காலம் நமக்கொரு பாட்டு எழுதும்

இரவி அருணாசலம்
எழுதுவது என்னவெனில்

நண்பர்களே, நேரடியாகவே பேசுவோமே, ஈழத்துசிறுகதைகளின் வளம் குறித்து உரையாடும்எண்ணம் எனக்குண்டு. ஆனால், இது விமர்சனம் அல்ல.பத்தி எழுத்துக்குரிய பக்குவத்துடனும், ஒருபேப்பர் வாசகர்களின் பரப்பிற்குள்ளும் ஏற்ப வருகின்றது.

ஈழத்துச் சிறுகதை என்றால் முதலிலும் முக்கியமாகவும் வரும் பெயர் இலங்கையர்கோன். அவரது ‘வெள்ளிப்பாதசரம்’ தொகுப்பை இப்பொழுது வாசித்தாலும் புத்துணர்வைத் தர தவறுவதில்லை. வெள்ளிப்பாதசரம் கதை இவ்வாறாக முடியும். “அவனுக்குப் பசியில்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை, எத்தனை கொள்ளிவாய் பிசாசுகள் சேர்ந்தும் அவனை என்ன செய்துவிடமுடியும்” இப்பொழுதும் இச்சிறுகதை என்னை ஆட்கொள்கின்றது.

பிறகு வந்தோரில் அ.செ.முருகானந்தம் விதந்து கூறப்படவேண்டிய ஒருவர். முழுநேரத் தொழிலாக எழுத்தை கைக்கொண்டவர். அ.செ.மு. நிறையச் சிறுகதைகள் எழுதிய போதிலும் அவை தொகுப்பாக வருவதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. அ.செ.மு.வின்சிறுகதைத் தொகுப்பு 1986ஆம் ஆண்டு ‘மனித மாடு’ எனும்பெயரில் வெளிவந்திருந்தது.

எனது ஏழெட்டு வயது பருவகாலத்தில் கட்டிலில் புரண்டு புரண்டு நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு. அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா’ சிறுகதைத் தொகுப்புஒன்று. கே.வி.நடராசனின் ‘யாழ்ப்பாணக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு மற்றையது. நான் இப்பொழுது ஏதாவதுஎழுதுகின்றேன் என்றால் அதற்கும் அவை தாம் காரணமோதெரியவில்லை. அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா’ சிறுகதையை வாசித்த போது அந்தச் ‘சின்னப்பயலான’ எனக்கு வந்த துக்கத்தை எவ்வாறு உரைப்பேன் ?

நண்பர்களே, நான் இதனை எழுதிக் கொள்வது எனது அனுபவங்களிலிருந்து மாத்திரமே. எனது ஞாபகக் கூறுகள் மாத்திரமே இங்கு உதவி செய்கின்றது. அதனால் பல படைப்பாளிகள் விடுபடலாம். அதனை குறை விளங்கவேண்டாம்.

பிறகு வந்தோரில் செ.யோகநாதன், சே.கதிர்காமநாதன் இருவரும் என்னைப் பாதித்திருந்தார்கள். செ.யோகநாதனின் சோழகம் கதை வலுவான ஒன்று. அதேபோல செ.கதிர்காமநாதனின் `ஒரு கிராமத்துச் சிறுவன் பள்ளிக்கூடம் போகிறான்’ சிறுகதையும் (தலைப்பு பிசகியிருக்கலாம்) முக்கியப்பட்டதொன்று.

இந்த இடத்தில் அ.யேசுராசாவின் வரவு சிறுகதையின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் புரட்டிப் போட்டது. சொந்த அனுபவங்களை சிறுகதையாக்கும் அந்தத் திறன்எங்களையும் பற்றிப் பிடித்தது, அவரது தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும். சிறுகதைத் தொகுப்பு என்னளவில் முக்கியமானதொரு தொகுப்பு. அதில் வந்த மகத்தான துயரங்கள், இருப்பு, தொலைவு ஆகிய கதைகள் அப்பொழுது என் உணர்வுகளைக் கிளறின.

சுய அனுபவங்களை கதைகளாக்கும் முயற்சியில் சட்டநாதனும், குப்பிளான் ஐ.சண்முகமும் தம்மை யேசுராசாவிடமிருந்து வேறுபடுத்தியிருப்பர். யேசுராசா ஒரு பென்சில் எடுத்து இரண்டு மூன்று கோடுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கீறுவார். அது ஓவியமாகி விடும். இவர்கள் இருவரும் வர்ணம் பூசி ஓவியமாகத் தருவார்கள்.

