போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும், குறிப்பாக அதன் இறுதிக்கட்டத்திலும், பெருமளவிலான தமிழர்கள் காணாமற்போனார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். இவர்களைப்பற்றிய சரியான புள்ளவிபரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும். அவர்களது உறவினர்கள் நண்பர்கள் மூலம்விபரங்கள் வெளிவந்தன. இவர்களது நிலையினை அறிந்துகொள்ள முடியாத நிலையிலும் அவர்களைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை அவர்களது அன்புக்குரியவர்களிடம் இன்றுவரை இருந்து வருகிறது. இங்கு காணாமற் போனவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் எவ்வாறு காணமற்போனார்கள் என்பது பற்றிய விபரம் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால்காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் எனக்கூறப்படுபவர்களின் நிலை வேறானது. இவர்கள் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தாலும், அதனுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களாலும் கடத்தப்பட்டவர்கள், அல்லது அரசபடைகளிடம் சரணடைந்த பின்னர் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாத நிலையிருப்பவர்கள்.
இவ்விரு வகையானவர்களும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாத நிலையே தொடர்ந்து நீடித்துவருகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இவர்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வது முடியாமலிருந்ததுடன், இவர்களைத் தேட முனைந்து தாமும் சிக்கலில் மாட்டிவிடுவோமோ என்ற அச்சமும் அவர்களது உறவினர்களுக்கு இருந்து வந்தது. சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது போன்று, இராணுவ முகாங்களிலும், ஏனைய இரகசிய தடுப்பு முகாங்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் விபரங்களைஅறிந்துகொள்வதற்கான வழிவகைகள் இருக்கவில்லை. முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விபரங்களை தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்த மகிந்த அரசாங்கம் இறுதி வரை அதனை வழங்காது ஏமாற்றி வந்தது. இத்தகைய விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே தாம் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணிவந்ததாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் சிலர் கூறிவந்தனர். 2009ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதராலய அதிகாரியான கம்சா என்பவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட லண்டனிலில் வசிக்கும் சில தமிழர்கள் தாம் தடுத்துவைக்கப்பட்டவர்களின் பட்டியலை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறிவந்தனர். இது நடைபெற்று ஆறு வருடங்கள் முழுமையாகக் கழிந்துவிட்டன. மகிந்தவின் ஆட்சி மாறி `நல்லாட்சிஅரசாங்கம்’ அவர்களாலேயே அழைக்கப்படும் சிறிசேன – ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகிறது. ஆனால் காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 2010ம்ஆண்டு ஜனவரிமாதம் 24ம் திகதி கடத்தப்பட்ட பிரகீத் எக்னலியகொட என்ற சிங்கள ஊடகவியலாளரைக் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்தால்கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமற்போனவர்கள் இரகசிய முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றஎதிர்பார்ப்பே உறவினர்கள் மத்தியில் நிலவிவந்தது. அவர்களை விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வந்தார்கள். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணிந்து இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கைபல மட்டங்களிலும் இருந்தது. இந்த நம்பிக்கையில், 2013ம் ஆண்டு நவெம்பரில் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது, இவ்வாறானதொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தெரிந்ததே.
இந்நிலையில் ஜனவரி 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்ட இரணில் விக்கிரமசிங்க, இரகசிய முகாம்கள் எதுவும் தற்போது இயங்கவில்லை எனவும் அங்கு யாரும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் காணாமற்போனவர்கள் இறந்துவிட்டார்கள் எனத் தான் நம்புவதாக ஒரு குண்டைப் போட்டிருந்தார். பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய நிர்வாக சபை என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த இடைக்கால ஏற்பாட்டில் அங்கம் வகித்த விக்கிரமபாகு கருணாரத்னவிடம், பிரகீத் எக்னலியகொடவின் இருப்பு பற்றி கேட்கப்பட்டபோது, காணாமற்போகடிக்கப்பட்ட பலரைப்போல அவரும் உயிருடன் இல்லை என்றே தான் கருதுவதாகத் தெரிவித்தார். ஆகவே இப்போது ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தினையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
கடந்தமாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் சம்பந்தனும் கலந்து கொண்டார். இக்கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியில் காணாமற்போனவர்களின் பெற்றோர்கள்பதாகைகளைத் தாங்கி கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தனர். இவர்களுடன் பேசிய சம்பந்தன், காணாமற்போன, காணாமற்போகடிக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் தொடர்பாக தாம் தம்மைச் சந்திக்கும் வெளிநாட்டுஇராஜதந்திரிகளுடன் பேசி வருவதாகவும்,விரைவில் இவ்விடயத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து இதற்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் கடந்த சில நாட்களில் அவரது நிலையிலும் சில மாற்றங்கள் தெரிவதனை அவதானிக்க முடிகிறது.
