கீரிமலைக் கேணி

387

கீரிமலைக் கேணியில் நீந்துவோர், நீந்தாதார் கூவிலடி சேராதார் என்பது அந்தக் கால தெருக்குறள். வடக்கே பாக்கு நீரிணையை எல்லையாகக் கொண்டு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை அருகாமை உள்ளது கீரிமலை. கீரிமலைக் கேணி ஒரு வற்றாத நன்னீர் ஊற்று, சில அடிகள் தள்ளி அலைபாயும் உப்புக்கடல். கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்ற பண்டைய ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத் திருத்தலத்தை தன்னகத்தில் கொண்டது. மூன்று மைல் தூரத்தில் மாவிட்டபுரம் திருத்தலம், குறுக்காக கடல் எல்லையாக காங்கேசன் துறைமுகம். கீரி என்ற பிராணியின் முகத்தைக் கொண்ட நகுலமுனிவர் என்பவர் இந்தக் கேணியில் முழுகி ஈஸ்வரனை வழிபட அந்தக் கீரி முகம் நீங்கப்பெற்றதாகவும் அதனால் நகுலேஸ்வரம் என்ற பெயர் இந்த சிவன் கோவிலுக்குச் சூட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இதேபோல் மாருதப்புரவீக வல்லி என்ற சோழஇளவரசி குதிரை முகத்தோடு பிறந்தவள், அந்தக் குதிரை முகம் நீங்கியதால் மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தை சூழ 7 ஆலயத்தை கட்டுவித்தாள் என்பதும் வரலாறு. இந்தக் கீரிமலைக் கேணி தான் நாங்கள் நீச்சல் பழக குளித்து கும்மாளம் அடிக்க லீவுநாட்களில் அடிக்கடி குதுÖகலித்து உல்லாசமாக குளிக்க மையமாக திகழ்ந்தது. தச்சன் காட்டு சந்தியை தாண்டினால் சைக்கிளிலில் முன்னாள் இருப்பவர் பெடல் போட ஏறி மிதித்து ஏற்றத்தை கடக்க வேண்டி இருக்கும்.

நாங்கள் குளிக்கப் போகும் போது குறுக்காக கருகம்பானையூடாகவும் ஒரு பாதை இருந்தது. 768 பஸ் இலக்க வண்டிகள் யாழ்ப்பாண பட்டினத்திலிருந்து கீரிமலை நோக்கி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒன்று போகும். எங்கள் வீட்டு முன்னாள் இவை பயணிக்கும். தனியார் வாகனங்களும் பஸ்ஸோடு வேகமாக ஓடும். விடுமுறை நாட்களில் நீண்ட லீவுகளில் யாழ்ப்பாண ஊர்களிலுள்ள பெடியள் கூட்டமாக சைக்கிளில் வருவார்கள். போகும் போது கூவில் கள்ளு உசார் வர கூவிக்கூவித் தான் வீதியில் போவார்கள். கூவில் என்பது கீரிமலைக்கு பக்கத்திலுள்ள ஊர். பனை அதிகம் கொண்ட பெரும் தோப்புகள் கொண்ட ஊர் இது. குடிசைக்கு குடிசை கள்ளுக் கொட்டில் இருக்கும். கள்ளுத் தவறணை வர முந்திய காலம் இது. சுன்னக்கற்கள் கொண்ட இந்த மண்ணில் முளைத்து நெடுத்துவளர்ந்த பனைகளில் ஊறும் கள்ளு தனி ருசியான சோம பானம் என்று ருசி கண்ட குடியாளர்கள் கூறுவார்கள். இதற்காக கீரிமலைக்கு படையெடுக்கும் இளைஞர் அணியும் அதிகம்.கள்ளு உற்சாகத்தில் அவர்கள் உயர் படியிலிருந்து கேணிக்குள் குதித்து விழ கேணி ஒரு கலக்கு கலங்கும். அதிகாலை நேரத்தில் அடி மணல் தெரிய கேணி நீர் பளிங்குபோல் தெறிக்கும். மீன்கள் ஓடித் திரிவதையும் அவதானிக்கலாம்.

சிறுவயதில் நாங்கள் காலையில் தான் குளிக்கப் போவோம். தண்ணீரும் மட்டாகத் தான்இருக்கும். துவாய் மற்றும் ஒல்லித் தேங்காயோடு சைக்கிளில் அண்ணாமார், பக்கத்து வீட்டுப் பெடியளோடு கீரிமலைக்குப் போவோம். இடுப்பில் ஒல்லித் தேங்காய் தொங்க குளத்துக்குப் போய் நீந்தப் பழகுவோம். ஆரம்பத்தில் அண்ணர் உதவி செய்வார். சற்று நேரத்திற்குப் பின்னர் இடுப்பிலிருக்கும் ஒல்லித் தேங்காயை எடுத்து விடுவார் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீந்தப் பழகுவோம்.