குப்பிளான் சண்முகத்தின் `வலி’ முக்கியமான கதை, சட்டநாதனின் `இப்படியும் காதல் வரும்’ என்ற ஒரு கதை எழுதியிருப்பார். `இப்படித்தான் காதல் வரும்’ என்று அவருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

அப்போதே இவர்களிலிருந்து வேறுபட்டு நல்லதொருகதைசொல்லியாக வந்தவர் சாந்தன் அவர்கள். சாந்தனின் மொழி எளிமையானது. சாந்தன் எப்பொழுதும் சாறைத் தான் தந்து நிற்பார். அவரது கதைகளில் சக்கைகள் கிடையாது. `கிருஷ்ணன் தூது’ சாந்தன் எழுதிய நல்ல கதைகளில் ஒன்று.

அனுபவங்களைத் தான் கதையாகச் சொல்ல வந்தாலும், அபூர்வமான ஒரு கலைஞனாக வந்த ஒரு கதைசொல்லி உமா வரதராஜன் அவர்கள். நுண்ணிய உணர்வுகளை செதுக்கித் தருவார். துÖரத்தில் தெரிந்த ஒற்றை நட்சத்திரத்தை சொல்லத் தெரிந்த உமா வரதராஜனால் ஊரில் வாய் பிளந்து கிடக்கும் தபால் பெட்டியையும், நுண்ணுணர்வுடன் சொல்லத் தெரிந்தது. அவர் கை காட்டும் பெண்கள் இன்னோர் அழகுடன் திகழ்ந்தனர்.`அரசனின் வருகை’ புனைவு மொழியில் எழுதப் பட்ட நல்லகதை.

சுயஅனுபவங்களை கதைகளாக்கி வந்த காலத்தில் புனைவு மொழியில் கதை எழுதி வந்தவர் ரஞ்சகுமார்.அவர் புனைவு மொழியில் கதை சொல்ல வந்தபோது அது பலரை திகைப்புக்குள்ளாக்கியது. தமிழில் வந்த நல்ல சிறுகதைகளில் ரஞ்சகுமார் எழுதிய கோசலை கதையை கூறுவர் பலர். ஓம், அது உண்மை தான், ஆயினும் கபரக்கொய்யாக்கள், காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோனறு பதிகம் ஆகியவை மிகமிக முக்கியமான கதைகள். காலம் உனக்கொரு பாட்டு எழுதும் கதையில் பூசிக் குளித்த சந்தன சவுக்காரத்தின் மணம் இப்பொழுதும் என் மூக்கில் இருக்கின்றது.

ரஞ்சகுமார், உமாவரதராஜன் போன்றோரின் பல கதைகளை `அலை’யே பிரசுரித்தது. `அலை’ கவிதைக்குவழங்கிய பங்கு குறிப்பிடவேண்டும் என்றால், சிறுகதைக்கு வழங்கிய பங்கு விதந்து குறிப்பிட வேண்டியது. `அலை’யின் வெள்ளி விழா இதழில் என்னுடைய `ஒருமழை நேரத்து சோகம் போல’ சிறுகதையை அசோக மித்திரன், ஸ்ரீதரன் ஆகியோரின் சிறுகதையுடன் இணைத்துப் பிரசுரித்தமை எனக்கு வழங்கப்பட்ட பெருங்கௌரவம் என நம்புகின்றேன்.

`அலை’ தந்த கதைஞர்களில் எம்.எல்.மன்சூர், ஸ்ரீதரன்ஆகியோர் விதந்து குறிப்பிடவேண்டியவர்கள். நந்தினி சேவியர் பற்றி இதில் பறையாவிட்டால் நிறைவு பெற்று விடாது இப்பத்தி.

சோபசக்தியை குறிப்பிடாவிட்டால் இப்பத்தி மிகப்பலவீனம் அடைந்து விடும். அவரது சிறுகதையின் உருவம், உள்ளடக்கம் யாவும் யாரினாலும் எட்டமுடியாத ஒன்று. அவரது ஆரம்ப கால சிறுகதையான `எலி வேட்டை’யை 1996இல் வாசித்த போது நான் அடைந்த திகைப்புக்கு அளவில்லை. முள்ளிவாய்க்கால் துயரை அவரது `ரூபம்’ கதை போல் வெளிப்படுத்தியது வேறெதுவும் இல்லை.சோபா சக்தி ஓர் எழுத்துப் பரம்பரையையே உருவாக்கியிருக்கிறார்.

ஒரு வட்டம் சுற்றியாயிற்று, அ.முத்துலிங்கம் இப்பொழுதும் அற்புதமாக எழுதுகிறார். அ.முத்துலிங்கம் தொட்டு, சயந்தன் (ஒரு சொட்டு கண்ணீர்) வரை ஈழத்துச்சிறுகதை இலக்கியம் வளத்தோடு பாய்கிறது என்று சொல்லி இப்பத்தியை நிறைவு செய்கிறேன்.#

Photo Courtesy – http://eileenwilks.com/