன்றார். அது சரிவராமல் போக எம்.ஜி.ஆர் இரசிகர் மன்றங்களை தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என கட்சியில் தீர்மானம் கொண்டு வர முயன்றார். எம்ஜிஆர் சம்மதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் திமுகாவில் இருந்து விலகிய பின்னர் அவரது இரசிக மன்றங்கள் அவரது கட்சியின் ஆணி வேராகின. திமுகாவில் இருந்து வெளியேறிய அடிமட்டத் தொண்டர்களும் அவரது கட்சியில் இணைந்ததால் அதிமுகாவின் கட்டமைப்பும் திமுகாவிற்கு இணையாக உருவானது. இந்த இரண்டுகட்சிகளின் கட்டமைப்பு வலு தான் அவற்றை தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் வைத்திருக்கின்றது. அதை வைக்கோ ஐயாவால் உடைக்க முடியவில்லை. விஜயகாந்தால் முடியவில்லை. சீமானால் முடியுமா ?
சீமானுக்கு எதிராகப் பல சதிகள்
சீமான் ராஜ்பக்சவிற்கு பொன்னாடை போர்ப்பது போல ஒரு படத்தை போட்டோஷொப்பில் உருவாக்கி அதை இணையத் தளத்தில் பரவவிட்டுள்ளார்கள். சீமானின் முதல் படத்தில் ஒரு சிங்களப் பெண்ணை நடிக்க வைத்ததாகவும் பரப்புரைகள் செய்யப் படுகின்றன. ஆனால் சீமானின் முதற்படத்தில் நடித்தவர் மலையாள-சிங்களப் பெற்றோர்க்குப் பிறந்தவர். அந்தப் படத்திற்கு நிதி வழங்கியது இந்தியாவின் ரோ அமைப்பு என்றும் கதை கட்டி விடப்பட்டுள்ளது. பெரியாரின் பேரன் தான் எனச் சொல்லி அரசியலுக்கு வந்த சீமான் தனது முப்பாட்டன் முருகன் எனச் சொல்லியதையும் சீமானிற்கு எதிரான கருத்தாக முன் வைக்கப் படுகின்றது. பெரியாரின் பேரன் தமிழ்த் தேசியவாதம் பேசுவதும் திராவிடர்களை எதிர்ப்பது சரியா என்ற கேள்வியும் முன்வைக்கப் படுகின்றது. முன்னணி ஊடகங்கள் சீமானிற்கு எதிராகச் செயற்படுகின்றன. பல விவாதங்களில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொள்வது மறுக்கப் படுகின்றது. கருத்துக் கணிப்பில் நாம் தமிழர் கட்சி தொடர்பாகக் கருத்துக் கணிப்புத் திரட்டப் படுவதில்லை. விஜயகாந்த் தொடர்பான பல செய்திகள் முன்னணி ஊடகங்களில் அடிபடுகின்றன. அது எதிர் மறையானதாக இருந்தாலும் அது அவரைப் பிரபலப் படுத்துகின்றது. இந்த மாதிரியான எதிர்மறை விளம்பரங்கள் சீமானிற்குக் கிடைக்காமல் இருப்பதில் முன்னணி ஊடகங்கள் கவனமாக இருக்கின்றன.
சீமானும் ஆரிய எதிர்ப்பும்
சீமான் திரவிடக் கட்சிகளுக்கு எதிராக செய்யும் பரப்புரை பார்ப்பனர்களுக்கு வாய்ப்பாக அமையும் என ஒரு புறம் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றது. மறு புறம் சீமான் பார்ப்பனர்களின் கைக்கூலி என்றும் பரப்புரை செய்யப் படுகின்றது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் எல்லாமட்டத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின்தலைவரது படம் பொறித்த சட்டைகளுடன் செயற்படுகின்றார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு திராவிடக் கட்சிகள் ஏதும் செய்ய வில்லை என்ற கருத்து அவர்களால் முன் வைக்கப் படுகின்றது. ஆனாலும் அவர்கள் மிக வலுவாகச் செய்யும் பரப்புரை கன்னட ஜெயலலிதாவிற்கும் தெலுங்குகருணாநிதிக்கும் எதிரானதாகவே இருக்கின்றது. வெறும் ஈழப் பிரச்சனையை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியினர் தாம் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தமிழ் நாட்டுஆட்சியில் ஆதிக்கம் செலுத்துவ தற்கும் ஆரியமாயைக்கும் எதிரான உண்மையான தமிழ் இனப் பற்றுள்ளவர்கள் என்பதை மக்களுக்கு புரியவைப்பது இலகுவான காரியம் அன்று.