கீரிமலை குளத்தின் நீளம் 50 யார் அளவு தான் இருக்கும். அகலம் 35 யார், பெரும் சுவருக்கு மறுபக்கம் பெண்களுக்குரிய கேணி. ஆண்கள் கேணிக்கு சின்னத்துரை அண்ணர் தான் வாச்சராக இருந்தார், பெண்கள் கேணிக்கு அவர் மனைவி தான் வாச்சர். ஆள் நல்ல கறுவல், அரைக்கை சேட்டுடன் தன் பெரியவண்டிக்கு மேல் சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு சின்னத்துரை அண்ணர் கேணியை கண்காணிப்பார். பெடியல் அத்துமீறினால் மட்டும் தான் தலையிட்டு நிறுத்துவர். கலங்கி தண்ணீர் கேணியில் அழுக்கானால் துருசை கழட்டி கேணி நீரை கடலுக்குள் விடுவார். துருசுக்கும் கடலுக்குமிடையே ஓடையாக இருக்கும் பகுதியில் சின்னபெடியளை பெற்றோர் குளிப்பாட்டுவார்கள்.

இரண்டு அரை அடி தண்ணீர் தான் அதிலிருக்கும். துருசுக்கு பக்கத்தில் தான் நகுல முனிவர், சோழ அரசி நாரதபுரகவள்ளி ஆகியோரின் சிலைகள் இருந்தன. 1968இல் அமைச்சரான பிரேமதாச கீரிமலைக் கேணிக்கு சின்னஇளைப்பாற கட்டிடம் ஒன்றை கட்டிக் கொடுத்தார். தானே வந்து திறந்தும் கொடுத்தார். சுற்றவர மணல் பரவல், பழைய கால தடித்த பருமனுள்ள பூவரச மரங்கள் சுற்ற வர நிறைய இருந்தது. நிழல் வந்து கொண்டிருந்தது. அப்பால் அந்தியெட்டி மடம். ஒரு மைல் தள்ளித் தான்கடற்கரைப் பக்கம் கீரிமலைச் சுடலை. எதிர்ப்பக்கத்தில் கேணியை விட்டு வெளியே வந்தால் ஒரு பிள்ளையார் கோவில். 3-4 தேநீர்க் கடைகள். அந்தப் பக்கத்தில் மரக்கறிக்கடை, பஸ்நிலையம் இடையே சிறாப்பர் மடம், நடுவே நகுலேஸ்வரர் கோவில் எல்லாம் இருந்தன, இருக்கின்றன.

கூவில் கள்ளோடு உசார் காணாது என்று நினைப்போர், வியாழி அக்காவின் கடைக்கு உள்ளே போய் வெளியே வரும்போது முகத்தைக் கூனிக் கொண்டு தோள்த் துண்டால் வாயைத் துடைத்துக் கொண்டு வருவார்கள். வந்த உடனேயே தானாக உசார் புகும். பழையசினிமாப் பாடல்கள் அவர்கள் வாயில் ஒலிக்கும்.சிறாப்பர் மடத்தில் ஒரு சிறிய மண் பாண்டத்தில்மோர்த் தண்ணீர் எந்த நேரமும் இருக்கும். அதில் படுத்து ஆற பெரிய விறாந்தைகள், திண்ணைகள் இருந்தன. விசேட நாட்களில் அன்னதானமும் அங்கு நடக்கும். ஆடு, மாடு தண்ணீர் குடிக்க சிறாப்பர் மட வெளிச்சுவருக்குக் கீழே தண்ணீர் துறவும் பெரியளவில் கட்டப்பட்டிருந்தது. கேணியில் சுமார் இரு மணி நேரமாகக் குளிப்போம். குளித்து முடிய அருகேயிருக்கும் குளக்கட்டில் கல் வைத்து காற்றில் பறக்காமல் இருக்க வைத்த துவாயால் துடைத்து வெளிப்பிள்ளையார் கோவிலுக்கு வருவோம். அதில் கல்லில் சந்தனக் கட்டையை தண்ணீர் அரைத்து பொட்டு வைத்து கும்பிட்டால் தான் கீரிமலைக்கு போன அடையாளம். அருகே சைவ அய்யர்மாரின் தேனீர்க்கடை. உள்ளே போய் தேனீர் வடை என்று சாப்பிட்டு விட்டு வெளியே கடலைக் காரரிடம் பால்ப் பேணிக் கணக்கில் கடலை, கோதோடு கச்சான், சோழம் என்று சீமெந்துப் பையில் அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போவோம்.இன்னும் கொஞ்சம் கிள்ளிப் போடம்மா என்று சொன்னால் போட்டுத் தருவார்கள்?.

வீட்டுக்கு சைக்கிளில் வர நல்ல களைப்பு களைக்கும். சுடச்சுட கறிசோறு அம்மா சமைத்து வைத்திருப்பார். குசினிக்குள், நாலு சகோதரர்களாக பலகையில் இருந்து ஒரு பிடிபிடித்து எழும்புவோம். குளித்த களை சாப்பிட்டவுடன் ஒரு தூக்கம் வரும். தூங்கி எழுந்து அம்மா கையால் மூக்குப் பேணியில் தேநீர் வாங்கிக் குடித்தால் உடம்பில் சூடு பறக்கும். அந்தக்கேணி, பூவர நிழல், சந்தனப் பொட்டு, சிறாப்பர்மட மோர் எல்லாம் போனது போனது தான்.

ஆனாலும் அந்த நினைவுகள் இன்றும் நெஞ்சில் இனித்துக் கொண்டு தான் இருக்கின்றது.