உதாரணமாக, அண்மையில் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சக்தி தொலைக்காட்சியில் அதன் `எதிரொலி’ நிகழ்ச்சியில் சம்பந்தன் அவர்களை செவ்வி கண்டிருந்தனர். அதன்போது காணாமற்போனவர்கள், தங்களது பிள்ளைகளை அரசபடையினரிடம் கையளித்தவர்கள் விடயத்தில எதிர்க்கட்சித்தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சம்பந்தன், “இந்தவிடயத்தில் ஒரு முடிவு ஏற்பட்டால்தான் அந்தக் குடும்பங்கள்.. காணாமல்போனவர்கள் சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வந்து… துரதிர்ஸடவசமாக அவர் உயிருடன்இல்லாமல் இருக்கின்ற ஒரு நிலைமை இருந்தால்.. உண்மையின் அடிப்படையில் … அதை ஏற்றுக்கொண்டு, ஓரளவிற்கு உண்மையை ஏற்ற பிறகு, நிம்மதியடைந்து.., அந்தக் குடும்பத்திற்கு… ஏற்பட்ட இழப்பிற்காக அரசாங்கத்தினால் பரிகாரம் வழங்கப்பட்டு… அந்தக்குடும்பம், அந்த மக்கள், தங்களது வாழ்க்கையைத் தொடருவதற்கு, இந்தப்பாரத்தை தொடர்ந்து தாங்கிக் கொண்டிருக்காமல் … தங்களுடைய வாழ்க்கையை தொடருவதற்கு அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம்” என்று நீட்டி முழக்கிய பதில் ஒன்றை வழங்கியிருந்தார்.
இரணில் விக்கிரமசிங்க நேரடியாகச் சொல்வதைத்தான் சம்பந்தன் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார். காணாமற் போனவர்கள். காணாமற்போகடிக்கச் செய்யப்பட்டவளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் சம்பந்தனும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எனினும்தன்னுடைய மக்களுக்கு அதை சொல்வதற்கான திராணியற்றிருக்கிறார். இவ்விடயத்தில், சட்டத்தரணியான சம்பந்தனிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளுண்டு. படையினரிடம் தமது அன்புக்குரியவர்களை கையளித்தவர்களுக்கு நீதி கிடைக்காது என அவர் முடிவெடுத்துவிட்டாரா ? அதற்கு பதிலாக சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் `பரிகாரத்தை’ பெற்றுக்கொண்டு நிம்மதியாக தமது வாழ்க்கையை அவர்கள் தொடரவேண்டும் என்பதா தமிழ்மக்களின் பெரும் நம்பிக்கைக்குரிய சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு?
தற்போதும் கூட வெளிப்படையாகத் தெரியாத அளவில் விசாரணை என்ற பெயரில் கைதுகள், தடுத்து வைக்கப்படுதல், கப்பம் பெறுதல் என்பன தொடரும் இக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டார் ?
காணாமற்போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்களில், காணாமற்போனவர்களின் உறவினர்களும் நட்ட ஈடாக பணம், வீடு, ஆடு போன்றவை வழங்கப்படுமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதனைத்தான் சம்பந்தனும் எதிர்பார்கிறாரா என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.
இதனிடையே, காணாமற்போனவர்கள் தொடர்பில் அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், தம்மால் கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் ஆகியோரின் விபரமடங்கிய பட்டியல் தம்மிடம் இருப்பதாக படைத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான பட்டியல் வெளியாகும் பட்சத்தில், கைது செய்யப்பட்டு காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டவர்கள் விடயத்தில் பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகவிருக்கிறதா ? அல்லது பழியை முன்னைய அரசாங்கத்தின் மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளப்போகிறதா? போரை வழிநடாத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கி அவரை அலங்கரித்த மைத்திரி அரசு, இப்போது தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கி, அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர கூறிவருவது ஒரு ஏமாற்று நடவடிக்கை என்பதனை விளங்கிக் கொள்வதில் யாருக்கும் சிரமமிருக்காது.
[author title=”மயூரன்” image=””] (ஒரு பேப்பருக்காக)[/author]