காந்தீயம் டேவிட் ஐயா

178

அண்மையில் காலமானவர் காந்தீயம் டேவிட் ஐயா. ஊர்காவற்துறை ஊர்களில் ஒன்றான கரம்பனில் பிறந்தவர், கல்வியில் சிறந்தவர், மிகச்சிறந்த சமூக பட வரைகலைஞராக உயர்ந்தவர்.தமிழீழ உணர்வு, சமூக நல பரிவு, தீர்க்கதரிசனஅறிவு என்பனவற்றை செறிவாகக் கொண்டமைஅவரின் ஒளிர்வு. நாலு முழ வேட்டி, அரைக்கைமேல் சட்டை, காலில் ஒரு செருப்பு, குள்ளமான உருவம், வெள்ளை உள்ளம். இறுதி வரை திருமணம் புரியாத உறுதியான பிரம்மசாரியம். அகத்தில் கொள்கை உறுதியும், புறத்தில் எளிமையும், பொறுமையும் இறுதி வரை நிறம் மாறாத கோலத்தோடு வறுமையின் உறுத்தல்கள் மத்தியில் வாழ்ந்தது இவரின் பெருமை.

இவரைப் பற்றிய தெரிவு பலருக்கு இல்லாதது ஒரு குறைபாடு என்று தன்னுடைய ஏக்கப்பாட்டை அண்மையில் சமூக உணர்வாளர் வெளிப்படுத்தினார். அந்த வெளிப்படுத்தல் தந்ததாக்கமே அவர்கள் ஒன்றிப் பழகிய என்னுடையஎழுத்தாக, ஊரின் வாசப் பகுதியில் இன்று உதிர்கிறது.

1976இல் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு, இதே தவிப்போடு இருந்த டாக்டர் சோ.ராஜசுந்தரத்தோடு கொண்டபிடிப்பு இருவரின் இணைப்புக்கும் காந்தீயம்என்ற நிறுவனத்தின் உதிப்புக்கும் காரணமாகின. மலையகத்தில் மருத்துவத் தொழில், அதனோடு மக்கள் நல சேவை, இவற்றில் நிலைத்தவர் டாக்டர் சோ.ராஜசுந்தரம். மானிப்பாயில்பிறந்த வைத்திய கலாநிதி சாந்தி காரளசிங்கத்தின் காதல் மணாளன் இருவருமாக அரச தொழிலை உதறித் தள்ளி மனித நேயத்துடன் கூடிய மருத்துவமனையை வவுனியாவில் நிறுவி வாழ்ந்து வந்தனர். நகருக்கு அண்மையாக மன்னார் வீதியில் அமைவுற்றது இந்த சாந்தி கிளினிக். ஒரு படவரை கலைஞர் தனது சமூக நல விருப்பை பெரு மனதோடு காந்தீயம் என்ற நிறுவனத்தை செதுக்கி குறுகிய காலத்துக்குள்துளிர்விட செய்ய இது களமானது. இரு நல்ல இதயங்களையும் சாந்தி கிளினிக் தன் கட்டடத்துக்குள் ஒட்டி வைத்து திட்டங்களை உருவாக்கச் செய்தது. 1977இல் இனக்கலவரக் கொடுமைகாந்தீய சேவைகள் செறிய அடிகோலிட்டது. இந்த அடிகோலின் பிரகாரம் சேவைகள் உயர்வு கண்டது. அகதிகள் சேவைக்காக ஏற்கனவே உதயமானது கே.சி.நித்தியானந்தம் ஐயாவின்அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் தான் உருவாக்கிய சென்.பாம், டொலர் பாம் உட்பட பல பண்ணைகள் அரச புலனாய்வுத் துறையின் கண்களை உறுத்திய காரணத்தால் அந்தக் காரணத்தையும் ஒன்றாகக் கொண்டு அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் அவற்றை கைவிட வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் திணித்தது. காந்தீயம் அவற்றை பொறுப்பேற்றது. காந்தீயத்தை அரச பதிவு பெற்ற அறக்கட்டளை ஆக்கினார் டேவிட் ஐயா.

இளம் தொண்டர் படையை கூட்டினார் டேவிட்ஐயா. ஆயிரக்கணக்கான குறித்த பண்ணைகளை வதிவிடமாக்கிய மலையக இடம்பெயர்வாளர்களின் அச்சத்தைப் போக்கினார் டேவிட் ஐயா. நிதி நிறுவனங்களின் தொடர்போடு காந்தீயத்தின் நிதி வலுவை உருவாக்கினார் டேவிட் ஐயா. அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என 8 தமிழ் மாவட்டங்களிலும் காந்தீய திட்டங்கள் சென்று தொட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் காந்தீய மாவட்டக் கிளைகள். மாவட்ட தேவைக்குரிய ஊர்கள் தோறும் கிராமியக் கிளைகள், கிராமிய நிர்வாகக் குழு, மாதர் குழு, சிறுவர் பாடசாலையைஇயக்க இவர்களையெல்லாம் ஊரில் இணைத்து செயற்பட வைக்க ஒரு காந்தீய தொண்டர் பொறுப்பாசிரியை. பாலர் பாடசாலையின் ஆசிரியையாகவும் தொழிற்பட்டவர் இந்த தொண்டர் ஆசிரியை. கிளிநொச்சி குருகுலத்தில் ஒரு பொறுப்பாசிரியையின் கீழ் 6 மாத கால பயிற்சிஇந்தத் தொண்டர் ஆசிரியர்களுக்கு உரித்தானது. நோவிப், கேயர், பிரட் போ த வேர்ல்ட், கிறிஸ்டியன் எயிட் போன்ற வெளி நிதிநிறுவனங்களின் கவனத்தைப் பெற்ற இந்த கிராமிய திட்டங்களே அவற்றின் மனமார்ந்த பண உதவிக்கு காரணமாகியது.

