அவ்வளவு மோசமாகவா இருக்கிறது என்றுநீங்கள் நினைக்கலாம். உண்மையில் இப் பழக்கம் தமிழ்ப் பெண்கள் மத்தியில் இருப்பதே தெரியாமல் பெற்றோர்கள் இருக்கும் போது,அது அதிகரித்து வருவது எங்கு தெரியப்போகிறது. இருந்தால் என்ன இப்போ, என்ன குடியா மூழ்கி விடப்போகிறது. ஆண்கள் குடிப்பது தெரியவில்லையா ? என்று பெண்ணியம் பேச வரவேண்டாம். ஊரில் கை லூசான ரவிக்கை மட்டும் ஒன்றை நடுமார்பில் ஒரு முடிச்சு போட்டு அணிந்து சேலையை சுத்தி முன்கொய்யகம் இல்லாது முழங்கால் வரை உயர்த்தி உடுத்தி, கையில் சுருட்டு பத்திக்கொண்டு, மள்ளாக்கொட்டையை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கும் ஆச்சியைக் காண்பது சாதாரணமானது, என்ணெணை இவ்வளவு விலை என்றால் வரும் வசை மொழி, கவித்துவமானது!! அதில் அவர்களின் தன்னம்பிக்கை, சுயமாக சம்பாதிக்கும் மிடுக்கு என்பனதான், கூட இனம் காணக்கூடியதாக இருக்கும். வெற்றிலை, புகையிலை, சுருட்டு என்பன வெளிப்படையாக பெண்களால் நுகரப்பட்டன, சீதனம் உட்பட வேறு அழுத்தங்களால் பெண் அடிமைத்தனம் எனப் பேசப்பட்டாலும், இங்குசொல்லவரும் விடயத்திற்கும், பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லை. (எந்த விடயத்தை, எந்த தமிழ் சடங்கை பற்றி குறிப்பிட்டாலும் ஆ, ஊ என்ற பெண்ணியம் பேசுகிறார்கள். போற போக்கில் New year, BBQ party, Birthday party, தான் தமிழருக்கு மிஞ்சும் போல உள்ளது).
வெளிநாடுகளில் குடிவகைகள் தாராளம். அதுவும் சாராயம் போன்று மணமும், அதைகுடிக்கும் போது முகத்தை சுளித்துக்கொண்டு கசப்பு மருந்து குடிப்பது போலக் குடிக்க வேண்டியது இல்லை. இங்கு அதிகமாக ஆசியப்பெண்களால் நுகரப்படும் Cocktails அனேகமாக இரண்டு, சில நேரம் மூன்று மதுவகைகள்கலக்கப்பட்டவையாக இருக்கும், அதேநேரம் Non-alcohol Cocktails அதே மாதிரியாக சின்னகுடை அல்லது பழத்துண்டு கொழுவி பார்க்கமிக அழகான பானமாக இருக்கும். எம்பெண்கள் மதுவகை கலந்த Cocktails தொடங்கி, பின்பு Vodka போன்ற அல்கஹோல் விகிதம் கூடியதை கலக்காமல் குடிக்கும் அளவிற்கு மாறிவிடுகிறார்கள்.
இங்கு குடிப்பதை விட, நிலை நடுமாறுமளவிற்கு குடிப்பதுவும், மறுநாள் தலையிடி என்றுபடுத்திருப்பதுவும், அதிகமாக குடித்தால் பெற்றோர் அதிக கட்டுப்பாடு இல்லாத நண்பிகள், உறவினர்கள் வீட்டில் இரவு தங்குவதும் சாதாரணமாகிவிட்டது. எங்கு பிழைவிட்டோம், என்று சில பெற்றோர் குற்றவுணர்வில் தாம் தவறு செய்துவிட்டது போல, மாய்ந்து மறுகிறவர்களும் உண்டு.
