லண்டனில் ஒரு சுடலையின் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். அது ஒரு குளிர்கால காலை நேரம், அத்தோடு வானமே திறந்தது போல மழை பெய்து கொண்டிருந்தது. ஊரில் பெண்கள் சுடலைக்கு போகக்கூடாது என்பர். ஒரே இனம் என்பதால் பெண்ணைப்பேய் பிடித்துவிடும் என்று அதற்கு என் நண்பன் விளக்கம் சொன்னான். மழையில் நனைந்தபடி வாசலை கடந்து தனியே நடக்கத் தொடங்கினேன். என்னைச் சுற்றி இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருந்தார்கள் என் கண்ணில் பட்ட முதலாவது கல்லறையில் 1885 என்று போடப்பட்டிருந்தது. தொழில்நுட்பத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும? இறப்புப்பற்றிய மனிதனின் சிந்தனையில் அவ்வளவு மாற்றங்கள் வரவில்லை என்று எண்ணத்தோன்றியது. மழை என்பதாலோ என்னவோஒருவரும் இன்றி நான் தனிய, பரந்த, கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்திருக்கும் கல்லறைகளில் நடுவே நின்றிருப்பது, எனது சிந்தனையை குவிய வைத்தது. இந்திய இராணுவபிரச்சனையின் போது எங்கள் மாமா வீட்டு வாசலில் இராணுவம் சுடப்பட்டு இறந்தவரை அதிலேயே எரித்ததும், ஊரே மயானம் போன்று ஆள்அரவமின்றி இருந்ததும். பிறகு நிலமை சரிவந்து அவ்வீதியால் போகும் நேரம் எல்லாம் அன்நிலத்தில் இருந்த கருமை நிறம் எனக்கு அன்நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.
நான் இப்போ அக்கல்லறைகளில் மத்திய பகுதியில் நின்றிருந்தேன். அழகான, அமைதியொன்று நிலவியது. மிகக்கவனமாக நிலத்தோடு நிலமாக இருந்த ஒரு கல்லறையின்மீது மிதிக்காது நடந்தேன். எண்ணும்போது ஆச்சரியமாக இருந்தது மனிதர்கள் இருக்கும்போது கொடுக்காத மரியாதையையும், கரிசனத்தையும் ஏன் ஒருவர் இறந்தபிறகு கொடுக்கிறார்கள் என்று, இருக்கும் போது காட்டினால்அது அவர்களை சிலநேரம் இன்னும் கொஞ்சநாளைக்கு இருக்க வைத்திருக்கும்.. சில, பளிச்சென்று, சின்ன ரோசாசெடியோடு அழகாக, சில கவனிப்பாரின்றி, மங்கி, கொஞ்சம் உடைந்துபோய் இருந்தது. ஒருவேளை பராமரிக்கும் அன்பானவர்களும் இறந்துபோயிருக்கலாம். ஒன்றுமட்டும் நிச்சயம் அவர்கள் இந்த நாட்டை விட்டு அகதியாக விரட்டப்பட்டிருக்க மாட்டார்கள்.
கல்லறைகளுக்கும் உயிர் உள்ளது. எமதுமாவீரர் கல்லறைகளுக்கு ஊடாக நடக்கும்போது எமக்குள் நடக்கும் இரசாயண மாற்றத்தை விபரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை.இது உண்மையில் விந்தையிலும் விந்தைதான்.கல்லறைகளுக்காக வாழும் மனிதர்களும் உள்ளார்கள். தனது ஒரே ஒரு மகன் விடுதலைப்போரில் மரணித்தபோது எனது சிறிய தாயும், தகப்பனும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் வெளிநாடு வர சந்தர்ப்பம் இருந்தும் அவனதுகல்லறைக்கு போய் அவனை காண்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். பின்பு 2009 மே 10ம்திகதி அடாத மழையிலும், சீறிலங்கா இராணுவம் விடாது அடித்த எறிகணைத்தாக்குதலில் முள்ளிவாய்காலில் ஒரே இரவில் கொல்லப்பட்ட171 பொதுமக்களில், அவர்களும் அநியாயமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள்.