குடும்ப தலைவரான ஆணுக்கு ஒரு ஏக்கர்பண்ணைத் திட்டம். மூன்று குடும்பங்களுக்கு ஒரு பொதுக் கிணறு, நீர் இறைக்கும் இயந்திரம், விதை, நாற்று, பயிர், அடிநாற்றுப் பசளை உட்பட்ட அடிப்படை உதவிகள். பெண்களுக்கு மாதர்குழு ஊடாக கைத்தொழில் பயிற்சி. கைத்தொழில் ஆரம்பிப்பதற்கான மூலதன உதவி,கோழி வளர்ப்புக்கு தேவையான ஆரம்ப உதவிகள் முதலான பல நல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாலர் கல்விப் பாடசாலை குழந்தைகளுக்காக ஊர்தோறும் உதயமானது. இலவசகஞ்சி சத்துணவு அல்லது பால்மா இரவு வேளைமூத்தோருக்கான பாடசாலை, பாரதி விழா போன்ற விடுதலை வேட்கையாளர்களின் விழாக்கள் மூலமாக கிராமிய விடுதலை விழிப்புணர்வு. பெரியோர், குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் என காந்தீயம் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்துள்ளும், தமிழ் உணர்வையும், சுய அறிவையும், பொருளாதார தன்னிறைவையும் கொள்வதற்கான அடிப்படைகளை பெற்று `ஒளிர்வு` உதயமானது. திருமலை, மட்டக்களப்பு, வவுனியா என தமிழ்ப் பிரதேசங்களை எல்லைப்படுத்தி நின்ற மாவட்டங்களை புதிய பண்ணைக்குடியிருப்பு திட்டங்கள் உருவானவை அவற்றின் தொகை உயர்வானது. 624 கிராமிய பண்ணைத் திட்டங்களை கிராமியக் கிளைகளைக் கொண்டதாக மிகச்சிறப்பானதாக காந்தீயம் 78 ஆம் ஆண்டு முதல் 83 ஆனி முதலாம் நாள் அழிக்கப்படும் வரை இயங்கியது, நொவிப் உதவியுடன் பெற்ற ஜீப் வண்டி, அதிலே டாக்டர்ராஜசுந்தரம், டேவிட் ஐயா என்ற இணைச்சேவையாளர்கள் இவர்களைக் கொண்டு அந்தஜீப் வண்டி ஓடாத தமிழ்க் கிராமங்கள் இல்லை என்று இவர்களின் தொண்டு நின்று நிலைத்தது.

தன் சுயதொழிலோடு ஒட்டி கொழும்பை வாசஸ்தலமாகக் கொண்டவர் டேவிட் ஐயா. திங்கள் முதல் வியாழன் வரை கொழும்பு வாசம். அங்கும் வெளிநாட்டு நிறுவனங்களோடு நேசம் பேணி, புதிய செயல்திட்டங்களில் காசைக் காணச் செய்வதற்காக இரவு பகலான அவரின்தாகம், திருமணமாகாத தனிமை வாழ்வு, ஆடம்பரம் இல்லாத கோலம், நாலு முழ வேட்டி இரண்டு,மேல்சட்டை இரண்டு, ரண்டு சோடி செருப்பு, இரு வேளை உணவு என்பன அவரின் எளிமையான அவருடைய தேவையாக இருந்தது. கரம்பனில் தனிமையில் வாழ்ந்த இரு சகோதரிகளுக்கும் ஏதாவது உதவி செய்தால் போதும் என்று அவருக்கு இருந்த பொறுப்பு. இவை முழுமையாக காந்தீயத்துக்கு நேரத்தையும், எண்ணத்துக்கும், பொருளையும் அர்ப்பணிப்பதற்கு தோதாக அமைந்தது. மாதத்திற்கு ஒரு மாவட்டக் கூட்டம் ஒரு மத்திய குழு கூட்டம் என்று திட்டங்களோடு அலைவதும், கோவில் புதுக்குளத்தில் ஆதரவற்றோருக்கான சிறுவர் இல்லத்தில் ஒருவராக இணைந்து இயங்குவது அவரின் முழுமையான பணியாக இருந்தது.