வளர்ப்பு ஒருபக்கம் இருக்க, பிள்ளைகளின் சூழ்நிலை, நண்பர்களின் வட்டாரம், பாவனைக்கான ஊக்குவிப்பு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சம், குடும்பத்தில் இருக்கும் கட்டுப்பாடு, வெறுமை, தனிமை, நேரமின்னை,பிரச்சனை, கலகலப்பின்மை போன்ற இன்னோரன்ன காரணங்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக்கிறது. வசிக்கும் அடுக்கு மாடியின்உட்நுழையும் எண்ணை ஞாபகம் வராத அளவிற்கும், திறப்பை சரியாக நுழைந்து திறக்க முடியாத அளவிற்கும், குடிக்கிறார்கள்.
எம் பெற்றோரின் நிலை இருதலை கொள்ளிநிலை போன்றது. சரியான ஆலோசனை, வழிகாட்டுதல் எடுத்து மீளச்செய்ய விருப்பம் ஒருபக்கம், தெரிவதனால் திருமணம், தொழில், சமூகமரியாதை பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயம், பிள்ளை தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதால், என்ன சொல்லுவாளோ? கோபப்படுவாளோ? சண்டைபிடிப்பாளோ? என்ற பயம் போன்றவற்றினால் மனஅழுத்ததிற்கு உள்ளாக்குகிறார்கள்.
பிள்ளைகளுக்கு Alcohol Counselling அது இது என்று வெளிகிட்டு, மெடிகல் ரெக்கோட்டில் காலகாலத்திற்கு இருக்குமோ என்ற பயம். அவர்களுக்கு வரும் மன அழுத்தத்தையும் சொல்ல பயம். என்ன இருந்தாலும் அவர்கள் வீட்டுப்பிள்ளையின் கதையா? யாருடைதும் தானே என்று ஒருதருக்கும் சொல்ல வேண்டாம், பெண்பிள்ளை விடயம் என்று சொல்லிச் சொல்லியே பத்து பேருக்கு சொல்லி விடுவார்கள் என்ற பயம். இந்நிலையில் சிலர் மனஅழுத்தங்களை போய் வழிபாட்டுத்தலத்தில், கடவுளிடம் சொல்கிறார்கள் ஆழமாக யோசித்தால் ஒரு விதத்தில் நம்பகத்தன்மையான 100%இரகசியங்கள் பேணப்படுகின்ற Counselling என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் Counsellingக்கு மிகமுக்கியமானது Active Listening skills அது கடவுளிடம் நிறையவே உண்டு! அவர் எங்கும் இருப்பார் தேடி போகவேண்டிய தேவை கூட இல்லை. வீட்டில்இருந்தே பேசிக் கொள்ளலாம். அத்தோடு Counselling சேவையில் அவர்கள் உங்களுக்கு அறிவுரை (Advice) தருவதில்லை, நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் பிரச்சனைகளை சொல்வதன் மூலம், உங்கள் மனத்தில் உள்ள பிரச்சனைகளையும், அதன் காரணத்தையும்,அதற்குரிய உங்கள் மனம் சொல்லும் தீர்வையும்,தொடர்ச்சியாக 6,7 தடவை போய் ஒரே விடயத்தை பேசும் போது தீர்வையும் நீங்களேசொல்கிறீர்கள். இந்த அர்ச்சனை, நேர்த்தி, பூசை எல்லாவற்றையும் விடுத்து, தனியே கடவுளிடம் தங்கள் கவலைகளை சொல்லுதல் என்று சிலர் சொல்வதை நோக்கினால், அது ஒருவிதத்தில்இந்த Counselling சேவையுடன் பொருந்துகிறது.
உங்கள் மனஅழுத்தங்களை ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டாலும், அவருக்குரிய சரியான தீர்வை, கோபப்படாமல், திடீர் ஊர்அடங்கு சட்டத்தை வீட்டில் அமுல் படுத்தாமல் பக்குவமாக கண்டு பிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்ளலாம்.
ஒருபேப்பருக்காக – சுகி