ஜெயலலிதாவின் தலைக்கு மேல் கத்தி
தமிழ்நாடு தேர்தல் மே மாதம் 16-ம் திகதி நடக்கவிருக்கும் வேளையில் மே மாதம் 10-ம் திகதி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கின் மேன் முறையீட்டு தீர்ப்புவெளிவரவிருக்கின்றது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜெயலலிதா ஏற்படுத்திய அதிருப்தியை வைத்துப் பார்க்கும் போது தீர்ப்பு ஜெயலலிதாவிற்குப் பாதகமாக அமையலாம். ஆனால் ‘அம்மா’ என்றால் சும்மா அல்ல. அவர் தனதுதேர்தல் அறிக்கையை (விஞ்ஞாபனம்) இன்னும்வெளிவிடாமல் இருக்கின்றார். தீர்ப்பு வெளிவந்த பிறகு ஓர் அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளிவிடலாம். அதில் மற்றக் கட்சிகளைத் திகைக்க வைக்கும் வகையில் இலவசங்கள் வழங்கும் வாக்குறுதிகள் உள்ளடக்கப் படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஆனால் தீர்ப்பு ஜெயலலிதாவிற்குப் பாதகமாக வந்தால் அதை சீமான் தனக்குச் சாதகமாக மாற்றும் பரப்புரையை மேற்கொள்ளலாம். ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகி பதவி இழக்கும் போதெல்லாம் பன்னீர்ச்செல்வம் பாதுகாபட்டாபிசேகம் செய்த பரதன் போல் முதலமைச்சராகப் பதவி ஏற்பார். ஆனால் அவர் இப்போதுகட்சியையும் பதவியையும் கைப்பற்றச் சதி செய்தார் என ஜெயலலிதா சந்தேகித்து அவருக்கு எதிராகப் பல இரகசிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்யும் சதிகளைக் கூட ஜெயலலிதா செய்கின்றார் என்று கூடச் செய்திகள் வருகின்றன.
ஆத்திரமடைந்த மோடியின் ஆட்சி
இந்திய நடுவண் அரசில் ஆட்சியில் உள்ளபாரதிய ஜனதா (பாஜக) கட்சியினர் ஜெயலலிதாவின் அண்ணா திமுகாவுடன் கூட்டணி அமைப்பதைப் பெரிதும் விரும்பினர். ஆனால் ஜெயலலிதா அதில் அக்கறை காட்டவில்லை. பாஜகாவுடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமியர்,கிறிஸ்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்கள், முற்போக்குச் சிந்தனை உடையவர் போன்றவர்களின் வாக்கை இழக்க வேண்டி வரும் என்பதால் பஜகாவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விரும்பவில்லை. இதனால் பஜகாவினர் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகி உளவுத் துறையை அண்ணா திமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக முடுக்கி விட்டுள்ளனர். அதிலும் தமிழர்களுக்குத் தொல்லை கொடுப்பதற்கு பல மலையாள அதிகாரிகளை தமிழ்நாட்டுத் தேர்தலைக் கண்காணிக்க அனுப்பியுள்ளனர். அவர்கள் பல திடீர் சோதனைகளை மேற்கொண்டு 70 கோடிரூபாக்கள் வரை வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.வாக்காளர்களுக்கு விநியோகிக்க மிக இரகசியமாகத் திட்டமிடப்பட்டு அவசர நோயாளர் காவுவண்டி (அம்புலன்ஸ்) ஒன்றில் எடுத்துச் செல்லப் பட்ட பணம் கூடப் பிடிபட்டது. நடுவண் அரசின் உளவுத் துறையினர் கட்சிகளின் உள் மட்டத்திலும் ஊடுருவி உள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்கே பணத்தை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்லப் பயப்படும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கின்றது. சந்தைகளில் ஆடு மாடு போன்றவற்றின் விற்பனை கூட இதனால் பாதிக்கப் பட்டுள்ளது. நடுவண் அரசின் இந்த நடவடிக்கை பெரும் பணக்காரக் கட்சிகளைப் பாதித்து சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு சிறு வாய்ப்பை வழங்குகின்றது.