வவுனியாவில் அவர் நாட்டத்துடன் நாடச் செய்தது, அந்த ஆதரவற்றோர் சிறுவர் இல்லம்,கோவில் புதுக்குளத்தில் அமைந்தது. அரச புலனாய்வாளர்களின் கழுகுக் கண்கள், காந்தீயம் தமிழீழம் அமைக்கும் என்ற அறிக்கையை அரசுக்கு தந்தது. ஜே.ஆர். அரசு ஹரத் என்ற பொலிஸ் அத்தியட்சகரையும் ஏக்கநாயக்க என்ற சாஜட்ன் தர பொலிஸ் அதிகாரியையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருத்தி காந்தீயத்தை கண்காணிப்பதே அவர்களின்கடமையாக்கியது. 1983 ஏப்ரல் 7ஆம் திகதிவவுனியா பணிமனையில் காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் சோ.ராஜசுந்தரம் கைதானார். அதேநாள் கொழும்பில் டேவிட் ஐயாகைதானார்.விடுதலை வேட்கையோடு வெவ்வேறு இயக்கங்களாக செயற்பட்ட விடுதலைப்புலிகள், புளொட் இயக்கங்களின் தலைவர்களாக பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகியோரை இணைத்தார்கள். ஏனைய உணர்வாளர்களைக் கூட்டி கூட்டம் கூடினார்கள். அவர்களை இணைத்து வைக்க பாடுபட்டார்கள் என்பது அவர்கள் மீது சுட்டிக் காட்டப்பட்டது.

வெலிக்கடை சிறை வாசம் கொட்டுபுறமான விசாரணைக்கு அவர்களை உட்படுத்தியது. எந்த இடர்பாடிலும் கலங்காத வகையில் உறுதியாக இறுதி வரையிலே அவர்கள் வெலிகடை சிறை வாசத்தை சுவாசித்தார்கள். ஆரம்பம் முதல் கிளிநொச்சி மாவட்ட அமைப்புச் செயலாளராக பின்னர் மத்திய குழு ஆளராக செயற்பட கிடைத்த வாய்ப்பு இறைவன் எனக்குத் தந்த கொடை எனலாம். அன்றைய தொண்டர் பொறுப்பாசிரியையாக என் மனைவியும் ஆரம்ப காலம்முதல் இவர்களின் அன்பைப் பெற்ற ஒருவர். டாக்டர் ராஜசுந்தரம் கைதை அடுத்து பதில் அமைப்பு செயலாளராக இயங்கிய யான் 1983 ஏப்ரல் 15ஆம் திகதி திருமலையில் மாவட்டக்கிளைக் கூட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தபோது கைதானேன். என்னுடன் கூட்டத்தில் இருந்த ஏனைய 18 பேரும் கைதானார்கள்.

அனுராதபுரத்தில் 3 நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். காந்தீயம் இயங்கக் கூடாது என்பது எங்களின் கைதின் நோக்கமாக இருந்தது. 1983 ஐ×ன் 1ஆம் திகதி காந்தீயத்தின் கீழ் புறம் அமைந்திருந்த சந்தையில் இரு கடற்படை சிப்பாய்கள் கொல்லப்பட்டதை காரணம்காட்டி காத்திருந்த வவுனியாப் பொலிஸ், காந்தீயத்தை எரியூட்டினார்கள். தொண்டர்களை கைது செய்தார்கள். வவுனியா கோவில்புதுக்குளத்திலிருந்த ஆதரவற்றோர் இல்லம் பண்ணைகளிலிருந்த உழவு இயந்திரம், தொண்டர்கள், பணிமனைகள் எரிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது. சிறுவர்களும் தொண்டர்களும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். காந்தீயம் ஸ்தம்பித்தது. நான் உட்பட பலரும் கைதானோம். வவுனியா சிறையிலும், வெலிகடை சிறையிலும் காந்தீயத்தொண்டுக்கான பரிசை பெற வேண்டியவர்களானோம். இதன் பின்னர் டேவிட் ஐயா, அவரோடு இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர்இனக்கலவர கொடுமைகளுக்கு வெலிக்கடையில் ஆனதும், டாக்டர் ராஜசுந்தரம் உட்பட53 கைதிகள் கொல்லப்பட்டதும், மட்டக்களப்பு சிறைக்கு டேவிட் ஐயா மற்றும் பலர் மாற்றப்பட்டதும் மட்டக்களப்பு சிறை உடைப்பைத் தொடர்ந்து இந்தியாவில் காந்தீயம் டேவிட் ஐயாவின் சேவை நிலைப்பதுவும் அடுத்த அத்தியாயமாக தொடர்ந்தது. டேவிட் ஐயா மரணித்து விட்டார், ஆனாலும் தியாகம், எளிமை, விடுதலை உணர்வு தீவிர உறுதியான கொள்கை பிடிப்பு என அவர் திசையெங்கும் தெளித்து வைத்திருக்கின்ற கொள்கை திடங்கள் பலநெஞ்சங்களுடாக அந்தக் கட்டை பிரம்மசாரிக்கு பரம்பரைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். வாழ்க டேவிட் ஐயாவின் நாமம்.