மிக மிக சமீபத்தில் ஓர் எதிர்வினை ஆற்றும் நோக்கம் கருதி, ‘பாலஸ்தீன கவிதைகள்’ என்ற மொழி பெயர்ப்பு கவிதை நுாலை வாசித்தேன். கவிஞரும் தமிழ்ப் பேராசிரியருமான எம்.ஏ.நுஃமான் அவர்கள் அதனை மொழிபெயர்த்திருந்தார். பலஸ்தீன இஸ்லாமிய மக்கள் படும் துன்ப துயரங்களையும் அவர்களது நாடு காண் விருப்பையும், அவர்களது எதிரி மீதான போர் பிரகடனங்களையும் அக்கவிதை கொண்டு இலங்குவதால் அக்கவிதைகள் நுஃமானால் மொழி பெயர்க்கப்பட்டன போல் தெரிகின்றது ஏனென்றால், ‘காலச்சுவடு’ ஒக்டோபர் இதழில் “மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்து விட்டனர்” என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் வழங்கியிருந்தார். காழ்ப்பும் குரூரமும் போக்கிரித்தனமும் நிறைந்த நேர்காணல் அது. மக்கள் கவிஞராக மார்க்சீய வாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட நுஃமானால் அரசியலுக்கு அப்பாற் சென்று முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் குறித்து ஒரு துக்கக் குறிப்பு வரைய முடியவில்லை.
பிழையை யாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று தான் கணக்குப் பார்க்கிறார் இந்தக் கவிஞர். அவரே மொழி பெயர்த்த ஒரு வரிதான் சட்டெனக் கண்ணில் பட்டது. “அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்”. இவ்வரி நுஃமானுக்கு மாத்திரம் அல்ல முன்னர் ‘வெளிச்சம்’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த கருணாகரன் போன்ற கவிஞர்களுக்கும் பொருந்தும். இருக்கட்டும், இப் பலஸ்தீனக் கவிதைகளின் பல வரிகள் நம் வாழ்வுடனும் போருடனும் பிண்ணிப் பிணைந்திருப்பதனை கண்டுற்று வியப்புற்றேன். 1982ஆம் ஆண்டிலேயே இக்கவிதை நுாலை வாசித்து முடித்திருந்தேன். அவ்வவ்போது இக்கவிதை நுாலை எடுத்து புரட்டிப் பார்ப்பதும் உண்டு. ஆனால் இப்பொழுது எடுத்து வாசிக்கின்ற பொழுது வேறொரு பரிமாணம் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் துயரின் பிறகு, நமது தேசிய விடுதலைப் போர் பின்வாங்கலுக்கு உட்பட்ட பிறகு, இக்கவிதைகளும் இக்கவிதைகள் காட்டும் உணர்வுச் செறிவும் யாதார்த்தமும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை சிரித்ததும் அழுததுமாய் அக்கவிதைப் பக்கங்கள் என்னைப் புரட்டிப்போட்டன.
1982 வாக்கில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தின் முதல் பாடல் ‘பலஸ்தீனக் கவிதைகள்’ ஆக இருக்கும் என்று தான் நம்புகின்றேன். அக்கவிதைகள் தாம் எங்களை உசுப்பேத்தின. தேசிய விடுதலைப் போரிலும், கவிதையிலும், ஈடுபாடு கொண்ட செழியன் போன்ற கவிஞர்களுக்கு இதுவே கைநுாலாகவும் விளங்கியிருக்கலாம். குறிப்பாக சேரன் மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம் போன்றோரின் கவிதைகளும் இவ்கவிஞர்களை ஆகர்சித்திருக்கலாம். எனினும் `பலஸ்தீனக் கவிதைகள்’ நுாலே முதன் நுால் என்பேன்.
1981, 82, 83ஆம் ஆண்டில் அனேக கிராமங்களுக்குச் சென்று நாங்கள் ‘இந்த மண்ணும் எங்கள் நாட்களும்’ என்ற அரசியல் கவிதா நிகழ்வு நடாத்தினோம். அதற்கும் ‘பலஸ்தீனக் கவிதைகள்’ நுாலே எங்களது பக்கத்துணை ஒரு கவிதையை நாங்கள் நிகழ்த்திச் சொன்னபோது ஊரார் யாபேரும் உருகி நின்றனர்.
“எனது நண்பனைப் பற்றி
எமது மண்ணிலே அதிகம் பேசினர்
எப்படி அவன் சென்றான்?
எப்படி அவன் திரும்பவே இல்லை?
எப்படி அவன் தன் இளமையை இழந்தான்?
துப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொருக்கி
தயதுசெய்து மேலும் விபரணம் வேண்டாம்
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்?
அதன் பரிணாமங்களைப் பார்த்தேன்
நான் நமது குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்”
இவ்வரிகளை கவிதா நிகழ்வாக்கிய பிறகு வெளிகளை மௌனம் நிரப்பி விடும். அது பார்வையாளர்களுக்கு தேவையாக இருந்தது, கவிதையை செமித்துக் கொள்ள. 1985ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழக கலாசாரக் குழுவாய் ‘மண்சுமந்த மேனியர்’ என்ற நாடகத்தை யாழ்.குடா நாடு எங்கும் கொண்டு திரிந்தோம். சில இலட்சம் பார்வையாளர்களாவது அந்நாடகத்தை கண்டு இரசித்து திளைத்தார்கள். ஆனால், வெறும் இரசனைக்குரிய நாடகம் அல்ல அது. அரசியல் போதனைக்குரிய நாடகம். பிரதியை குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதியிருக்க, நெறியாள்கையை க.சிதம்பரநாதன் மேற்கொண்டிருந்தார். நாடகத்தின் இடையிடையேயும் பலஸ்தீன கவிதைகள் பெய்யப்பட்டிருந்தன. திரை விலகி, வெளியை அவ்வரிகள் நிறைத்தபோதெல்லாம் பார்வையாளர்கள் சிலிர்ப்புக்குள்ளாகி நின்றனர்.
எனது நாட்டின் ஒரு சாண் நிலம் எஞ்சியிருக்கும் வரை
ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நுாலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்
ஒரு சுவர் எஞ்சியிருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை
எனது உடல், எனது கைககள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்
சுதந்திரமான மனிதர்கள் பெயரால்
தொழிலாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள் பெயரால் நான் பிரகடனம் செய்வேன்
இதனை பலஸ்தீனக் கவிதை என்று சொல்ல முடிகிறதா? இது எங்கள் நிலத்தினது பாடல். எங்கள் ஆன்மாவினது குரல். உலகெங்கும் ஒதுக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் அனைத்து மனிதர்களதும் ஆக்ரோஷமான பிரகடனம் மீண்டும் இதனை வாசித்து பாருங்கள். உணர்வைக் கட்டி உயிரை உசுப்பி எடுக்கும். அரபு மொழி மூலத்திலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழுக்கு இறங்கி இருக்கின்றன இக்கவிதைகள். எனவே இக்கவிதைகள் மூன்றாவது மொழியைப் பெற்றுவிடுகிறது அப்படியிருந்தும் கவிதைகள் உயிர்ப்புடன் இயங்குகின்றது என்றால் துன்புற்ற ஆன்மாவின் உண்மையான குரலாக இவை ஒலிக்கின்றதே காரணம் எனலாம்.இப்பலஸ்தீனக் கவிதை தான் இக்கவிதையையும் தந்துள்ளது. அதனைப் பதிந்து இப்பத்தியை நிறைவு செய்கிறேன்.
எங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது
அவமானத்தை அது சாப்பிடுகின்றது
தலைகுனிந்து நடந்து செல்கின்றது
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்?