கல்லறைகளை சுத்திப்பார்க்கிறேன். சிறுவர்களுக்கென தனியான ஒருபகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இறப்புக்கு வயது வித்தியாசம் இல்லை. ஒரு கல்லறையின் மேல் “ A little voice is hushed and a little Angel is born, All our love Mummy, Daddy and family” என்று எழுதப்பட்டிருந்தது. Mummy, Daddy என்ற சொற்கள் அந்த குழந்தை கூப்பிடுவது போல ஓர் உணர்வை ஏற்படுத்தி, நெஞ்சை நெகிழவைத்தது. இது எல்லாம் முகம் தெரிந்த கல்லறைகள். முகம் தெரியாத எம்மக்களின் கல்லறைகளை நினைக்கிறேன். காணாமல் போனவர்கள் எத்தனை பேர். பத்தாம் வகுப்பில் என்னோடு படித்த குமரகுருபரன் ஆமி எரியூட்டிய கரையோர வள்ளங்களையும், வலைகளையும் அணைத்து உதவிசெய்ய போனவன், ஆமியால் பிடித்துக் கொண்டுபோகப்பட்டான் என்று கதை. இது போல எத்தனை ஆண்கள், பெண்கள். கொழும்பில் அதிகாலை இராணுவத்தால் கலைக்கப்பட்டபோது, தான் பிடிபட்டு முகம்தெரிந்தால் தான் பழகிய, இருந்த, தெரிந்த என்று எல்லோரையும் இராணுவம் விசாரணை என்ற பெயரில் கொன்றொழித்துவிடும் என ஒரு பேக்கறிக்குள் ஓடிப் போறணைக்குள் விழுந்து தன்னை மாய்ந்து கொண்டான் ஒரு வேவுப்புலிவீரன். கல்லறையே இல்லாது காற்றோடு கலந்தவர்கள் எத்தனை பேர்.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைசாத்திடப்பட்ட பல ஐரோப்பிய ஒப்பந்தங்கள் முதலாம், இரண்டாம் உலகப்போரின்போது கொல்லப்பட்ட வீரர்களின் கல்லறைகளை பாதுகாக்கவெனக் கொண்டுவரப்பட்டன. பிரான்ஸ், ஜேர்மன் அரசுக்கிடையிலான 1871 ம் ஆண்டு Treaty of Frankfurt இல் இருந்து 1966ம் ஆண்டு Franco – German உடன்படிக்கை வரை பல மனிதாபிமான அடிப்படையிலான, இறந்தபோர்வீரர்களுக்கு இருதரப்பிலும் மதிப்பளிக்கும் வகையில் உருவாக்கிப்பேணப்பட்டது. சிலபொதுவான புதைகுழிகள் கூட பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டன. 2007இல் பிரித்தானிய, அவுஸ்ரேலிய வீரர்களின் புதைகுழி ஒன்று பிரான்சில் Fromellesக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 1916 இல் ஜேர்மனிகளால் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. உலகவரலாற்றில், கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான புலி வீரர்களினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் கல்லறைகளை, அரசாங்க கட்டளையுடன் இடித்து, தரைமட்டமாக்கி அதன் மேல் தமது இராணுவமுகாமை நிறுவும்,மிகவும் கண்ணியம் குறைவான, துவேசம்மிக்க செயலை, இந்த 2001 நூற்றாண்டில் செய்ய,சீறிலங்கா அரசு ஒன்றாலேயே முடியும். அங்கு இறுமாப்போடு பவனிவரும் இராணுவத்தை பார்க்க எனக்கு ஒன்று மட்டும் நன்றாக விளங்குகிறது. சீறிலங்காவின் பொருளாதார சீர்கேட்டுக்கும், சிங்களத்தின் அழிவுக்கும், இன்றையநிலைக்கும், காரணம் அவர்களின் சிங்கள,பௌத்த ஏகாதிபத்திய வெறிதான், வேறு ஒரு புறக்காரணியும் அல்ல. இறந்தவர்களின் கல்லறைகளை விட்டு வைத்து, ஒரு தாயின் மனதை வெல்ல முடியாதவர்கள். என்னென்று உலகத் தமிழர்களின் மனதை வெல்லப்போகிறார்கள். எல்லாம் நன்மைக்கே. தமிழ் ஈழம் நிச்சயம்.
உடல் மழையில் நனைந்தாலும், உள்ளம் உற்சாகமாக வாசலின் வழியை நோக்கி நடக்கிறேன்.